இதழ்: முப்பது, ஆகஸ்டு
ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா
தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக் கழகம் தனது எட்டாம் ஆண்டு தமிழ்க் கல்வி சேவையில் அடிஎடுத்து வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் பெற்றோர்களுடனான சந்திப்புடன் தொடங்குவது நம் மரபு. இந்த ஆண்டும் அவ்வண்ணமே நம் பெற்றோர்களுடனான சந்திப்பு மிகவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தது நமக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் ஊட்டும் வண்ணம் அமைந்தது. அது மட்டும் இன்றி, பெற்றோர்களும் தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக் கழகம் பற்றிய பல தகவல்கள், ஏழு ஆண்டுகள் நாம் கடந்து வந்த பாதைகள், தொட்ட இலக்குகள், பள்ளியில் வகுப்பு நடக்கும் முறைகள் மற்றும் இந்த ஆண்டு தம் பிள்ளைகள் பெற இருக்கும் தமிழ்க் கல்வி பாட திட்டங்கள் என பல தகவல்களை அறிந்து கொண்டனர்.
இந்த ஆண்டு நம் பள்ளியில் இருநூற்று என்பது (280) மாணவர்கள் மெய்நிகர் வகுப்புகள் மூலம் தமிழ்க் கல்வி பெற பதிவு செய்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் முதன் முதலாக தமிழ்க் கல்வி பயணத்தை நம் பள்ளியின் வாயிலாக தொடங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் அவர்கள் அனைவருக்கும் தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக் கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம். ஐநூறுக்கும் (500) மேற்பட்ட பெற்றோர்களுடனும், இருநூற்று என்பதுக்கும் (280) மேற்பட்ட மாணவர்களுடனும், நாற்பதுக்கும் (40) மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகளுடனும், இரண்டு (2) பள்ளி முதல்வர்களுடனும், மற்றும் பல தன்னார்வ நல்லுள்ளங்களுடன் தொடங்கிய இந்த வருட கல்விப் பயணம் இனிதே தொடர தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக் கழகம் மேலாண்மை குழு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.
மாணவ ஆசிரியர்கள்!
தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக் கழகத்தின் ஒரு மைல்கல் நிகழ்வாக நமது பள்ளியில் பயின்று பட்டம் பெற்ற மாணவர் செல்வன்.சஞ்சீவ் ராஜா மற்றும் 7 ஆம் நிலை பயின்று கொண்டிருக்கின்ற மாணவி செல்வி.நிவேதிதா ராமன், இருவரும் நிலை இரண்டு மற்றும் மழலை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் தன்னார்வ ஆசிரியர்களாக இணைத்துக் கொண்டுள்ளார்கள். இருவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும். தமிழை அடுத்த தலைமுறைக்கு வெற்றிகரமாக கொண்டு செல்வதில் தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக் கழகம் பெருமிதம் கொள்கிறது. வெற்றிகராமாக நடந்து முடிந்த முதல் வகுப்பிலிருந்து சில படங்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
பேச்சுப் பட்டறை 2021!!
கடந்த கோடை விடுமுறையின் பொழுது நமது பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் பட்டறையில் ஏழு மாணவர்கள் பங்குபெற்றார்கள். இந்தப் பயிற்சியில் மேடைப் பேச்சின் அடிப்படை கட்டமைப்பு பற்றி மாணவர்கள் விரும்பும் வகையில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இதனை ஆசிரியை திருமதி.சுஜாதா சிறப்புடன் நடத்திக் கொடுத்தார். ஆறு வகுப்புகளுக்குப் பின்பு மாணவர்கள் ஸ்ரீ ஐய்யப்பன் கோவில் வாளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்சியில் நேரடியாக பங்குபெற்று அவர்களுக்குப் பிடித்த தலைப்பில் மூன்று மணித்துளிகளுக்குள் ஒரு சிறந்த பேச்சைக் கொடுத்தார்கள். சிறப்பு விருந்தினராக மருத்துவர்.உதயகுமார் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார். உங்கள் பார்வைக்காக சில படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
செவி வழிக்கல்வி - திருக்குறள்
|
![]() |
இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்
திருக்குறள் கல்வி - நல்ல அறிவாளி ஆக என்ன செய்ய வேண்டும் ? விளக்கம்
திருக்குறள் இறைமாட்சி - ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன? விளக்கம்
சிறுகதைப் பகுதி
சிங்கத்தின் அச்சம்
ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது.
அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை.
வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச்சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி விடுகின்றன. அவற்றைத் தேடிப் பிடிப்பது முடியாது போல் இருந்தது.
பசி தாங்க முடியாமல் சினத்துடன். இரை தேடிச் சென்று கொண்டிருந்தது சிங்கம்.
கடைசியில் திடுதிப்பென்று ஒரு நரி எதிரில் வந்து அகப்பட்டுக் கொண்டது.
சிங்கம் அதன் மீது பாயத் தயாராக இருந்தது.
