logo

Home Tamil School Archives Search Feed Contributing Guide


இதழ்: இருபத்தி ஏழு , டிசம்பர்

ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்

இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா

தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ


அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவுத்துக் கொள்கிறோம்.

இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் முழுவீச்சோடு நடைபெற்று வருகிறது. வீட்டுப்பாட பயிற்சி மிகவும் முக்கியம் என்பதை பெற்றோர்கள் தொடர்ந்து பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள். இந்த விடுமுறைக் காலத்தில் சற்று சிரத்தை எடுத்து, விடுபட்ட வீட்டுப்பாட பயிற்சிகளை முடிக்குமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம் .

இதே டிசம்பர் மாதத்தில் பள்ளி அரையாண்டு விடுமுறையில் நாம் சென்ற உறவினர் வீடுகள், ஆற்றிலும் , கிணற்றிலும், ஊரணியிலும், குளத்திலும், ஓடையிலும் குளித்த குளியல், விளையாடிய விளையாட்டுக்கள், கற்ற அறிவுரைகள், உண்ட உணவுகள் , படித்த கதைகள், பார்த்த திரைப்படங்கள் போன்ற எண்ணற்ற அனுபவத்தை குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தைகளுக்கு புதிய விசயங்கள் கூறியது போலும் ஆயிற்று, பெற்றோர்களுக்கு தம் குழந்தை பருவத்தை நினைவுகூர்ந்தமை போலவும் ஆயிற்று.

பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.


செய்தி மடல் ஆசிரியர் பகுதி

தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் உற்று நோக்குபவர்களுக்கு அற்புதம்மாளை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. போராட்டமே வாழ்க்கையாகவும் நம்பிக்கையே ஆயுதமாகவும் கொண்டு போராடும் அற்புதம்மா மாதர் குலத்தின் அற்புதம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அற்புதம்மாளை நினைவு கூர்ந்தமைக்கு திரு.ஷேக் அப்துல்காதர் அவர்களுக்கு எங்கள் நன்றி. இக்காலகட்டத்தில் ஒரு சிறு தோல்விக்கே துவண்டு விடும் சந்ததியினருக்கு அற்புதம்மாள் ஒரு வாழ்நாள் பாடம், இவரை பற்றி நம் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள்; வாழ்வை எதிர்கொள்ள விடாமுயற்சியும் நம்பிக்கையும் மிக முக்கியம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

வாசிப்பு ஓர் மனிதனின் வாழ்வை எவ்வாறு மாற்ற முடியும் என்பதற்கு வள்ளிக்கண்ணு அவர்களின் வாழ்வு ஓர் உதாரணம். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்ற இலக்கிய உலகின் படைப்பாளிகளுக்கு மத்தியில் கட்டுரையாளர் என்ற பெயர் பெற்றதே வள்ளிக்கண்ணு அவர்களின் அரிய சாதனை. எங்களுக்கு மேலும் ஒரு இலக்கியவாதியை அறிமுகப்படுத்தியமைக்கு திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு எங்கள் நன்றி.

இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.

தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!


செவி வழிக்கல்வி - திருக்குறள்
 — கவிதா ராஜசேகர்

Kavitha Rajasekar

இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்

திருக்குறள் அழுக்காறாமை விளக்கம்

திருக்குறள் வாய்மை - உண்மை பேசுபவர்கள் எவ்வளவு சிறந்தவர்கள்? விளக்கம்


மாணவர் பகுதி

பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும்.

புவி வெப்பமயமாதல்! — மாணவி யாழினி
Student_Yazhini_Photo

சனிக்கிழமை வகுப்பு - நிலை 5C யில் பயின்று வரும் மாணவி யாழினி, புவி வெப்பமயமாதல் பற்றி பாடத்தில் படித்ததை ஓவியமாக வரைந்தது கீழே இணைக்கப்பட்டுள்ளது. பூமித் தாய் கண்ணீரோடு வேதனைப்படுகிறார் என்று காட்சிப்படுத்திய சிந்தனை சிறப்பு. மாணவி யாழினி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும் நன்றியும்.

