logo

Home Tamil School Archives Search Feed Contributing Guide


இதழ்: இருபத்தி ஒன்பது , பிப்ரவரி

ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்

இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா

தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ


அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,

இரண்டாம் பருவத்தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த வாரங்களில், ஆசிரியர்கள் பெற்றோர்களை தொடர்பு கொண்டு மாணவர்களின் முன்னேற்றத்தை பற்றி விவாதித்தார்கள். ஒருவேளை இக்கலந்துரையாடலில் நீங்கள் பங்கு கொள்ளவில்லை என்றால், ஆசிரிய குழுவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

ஏறத்தாழ கடந்த ஆண்டு இதே நேரத்தில், மெய்நிகர் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முயற்சி எவ்வாறு செல்லப்போகிறது என்ற ஒரு ஐயப்பாடு எல்லோருடைய எண்ண ஓட்டத்திலும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரிய குழு, பள்ளி முதல்வர்கள் , நிர்வாக குழு மற்றும் தன்னார்வலர்கள் என்று அனைவரின் ஒருமித்த முயற்சியால் சென்ற ஒரு வருடத்தை வெற்றிகரமாக கடந்து விட்டோம் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம். பங்காற்றிய அனைவருக்கும் தமிழ் பள்ளி தம் நன்றியை உரித்தாக்குகிறது.

வீட்டுப்பாட பயிற்சி மிகவும் முக்கியம் என்பதை பெற்றோர்கள் தொடர்ந்து பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.


செய்தி மடல் ஆசிரியர் பகுதி

அமெரிக்க தமிழ் கல்வி கழகம் நடத்திய தமிழ் பேச்சு போட்டியில், சனிக்கிழமை வகுப்பு - நிலை 5C யில் பயின்று வரும் நம் பள்ளி மாணவி யாழினி முதல் பரிசு பெற்றார் என்ற செய்தி கண்டு மிகுந்த பேருவகை கொண்டோம். இச்செய்தி குழந்தைகளுக்கு ஊக்கம் தருவதாக இருந்தது என்று சில பெற்றோர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

பழந்தமிழ் சிறு தெய்வங்கள், வைதீக தெய்வங்கள் ஆனது குறித்த கட்டுரையில் நம் தமிழ் மாநிலத்திற்கு நெருக்கமான முருகன்/வேலனை மேற்கோளிட்டு விளக்கிய விதம் அனைவருக்கும் எளிய வகையில் புரியும்படி இருந்தது. செய்தி மடலுக்கான கேள்வி பதில் பகுதியில் பகுத்தறிவு சிந்தனை மிக்க கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் முனைவர் பரிமளாநாதன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.

தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!


செவி வழிக்கல்வி - திருக்குறள்
 — கவிதா ராஜசேகர்

Kavitha Rajasekar

இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்

திருக்குறள் ஈகை - கொடுப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும் ? விளக்கம்

திருக்குறள் புகழ் - ஏன் புகழுடன் வாழ வேண்டும்? விளக்கம்


அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம் .

இதுக்கு ஏதாவது ஒரு idea’ சொல்லுங்களேன் இதற்கு ஏதாவது ஒரு யோசனை சொல்லுங்களேன்
இப்படி செய்யலாம் ok’ யா? ok. இப்படி செய்யலாம் சரியா’?- சரி’.
நாங்க sunrise’ பாக்க beach’ போறோம் நாங்க சூரிய உதயம் பார்க்க கடற்கரைக்கு போகிறோம்
நான் play area’ போய் slide play’ பண்ணனும் நான் விளையாட்டு மைதானம்சென்று சறுக்கு விளையாடனும்
இந்த piggybank’ இல் எவ்ளோ coins’ இருக்கு? இந்த உண்டியலில் எவ்வளவு நாணயங்கள் இருக்கு?

