logo

Home Tamil School Archives Search Feed Contributing Guide


இதழ்: முப்பத்தி ஒன்று , செப்டம்பர்

ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்

இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா

தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ


அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,

இக்கல்வியாண்டின் மெய்நிகர் வகுப்புகள் இனிதே தொடங்கி, மாணவர்களும் ஆசிரியர்களும் புதிய மெய்நிகர் தளத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை கையாள்வதை காண முடிகிறது. புதிய தளத்தைப் பயன்படுத்துவதில் ஐயம் இருக்குமாயின், நிர்வாகக் குழுவையும், கிளை முதல்வரையும் தயங்காமல் அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளவும். இவ்வரையில் மாணவர்கள் புத்தகங்கள் பெறவில்லையெனில், பெற்றோர்கள் உடனடியாக நிர்வாகக்குழுவை தொடர்பு கொண்டு புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். மேலும் வகுப்புகள் செயல்பாட்டில் பரிந்துரை இருக்குமாயின் ஆசிரியர் குழுவை அணுகவும்.

ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவொருக்கொருவர் அறிமுகமாகி முழுவீச்சோடு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வீட்டுப்பாட பயிற்சி மிகவும் முக்கியம் என்பதை பெற்றோர்கள் தொடர்ந்து பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள். இன்னும் சில வாரங்களில் முதலாம் பருவத்தேர்வு நடைபெற உள்ளது. கிளை முதல்வர்களும், பள்ளி நிர்வாகமும் முதலாம் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகளில் முழுவீச்சோடு செயல்பட்டு வருகிறார்கள். தேர்வு குறித்த தகவல்கள், கடைபிடிக்க வேண்டிய நெறிகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் புலனத்தின் வாயிலாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.


செவி வழிக்கல்வி - திருக்குறள்
 — கவிதா ராஜசேகர்

Kavitha Rajasekar

இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்

திருக்குறள் வெகுளாமை - கோபத்தை கட்டு படுத்துவது எப்படி ? விளக்கம்

திருக்குறள் இன்னா செய்யாமை - ஏன் நாம் தீமை செய்ய கூடாது ? விளக்கம்


அன்புள்ள எதிரி
 — செ.ஷேக் அப்துல் காதர்

Sheikh

AnbullaEthiri


இலக்கிய பகுதி

நூல் பெயர்- நாலடியார்

சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது.

திருக்குறளுக்கு அடுத்த நிலையில்வைத்துப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார். நூல் அமைப்பில் இரண்டிற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. திருக்குறள் சூத்திரம் போன்று இரண்டு அடிகளில் கருதிய பொருளைச் சுருங்கச் சொல்லிவிளங்க வைக்கிறது; நாலடியாரோ, பொருள்களைத் தக்கஉதாரணம் காட்டி விளக்குவதோடு, கற்போர் உளம் கொளும்வகையில் தெளிவுபடவும் உரைக்கின்றது. இவ்வகையில் நாலடியாரைத் திருக்குறளின் விளக்கம் என்று கூறலாம்.’நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என வழங்கும் பழமொழியிலும், பழகு தமிழ்ச்சொல் அருமை நால்இரண்டில் என உரைக்கும் தனிப்பாடல் பகுதியிலும் இந்த இரு அற நூல்களையும் ஒருசேர வைத்து எண்ணுதல் நோக்கத் தக்கது.

நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனை நாலடி’என்றும், ஆர்’என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, நாலடியார் என்றும் வழங்கி வருகின்றனர்.குறளைத் திருக்குறள் என்று குறித்ததைப் போல,நாலடி வெண்பாக்களாலாகிய வேறு நூல்கள் பல தமிழில் இருக்கவும், இந் நூல் ஒன்றையே நாலடி என்ற பெயரால்குறித்து வந்துள்ளனர். இந் நூலில் அமைந்துள்ள பாடல்தொகையை உட்கொண்டு, நாலடி நானூறு என்றும் இதுகுறிக்கப் பெறுகின்றது. இதற்கு வேளாண் வேதம் என்றஒரு பெயரும் உளதென்பது சில தனிப் பாடல்களால் தெரியவருகிறது.