Yazhini

ஆசிரியர் அறிமுகம்

திருமதி செந்தமிழ் செல்வி சுப்புமணியன்

logo
சொந்த ஊர் :சென்னை

சிறுவயது முதலே தமிழ் மொழியில் மேல் தனக்கு மிகுந்த ஆர்வமும் பற்றும் இருந்ததாகக் கூறும் இவர் பள்ளியில் தமிழ் தமிழ் மொழியை தேர்வு செய்து தமிழை கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார். சிறுவயது முதல் இன்று வரை தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்கவும், கேட்கவும் முன்னுரிமை தருவதாக கூறுகிறார். தமிழ் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் தருவதோடு அவற்றைப் பேணி காப்பதிலும் தனக்கு ஆர்வம் மிகுதி என்கிறார். தமிழ் பாரம்பரிய உணவு வகைகளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பார்த்து அதை வீட்டில் சமைத்து பழகி உண்பதில் அலாதி பிரியம் என்றும் கூறுகிறார். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் போது பல தமிழ் வார்த்தைகளை தன் பிள்ளை கற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது என்கிறார். தன் குழந்தைக்கு ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமாகிய சூழலில் தாய் மொழியை தன் பிள்ளை மறந்து விடக்கூடாது எனும் நோக்கில் தமிழ்ப்பள்ளியில் இணைத்து தமிழ் கற்றுக்கொடுக்கும் முனைப்போடு முன்வந்ததாக கூறுவது சிறப்பு. குழந்தைகளோடு குழந்தையாய் தமிழ் மொழியை மிகுந்த ஆர்வத்தோடு தன் பிள்ளை கற்றுக் கொள்வதைக் கண்டு தனக்கும் தமிழ் மொழியை பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்குள் மேலோங்கியது என்கிறார்.தமிழ் பள்ளிக்கு செல்லும் போதும், அங்கு தமிழ் மக்களை காணும் போதும் தன் தாய் நாட்டில் இருப்பது போன்ற உணர்வு எனக்குள் எழுகிறது என்றும் மகிழ்வுடன் கூறுகிறார்.தமிழ் பள்ளி (TBTA) தான், தன்னார்வ ஆசிரியப் பணிக்கு ஒரு முக்கிய ஊன்றுகோல் என்கிறார்.இவ்வாறு தமிழார்வமும் தன் ஆர்வமும் ஒன்றிணைய TBTA-வில் இணைந்துள்ளார்.

திருமதி சரண்யா ஜெயபால்

logo
சொந்த ஊர் :சென்னை

பள்ளிப்பருவத்தில் தமிழ் பட்டிமன்றம், பாரதியார் கவிதை போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடி இருப்பதன் மூலம் இவரது தமிழார்வம் நமக்கு புலப்படுகிறது.இதற்கு மற்றொரு சான்று பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருப்பது தான்.’பொன்னியின் செல்வன் தன் மனம் கவர்ந்த சிறந்த நூல்களின் பட்டியலில் ஒன்று என்றும் தான் முழுமையாக படித்து முடித்த நூல் இதுவே என்றும் பெருமையுடன் கூறுகிறார்.தமிழ் நிகழ்ச்சிகளான பட்டிமன்றம், தமிழ் அறிஞர்கள் பேச்சு, விவாத மேடை போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வம் என்கிறார்.தனது வீட்டில் பிள்ளைகளோடு பேச்சுத் தமிழிலேயே உரையாடி வருவதாகவும் கூறுகிறார்.பிள்ளைகளும் பேச்சுத் தமிழை மிகச் சரளமாக பேசுவதாக கூறுவது மகிழ்ச்சியைத் தருகிறது.நம் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கில் தன் பிள்ளைகள் தமிழில் பேசுவதோடு மட்டுமல்லாமல் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் தமிழ்ப்பள்ளியில் இணைந்ததாக கூறுகிறார். அதேநேரத்தில் தனக்கும் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவும் அவர்களோடு தமிழில் உரையாடவும் மிகுந்த விருப்பம் இருந்தமையால் தானும் தமிழ்ப்பள்ளியில் தன்னார்வத்தோடு இணைந்ததாக கூறுகிறார்.இவ்வாறு சிறு வயது முதல் தனக்கு இருந்த தமிழ் ஆர்வம் மற்றும் ஆசிரியப் பணியின் மீது இருந்த ஆர்வத்தையும் கொண்டு தமிழ்ப்பள்ளிக்கு தன்னால் இயன்ற ஒரு பங்களிப்பை தர வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு TBTA-வில் இணைந்ததாகக் கூறுகிறார்.