இலக்கிய பகுதி

நூல் பெயர்-இன்னிலை

ஆசிரியர் பெயர் - திரு.பொய்கையார்

                                 இன்னிலை வரலாறு

இன்னிலையை இயற்றியவர் திரு.பொய்கையார். திரு. வ. உ., சிதம்பரம் பிள்ளையவர்கள் விருத்தியுரையுடன் தில்லையாடி த. வேதியப் பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்றது. இரண்டாம் பதிப்பு. அம்பா சமுத்திரம் அகஸ்தியர் அச்சுக்கூடம் விபவ வருஷம் என்று முன்பக்கம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் முன்னுரை ஆசிரியர். உரைப்பாயிரம்,” இரண்டாம் பதிப்புரை ஆகிய நான்கும் வ. உ. சி அவர்களே வரைந்திருக்கின்றனர். பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று இன்னிலை தான் என்பதற்கும் அதனை இயற்றியவர் பொய்கையார் என்பதற்கும் இது சிறந்த நூல் என்பதற்கும் பல காரணங்காட்டி விளக்குகிறார். இன்னிலை‘ஆசிரியர் என்ற தலைப்பில் உள்ளது இது.

இந்நூலினது ஏட்டுப் பிரதியின் முதல் ஏட்டுத் தொடக்கத்தில் மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னும் சொற்களும், அம் முதலேட்டின் முடிவில் திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னுஞ் சொற்களும், அவ்வேட்டுப் பிரதியின் கடைசி ஏட்டு முடிவில் பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என்னும் சொற்களும், எழுதப்பட்டுள்ளன. இந்நூலின் ஏட்டுப் பிரதியை எழுதிய திருமேனி இரத்தினக் கவிராயரவர்கள் செந்தமிழ்ப் புலமையும் சீரிய ஒழுக்கமும் தெய்வ பக்தியுஞ் சிறந்து விளங்கியவர்கள். இந்நூலின் ஏட்டுப் பிரதியை அளித்த ஸ்ரீமான் மலையையாப் பிள்ளையவர்கள் அக்கவிராயவர்களின் ஏடுகளை யெல்லாம் போற்றி வைத்திருக்கும் அவர்களுடைய சந்ததியார்களின் தலைவராய் விளங்கியவர்கள். பொய்கையார் என்பவர் இன்னிலை என்னும் நூலை இயற்றிற்றிலர் என்றாவது, அந்நூலை வேறு யாரேனும் இயற்றினரென்றாவது நாம் கேள்விப்படவில்லை. ஆதலால் இன்னிலை என்பது இந்நூலே என்றும் இந்நூலை இயற்றியவர் பொய்கையாரே யென்றும் நாம் கொள்ளலாம்.

இந்நூல், அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என நான்கு பகுதிகளாகவும், அவற்றில் வீட்டுப்பால்”இல்லியல் துறவியல் என இரண்டியல்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. அறப்பால் பத்து வெண்பாக்களையும், பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும், இன்பப்பால் பன்னிரண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் (இல்லியல் எட்டு வெண்பாவும், துறவியல் ஆறு வெண்பாவுமாக) பதினான்கு வெண்பாக்களையும், கொண்டுள்ளன என்பது வ. உ. சி அவர்கள் முன்னுரை. அவ்வாறே பால் இயல்கள் பகுக்கப்பட்டுள்ளன.

                            அறப்பால்

அறத்தைப் பற்றிக் கூறும் பகுதியெனப்பொருள் படும். ஆடவர்க்குரிய உறுதிப்பொருளாகிய அறம், பொருள், இன்பம். வீடு என்ற நான்கின் முதல் நிற்பது அறம். ஆதலின் அறப்பால் முதலின் வைக்கப்பட்டது.

வெண்பா

'அன்றமரிற் சொற்ற வறவுரைவீழ் தீக்கழுது
மன்று யர்ந்து போந்த வகைதேர்மின்-பொன்றா
அறமறிந்தோன் கண்ட வறம்பொருள்கேட் டல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு'.

