இதழ்: இருபத்தி ஐந்து , அக்டோபர்
ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா
தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
இதோ இக்கல்வியாண்டு இப்பொழுது தான் தொடங்கியது போல் உள்ளது, வரும் வாரத்தில் முதல் பருவத்தேர்வு என்று எண்ணும் போது, காலம் எவ்வளவு வேகமாக கரைகிறது என்பதை உணர முடிகிறது. தேர்வுக்கு தயாராக, பாடங்களின் மீள்பார்வை மற்றும் மாதிரி வினாத்தாள் கொண்டு ஆசிரிய குழு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
மெய்நிகர் தேர்வு என்பதால் வாய்மொழி தேர்விற்கு அதிக விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தகவல்களும், கால அட்டவணைகளும், Zoom பயன்பாட்டு விளக்கங்களும் இன்னும் சில நாட்களில் புலனத்தின் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும். மாதிரி வினாத்தாள் குறித்த ஐயப்பாடுகளை ஆசிரியர் குழுவை அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
தமிழ் பள்ளிக்கான செய்தி மடல் வெளியிட வேண்டும் என்று நிர்வாகக்குழுவின் எண்ணமும், தன்னார்வ பங்களிப்பாளர்களின் உறுதுணையும், வாசகர்களின் ஆதரவும் , ஒவ்வொரு மாதமும் செய்தி மடல் தொடர்ந்து வெளிவர காரணம். செய்திமடலின் இந்த பதிப்பு எங்கள் இருபத்தி ஐந்தாவது பதிப்பு என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இம்மடல் தொடங்கிய காலத்தில் ஆசிரியராக செயல்பட்ட திரு.நாகராஜன் அவர்களின் பங்கு அளப்பரியது. இந்த மடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற தகவல் தொழில் நுட்ப இயக்குனர் திரு ராஜசேகர் இளங்கோ அவர்களின் முயற்சி கால சூழலுக்கேற்ப செய்தி மடலை மெருகேற்றிக்கொள்ள மிகுந்த உதவியாக இருந்தது.
பல பாக்களை மாலைகளாக தொடுத்த திரு ஷேக் அப்துல் காதர் , சிறுகதை ஆசிரியர்கள் திரு சீனிவாசன், முனைவர் பாரதி, கவிதை நல்கிய திரு ராஜா வைரமுத்து, மருத்துவக்குறிப்புகள் அளித்த திருமதி கிருத்திகா தினேஷ் பாபு, திருக்குறளை, ஒலி வடிவத்தில் அமைத்து எளிதில் கற்க உதவிய திருமதி கவிதா ராஜசேகர் , அறிவியல் கட்டுரைகளை தொகுத்தளித்த முனைவர் சேஷா சீனிவாசன் இவர்கள் அனைவருக்கும் ஆசிரிய குழுவும் தமிழ் பள்ளியும் மிகுந்த நன்றியை உரித்தாக்குகிறது.
செய்தி மடல் மிகுந்த வரவேற்பை பெற முக்கிய காரணம் எங்கள் பிரதான எழுத்தாளர்கள் திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களும், முனைவர் பரிமளாநாதன் அவர்களும் தான். இவர்கள் இருவரின் படைப்புகளால் வாசகர்களும், நாங்களும் அறிந்து கொண்டமை பல. இவர்களுக்கு தமிழ் பள்ளியும், ஆசிரிய குழுவும் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவர்கள் இருவரை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சமகால மொழி ஆர்வலர்களுக்குத் இவர்கள் சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன ? மொழியோடு தொடர்ந்து இயங்க அவர்கள் பின்பற்றுவது என்ன? பின்வரும் பகுதிகளை படியுங்கள்…..
“கேள்வி பதில்” பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை newsletter@tampabaytamilacademy.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
செவி வழிக்கல்வி - திருக்குறள்
|
![]() |
இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்
திருக்குறள் இனியவை கூறல் விளக்கம்
திருக்குறள் புறங்கூறாமை விளக்கம்
மாணவர் பகுதி
பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும்.
குருவிற்கு ஆசான்! — மாணவன் கேசவ் |
![]() |
சனிக்கிழமை வகுப்பு - நிலை 5B யில் பயின்று வரும் மாணவன் கேசவ், Kahoot என்ற விளையாட்டு அடிப்படையிலான கற்றல் தளத்தை இக்கல்வியாண்டு தொடங்கிய இரண்டாவது வாரத்திலேயே வகுப்பிற்கு செயல்பாட்டு முறையோடு அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் கவனம் சிதறாமல் கற்று கொள்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணவரும் மிகுந்த ஆர்வத்தோடு இக்கற்றல் முறையில் பங்கெடுத்து வருகிறார்கள். சென்ற ஆண்டுகளில் இம்முறையை பற்றி விவாதித்திருந்தாலும் கூட, இக்கல்வியாண்டில் இந்த கற்றல் முறை ஆசிரியர் பயிற்சி பட்டறையில் எடுத்துரைக்கப்பட்டு, ஏறக்குறைய அனைத்து ஆசிரியர்களும் இம்முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றனர். மாணவன் கேசவ் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும் நன்றியும்.