இவர்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்

நான் இந்த விடுமுறையில் தமிழ் கதைகளை TVயில் பார்த்தேன் நான் இந்த விடுமுறையில் தமிழ் கதைகளை தொலைக்காட்சியில் பார்த்தேன்
கதை கேட்கும் போது நான் New தமிழ் words learn பண்ணேன் கதை கேட்கும் போது நான் புது தமிழ் வார்த்தைகள் கற்றுக்கொண்டேன்
நாம எல்லாருக்கும் help பண்ண வேண்டும் நாம எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும்
தம்பி, window-வ மூடு தம்பி, சன்னலை மூடு
காற்று பலமா அடிச்சதால Electricity இல்லை காற்று பலமா அடிச்சதால மின்சாரம் இல்லை

இலக்கிய பகுதி

பொருநராற்றுப்படை

ஆசிரியர் பெயர் - முடத்தாமக்கண்ணியார்

சென்ற மாத இதழின் தொடர்ச்சி…..இந்த இதழில் கரிகாலனின் இளமைப்பருவம், வெண்ணிப் போர் வெற்றி, கொடைச்சிறப்பு, நாட்டுவளம் ஆகியன பற்றி காண்போம்

சோழநாட்டின் நானிலவளம் திணை மயக்கமாக அழகுபெற விளக்கப்படுகின்றது.

                    கரிகால் வளவனது சிறப்புக்கள்
"உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் 
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாய மெய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி         
வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப"

சோழர் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த நலங்கிள்ளியின் கால்வழிக்கூட காணமுடியும். இதனால் தாய்வயிற்றில் இருக்கும்போதே கரிகாலன் அரசுரிமை பெற்றவனாக விளங்கினான். இவன் முருகனைப் போன்ற அழகும் பகைவரை அழிக்கும் சினமும் கொண்டவன். அதனால் இவன் தாக்காமலேயே இவனது பகைமன்னர் பலர் இவனுக்கு அடிபணிந்து இவன் சொன்னதை யெல்லாம் கேட்டனர்.இவன் அருள் செய்யாத நாடுகள் குழப்பத்துக்கு உள்ளாயின.

கடலில் தோன்றி ஒளி வீசிக்கொண்டு வானத்தில் உலாவும் கதிரவனைப்போல இவன் பிறந்து தவழக் கற்றது முதலே தன் நாட்டைத் தன் தோளில் சுமக்க வேண்டியதாயிற்று.இப்படிச் சுமக்கும் குழந்தை யாகவே இவன் வளர்க்கப் பட்டான்.

                    வெண்ணிப் போர் வெற்றி
"ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
தாணிழல் மருங்கி னணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்குவி ராயிற், பழுதின்"      

இந்த நூலின் தலவன் பெயர் கரிகால்வளவன் என்று இங்குக் குறிப்பிடப்படுகிறான். ஆளும் விலங்கு ஆளி. ஆளியின்வழி வந்தது அரிமான் என்று போற்றப்படும் சிங்கம். ஆளியை நன்மான் என்று பாடல் குறிப்பிடுகிறது. அதன் குட்டிகூட விலங்குகளை வருத்தும்.

பால் குடிக்கும் ஆளிக்குட்டி ஞெரேர் எனப் பாய்ந்து முதன் முதலாக வேட்டைக்குச் செல்லும் போதே யானையை அழிப்பது போலக் கரிகாலன் வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரில் இருபெரு வேந்தரையும் வென்றான். பனந்தோட்டு மாலை அணிந்த சேரனையும், வேப்பந்தழை மாலை அணிந்த பாண்டியனையும் ஆத்தி மாலையைச் சூடிய கரிகாலன் வென்றான்.அப்போர்க்களத்திலேயே சேரனும் பாண்டியனும் மாண்டனர். வெற்றிகண்ட கரிகால்வளவனைத் தொழுது அவன்முன் நிற்பீர் ஆயின்,