நரி குள்ள நரி. நல்ல தந்திரமுள்ள நரி. தெரியாத்தனமாக சிங்கத்தின் எதிரில் வந்துவிட்டது. ஆனால் அதன் மூளை உடனே வேலை செய்தது. சிங்கத்தை ஏமாற்ற முடிவு செய்தது.
“ஏ சிங்கமே! நான் யார் தெரியுமா? நான் இந்தக் காட்டின் அரசன். என்ன துணிச்சல் இருந்தால் என் எதிரில் வருவாய்?” என்று வலுவான குரலில் கேட்டது.
“ஏ அற்ப நரியே உனக்கு என்ன பைத்தியமா? இந்தக் காட்டின் அரசன் நான் தான் என்பதை அறிய மாட்டாயா? உன்னை நீயே அரசன் என்று கூறிக் கொள்ளுகிறாயே! உனக்கு அறிவு இருக்கிறதா?” என்று சிங்கம் கேட்டது.
“ஏ மூடச் சிங்கமே! நான் சொல்லுவதை நீ நம்ப வில்லையா? சரி என்னோடு வா. இந்தக் காட்டு விலங்குகள் என்னைக் கண்டு பயத்து ஓடுவதை நீயே உன் கண்ணால் பார்க்கலாம்” என்றது நரி.
சரி அதையும் தான் பார்ப்போமோ என்று கூறிச் சிங்கம் நரியுடன் புறப்பட்டது.
இரண்டும் சேர்ந்து காட்டைச் சுற்றின. சிங்கத்தைக் கண்டு பயந்து எதிர்ப்பட்ட விலங்குகள் ஓடி ஒளிந்தன.
அந்த மூடச் சிங்கம் எல்லா விலங்குகளும் நரியைப் பார்த்துப் பயந்து ஓடுவதாக நினைத்துக் கொண்டது. நரியிடமிருந்து தானும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடி ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டது.
நரி வெற்றி நடை போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றது.
கம்பர் பார்வையில் அரசன்!
|
![]() |
தமிழில் இயற்றப்பட்ட ஒப்பற்ற பெருங்காப்பியமாய்த் திகழ்வது கம்பராமாயணம். அதனை இயற்றிய கம்பர் ’கல்வியில் பெரியவர்’ என்றும் ’கவிச் சக்கரவர்த்தி’ என்றும் போற்றப்படுபவர். நாட்டுமக்கள் கைக்கொள்ள வேண்டிய வாழ்வியல் விழுமியங்களை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தம் காப்பியத்தில் வலியுறுத்திச் செல்லும் அவர், நாட்டை ஆளுகின்ற அரசன் எவ்வாறிருக்க வேண்டும் எனும் தம் பார்வையையும் தயரதன் எனும் கோசலநாட்டரசன் வாயிலாக நமக்கு அறியத் தருகின்றார்.
தாய்ஒக்கும் அன்பில் தவம்ஒக்கும் நலம் பயப்பில்
சேய்ஒக்கும் முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்
நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப்புகுங்கால் அறிவுஒக்கும் எவர்க்கும் அன்னான்.
(கம்ப: அரசியற் படலம் – 171)
தயரதன் குடிமக்களிடம் அன்புகாட்டுவதில் தாயைப் போன்றவன்; மக்களுக்கு வேண்டிய நன்மைகளையெல்லாம் செய்வதில் தவம் போன்றவன் என்கிறார் கம்பர்.
நன்மையளிப்பதில் தவம் போன்றவன் என்றது ஏன்?
தவம் செய்வோரின் நோக்கம் தாம் விரும்புகின்றவற்றைப் பெறவேண்டும் என்பதே. அதனால்தான் வள்ளுவப் பேராசானும்,
”வேண்டிய பயன்கள் வேண்டியபடியே கிடைத்தலால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைந்து செய்யப்படல் வேண்டும்” என்றார்.
”வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.” (குறள்: 265)
தயரதனும் அவ்வாறே வேண்டியதைத் தரும் தவத்தை ஒத்தவனாக மக்களுக்கு விளங்கியிருக்கின்றான்.
அடுத்து, அவன் சேயைப் போன்றவன் என்கிறார் கம்பர். மக்கள், பிள்ளைகளைப் பெறுவதன் நோக்கம், முதுமைக் காலத்தில் அவர்கள் தம்மைக் கைவிடாது காப்பார்கள்; தாம் நற்கதியடையத் துணைபுரிவார்கள் என்பதே!
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி – 197)
”கறையான்களால் அரிக்கப்பட்ட முதிய ஆலமரத்தை அதன் விழுது வீழாது தாங்குதல்போல், முதுமைவந்து தளர்ச்சி தோன்றிவிட்ட தந்தையைப் புதல்வன் தாங்கினால் தந்தையின் துயரம் மறையும்” என்று நாலடியார் அறிவுறுத்தியிருப்பது ஈண்டு எண்ணிப்பார்க்கத் தக்கது.
