இதழ்: இருபத்தி எட்டு , சனவரி
ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா
தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
புத்தாண்டில் புது சவால்களை புத்துணர்ச்சியோடு எதிர் கொள்வோம்!
இரண்டாம் பருவத்திற்கான பாட திட்டங்கள் அநேக வகுப்புகளில் முடித்தாகிவிட்டது. வீட்டுப்பாட பயிற்சி மிகவும் முக்கியம் என்பதை பெற்றோர்கள் தொடர்ந்து பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள். இனி வரும் வாரங்களில் மீள்பார்வை, மாதிரி வினாத்தாள் கொண்டு பயிற்சி என வகுப்புகள் மேலும் சுறுசுறுப்பாக இயங்கும். கிளை முதல்வர்களும், பள்ளி நிர்வாகமும் இரண்டாம் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகளில் முழுவீச்சோடு செயல்பட்டு வருகிறார்கள். சுற்றறிக்கை இன்னும் சில நாட்களில் புலனத்தின் வாயிலாக தெரிவிக்கப்படும். ஐயப்பாடுகளை உடனுக்குடன் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
கதை வடிவிலான திருக்குறள் கற்றல் முறையை குழந்தைகள் விரும்பி கேட்கிறார்கள் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். திருமதி கவிதா ராஜசேகரின் முயற்சிக்கு எங்கள் பாராட்டுகள்.
தலாய்லாமாவின் வாழ்வையும் அவரின் சிந்தனைகளையும் கட்டுரையின் மூலம், மாணவி நிவேதிதா ராமன் நேர்த்தியாக வெளிப்படுத்திய விதம் மிக அருமை. புறநானூற்று பாடலை நினைவுபடுத்துவதாகவும் அமைந்தது. மாணவி நிவேதிதா ராமன் அவர்களுக்கு எங்கள் நன்றி. மாணவ எழுத்தாளர்களுக்கு இக்கட்டுரை கண்டிப்பாக ஓர் ஊக்கமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
வாசிப்பு ஓர் மனிதனின் வாழ்வை எவ்வாறு மாற்ற முடியும் என்பதற்கு வள்ளிக்கண்ணு அவர்களின் வாழ்வு ஓர் உதாரணம். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்ற இலக்கிய உலகின் படைப்பாளிகளுக்கு மத்தியில் கட்டுரையாளர் என்ற பெயர் பெற்றதே வள்ளிக்கண்ணு அவர்களின் அரிய சாதனை. எங்களுக்கு மேலும் ஒரு இலக்கியவாதியை அறிமுகப்படுத்தியமைக்கு திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு எங்கள் நன்றி.
தாயும், சேயும் ஒரே இதழில் இரு வேறு கட்டுரைகள் பங்களித்தது, எங்களுக்கு புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.
குறிப்பு: மாணவி நிவேதிதா ராமன் திரு சேஷா சீனிவாசன் - திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களின் மகள்
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
செவி வழிக்கல்வி - திருக்குறள்
|
![]() |
இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்
திருக்குறள் பயனில சொல்லாமை விளக்கம்
திருக்குறள் தீவினையச்சம் - ஏன் தீமை செய்ய பயப்பட வேண்டும்? விளக்கம்
மாணவர் பகுதி
பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும்.