இந் நூல், ஆசிரியர் ஒருவரால் இயற்றப்பெற்றது அன்று என்றும், பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாய் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். இது பற்றிய கன்னபரம்பரைவரலாறு ஒன்றும் உள்ளது: ஒரு சமயம் எண்ணாயிரவர்சமண முனிவர், பஞ்சத்தால் தம் நாடு விட்டு வந்து, பாண்டியன் ஆதரவில் வாழ்ந்து வந்தனராம். சில காலத்தில்தம் நாடு முன் போலச் செழிப்புறவே அவர்கள் மீண்டுசெல்ல விரும்பிய போது, பாண்டியன் அவர்களைப்பிரிய மனம் இன்றி, விடைகொடாது இருந்தனனாம். இதனால், எண்ணாயிரவரும் ஒவ்வொரு பாடல் எழுதித்தத்தம் இருக்கையின் கீழ் வைத்துவிட்டு, பாண்டியனிடம் அறிவியாமலே, தம் நாட்டுக்குத் திரும்பிவிட்டனராம். இச் செய்தி தெரிந்த மன்னன், புலவர்களைப் பிரிந்த மனத்துயராலும், தன் வாக்கை அவர்கள் மதியாமைபற்றி எழுந்த வெகுளியாலும், அவர்கள் எழுதிய எண்ணாயிரம் பாடல்களையும் வைகைப் பெருக்கில் எறியக் கட்டளைபிறப்பித்தானாம். அரசன் ஆணைப்படி வைகையில் எறிந்தஏடுகளில் நானூறு நீரை எதிர்த்து வரவே, பாண்டிய மன்னன் அவற்றைச் சிறந்தன என்று கொண்டு தொகுப்பித்துவைத்தானாம். இந் நிகழ்ச்சியைச் சில தனிப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

எண் பெரும் குன்றத்து எணாஅயிரம்இருடி
பண் பொருந்தப் பாடிய பா நானூறும்

என்றும் ஒரு தனிப்பாடலில் காண்கிறது.

இவ் வரலாறு எவ்வாறாயினும், நாலடியார்புலவர் பலர் பாடிய செய்யுட்களின் தொகுதி என்றே ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். கூறியது கூறலாகச்சில கருத்துகள் அங்கங்கே காணப்பெறுதலும் இதற்குத்தக்க சான்றுகளாம் என்பர்.

'வெள்ளாண் மரபுக்கு வேதம்' எனச்சான்றோர்
எல்லாரும் கூடி எடுத்துரைத்த, சொல்ஆரும்,
நாலடி நானூறும் நன்கு இனிதா என்மனத்தே
சீலமுடன் நிற்க, தெளிந்து.

என்ற தனிப்பாடல் இந்நூலிலுள்ள பாக்கள் சான்றோர் பலர் பாடியவை என்னும் கருத்தைப் புலப்படுத்துகிறது.

அறத்துப்பாலில் செல்வம்,இளமை,யாக்கை நிலையாமையையும், அறம்,துறவு,ஈகை,பழவினை என பல்வேறு நற்கருத்துகள் பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளன.

பொருட்பாலில் கல்வி,குடிப்பிறப்பு,மேன்மக்கள்,பெரியாரைப் பிழையாமை,நல்லினம் சேர்தல்,பெருமை,தாளாண்மை,சுற்றந் தழால்,நட்பாராய்தல் பற்றியும் விளக்கம் தரப்பட்டுள்ளன.

இனி இவற்றிலிருந்து சிறந்த பகுதிகள் சிலவற்றை நாம் இங்கு காணலாம்.

அறத்துப்பால்

(அறத்தின் பகுப்பு உணர்த்துவது, அறம், இம்மை மறுமை வீடு என்னும் மூன்றுந் தருவதனால், இது முதலில் நின்றது).

                 அறன் வலியுறுத்தல்
'அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்'.

(பொருள்) முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனான செல்வ நிலைமையால், மறுபிறப்பிற்கு வேண்டுந் தவத்தைச் செய்யாமல் இறந்து பிறந்தவர், அம் மறுபிறப்பில் இம்மாளிகையில் வாழ்வார் எத்தகையவரோ, என்று மதிப்பாகக் கருதித் தலை நிமிர்ந்து மாளிகையின் மேனிகையைப் பார்த்து, தாமாக உள்நுழையப் பெறாராய், தலைவாயிலைப் பிடித்துக் கொண்டு, தாம் மிகவும் வாடி ஒரு பயனுமின்றி நின்றுகொண்டிருப்பர்.

(கருத்து) இப் பிறப்பில் அறஞ்செய்யாதவர் வருபிறப்பில் இரந்து நிற்பர்.

               நிலையாமை
'மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்'.