ஆசிரியர் அறிமுகம்
திருமதி ரூபினி தக்ஷிணாமூர்த்தி
பள்ளிப்பருவம் முதலே பல்வேறு தமிழ் பேச்சு போட்டிகள், கட்டுரை போட்டிகள் என தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி இருப்பதன் மூலம் இவரது தமிழ் ஆர்வத்தை நாம் அறிய முடிகிறது. இவருக்கு சிறுகதை, நாவல்கள் படிப்பதில் அதிக ஆர்வம் இருப்பதோடு எழுத்தார்வமும் உண்டு. இல்லத்தில் தமிழில் பேசுவதை கட்டாயமாக்கி கொண்டு கடைபிடிக்கும் இவரது கொள்கை பாராட்டிற்குரியது. நம் தாய் மொழியை விட்டுக்கொடுக்காமல் அடுத்த தலைமுறையினருக்கும் வழிவழியாய் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமும், கற்பித்தலில் இருந்த ஆர்வமிகுதியாலும், தமிழ் பற்றினாலும் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க TBTA-வில் இணைந்து செயல்பட்டு வருகிறார். |
![]() சொந்த ஊர் :கோயம்புத்தூர் |
திருமதி சங்கீதா சக்திவேல்
பள்ளிப்பருவம் முழுமையும் தமிழ்வழிக் கல்வி பயின்று இருப்பதன் மூலமே இவரது தமிழ்பற்று நமக்கு நன்கு புலப்படுகிறது. தன்னைப்போலவே தனது பிள்ளைக்கும் சிறந்த தமிழ் வெளிப்பாடு தேவை என்பதை உணர்ந்த இவர், சிறுசிறு கதைகளோடு, தனது மூதாதையரின் வாழ்க்கை வரலாற்றை கதைகளாக கூறுவதும், விவசாயி முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதும் பாராட்டுக்குரியது. எஸ். ராமகிருஷ்ணன் கதைகள், சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நூல்கள் இவரது மனம் கவர்ந்தவை. இவரது எண்ணம் போலவே இவரது பிள்ளையும் இல்லத்தில் சாதாரண பேச்சு வழக்கோடு நின்றுவிடாமல் ஒரு படி மேலாக அவ்வப்போது தூய தமிழில் உரையாடி வியப்பில் ஆழ்த்துவதாக பெருமைப்பட கூறுகிறார்.இவ்வாறு தமிழார்வமும் தன்னார்வமும் ஒருங்கிணைந்து நம் மொழி கற்றுக் கொடுக்க TBTA-வில் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளார். |
![]() சொந்த ஊர் :ஈரோடு |
இவர்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!
சிறுகதை பகுதி - வானூர்தி
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
மாணவர்களே, தேர்வுக்கான all chapters revision முடிந்ததா ? | மாணவர்களே, தேர்வுக்கான அனைத்து அத்தியாயங்களின் மீள்பார்வையும் முடிந்ததா ? |
ஆசிரியர்கள் தேர்வுக்கான model question கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர் | ஆசிரியர்கள் தேர்வுக்கான மாதிரி கேள்வியுடன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர் |
எனக்கு இக்கேள்வியில் ஒரு doubt உள்ளது | எனக்கு இக்கேள்வியில் ஒரு சந்தேகம் உள்ளது |
தேர்வில் வெற்றி பெற written practice மிகவும் முக்கியம் | தேர்வில் வெற்றி பெற எழுத்து பயிற்சி மிகவும் முக்கியம் |
Don’t hesitate to express your language proficiency in the oral exam | வாய்வழி தேர்வில் உங்கள் மொழி தேர்ச்சியை வெளிப்படுத்த தயங்க வேண்டாம் |
செய்தி மடல் பிரதான எழுத்தாளர்களோடு ஓர் உரையாடல்
திருமதி மேகலா இராமமூர்த்தி |
![]() |
1. உங்களுக்குத் தமிழ் ஆர்வம் வந்தது எதனால்?
வணக்கம்.