சனிக்கிழமை வகுப்பு - நிலை 5C யில் பயின்று வரும் மாணவி யாழினி, அமெரிக்க தமிழ் கல்வி கழகம் நடத்திய தமிழ் பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்றார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் . மாணவி யாழினி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
![]() |
அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
நான் என் நண்பர்களோடு garden-ல விளையாடினேன் | நான் என் நண்பர்களோடு தோட்டத்தில் விளையாடினேன் |
நாங்கள் yellow flowers பார்த்தோம் | நாங்கள் மஞ்சள் பூக்கள் பார்த்தோம் |
Yellow flowers sunlight-ல glow ஆச்சு | மஞ்சள் பூக்கள் சூரிய ஒளியில் மின்னியது |
அங்கே உள்ள trees-ல lizard இருந்தது | அங்கே உள்ள மரங்களில் பல்லி இருந்தது |
Garden lizard jumped up and down | ஓணான் மேலும் கீழும் தாவியது |
இலக்கிய பகுதி
புறநானூறு
ஆசிரியர் பெயர் - கணியன் பூங்குன்றனார்
கணியன் பூங்குன்றனார் இன்றைய சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மகிபாலன்பட்டி கிராமத்தில் சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சங்ககாலப் புலவர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறம்: 192)
பொருள்
எல்லா ஊரும் எனது ஊர், அனைவரும் எனக்கு உறவினர், என்று எண்ணி அனைவரிடமும் அன்புடன் வாழ்ந்தால், வாழ்க்கை இனிமையாக அமையும்…
தீமையும், நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை, எனும் உண்மையை உணர்ந்தால், சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சமநிலை சார்ந்த வாழ்வு கிட்டும்…
துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை, என்று மனம் பக்குவப்பட்டால், அமைதி அங்கேயே கிட்டும்…
பிறந்த நாள் ஒன்று உண்டெனில், இறக்கும் நாளும் ஒன்று உண்டு. இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது, பொதுவானது. இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால், எதற்கும் அஞ்சாமல், வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்…
இந்த நிலை அற்ற வாழ்க்கையில்,
எவருக்கு, எப்போது, என்ன ஆகும் என்று எவருக்கும் தெரியாது. அதனால் இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம், துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்க வேண்டாம். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்…
வானம் நெருப்பாய் மின்னலையும் தருகின்றது, வாழ மழையையும் தருகின்றது. இயற்கையின் வழியில், அது அதன் பணியை செய்து கொண்டே இருக்கின்றது. ஆற்று வெள்ளத்தில் கற்களோடு அடித்து முட்டி செல்லும் படகு போல, வாழ்க்கையும் அவரவர் வழியில் அடிபட்டு போய்க்கொண்டே இருக்கும். இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்
இந்த தெளிவு பெற்று, பெரிய நிலையில் உள்ளவர்களை வியந்து பாராட்டவும் வேண்டாம், சிறிய நிலையில் உள்ளவர்களை ஏளனமாக நினைத்தலும் வேண்டாம். அவரவர் வாழ்வு அவரவர்க்கு. அவற்றில் அவர்கள் பெரியவர்கள்.
கேள்வி பதில் பகுதி
|
![]() |
கேள்வி:
பழந்தமிழ் சிறு தெய்வங்கள் வைதீக தெய்வங்கள் ஆனது குறித்த சில செய்திகள் ஏதேனும் உளவா?
பதில்:
பழந்தமிழ் நாட்டில் குன்றில் வாழும் குறிஞ்சி நில மக்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் வேலன். இத்தெய்வம் முற்றிலும் தமிழ் கடவுளாக கி.மு.க்கு முன்னும் கி.பிக்கு பின் சில நூற்றாண்டுகளும் இருந்தது. இச்சிறு தெய்வம்(local god) புராண தெய்வமான சுப்பிரமணியன்/ ஷண்முகனாக நாளடைவில் மாறியதை நாம் ஊகித்து உணரும்படி காட்டுவது திருமுருகாற்றுப்படை