(பொருள்) மலையின் உச்சியில் தோன்றுகின்ற முழு நிலாவைப்போல, யானையினது தலையின் மேல் கொள்ளப்பட்ட குடைநிழலிற் சென்ற அரசரும் , இந் நிலத்தில் ,இறந்து மண்ணானார் என்று,குறித்து இழித்துரைக்கப்பட்டாரேயல்லாமல், இறவாமல் நின்றவர் இவ்வுலகத்தில் இல்லை.

(கருத்து) மக்களாய்ப் பிறந்தவர் எத்தகையோ ராயினும் அவர் இறந்து போதல் உறுதியாதலின், இருக்கும் போதே யாவரும் அறஞ் செய்து கொள்க.

                பழவினை

(முற்பிறப்பிற் செய்த வினைகளின் விளைவைப்பற்றி நுவல்வது)

'பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு'.

(பொருள்) பல பசுக்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் இளைய ஆன்கன்று, தன் தாய் ஆவினைத் தேடித் தெரிந்தடைதலை, வல்லதாகும். பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும், தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(கருத்து) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.

பொருட்பால்

             கல்வி
'கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து'.

(பொருள்) கல்விகள் அளவில்லாதன; ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும். சற்று அமைதியாகநினைத்துப்பார்த்தால் அச் சில வாழ்நாட்களில்பிணிகள் பலவாயிருக்கின்றன.நீர் நீங்கப் பாலைஉண்ணும் பறவையைப்போல அறிஞர்கள் பொருத்தமுடையநூல்களைத்தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ளஆராய்ந்து கற்பார்கள்.

(கருத்து) தக்க மெய்ந்நூல்களையேதெரிந்து தெளிவாகக் கற்றல் வேண்டும்.

       நல்லினம் சேர்தல்

[உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்.]

'அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு'.

(பொருள்) அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில்அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்துமுறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும்,வெயில் கடுகுதலால் புல்நுனியைப்பனியின் பற்றுதல் விட்டாற்போல, நன்னெறிதெரிந்தொழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச்சார்ந்து பழகுதலால் கெடும்.

(கருத்து) தீய குணங்கள் நீங்கும்பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல்வேண்டும்.

        பெரியோரைப் பிழையாமை

[பெரியோரை அவமதித்து நடவாமை]

'பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது'.

(பொருள்) பொறுத்துக் கொள்வார் என்றுநினைத்து மாசுநீங்கிய பெரியோரிடத்திலும் அவர்வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல்வேண்டும்அவர் உள்ளம் அதனால்வருந்தியபின், ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகியமலைகள் பொருந்திய சிறந்த நாடனே; அவ் வருத்தத்தால் உண்டாகுந்தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும்இயலாது.

(கருத்து) பெரியோரைஅவமதித்தொழுகினால் தீர்வில்லாத தீங்குண்டாகும்.


சிறுகதைப் பகுதி

                மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.

இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது.

கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.

மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.

ஆனால் குறட்டி சற்று வித்தியாசமானது. காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது.

குறட்டி தனது தலையை ஒரு கிளையின் மீது வைத்தபடி ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டு இருந்தது.

மிரண்டு மிரண்டு ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டி அதன் கண்ணில் பட்டது.

நீண்டு கிடந்த தனது உடலை வேகமாக தன்னை நோக்கி இழுத்தது.

அநேகமாக அந்த மான்குட்டி மிகவும் குறுகலாக ஓடும், அந்த ஆற்றைக் கடந்து வரலாம். அப்படிக் கடந்து வந்தால் குறட்டி இருக்கும் வழியாகத்தான் வரவேண்டும்.

அந்த மிளா மான் ஆற்றில் இறங்கியது. குறட்டியில் வாயில் நீர் சுரந்தது.

மீதமுள்ள குறட்டி தனது உடலை கிளையில் சுற்றி தனது தலையை மட்டும் தொங்க வைத்தபடி அசையாமல் இருந்தது. பார்வை மட்டும் ஆற்றில் இறங்கிய மான் மீது இருந்தது.

ஆற்றில் மான் நீந்தியது. இதே மரத்திலிருந்துதான் குறட்டி ஒரு நாள் ஒரு சிறுத்தையை மடக்கிப் பிடித்தது. ரப்பர் போன்ற தனது உடம்பை கயிறு போல் பாவித்து இறுக்கிய வேகத்தில் சிறுத்தையின் எலும்புகள் மடமடவென்று முறிந்தன.

மான் கரையேறி விட்டது. குறட்டி அசையாமல் இருந்தது. அந்த மரத்திற்கு அருகாமையில வந்த பாதையில் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தது அந்த மான்.