சொற்பொருள் - அன்று-முற்காலத்தில், அமரில் சொற்ற அறம் உரைவீழ் தீ கழுது-பாரதப்போரில் (கண்ணன் அருச்சுனற்குக் கூறிய கீதையாகிய) அறவுரையை விரும்பிக்கேட்ட கொடிய பேயானது, உயர்ந்து மன்று போந்த வகை தேர்மின்-(அறிவால்) உயர்வுற்று ஆன்றோரவையைப் போய்ச்சேர்ந்த வகையை ஆராய்வீர், பொன்றா அறம் அறிந்தேன் கண்டவறம் பொருள் கேட்டு - அழியாத தருமங்களையுணர்ந்தோன் அறிந்து கூறிய அறநூலினையும் பொருள் நூலினையும் (நீங்கள்) கேட்டு, அல்லல் மறம் ஒறுக்க - துன்பத்தை விளைக்கும் பாவங்களை நீக்குக, வாய்த்த வழக்கு(இது) - பொருந்திய நன்னெறி இதுவேயாம்.

கருத்து - கொடிய பேயும் அறவுரை கேட்டுயர்ந்தது; ஆதலால் மக்களாகிய நீங்களும் ஆன்றோரறவுரை கேட்டுப் பாவம் நீக்கி வாழ்க.

விளக்கம் -அறவுரை கேட்டுய்யுந்தன்மையில்லாதது பேய் என்பதை விளக்க தீக்கழுது என்றார். பேய்க்கு அறவுரை கூறிலன் கண்ணன் என்பது தோன்ற அமரிற் சொற்ற அறவுரை என்றார். அயலானுக்குக்கூறிய அறவுரையை விரும்பிக் கேட்டுப் பேயும் உயர்ந்தது என்றால் மக்களாய்ப் பிறந்தவர் தமக்கு அறிஞர் கூறும் அறவுரையைக் கேட்பின் உயர்வார் என்பது கூறாமலே விளங்கும். அதனை ஆராய்ந்து பாருங்கள் என்பார் வகை தேர்மின் என்றார். மறம் என்பது வீரத்தையுணர்த்தாது பாவத்தை யுணர்த்திற்று; அல்லல் மறம் என்று கூறிய குறிப்பினால். வீரம் புகழ்விளைத்துச் சுவர்க்கம் புகுவிக்கும் என அறிக. வழக்கு-வழக்கம். இது மக்கட்குப் பொருந்திய வழக்கமாகும் என்று கூறுவார் வாய்த்த வழக்கு என்றார். வீழ்கழுது தீக்கழுது எனத்தனித்தனி கூட்டுக.

                          பொருட்பால்

இது பொருளைப் பற்றிக்கூறும் பிரிவு எனப்பொருள்படும். அறத்தையும் இன்பத்தையும் பொருள் தருதலின் நடுவாகப் பொருட்பால் வைக்கப்பட்டது.

'உண்மையொராப் பித்த ருடைமை மயக்கென்ப
வண்மையுற வூக்க லொருதலையே-கண்ணீர்
இருபாலுந் தோன்றன்ன வீர்க்கலார் போழ்வாள்
இருபா லியங்கலினோ டொப்பு'

சொற்பொருள் - உண்மை ஒரா பித்தர் உடைமை மயக்கு என்ப- உண்மையையறியாத மயக்க முடையவர் செல்வத்தை மயக்கம் தருவது (சிறந்தது அன்று) என்று கூறுவர். ஒருதலையே வண்மை உற ஊக்கல்-துணிவாகவளம் பொருந்தும்படி தேடுவதற்கு ஊக்கங்கொள்க. கண்ணீர் இருபாலும் தோன்று அன்ன-கண்ணின் நீர்மை போன்ற இருபக்கமுள்ள அறம் இன்பங்கள் தோன்றுவதாகிய அத்தன்மையுடையது (செல்வம்) ஈர்க்கலார் போழ்வாள் இருபால் இயங்கலினோடு ஒப்பு-வெட்டுவோர்க்கு வெட்டும் வாளாயுதம் இருபாலும் இயங்குவதனோடு ஒப்பாகும் அது.