என்ற நூலாகும்.திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியங்களில் ஒரு நூல். மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. இது சங்க இலக்கியங்கள் தொகுதியில் சேர்க்கப்பட்டிருப்பினும், காலத்தால் மிகவும் பிந்தியது. சில அறிஞர்கள் அது கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், சிலர் அதற்கும் பிந்தியது என்றும் கூறுகிறார்கள். இது எவ்வாறு அறியப்படுகிறது? புராணக்கதைகளும் ஆகம வழிமுறைகளும் தமிழ் சமுதாயத்தில் நன்கு வேரூன்றியதை இந்நூல் காட்டுகின்றது. பழைய சங்கப் பாடல்கள் பெரும்பாலனவற்றுள் புராணக்கதைகளின் allusions காணப்பெறாது. ஆனால் திருமுருகாற்றுப்படையில் ஸ்கந்த புராணக் கதைகள் விரிவாக வரியப்பட்டுள்ளன. குறிஞ்சி மக்கள் வணங்கிய வேலன் இதில் ஆறு முகங்களுடனும், பன்னிரு கைகளுடனும் விளங்குகிறான். பன்னிரு கைகளின் செயல்களையும் இந்நூல் திருச்சீர் அலைவாய்
என்ற இரண்டாம் பகுதியில் பாடுகிறது. இந்த நூலின் நான்காம் பகுதியான திருவேரகம்
அந்தணர்கள் இக்கடவுளை வழிபட்ட முறையை வர்ணிக்கிறது. குறிஞ்சி நில மக்கள் சிறிதும் அறியாத ஆறு எழுத்து அடங்கிய மந்திரத்தை அந்தணர்கள் ஓதினார்கள் என்று இப்பகுதி உரைக்கிறது. குறிஞ்சி மக்கள் மட்டும்
முன்பு தொழுத வேலன், ஆறுமுகனாகி முற்றும் துறந்த முனிவர்களால் தரிசிக்கப்படுகின்றான் என்று திருஆவினன்குடி
என்ற பகுதி கூறுகிறது. இம் முனிவர்கள், முருகனை தரிசிக்க முன்னே செல்ல திருமால் முதலிய தேவர்கள் பின்னே செல்கிறார்களாம். ஒருபுறம், முப்புரிநூல் அணிந்து, உலராத ஆடையுடனும், தலைமேல் குவித்த கையினராய், ஆறு எழுத்துக்கள் கொண்ட மந்திரத்தாலும், வாசனை மிக்க மலர்களாலும் அந்தணர்கள் முருகனை திருவேரகத்தில் தொழுகின்றார்கள். அதே நேரத்தில் குன்றுகளில் குறிஞ்சி வாழ் மக்களும் தம் பழம்பெரும் வழக்கப்படி வேலன்/முருகனை தொழுகிறார்கள். குன்று தொறு ஆடல்
என்ற பகுதியில் குறிஞ்சி மக்களின் வழிபாட்டை சித்திரம்போல் தீட்டி காட்டுகிறார் புலவர். வழிபடுவதற்கு முன் மலைவாழ் மக்கள் தம் சுற்றத்துடன் நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கல்லின் தெளிவை உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்னும் வாத்தியத்தை அடித்து, அதன் தாளத்திற்கு ஏற்ப குரவைக்கூத்து ஆடினார்கள். அப்பொழுது ‘வேலன்’ என்று அழைக்கப்பட்ட சாமியாடி அங்கு வந்தான். கையில் வேலை வைத்துக்கொண்டு முருகனுடைய ஆவேசத்தை பெற்று ஆடுபவன் ‘வேலன்’ எனப்பட்டான். இந்த வேலன் சிவந்த ஆடையை அணிந்தான். இடுப்பில் அரைக் கச்சையை அணிந்தான்; வெற்றி மாலையை சூடினான்; தொடி என்னும் அணியை தோளில் அணிந்தான். இடுப்பில் இறுகக் கட்டிய அரைக்கச்சையின் மேல் மென்மை மிக்க ஆடையை நிலத்தளவும் தொங்கிப் புரளும் வண்ணம் தரித்தான். இவன் தன் பெரிய கைகளால் மெல்லிய தோள்களை உடைய குறமகளிரைத் தழுவிக்கொண்டு ஆடினான். இது முருகனே அவன் மேல் வந்து ஆடியதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் அந்தணர்கள் வைதீக/ஆகம வேலனாம் ஆறுமுகனை வழிபட, மறுபுறம் குறிஞ்சி மக்கள் தம் பண்டைய முறையில் ஆறுமுகன் ஆகும் முன் வெறும் வேலனாக
இருந்த மலைநாட்டு சிறு தெய்வத்தை வழிபட்டார்கள். நூலின் கடைசிப் பகுதியான பழமுதிர் சோலை
என்ற பகுதியில் பழங்கள் உதிர்ந்து இருக்கும் சோலைகளில் குறமகளிரின் வெறியாட்டு வர்ணிக்கப்படுகிறது. தெய்வமாடும் குறப்பெண்ணை “தேவராடி” என்பார்கள். இந்த பகுதியில் பழந்தமிழ் வழிபாடும் வைதீக/ஆகம வழிபாடும் சற்று கலந்தால் போல் தெரிகிறது. குறமகள் மலர்களை தூவி வழிபட்டாலும் அதனுடனேயே குருதியோடு பிசைந்த வெள்ளரிசியைத் தூவி வழிபட்டாள்.