சொல்லி வைத்ததுபோல் அந்த மரத்தடியில் வந்து நின்றது. குறட்டி மான்குட்டியில் கழுத்தில் மாலையாய் விழுந்தது.

அம்மா என்று கதறியது மான்குட்டி. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அப்படி இப்படி கூட அசையாமல் நின்றது.

குறட்டிக்குக் கூட ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது பாவமாக இருந்தது. அதற்குள் குறட்டி ரப்பர் போன்ற நீண்ட தனது உடலால் மானைச் சுற்றிது.

மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் இதனிடம் தப்பிக்க போராட்டம் நடத்துமே தவிர இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது.

ஆமாம்…. ஏன் அழுகிறாய் என்றது குறட்டி.

மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு உறுதியான குரலில் சொன்னது.

இப்போது சாவு என்பது நிச்சயமாகி விட்டது. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் மனது வைத்தால் எனக்கு உதவலாம் என்றது.

நான் எப்படி உதவ முடியும்?” என்றது.

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சேருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு என்றது மான்.

நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?”

நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீ என் கூடவே வா.. நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு

உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன?” என்றது குறட்டி.

என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன்

நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும் என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டது. குறட்டியை சுமந்தபடியே சென்றது மான்.

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்றது. நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது.

மலைப்பாம்பு தன் உடலைச் சுற்றியிருக்க உற்சாகத்துடன் நடந்தது.

தனது அம்மாவுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்கு சந்தோஷமாக இருந்தது.

மான் தன் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்தது. தன் இருப்பிடத்தையும் படுத்துக்கிடக்கும் அம்மாவையும் காட்டியது. குறட்டி அதன் உடம்பிலிருந்து மெல்ல இறங்கியது.

நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால்…. அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும் என்றது குறட்டி.

நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன் என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடியது மான் குட்டி.

குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களின் ஊடே மறைந்து கொண்டது.

அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன.

அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விட முடியும்.

இப்படித்தான் சென்ற வாரம் ஒரு மலைப்பாம்பை இரண்டு பெரிய மிளா மான்கள் கொம்பினால் நசுக்கி எடுத்துவிட்டன. அந்த மாலைப் பாம்பு அங்கேயே உயிரை விட்டது.

பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக் கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.

கையில் கிடைத்ததை விட்டு விட்டோமோ?” என்று கூட ஆதங்கமாக இருந்தது.

எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குறட்டி பெரிய தனது உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர ஏதோ அரவம் கேட்டது.

அதே மான்குட்டி தனியாக வந்தது.

என் கடமை முடிந்தது… எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன்…..உனக்கு எனது நன்றி என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி.

குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது. என்னைப் பற்றியா சொன்னாய் என்றது குறட்டி

இல்லை எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்.”

உன்னை கொன்று தின்னப் போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்?”

நீ சொன்னது சரிதான்.. ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?”

குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது.

தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்கினாலே ….எனக்குப் பெருமை என்று சொல்லியபடி குறட்டி அதனை உயிரோடு விட்டுச் சென்றது.

மான்குட்டி குறட்டியை ஆச்சரியமாகப் பார்த்துது.

மரக்கிளைகளில் தவழ அதன் உடம்பின் கரும்புள்ளிகள் வைரமாக மின்னின.


கை கொடுக்கும் நம்பிக்கை!
 — மேகலா இராமமூர்த்தி

Megala Ramamoorthy

இயல்பிலே மனிதன் ஒரு சமூக விலங்கு (Man is by nature a social animal) என்பார் தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில். மனித வாழ்வு தனிமையில் இனிமை காண இயலாதது. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதிலும் சமுதாயத்தோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலும் முழுமை காண்பது. அவ்வாறு ஒருவர் மற்றொருவரைச் சார்ந்துவாழ்வதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கை எனும் நல்லுணர்வு. ஒரு குழந்தை தன் தாய் சுட்டிக்காட்டுகின்ற மனிதரைத் தந்தையென ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாய்த் திகழ்வதுகூட, தன் தாய்மீது அச்சேய் கொள்ளும், நம்பிக்கையே ஆகும்.

முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆடவனும், ஆரணங்கும் காதல்கொண்டு, செம்புலப் பெயல்நீர்போல் அன்புடைநெஞ்சு கலப்பதற்குக் களமமைப்பதும் அவர்கள் ஒருவர்மீது மற்றொருவர் கொள்ளுகின்ற அசைக்கவியலா நம்பிக்கையே!