கருத்து - செல்வம் அறம் இன்பங்களைத் தோன்றுவிக்கும். செல்வ மிருப்பது வீரர்களுக்கு வாளாயுதம் இருப்பது போன்றது. ஆதலாற் செல்வத்தைத் தேட வேண்டியது மக்கள் கடமையாம்.

விளக்கம் - செல்வத்தினால் அறஞ் செய்து, இன்பத்தையும் நுகர்ந்து பின் முத்தியை யடையலாம் என்ற உண்மையறியாதவர் செல்வத்தைச் சிறப்பாக மதிக்கமாட்டார். அது மயக்கத்தைத்தருவது என்று வெறுப்பார். அவ்வாறு வெறுப்பவர்க்குத் துறவு வாழ்க்கையே தக்கது. இல்வாழ்விலிருப்பவர் அவ்வாறு கூறினால் அது மயக்கமேயாம் என்ற கருத்து வெளிப்பட உண்மை ஒராப் பித்தர் என்றார் பித்தர் என்றது துறவிகளையே குறிக்கும். வண்மையுற - வளம்பொருந்தும்படி, பெருகும்படி, ஊக்கல் - ஊக்குக. வியங்கோள். கண்நீர் இருபால் என்பது இரண்டு கண்போன்ற அறம். இன்பங்களையுணர்த்தியது. மக்கள் வாழ்வின் பயன் அறஞ்செய்தலும் இன்பந்துய்த்தலுமே. ஆதலின் அவையிரண்டும் இரு விழிகளாகக் கொள்ளப்பட்டன. இருபால் என்பது, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றின் நடுவினிற்கும் பொருளுக்கு இருபக்கத்தின் நிற்கும் பொருள்களாகிய அறத்தையும் இன்பத்தையும் உணர்த்திற்று வடுவிலா வையத்து மன்னிய மூன்றின், நடுவண தெய்த விருதலையும் எய்தும்,” எனவும், ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கெண்பொருள், ஏனையிரண்டும் ஒருங்கு எனவும் செலவப்பொருள் அறத்தையும் இன்பத்தையும் தரும் எனக்கூறியிருப்பதும் நோக்குக. வீரர் கையில் வாளிருந்தால் அதுஇரு பக்கமும் செல்வது போலப் பொருளும் இருபக்கமும் செல்லும், பொருள் இருபக்கம் செல்லுதலாவது அறம் இன்பம் ஆகிய இருபாலும் செல்வது. வாள்பகையைத் தொலைப்பது போலச் செல்வமும் பசி பிணி முதலியவற்றைத் தொலைக்கும்.

                            இன்பப்பால்
'அறங்கரை நாவானா மாய்மயிலார் சீரில்
லறங்கரையா நாப்பணடைவாம்-புறங்கரையாத்
திண்மை நிலையி னுயர்புலத்திற் சேர்வாமீண்
டெண்ணிலைக குய்வா யிது'.

இன்பத்தின் பகுதியைக் கூறுவது இது. ஐம்புலனுகர்ச்சியிற் சிறந்த இன்பமாவது மங்கையர் காமவின்பமேயாதலின் அதனைக்கூறும் பகுதியாம். மூன்றாவதாக இன்பப்பால் வைக்கப்பட்டுள்ளது.