என் தந்தையார், காலஞ்சென்ற இராம. இராமமூர்த்தி அவர்கள், சிறந்த தமிழறிஞர்; தமிழில் முனைவர்ப் பட்டம் பெற்றவர். பேச்சும் மூச்சும் தமிழாகவே வாழ்ந்தவர். எனது குழந்தைப்பருவம் தொட்டே அவர் என்னிடம் பேசிய செய்திகள் அனைத்தும் தமிழிலக்கியம் மற்றும் இலக்கணம் சார்ந்தவையே. அதனால்தான் தமிழார்வம் என்பது எனக்கும் இயல்பிலேயே வந்துவிட்டது என நினைக்கிறேன்.
2. சிறு வயதில் தமிழோடு தொடர்புடைய குறிப்பிடத்தக்க நினைவுகள்?
எங்கள் காரைக்கால் மாவட்டத்திலுள்ள விவேகானந்தர் வாலிபர் சங்கம் என்ற அமைப்பினர் நடத்திய, மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு 250 குறட்பாக்களை ஒப்பித்து, முதல் பரிசாக 100 ஒற்றை உரூபாய்கள் அடங்கிய பொற்கிழியைப் பெற்றேன். நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட அப்போட்டியில் வயதில் மிகவும் இளையவளான (8 வயது) நான் மட்டுமே வெற்றிபெற்றது எனக்கும் என் குடும்பத்தினருக்கும்… ஏன் போட்டியை நடத்தியவர்களுக்குமே… வியப்பினைத் தந்த நிகழ்வாகும்.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் போன்றவற்றிலும் எங்கள் பள்ளியின் சார்பில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றிருக்கிறேன். அவையெல்லாம் பசுமையான நினைவுகளாக இன்றும் என் மனத்தில் நிறைந்திருக்கின்றன.
3. உங்கள் சொந்த ஊர்?
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரும், ‘புனிதவதி’ எனும் இயற்பெயர் கொண்டவருமான காரைக்கால் அம்மையார் அவதரித்த புண்ணிய ஊர் என்கின்ற பெருமைக்குரியது அது!
4. உங்கள் படைப்புகள்?
தமிழில் கட்டுரைகள், கவிதைகள் நிறைய எழுதியிருக்கின்றேன். அவை ’வல்லமை’ என்ற மின்னிதழில் அதிக எண்ணிக்கையில் வெளியாகியிருக்கின்றன. ஒருசில கதைகளும் எழுதி அதில் வெளியிட்டிருக்கின்றேன். ’திண்ணை’ எனும் மின்னிதழிலும், தினமணியின் இணைப்பான ’தமிழ்மணிலும் என் கட்டுரைகள் சில வெளிவந்துள்ளன.
எழுதிய கட்டுரைகளுள் இருபதைத் தேர்ந்தெடுத்துப் ‘பன்மணிக் கோவை’ எனும் பெயரில் ஒரு நூலை 2015இல் வெளியிட்டேன். அதைத்தொடர்ந்து, இந்திய மற்றும் பிறநாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை, அவர்தம் சாதனைகளை விளக்கி நான் எழுதிய கட்டுரைகளை, ’அறிவோம் அறிஞர்களை — தொகுதி 1’ என்ற தலைப்பில் அமேசான் கிண்டிலில் மின்னூலாகச் சமீபத்தில் வெளியிட்டுள்ளேன். அறிஞர்கள் குறித்து மேலும் சில தொகுதிகளையும் வெளியிட எண்ணியுள்ளேன்.
5. மொழியோடு நீங்கள் தொடர்ந்து இயங்கத் தாங்கள் பின்பற்றுவது?
நல்ல தமிழ்நூல்களைத் தொடர்ந்து வாசிப்பது! குறிப்பாகத் தமிழ்ச் செவ்விலக்கியங்களின்மீது எனக்குத் தணியாத காதலுண்டு! தற்கால இலக்கியங்களையும் நான் இரசித்து வாசிக்கவே செய்கின்றேன். இவ்வாறு தொடர்ந்து தமிழ்நூல்களோடு நெருக்கமாக இருப்பதே மொழிமீதான ஈர்ப்புக் குறையாமல் நான் இயங்கக் காரணம்!
6. சமகால மொழி ஆர்வலர்களுக்குத் தாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புவது?
நண்பர்களே! தன்னேரிலாத நம் தமிழ்மொழி உலகச் செம்மொழிகளுள் ஒன்று! அதிலுள்ள இலக்கிய இலக்கண வளங்கள் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துபவை. அவற்றை விருப்பத்தோடு படியுங்கள். உங்கள் மொழியறிவும் புலமையும் மேம்படும். மொழி ஆர்வலர் என்ற நிலையைக் கடந்து மொழி அறிஞராக நீங்கள் மாற அஃது உதவும். அத்தோடு நிறுத்திவிடாமல் சமகாலப் படைப்புகளையும் வாசியுங்கள்! அப்போதுதான் நம் மொழி கடந்துவந்திருக்கும் பாதையும் அதன் பயணமும் புரியும். தொடர் வாசிப்பானது உங்களைப் படைப்பாளிகளாகவும் மாற்றும்!