தலைவன் ஒருவன்மீது மாறாக் காதல்கொண்ட தலைவியொருத்தி, அவனை நின்ற சொல்லர் (மக்கள் வழக்கில் சொல்வதென்றால் பேச்சு மாறாதவர்) என்று வாயாரப் புகழ்வதனை நற்றிணைப் பாடலில் கபிலர் காட்டுவார்.

நின்ற சொல்லர் நீடுதோன்றினியர்
என்றும் என்தோள் பிரிபறி யலரே… (நற்: 1)

இன்னொரு தலைவியோ தன் காதல்மீது இமய நம்பிக்கை கொண்டவளாய்த் தானும் தலைவனும் கொண்ட காதல், நிலத்தைவிடப் பெரிது, வானத்தைவிட உயர்ந்தது, நீரினும் ஆழமானது என்று அளந்துபார்த்தவள்போல் ஆணித்தரமாய்க் கூறுவது நமக்குப் பெருவியப்பை விளைவிக்கின்றது.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.  (குறுந்: 3)

காதலுக்கு மட்டுந்தானா கை கொடுக்கும் நம்பிக்கை? இல்லை… நட்புக்கும் அதுவே வீற்றிருக்கை! நேரில் காணாதபோதினும் ஒத்தஉணர்ச்சி கொண்ட இரு உயர்ந்த உள்ளங்கள் உயிர்நட்பு கொண்டதனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கறியும். ஆம்! சோழ அரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும், பாண்டி நன்னாட்டுப் புலவர் ஆந்தையாருக்கும் இடையில் முகிழ்த்து மலர்ந்திருந்த நட்பெனும் நறுமலர் புறநானூற்றில் இன்றும் புதுமணம் பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றது!

தான்பெற்ற மக்களால் தாங்கொணாத் துயருக்கு ஆளான கோப்பெருஞ்சோழன் அதற்குமேலும் தன் இன்னுயிரைத் தரித்திருக்க விரும்பவில்லை. வடக்கிருந்து உயிர்துறப்பது எனும் முடிவுக்கு வந்தான் (இதைத்தான் சமணர்கள் சல்லேகனை என்பர்.) அரசவாழ்வைத் துறந்து, தருப்பைப் புல்லைப் பரப்பி வடக்கு நோக்கி அமர்ந்தான்; அவனைச் சுற்றிலும் அவன்மீது பெருமதிப்பும், பேரன்பும் கொண்டிருந்த அரசவையினரும் புலவர்பெருமக்களும் குழுமியிருந்தனர் வேதனையோடு. புலவர் பெருமக்களை நோக்கிப் பார்வையை வீசினான் காவலன். தன் குறிப்பறிந்து அருகில்வந்த புலவர்களை நோக்கி, அருமை நண்பர் ஆந்தையாருக்கென என்னருகே ஆசனம் ஒன்றை அமையுங்கள்!” என்று உத்தரவிட்டான்.

அரச கட்டளையாயிற்றே மறுக்க முடியுமா? அரசனுக்கருகே ஆசனம் அமைக்கப்பட்டது ஆந்தையாருக்கு! ஆயினும், அரசன் நீங்கலாக ஆங்கே குழுமியிருந்த ஏனையோருக்கு பாண்டி நாட்டிலுள்ள பிசிர் எனும் ஊரிலிருந்து, செய்தி கேள்விப்பட்டு, ஆந்தையார் இவ்வளவு தூரம் வருவார்; வந்து அரசனோடு உயிர்விடுவார் என்றெல்லாம் எள்ளளவும் நம்பிக்கையில்லை.

நாள்கள் நகர்ந்தன; ஆந்தையாரோ வரக்காணோம்! அரசனும் உயிர்துறந்துவிட்டான். சுற்றியிருந்தோர், இனியும் ஆந்தையார் வருவார் எனும் எண்ணத்தைக் கைவிட்டு அங்கிருந்து புறப்பட எத்தனித்த வேளையில், தொலைவில் ஒருமனிதர் அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி விரைந்து வந்துகொண்டிருப்பதைக் கண்டனர்; வியப்பொடு அத்திசை நோக்கினர்.
அருகே வந்த அம்மனிதர் அவர்களிடம் தம்மை ஆந்தையார் என்று அறிமுகப்படுத்திக்கொள்ள, அனைவரும் அதிசயித்தனர்; அவரை ஆரத்தழுவி மகிழ்ந்தனர்.