சொற்பொருள் - அறம் கரை நாவான் ஆய் மயிலார் சீர் ஆம்-அறங்கூறும் நாவினால் ஆராய்ந்த மயில்போன்ற மகளிருடன் கூடிவாழும் சிறப்பு (ஒருவனுக்கு) உண்டாகும், இல்லறம் கரையா நாப்பண் அடைவுஆம், இல்லறத்தின் முடிவாக நடுவுலகம் (பொன்னுலகம்) அடைவது கூடும், புறம் கரையா தின்மை நிலையின் உயர்புலத்திற் சேர்வு ஆம்-புறத்தொழுக்கிற் சென்று தளராத வலிமையான நிலையால் உயர்ந்த முத்தியாகிய இடத்திற்குச் சேர்வதும் கூடும், ஈண்டு எண் நிலைக்கு உய்வாய் இது (ஆதலால்) இவ்வுலகத்தில் ஆராய்ந்த நிலைகட்கு எல்லாம் செலுத்துகின்ற வழி, இவ்வழியேயாம்.

கருத்து -இல்லறமே சுவர்க்கத்துச் செல்லுவதற்கும், முத்தியுலகம் அடைவதற்கும் வழியாகும். ஆதலால் இல்லறத்தை நல்லறமாகக்கொள்ளல் வேண்டும் மக்கள் யாவரும்.

விளக்கம் - உலகத்தார்க்கு அறவுரை வழங்கும் அறிவுடையோனை மகளிர் மணந்து வாழவிரும்புவர் என்ற கருத்தினால் அறம் கரைநாவான்……..ஆம் என்றார். கல்வியறிவில்லாத கயவனை மணந்து இல்லறம் நடத்தக் கன்னியர் எண்ணார் என்பது கருத்து. இல்லறம் இனிது நடத்தி அறம் புரிந்து வாழ்வார் சுவர்க்கஞ் செல்வது உறுதியாதலால் நாப்பண் அடைவு ஆம் நாப்பண்-நடு. இது முத்தியுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் நடுவில் இருப்பது கருதி, நாப்பண் எனப்பட்டது அன்றியும் மண் விண் பாதலம் என்ற முறையில் நடுநற்றலாலும் நாப்பண் என்பது பொருந்தும். புறங்கரையாத்திண்மை நிலையாவது; இல்லறத்திலிருந்து பரத்தையர் முதலிய பிற மகளுடன் கூடித் தகாத செயல் புரியாமல் தன் மனைவியையன்றிப் பிறமாதரை மனத்தானும் நினையாது வாழும் வலிய நிலைமை இந்நிலை தவத்திற்கொத்த நிலையாம். இதனையே வானப் பிரத்தம் என்பர் வடநூலார். மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் என்பர் தமிழர். இந்நிலையினிற்பவர் முத்தியுலகஞ் சேர்வர் என்பது நூற்றுணிபாதலின் உயர்புலத்திற் சேர்வு ஆம் என்றார். உயர்புலம்-உயர்ந்த இடம், இது முத்தியுலகத்தையுணர்த்திற்று. இல்லறத்திருப்பவன் சுவர்க்கமும் அடையலாம் பின் முத்தியுலகத்தையடையலாம். எவ்விடத்திற்கும் செலுத்துகின்ற வழியாக இல்லறம் இருக்கின்றது என்பார் உய்வாய் என்றார். வாய்-வழி உய்க்கும் வழி எனப் பொருள்.

                             வீட்டுப்பால்

இல்லியல்

'எய்ப்பில்வைப் பாக வருவாயி லைந்தொன்றை
மெய்ப்பிணி சேய்வரைவிற் கூட்டிடுக-கைப்பொருள்
இட்டிலுய் வாயிடுக்க வீங்க விழையற்க வாய்
வட்டன் மனைக்கிழவன் மாண்பு'.

கருத்து -வீட்டுக்குரிய தலைவன் பொருளைச் சேர்க்க வேண்டும்; வருவாய் குறைந்தாற் செலவைக் குறைக்கவேண்டும்; ஐந்தில் ஒரு பங்கைச் சேம நிதியாக வைத்திருக்க வேண்டும்; அப்பொருள் மக்கள் மணத்திற்கும் தன் முதுமைப்பருவத்திற்கும் நோய்க்கும் உதவியாகும்.