                கரிகாலனது கொடையின் சிறப்பு
"றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்
பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர"
வைகல் வைகல் கைகவி பருகி

பொருந! கரிகாலன் காலடி நிழற்பகுதிக்குச் செல்வீராயின்… பசு அப்போது போட்ட கன்றை நாவால் நக்கித் தெம்பு ஊட்டுவது போல, அவன் உங்களை விரும்பிப் போற்ற முனைவான். நீங்கள் கைதொழுவதற்கு முன்பாகவே புத்தாடை தந்து மாற்றிக் கொள்ளச் செய்வான். உங்களது பழைய ஆடை கிழிந்து குறைந்து போயிருக்கும். வேர்வை அழுக்கு ஏறி பாசி படிந்திருக்கும். கிழிசல் ஊசியால் தைக்கப்பட்டிருக்கும், புதிதாக அவன் தந்த பட்டுடையில் கொட்டைக்கரை போட்டிருக்கும். நீங்கள் புத்தாடை புனைந்த பின் கிண்ணத்தில் தேறல் ஊற்றி வேண்டிய அளவு பருகத் தருவான். காலை வேளையில் கையைக் குடையாக்கியும் அத் தேறலைப் பருகலாம்.

"எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி.
நூலின் வலவா நுணங்கரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்"

பின்னர் விருதாக உன் (பொருநன்) தலையில் பொன்னாலான தாமரை சூட்டுவான். இவன் சூட்டிவிடும் தாமரை தழல் விட்டும் பிளவு பட்டும் எரியும் தீப்போல் இருக்கும். குளத்தில் இருக்கும் தாமரைக்கு மடங்கும் இதழ் உண்டு. இதில் உள்ளது மடங்காத பொன்னிதழ். பித்தை என்பது ஆணின் உச்சிக் கொண்டை. அது அழகு பெறும்படி உனக்குக் கரிகாலன் தன் கையால் சூட்டிவிட்டுப் பெருமைப் படுத்துவான். பாடினி அரில் மாலை — இது நூலில் கோக்கப்படாத முத்துமாலை.அதாவது முத்துக்களைத் தங்கத்தில் பதித்திருக்கும் மாலை. முத்தாரம் — இது நூலில் கோத்த முத்துமாலை. அரில்மாலையையும், முத்துமாலையையும் பாடினி அணியத் தருவான்.

"பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல, நொல்லெனத்"

நீங்கள் பெற்றவற்றை இவை இவை கரிகால் வளவன் தந்த பரிசில் என்று பிறர் பிறர்க்குச் சொல்லிக்காட்டிவிட்டுச் செல்லத் தொடங்குவீராயின் பிறர்க்குச் சொன்னமைக்காகக் கடிந்துகொள்வான் (புலப்பான்). இந்த உலகம் நிலையில்லாத்து என்னும் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்துச் செல்லுங்கள் என அனுப்பிவைக்கவும் மாட்டான். (அவனிடமே இருக்கக்கூடாதா என ஏங்குவான்)

இவ்வாறெல்லாம் கரிகாலனது நற்பண்பும் கொடைச் சிறப்பும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

                        சோழ நாட்டின் வளமும் வனப்பும்
"திரை பிறழிய விரும் பெளவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மா மாவின் வயின் வயினெற்.
றாழ் தாழைத் தண் டண்டலைக்
கூடு கெழீஇய குடி வயினாற்
செஞ் சோற்ற பலி மாங்திய
கருங் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழலாங் கண்
ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்"

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானில வளங்களும் காவிரி புரக்கும் கரிகாலன் நாட்டில் மயங்கிக் கிடந்தன. பாலை நிலத்தின் பாங்கும் பாவிக் கிடந்தது. கடற்கரையில் மாமரங்கள். அவற்றை அடுத்துத் தாழை மரங்கள். தாழைமரக் கழிகளை அடுத்து வளவயற் சோலை (தண்டலை) குடில்களில் கூலம் சேமிக்கும் குதிர்க் கூடுகள். கருங்காக்கைகள் அக்குடியில் வாழும் மக்கள் வைத்த நெல்லஞ் சோற்றைத் தின்று சலித்தபோது வீட்டு நொச்சிக்குக் கீழே பொறித்திருக்கும் ஆமைக் குஞ்சுகளைக் கவர்ந்துண்ணப் பார்க்கும். தாய்-ஆமை அதன் குஞ்சுகளைக் காப்பாற்றும்.