ஆந்தையாரை வரவேற்ற சான்றோர்களில் ஒருவர் கோப்பெருஞ்சோழனின் அன்புக்குரிய அவைப்புலவரான பொத்தியார் என்பவர். அருமை நண்பர் ஆந்தையார் எனைக்காண அவசியம் வருவார் என்ற மன்னனின் பெருமையையும், அது பழுதுறாவண்ணம் வந்த புலவரின் அறிவையும் எண்ணியெண்ணி வியப்பும் மருட்கையும் ஒருங்கே எய்திய பொத்தியார், தம் உள்ளத்து உணர்வுகளை அழகியதோர் பாட்டாய் வடித்தார்.

நினைக்கும்  காலை  மருட்கை  உடைத்தே
எனைப்பெரும்  சிறப்பினோடு  ஈங்கிது  துணிதல்
அதனினும்  மருட்கை  உடைத்தே  பிறன் நாட்டுத்
தோற்றம்  சான்ற  சான்றோன்  போற்றி
இசைமர  பாக  நட்புக்  கந்தாக
இனையதோர்  காலை  ஈங்கு  வருதல்
வருவன்  என்ற  கோனது  பெருமையும்
அதுபழு தின்றி  வந்தவன் அறிவும்
வியத்தொறும்  வியத்தொறும்  வியப்பிறந்  தன்றே… 

(புறம் – 217: பொத்தியார்)

பின்னர், ஆந்தையாரும் மன்னன் மடிந்த இடத்தருகிலேயே வடக்கிருந்து உயிர்துறந்தார் என்பது புறம் நமக்கு அறியத்தரும் செய்தியாகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்  

எனும் வள்ளுவத்துக்கு விளக்கமாய்த் திகழ்கின்றது இவ்வரிய நட்பு!

இவ்வாறு, ஒருவர் மற்றவர்மீது கொள்ளும் நம்பிக்கை, காதலுக்கும் நட்புக்கும் பாதையமைப்பதுபோல், தன்மீதே ஒருவன் கொள்ளும் நம்பிக்கை அவன் தனிவாழ்வின் வெற்றிக்கும், பெற்றிக்கும் வழிவகுக்கின்றது. ஏழைமையோடு தோழமைகொண்ட போதிலும், தளராத தன்னம்பிக்கையோடு வாழ்வில் சாதனைபடைத்த எத்தனையோ அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் வரலாறு நமக்கு இனங்காட்டுகின்றது.

மாந்தரிடம் காணக் கிடைக்கும் இந்நம்பிக்கை, தம்மைச் சார்ந்ததாகவும், சக மனிதர்களைச் சார்ந்ததாகவும் மட்டுமல்லாது, வானளவு விரிந்து, கண்ணால் காணவொண்ணாத கருத்துருவான கடவுள்வரை நிறைந்திருக்கக் காண்கின்றோம். தத்தம் சமயக் கோட்பாடுகளுக்கியைந்த வகையில் கடவுளின் உருவிலும், உடையிலும் மக்கள் மாறுபாடுகள் கொள்ளுகின்றனரே அன்றி, கடவுளே உலகையும், உயிர்களையும் படைத்தவர், அவரை நம்பினார்க் கெடுவதில்லை என்பன போன்ற பொதுநம்பிக்கைகளில் மாறுபாடு கொள்வதில்லை. சிலநேரங்களில் இந்த இறைபக்தி கரைபுரண்டோடி, தேவையற்ற மூடநம்பிக்கைகளில் மானுடரை மூழ்கடித்துவிடுகின்ற ஆபத்தான வேலையையும் செய்துவிடுகின்றது. அதுபோல் மனிதர்மீது மனிதர் கொள்ளும் நம்பிக்கையும் துரோகத்திலும், அவநம்பிக்கையிலும் முடிந்துபோவதை மறுப்பதற்கில்லை.

ஆயினும், ஒரோவழி (at times) நிகழும் இவைபோன்ற எதிர்மறை விளைவுகளை நீக்கிவிட்டு நோக்கினால், வாழ்வைச் செம்மையாய் நடாத்துதற்குத் தேவையான திறத்தையும், மனவுரத்தையும் மாந்தர்க்குத்
தந்து இவ்வையத்தை வாழ்விப்பது நம்பிக்கையே என்பதில் ஐயமில்லை.


இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.

Posted on September 28, 2021   #Kavitha Rajasekar     #Megala Ramamoorthy     #Sheikh Abdul Khadar  







← Next post    ·    Previous post →

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!