விளக்கம்- வரவுக்குத்தக்கவாறு செலவு செய்யவேண்டும்; வரவிற்குக்குறைந்த செலவே தக்கதாம். வரவிற்கு மேற்செவவு செய்வது தகாததாம். ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை, போகா றகலாக் கடை என்பதும், அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல, இல்லாகித் தோன்றாக் கெடும் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கன. ஆறில் ஒருபங்கு அரசனுக்கு இறையாகக் கொடுக்கப்படும் ஆதலால் ஐந்து பங்கில் ஒன்றை என்றார். ஆண்டுதோறும் ஐந்தில் ஒருபங்கைச் சேர்த்துச் சேமவைப்பாக வைத்திருந்தால் அது மக்கட்கு மண முடிக்கவும் நோய் வந்தால் மருந்துண்பதற்கும் முதுமைப்பருவத்தில் உதவியாகும் என்பது கருத்து. வீங்க-பெருக. இது தன்னைப் பிறர்க்குப் பெருக்கிக் காட்ட என்ற பொருளைத் தந்தது. வெளித்தோற்றம் பெருமையாகக்காட்டுவது, இதனை”ஆடம்பரம் என்பர். அதனாற் பயனின்று என்பார், விழையற்க என்றார். வட்டல்-திரட்டுதல்; இது பொருளைத்திரட்டுதல் என்ற பொருளைத்தந்தது. பொருளில்லார்க், கிவ்வுலக மில்லாதி யாங்கு என்ற குறளடியை நினைவு கூர்க.

இவ்வாறாக இன்னிலை எனும் நூல் பொய்கையாரால் அறம்,பொருள்,இன்பம்,வீடு என நான்கு பிரிவுகளில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது.


காதலுக்கு மரியாதை!
 — மேகலா இராமமூர்த்தி

Megala Ramamoorthy
"காதல் காதல் காதல்
காதல்போயின் காதல்போயின்
சாதல் சாதல் சாதல்"

என உணர்ச்சிததும்பக் காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்தினான் மகாகவி பாரதி.

காதல் என்பது பிறருக்கு விவரிக்க இயலாத ஓர் உள்ளத்து உணர்வு; காட்டலாகாப் பொருள். ஊழ் கூட்டுவிப்பதனால், வடகடலிட்ட ஒருநுகத்தின் ஒருதுளையில் தென்கடலிட்ட ஒருகழி கோத்தாற்போல் (இறையனார் அகப்பொருளுரை — சூத்திரம் 2) எங்கோ பிறந்த ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொள்கின்றனர். இந்தக் காதலை, நோய் என்று புகல்வதிலும், அணங்கு என்று மருள்வதிலும் பொருளில்லை. குளகை (அதிமதுரத் தழை) மென்ற யானை மதங்கொள்வதைப்போல், தக்கவரைக் கண்டால் வெளிப்படும் தன்மையுடையது இந்தக் காதல்!” என்கிறார் சங்கப்புலவர் மிளைப்பெருங்கந்தனார்.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் 
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகுமென்று ஆள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே (குறுந்: 136) 

காதலும், காமமும் ஒரேபொருளில் சங்க இலக்கியத்தில் பயின்றுவருதலுண்டு. இந்நாளில்தான் காமம் என்பது உடலிச்சையை மட்டும் குறிக்கும் சொல்லாய்ப் பயன்படுத்தப்பெறுகின்றது.

தெய்வத்தின் ஆணையால் நிகழ்வது, ஊழின் வலியால் விளைவது என்று காதல்குறித்துச் சான்றோர் சாற்றியிருப்பினும், இவையாவும் உண்மைக்காதலுக்கே பொருந்துவதாகும். அப்படியானால் போலிக்காதல் என்று ஒன்று உண்டா?” என்ற வினா நமக்கு எழலாம்.