இந்த ஆறு பகுதிகளை பாடிய புலவரின் நோக்கம், முருகவேள் குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல், மக்கள் எங்கெங்கு எம்முறையில் வழிபட்டாலும் தான் அங்கு அவர்களிடம் வருவான் என்ற செய்தியைக் கூறுவது ஆகும். முருகனிடம் சென்று அருளைப் பெற்று உய்யும் வழியை பெறுவதற்கு மற்றவர்களுக்கு ஆற்றுப்படை (செல்லும் வழி) கூறுவது நூலின் நோக்கம். ஆனால் நாம் அதில் உய்த்து உணர்வது (infer) பழந்தமிழ் சிறுதெய்வம் எவ்வாறு வைதீக/ஆகம தெய்வம் ஆயிற்று என்பதுதான். இந்த நூலின் காலகட்டம் தமிழர்கள் வைதீக/ஆகம நம்பிக்கைகளையும், எண்ணங்களையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக்கொண்ட காலத்தை காட்டுகிறது: the age of absorption of Vedic and Agamic beliefs by the Tamils. Murugan/Velan has been blended and identified with the six-faced Kartikeya, foster child of the stars of the Pleiades (Kartikas). இந்த ஏற்பை Sanskritization
என்று கூறுவர். கொற்றவை என்னும் தமிழ் பெண் தெய்வம் துர்க்கையாக மாறும் காலகட்டத்தை, செயலை, நாம் சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரி பகுதியில் காணலாம். இந்த process பல கலாச்சாரங்களிலும் நடைபெற்ற செயல்தான். ஒரு உதாரணம்:
கிறிஸ்து மதம் பிறப்பதற்கு முன் ஐரோப்பாவில் பரவலாக இருந்த மதம் Mithraism. Mithra என்றால் சூரியன். சூரியனை வழிபட்ட மதம். சூரியன் தெற்கு நோக்கி சென்று மீண்டும் வடக்கும் நோக்கி வரத் தொடங்கும் நாளை ரோமர்கள் அக்காலத்தில் (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்) December 25 என்று கணக்கிட்டு வந்தார்கள். எனவே Dec 25 சூரியனின் பிறந்தநாள் என்று மக்கள் கொண்டாடினார்கள். It was known as Birthday of the unconquered Sun:Sol Invictus. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் ரோம பேரரசன் கிறிஸ்து மதத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, மக்கள் கொண்டாடிய சூரியனின் பிறந்தநாளான Dec 25 யை கிறிஸ்துவின் பிறந்த நாளாக மெல்லமெல்ல கொண்டாட ஆரம்பித்தார்கள். மக்களின் மனதில் ஏற்கனவே புனிதமான நாளாக இருந்த Dec 25 எளிமையாக கிறிஸ்துவின் பிறந்த நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Birthday of the sun became Birthday of the son (of God). This is Christianization of an already existing tradition. So also, the Sanskritization of already existing local gods and their worship.
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on January 18, 2021 #Kavitha Rajasekar #Parimala Nathan