"முடக் காஞ்சிச் செம் மருதின்
மடக் கண்ண மயில் ஆலப்
பைம் பாகற் பழந் துணரிய
செஞ் சுளைய கனி மாந்தி
அறைக் கரும்பி னரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக"

முடம் பட்டுக் கிளை தாழ்ந்திருக்கும் காஞ்சிமரம். செம்மாந்து ஓங்கியிருக்கும் மருதமரம் இரண்டிலும் மயில் ஏறி ஆட்டம் காட்டும். பசிக்கும் போது பறந்தோடிப் பாகல் பழத்தைத் தின்னும். அடுத்திருக்கும் பலாச்சுளைகளையும் தின்னும். கரும்பு வெட்டும்போதும் நெல் அறுக்கும்போதும் களமர் (= உழவர்) இசைப் பாடல்கள் பாடுவர்.

                    நில மயக்கமும் நல் ஆட்சியும்
"தேனெய் யொடு கிழங்கு மாறியோர்
மீனெய் யொடு நறவு மறுகவும்
தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்"

மயிலானது முல்லை நிலத்துப் புறவு சலித்தால் நெய்தல் நிலத்தில் பூத்திருக்கும் புன்னை மரத்துக்குச் சென்றுவிடும். அருகில் சுறாமீன் வந்துபோகும் கடலலை மோதும். அதில் வாழும் இறால் மீனைத் தின்ற நாரை பூத்திருக்கும் அதே புன்னை மரத்தில் அமர்ந்திருக்கும். கடலோரப் புன்னை மரத்தில் இருக்கும்போது கடலலை ஓசையை வெறுத்து அந்த மரத்தை விட்டுவிட்டு நாரை பனைமர மடலுக்குப் பறந்து செல்லும். அதுவும் சலித்தால் தென்னை மடலுக்குச் செல்லும். அதிக உயரம் பறக்க முடியாத மயில் குலை தள்ளியிருக்கும் வாழை மரத்தில் அமரும். காந்தள் பூத்திருக்கும் இடத்திற்குச் செல்லும். அருகிலுள்ள மீனவர் பாக்கத்துக் குடிசைப் பகுதியில் இருக்கும் நாகமரத்தில் பாலைநில மக்கள் தம் உடுக்கு போன்ற குடுகுடுப்பைகளைக் கட்டித் தொங்க விட்டிருப்பர். அது காற்றில் ஆடும்போது ஓசை உண்டாகும். வண்டுகள் இசை பாடும். இந்த இசைக்கு ஏற்ப மயில் தோகை விரித்து ஆடும். இப்படிப் பல்வேறு நிலமேடுகளில் இடம் பெயர்ந்து மயில் ஆடும். தேன்நெய்க்குக் கிழங்கு, மீன்நெய்க்கு நறவு, மதுவுக்கு மான்கறி என்று பண்டமாற்று வாணிகம் பல்வேறு மணல்மேடுகளில் நடைபெறும்.

இவ்வாறு கரிகாலனின் இளமைப் பருவம், வெண்ணிப் போர் வெற்றி, கொடைச்சிறப்பு, நாட்டு வளம், திணை மயக்கம் ஆகியவை அழகு பெற விளக்கப்படுகின்றது. மேலும் பொருநன் கையிலிருந்த பாலை யாழினழகு மணம் கமழ் மாதரை மண்ணி (ஒப்பனை) யது போன்ற அழகுடன் திகழ்ந்தது.இந்த யாழில் பொருநன் எழுப்பும் இசையினிமையில் மயங்கி ஆறலை கள்வர்களும் தங்கள் படைக்கலன்களை கீழே போட்டு நிற்கிறார்கள்.கரிகாலன் வேர்வையில் நனைந்து வேற்றிழை நுழைந்த ஆடையை நீக்கி கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய நூலால் நெய்யப்பட்ட அர உரியன்ன அறுவையை பொருநர்க்கு வழங்குகிறான்.