இன்றைய இளைய சமுதாயத்தினர் சிலரின் நடத்தையை நோக்குங்கால், போலிக்காதல் இல்லை என்று சொல்லுதற்கில்லை என்றே பதிலிறுக்கவேண்டியிருக்கின்றது. ஆம்! இன்றைய இளைஞர் பலருக்குக் காதல் என்பது பொழுதுபோக்காகவும், உடலிச்சையைத் தணித்துக்கொள்வதற்கான குறுக்குவழியாகவும் மாறிவருவதாய்த் தோன்றுகின்றது. மக்கள் நடமாட்டம் மிகுந்திருக்கும் கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பொதுஇடங்களிலும், பேருந்துகள், புகைவண்டிகள் உள்ளிட்ட ஊர்திகளிலும் காதலர்கள் என்று சொல்லிக்கொள்(ல்)வோர் அரங்கேற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

அஞ்சுவது அஞ்சாமையும், நாணுவது நாணாமையும் பேதைமையே ஆகும். மற்றவருக்குக் காட்சிப்பொருளாய்க் காதல்மாறுவது வேதனைக்குரியது. நம் தமிழ்ப்பண்பாட்டிற்கு அது முற்றிலும் எதிரானதுங்கூட. பெற்றோருக்குத் தெரியாமல் தலைவனும் தலைவியும் வளர்த்த அருமைக் காதலை, களவு எனத் திணைவகுத்து அனுமதித்த நம் புலவர்கள், அவர்கள் நாணமின்றிப் பொதுஇடங்களில் பலர்காணக் காதல் வளர்ப்பதை அனுமதித்தாரில்லை. பலர் காண என்பதில் உயர்திணையை மட்டுமல்லாது அஃறிணையையும் அடக்கியிருக்கும் உயர்ந்த மரபுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

என்ன….? அஃறிணை உயிர்கள் முன்பும் காதல் வளர்ப்பது தவறா!” என்றுதானே வியக்கின்றீர்கள்? நற்றிணைப் பாடலொன்று பகரும் கருத்து அதைத்தான் சொல்கின்றது!

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும்  நும்மொடு நகையே….. (நற்றிணை – 172)

நெய்தல் நிலத்தலைவன் ஒருவனும், தலைவி ஒருத்தியும் ஒருவரை ஒருவரை சந்தித்தனர் கடற்கரையில். கடலோரக் கவிதை’யாய் காதல் மலர்ந்தது அவர்களிடையே. பிறரறியாது தினந்தோறும் சந்தித்துவந்தனர் இருவரும். அவர்கள் காதலை அறிந்தாள் தலைவியின் ஆருயிர்த்தோழி. ஒருநாள் பகற்பொழுதில் தலைவியைச் சந்திக்கவந்தான் தலைவன். அவ்வேளையில் தலைவியுடன் தோழியும் இருந்தாள். அவளைக்கண்டு நட்போடு புன்னகைத்த தலைவன், தலைவியோடு அருகிலிருந்த புன்னை மரத்தடியில் அமரப்போனான்.

அவ்வளவுதான்! தீயை மிதித்ததுபோல் பதறிய தலைவி, அவ்விடத்தைவிட்டு அகன்று நின்றாள். அவளின் செயல்கண்டு திகைத்த தலைவன், ஏன் இந்த மரத்தைக் கண்டதும் பதறி விலகுகின்றாய்? உன் அச்சத்துக்குக் காரணமென்ன?” என்று வினவினான் வியப்போடு!

இந்தப் புன்னையருகில் என்னால் உம்மோடு அமரமுடியாது; ஏன்…அமரவும் கூடாது!” என்று புதிர்போட்டாள் தலைவி. விடைதெரியாது விழித்த தலைவன், தலைவியருகில் நின்றுகொண்டிருந்த தோழியை நோக்கினான். தலைவியின் தயக்கத்துக்கான காரணத்தை தோழி அப்போது விளம்பலுற்றாள்.