அத்தகு நன்மகனாய்த் தயரதன் தன் நாட்டுமக்களுக்கு, குறிப்பாக, முதியவர்களுக்கு இருந்திருக்கின்றான்.
மக்களுக்கு ஏதேனும் நோய் எனில் அதனைத் தீர்க்கும் மருந்தாகத் தயரதன் இருந்தான் என்கிறார் கம்பர். எனவே மக்களுக்குச் சங்கடங்கள் நேரும் காலத்தில் ஓர் அரசனானவன் அதற்குத் தீர்வாக இருக்கவேண்டுமே தவிர தானே சங்கடத்தைத் தருபவனாக — சிக்கல்களை உருவாக்குபவனாக இருக்கக்கூடாது என்பதையும் இதன்மூலம் நாம் உய்த்துணரமுடிகின்றது. இதனை இந்நாளைய ஆட்சியாளர்களும் உளங்கொளல் வேண்டும்.
அதுபோல், அரசனென்பவன் நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர்க்கு உதவும் அறிவு போன்றிருக்க வேண்டும்; அதாவது அவன் அறிவிற் சிறந்தவனாகவும் இருத்தல் அவசியம் என்ற கருத்தை இங்கே வலியுறுத்துகின்றார் கவிச்சக்கரவர்த்தி.
அரசப் பதவி என்பது மரபுவழியாக வருவது; அப்பதவியில் அமர்வதற்கு அரச மரபில் தோன்றியவனாக இருத்தலே போதுமானது என்ற நடைமுறை விதிகளைத் தாண்டி, அரசனென்பவன் அப்பதவியை வகித்தற்குரிய தகுதியும் திறனும் படைத்தவனாகவும், மக்களின் நன்மதிப்பைப் பெறக்கூடிய அனைத்து உயர்குணங்களும் உடையவனாகவும் இருக்கவேண்டியதன் கட்டாயத்தைச் சூரியகுலத் தோன்றலான தயரதன்வழி நமக்குணர்த்துகின்றார் நற்றமிழ்ப் புலவர் கம்பர்.
நாட்டு மக்களைத் தயரதன் எப்படிப் புரந்தான் என்பதை இன்னொரு பாடலின் வழியாக மேலும் தெளிவாக்குகின்றது இராமகாதை.
”வயிரம் முதலிய அணிகலன்களை அணிந்தவனும், சிங்கம்போன்ற ஆற்றலுடையவனுமான தயரதன், மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர்போல் காத்துவரும் இயல்பினைக் கொண்டிருத்தலால், குற்றமற்ற இவ்வுலகின்கண் உள்ள இயங்குகின்ற, இயங்காது நிலையாயிருக்கின்ற அனைத்து உயிர்களும் உறைகின்ற உடம்பு போன்றவனானான்” என்கிறது இப்பாடல்.
வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர்எலாம் தன்உயிர் ஒக்க ஓம்பலால்
செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ்
உயிர்எலாம் உறைவதுஓர் உடம்பு ஆயினான்.
(கம்ப: அரசியற் படலம் – 177)
அரசனை உயிர்களுக்கு உடம்பு போன்றவன் எனும் கம்பரின் கருத்து அதுவரை தமிழ்ப்புலவோர் சொல்லாத புதுமையான ஒன்று!
”மக்களுக்கு உணவாகும் நெல்லோ நீரோ அவர்கட்கு உயிராகா; அகன்ற உலகத்தையும் அதன்கண் வாழுகின்ற மக்களையும் காக்கின்ற அரசனே அவர்கட்கு உயிர்போன்றவன். எனவே அதனை உணர்ந்து அதற்குத்தக்க வகையில் நடத்தல் வேந்தற்குக் கடன்” என்கிறது மோசிகீரனாரின் புறநானூற்றுப் பாடல்.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் யானுயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே.
(புறம் - 184)
ஆனால் கம்பரோ அரசனே உயிர்போன்றவன் என்ற சங்கச் சிந்தனையை மறுத்து, நாட்டிலே மக்களே முதன்மையானவர்கள்; நாட்டுக்கு உயிர்போன்றவர்கள். அந்த உயிர்களைப் பாதுகாக்கின்ற உடல்போன்று - கவசம்போன்று இருப்பவன்தான் நல்ல அரசன் என்ற மாற்றுச் சிந்தனைக்குத் தோற்றுவாய் செய்திருப்பது, மக்களை முதன்மைப்படுத்தும் மக்களாட்சித் தத்துவத்தில் அவருக்கிருந்த நம்பிக்கையைப் புலப்படுத்துகின்றது. அவ்வகையில் கோனாட்சி நிலைகொண்டிருந்த காலத்திலேயே குடியாட்சி குறித்துச் சிந்தித்த முன்னோடியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் திகழ்கின்றார் கம்பர்.
Posted on August 24, 2021 #Kavitha Rajasekar #Megala Ramamoorthyஇந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.