கரிகாலனின் விருந்தோம்பலில் திளைத்து மகிழ்ந்த பொருநரின் நிலை நகைச்சுவையோடு விளக்கப்படுகிறது. ஊன்சோற்றை பலகாலும் உண்டு ஊனுணவை வெறுத்தனராம்.பொருநர்களுக்குப் பொற்றாமரைப்பூவும் பாடினிக்குப் பொன்னரிமாலையும் பரிசளித்து, நான்கு குதிரை பூட்டிய தேரில் ஏற்றி ஏழடி கூடவே நடந்து வந்து விடை கொடுத்தனுப்பிய செங்கோல் வழுவாச் செல்வன் கரிகாலனின் விருந்தோம்பல் பண்பாட்டை இந்நூல் சிறப்பிக்கின்றது.


தலாய்லாமா!
 — நிவேதிதா ராமன்

Niveditha

logo logo logo logo logo


தமிழகம் கண்ட திறன்மிகு எழுத்தாளர்
 — மேகலா இராமமூர்த்தி

Megala Ramamoorthy

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களை நாம் வரிசைப்படுத்தினால் அதில் குறிப்பிடத்தக்கதோர் இடத்தைப் பெறுபவர் வல்லிக்கண்ணன். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திறனாய்வு என்று இலக்கியத்தின் பல வகைமைகளிலும் சுவடு பதித்த வல்லிக்கண்ணன், கட்டுரையாளராகத் தனிமுத்திரை பதித்த சாதனையாளராவார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள திசையன்விளை எனும் ஊரில் நவம்பர் 12, 1920இல் சுப்பிரமணியப் பிள்ளை, மகமாயி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் ரா.சு. கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர்கொண்ட வல்லிக்கண்ணன். பின்னாளில் அவர் எழுத்தாளராக மாறியபின் தமக்கொரு புனைபெயர் சூட்டிக்கொள்ள விழைந்து, தம் முன்னோர்களின் பூர்வீகமான ராஜவல்லிபுரத்திலுள்ள வல்லி’யையும், தம் பெயரான கிருஷ்ணசாமி என்பதன் தமிழாக்கமான கண்ணனை’யும் இணைத்து வல்லிக்கண்ணன் ஆனார்.

சிறு பத்திரிகைகளுடனான அறிமுகம் வல்லிக்கண்ணனுக்குச் சிறுவயது முதலே கிடைத்துவிடுகின்றது. பரலி சு. நெல்லையப்பரின் லோகோபகாரி எனும் சிற்றிதழும், சங்கு சுப்பிரமணியம் என்பவர் நடத்திய சுதந்திரச் சங்கு எனும் பத்திரிகையும், காந்தி, மணிக்கொடி போன்ற இதழ்களும் அவருக்குப் பள்ளி நாட்களிலேயே படிக்கக் கிடைத்தன. அதனால் இளம்பருவத்திலேயே சிற்றிதழ்களின் காதலன் ஆனார் அவர்.

படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதிலும் அவருக்கு ஏற்பட்டது. எனவே தாமும் கதைகள் கட்டுரைகள் என்று எழுதத் தொடங்கினார். அவ்வாறு பதினாறு வயதில் தொடங்கிய அவரின் எழுத்துப்பணி அவர் வாழ்வின் இறுதிவரைச் சலிப்பின்றித் தொடர்ந்தது.

பள்ளியிறுதிப் படிப்புக்குப் பின் அரசுவேலையில் சேர்ந்த வல்லிக்கண்ணன், தம்முடைய ஓய்வு நேரத்தை படிப்பதிலும் எழுதுவதிலும் செலவழித்துவந்தார். அதனால் பணியிடத்தில் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளானார். ஒருகட்டத்தில் அரசுப்பணி தம் எழுத்துப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து அதனைத் துறந்து முழுநேர எழுத்தாளரானார்.

சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் பலவற்றில் வல்லிக்கண்ணனின் ஆரம்பகாலப் படைப்புக்கள் வெளிவந்தன. திருமகள், சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் முதலிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.