சிலகாலத்திற்கு முன்பு நானும்(தோழி), தலைவியும் பிற தோழியரோடு இங்கே (தற்போது புன்னைமரம் இருக்குமிடத்தில்) கிச்சுக்கிச்சுத் தம்பலம்1 விளையாட விரும்பி, அவ்விளையாட்டில் ஒளித்துவைக்க ஏற்றதொரு பொருளைத் தேடிக்கொண்டிருந்தோம். சுற்றுமுற்றும் பார்த்தபோது முற்றிய புன்னைக்காய் ஒன்று எங்கள் கைக்குக் கிட்டியது. அதைவைத்து விளையாடிவிட்டுச் சிறிதுநேரங்கழித்து மண்ணுள் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அந்தக் காயை இங்கு விட்டுவிட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டோம்.

சிறிதுநாள் கழித்து மீண்டும் நாங்கள் இவ்விடம்வந்து பார்த்தபோது, என்ன ஆச்சரியம்…! அந்தப் புன்னைவிதை சிறிதாய் முளைவிட்டிருக்கக் கண்டோம்; அளவற்ற மகிழ்ச்சி கொண்டோம். அந்தச் சின்னஞ்சிறுசெடியை நெய்கலந்த இனிய பாலை நீர்போலப் பெய்து வளர்த்துவந்தோம். (தலைவி இல்லத்தின் செல்வ வளம் இங்கே குறிப்பாலுணர்த்தப்படுகின்றது.)

அந்தப் புன்னைச்செடியை எம் அன்னைக்கும் காட்டினோம்; புன்னையைக் கண்ட அன்னை மகிழ்ச்சியோடு, நும் தங்கையைப் போன்ற இந்தப் புன்னை நும்மினும் சிறந்ததாகும் என்று இதனைப் புகழ்ந்துரைத்தார். அன்னை போற்றிய இப்புன்னையை அதுமுதல் எங்கள் தங்கையாகவே எண்ணிவருகின்றோம். அதனால்தான், அது பார்த்திருக்க, அதனருகே உம்மோடு அமர்ந்து நகையாட நாணுகின்றாள் எம் தலைவி என்று எடுத்துரைத்தாள் தோழி.

தோழியின் உரைகேட்டுப் பிரமித்துப்போனான் தலைவன். கேளிர்முன்பு (அது மரமாகவே இருந்தபோதினும்) காதல்வளர்க்க நாணிய தலைவியின் மாண்பும், மாட்சியும் நம்மைச் சிலிர்க்கவைக்கின்றன அல்லவா? இத்தகைய நாணமும் நற்பண்பும் இன்றைய மாடர்ன் காதலர்களிடம் மறைந்து அசட்டுத்துணிச்சலும், ஒழுக்கக்கேடும் மலிந்துவருவது மனவருத்தத்தை மிகுவிக்கின்றது.

ஆதலினால் காதலர்களே…காதல் செய்யுங்கள்; தவறில்லை! ஆனால், அதனைக் கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் செய்யுங்கள். அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும் காதலுக்கு நீங்கள் செய்யும் மரியாதையும் அதுவே! **************************

1.கிச்சுக்கிச்சுத் தம்பலம் - அன்றைய மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று. மண்ணை நீளமாகக் குவித்து அதனுள் ஒருபொருளை ஒரு பெண் ஒளித்துவைக்க, இன்னொரு பெண் அதனைக் கண்டுபிடிக்கவேண்டும். இதனைக் காய்மறை விளையாட்டு என்றும் அழைப்பர். நாகரிகம் மிகுந்துவிட்ட இக்காலத்தில் கணினி விளையாட்டுக்கள் வரவேற்பைப் பெற்று, காய்வைத்து விளையாடும் இவைபோன்ற விளையாட்டுக்கள் மண்ணைவிட்டே மறைந்து வருகின்றன.


இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.


Posted on February 25, 2021   #Kavitha Rajasekar     #Megala Ramamoorthy  







← Next post    ·    Previous post →

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!