பாவேந்தர் பாரதிதாசனின் கவியாளுமையை விளக்கும் வகையில் பாரதிதாசனின் உவமை நயம் என்ற கட்டுரைத் தொடரை கிராம ஊழியன் இதழில் எழுதினார் வல்லிக்கண்ணன். பாவேந்தரே அக்கட்டுரைகளைப் படித்துவிட்டு வல்லிக்கண்ணனைப் பாராட்டியிருக்கின்றார்.

வல்லிக்கண்ணன் என்ற பெயரே அல்லாமல் நையாண்டிபாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் எனப் பல புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். எனினும் வல்லிக்கண்ணன் என்ற பெயரே அவருக்கு நிலைத்தது.

ஈட்டிமுனை, கோவில்களை மூடுங்கள், எப்படி உருப்படும்?, கொடு கல்தா போன்ற சமூக விழிப்புணர்வூட்டும் கட்டுரை நூல்களை கோரநாதன் என்ற பெயரில் அறச்சீற்றங் கொண்ட இளைஞனாக எழுதியவர் வல்லிக்கண்ணன்.

மிவாஸ்கி என்ற புனைபெயரில் வல்லிக்கண்ணன் எழுதிய அடியுங்கள் சாவுமணி என்ற நூலில்,

”புதுயுகம் பிறக்கவேண்டுமா? 
அடியுங்கள் சாவுமணி மக்களின் அறியாமைக்கு!
மக்களை அடிமைகளாக்க முயல்கின்ற சுரண்டும் கும்பலுக்கு!
மக்களின் மிருக வெறிக்கு!
மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு!”

என்கிறார் ஆவேசமாக.

ரஷிய இலக்கிய மேதையான மாக்சிம் கார்க்கியின் கட்டுரைகள் சிலவற்றையும், அவரின் சிறுகதைகள் சிலவற்றையும், ரஷிய இலக்கியத்தின் மற்றொரு மகத்தான ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் கதைகள் சிலவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள வல்லிக்கண்ணன், இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் இராகுல் சாங்கிருத்தியாயன், தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இவையல்லாமல், பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் - விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், ஊர்வலம்போன பெரிய மனுஷி, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அமர வேதனை, ஆண்சிங்கம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.

ஊர்வலம் போன பெரிய மனுஷி என்ற வல்லிக்கண்ணனின் சிறுகதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பெற்ற சிறப்புக்குரியது. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற அவருடைய நூலுக்கு 1978-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் 1950ஆம் ஆண்டு வெளிவந்த லைலா மஜ்னு என்ற படத்திற்கு வசனம் எழுதுமாறு வல்லிக்கண்ணனை அவரின் நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்தவே, அப்படத்தின் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியிருக்கின்றார் வல்லிக்கண்ணன். அதன்பிறகும் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், இலக்கியத்துறையில் ஈடுபடுவதிலேயே ஆர்வங்கொண்டிருந்த வல்லிக்கண்ணன் திரைத்துறையில் தம்மைத் தொலைக்க விரும்பாததால் அவ்வாய்ப்புகளை ஏற்கவில்லை எனத் தெரிகின்றது.

திறனாய்வாளராகவும் திகழ்ந்த வல்லிக்கண்ணன், படைப்பாளிகளைப் பாராட்டுகின்ற நேரிய அணுகுமுறையையே அதிகம் கடைப்பிடித்தார்; அதுவே அவரின் குறையாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டது. வல்லிக்கண்ணன் படைப்பாளிகளைத் தேவைக்கு அதிகமாகப் புகழ்கின்றார்; படைப்புகளின் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்பட்டது.

அதற்கான் பதிலை ஒரு நேர்காணலில் அளித்த வல்லிக்கண்ணன், பாராட்ட வேண்டியதைப் பாராட்டாமல் தவறவிட்டதாலே, பல நல்ல காரியங்கள் வளராமலே போய்விட்டன என்று மகாகவி பாரதியே சொல்லியிருக்கிறார். பொதுவாகப் பாராட்ட வேண்டியதை பாராட்டுகின்ற மனநிலை நம்மவர்களிடம் இல்லை. வளர விரும்புகிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். பாராட்டு அவர்களுக்கு மகிழ்ச்சியையும், மேலும் உழைக்க உற்சாகத்தையும் வளர்வதற்கான ஊக்கத்தையும் அளிக்கும்.” என்றிருக்கின்றார். உண்மையில் மிகவும் அரிதான, வியக்கத்தக்க பெருந்தன்மைதான் இது!

வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள் என்ற அவருடைய நூல் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது. வாழ்க்கைச் சுவடுகள் என்ற தன்வரலாற்று நூலில் தம் வாழ்வின் சுவையான அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கின்றார் வல்லிக்கண்ணன். இந்நூல் ஓர் அரிய வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றது.

தம் வாழ்வின் இறுதிவரைத் திருமணமே செய்துகொள்ளாத வல்லிக்கண்ணன், சென்னையிலும் நெல்லை ராஜவல்லிபுரத்திலுமாக மாறிமாறி வசித்துவந்தார். அவர் ராஜவல்லிபுரத்தில் தங்கியிருக்கும் காலத்தில் அவரைக் கண்டு அளவளாவிச் செல்வதற்காக அந்நாளைய இலக்கிய இளவல்களான வண்ணதாசன், வண்ணநிலவன், நம்பிராஜன், கலாப்பிரியா போன்றவர்களும் கி.ராஜநாராயணன், தீப. நடராஜன் (ரசிகமணி டி.கே.சியின் பேரன்), தஞ்சை பிரகாஷ் போன்றோரும் அடிக்கடி வந்துசென்றிருக்கின்றார்கள்.

பல எழுத்தாளர்களுக்குப் பெயர்சூட்டிய பெருமையும் வல்லிக்கண்ணனுக்கு உண்டு. வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அப்பெயர்களைச் சூட்டியவர் வல்லிக்கண்ணனே ஆவார்!

வல்லிக்கண்ணனின் முத்து விழாவின்போது அவருக்குக் கவிஞர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல கிரீடங்கள் சூட்டப்பட்டன. இந்த கிரீடங்கள் அனைத்திலும் கட்டுரையாளர் என்ற கிரீடமே அவர் தலைக்கேற்ற அளவில் பொருத்தமாகச் செய்யப்பட்ட சரியான கிரீடமாகும் என்று குறிப்பிடும் அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்,

மிக நேர்த்தியான வடிவமைப்பு, பிசிறில்லாத தெளிந்த நடை, திடீரென உரத்த குரலில் பேசாமல் கட்டுரை முழுவதையும் ஒரே தொனியில் பேசச் செய்திடும் ஆற்றல், கடும் உழைப்பைத் தந்து நம்பகமான தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்புணர்ச்சி இவையெல்லாம் வல்லிக்கண்ணனுடைய கட்டுரைகளின் பொதுத் தன்மைகள் என்று பாராட்டுகின்றார்.

ஆடம்பரம் என்ற சொல்லையே அறியாதவராய் மிக மிக எளிமையாய் வாழ்ந்து காட்டியவர் வல்லிக்கண்ணன். ஒல்லிக்கண்ணன் என்று அவருடைய எழுத்தாள நண்பர்கள் வேடிக்கையாகக் குறிப்பிடும் அளவுக்கு மெலிந்த தேகம் படைத்தவர்; ஆனால் நெஞ்சுறுதியில் உயர்ந்தவர்.

இலக்கியத்திற்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்து எழுத்தையும் எழுதுகோலையுமே தெய்வங்களாய்க் கருதிவாழ்ந்த வல்லிக்கண்ணன் 2006-ஆம் ஆண்டு தம்முடைய 86ஆம் அகவையில் நிமோனியா காய்ச்சலால் மறைந்தார். தற்காலக் கவிதை இலக்கியத்தின் வரலாற்றைத் தம் எழுத்துக்களால் நிலைநிறுத்திய வல்லிக்கண்ணனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார் சிறந்ததோர் தமிழ் ஆளுமையாய்!


இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.


Posted on December 19, 2020   #Kavitha Rajasekar     #Nivethitha Raman     #Megala Ramamoorthy  







← Next post    ·    Previous post →

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!