7. உங்கள் தொழில்?
தற்போது புளோரிடா பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Florida Polytechnic University) இயற்பியல்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகின்றேன்.
முனைவர் பரிமளா நாதன் |
![]() |
1. உங்களுக்குத் தமிழ் ஆர்வம் வந்தது எதனால்?
வணக்கம்.
என் தந்தையார் நீதித்துறையில் வழக்கறிஞராக பணியாற்றினார்.அவர் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உணவருந்தும் நேரங்களில் எல்லாம் நாங்கள் இரு மொழி இலக்கியங்களையும் அதன் கருத்துக்களை பற்றியும் அளவளாவுவது உண்டு.
ஷேக்ஸ்பியரை பற்றியும் கம்பரைப் பற்றியும் அவர் பல நேரங்களில் விவரித்துள்ளார். அதன் காரணமாகவே எனக்கு சிறு வயதில் இருந்தே மொழி ஈடுபாடு ஏற்பட்டது.
2. சிறு வயதில் தமிழோடு தொடர்புடைய குறிப்பிடத்தக்க நினைவுகள்?
என் தாய் மொழி வேறு என்பதால் பால்ய காலத்தில் தமிழ் மொழி அறிமுகமானது சற்று தாமதமாகத்தான். நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி காலங்களில் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்கும் வாய்ப்பு அமைந்தது. இப்படி ஆரம்பித்து , இயல்பிலேயே உள்ள மொழி ஆர்வத்தாலும், தந்தையாரின் இலக்கிய ஈடுபாட்டாலும் சிறு வயதிலேயே மொழியையும் இலக்கியத்தையும் தேடி தேடி படித்தது இன்றும் குறிப்பிடத்தக்க நினைவாக உள்ளது .
3. உங்கள் சொந்த ஊர்?
நான் பிறந்தது ஆந்திர மாநிலம் , வளர்ந்தது கோவையிலும் சென்னையிலும்.
4. உங்கள் படைப்புகள்?
இளங்கலை ஆங்கில இலக்கியமும் முதுகலை தத்துவ பட்ட படிப்பும், இந்திய தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன். பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக, திருவாசகத்தை பற்றி ஒரு ஆய்வறிக்கை சமர்பித்துள்ளேன்.
தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் அமைந்துள்ள வேலூரில் வாழ்ந்த ஒரு சுதந்திர போராட்ட வீரரின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் வாழ்க்கை சுயசரிதையை தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்துள்ளேன்.
தாம்பா இந்து சமூகம் வெளியிட்ட செய்தி மடலிலும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம் (FeTNA) சார்ந்த செயல்பாடுகளிலும் பங்களித்துளேன்.
5. மொழியோடு நீங்கள் தொடர்ந்து இயங்கத் தாங்கள் பின்பற்றுவது?
இலக்கியமும் வரலாறும் எனக்கு மிகுந்த விருப்பமான பாடம். சமய நூல்களையும், உலக வரலாற்று நூல்களையும் தேடி படிக்கும் பழக்கமும், அவற்றில் இடம் பெற்றுள்ள கருத்துகளை பிற நாட்டு கலாசாரங்களோடு ஒப்பிட்டு, பகுத்தறிந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் எப்போதும் உண்டு.
மேலும் இந்தியாவிற்கு செல்லும் போதெல்லாம் கம்பர் விழா , சேக்கிழார் விழா போன்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கெடுப்பது உண்டு. இவ்வாறு தொடர்ந்து என்னை இலக்கியத்தோடு ஈடுபடுத்திக் கொள்வதே நான் மொழியோடு இணைந்து இயங்கக் காரணம்!
6. சமகால மொழி ஆர்வலர்களுக்குத் தாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புவது?
நம் மொழியின் சிறந்த கருத்துகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை போலவே, உலக இலக்கியங்களில் உள்ள எண்ணற்ற சிறப்பான கருத்துகளையும் அனைவரும் தேடி படித்து இன்புற வேண்டும் என்பது என் விருப்பம் !
7. உங்கள் தொழில்?
தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் துறையில் இணை பேராசியராக சிறிது காலம் பணியாற்றியுள்ளேன். மேலும் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வ சேவையாக SAT & PSAT க்கு மாணவர்கள் தயாராவதற்கு,நான் ஆங்கில இலக்கணம், புரிந்துகொள்ளுதல் மற்றும் சொற்களஞ்சியம் கற்பித்தேன். (I had taught English Grammar, Comprehension and Vocabulary to help students prepare for SAT & PSAT as voluntary service for more than 20 years in USF)
இலக்கிய பகுதி
ஏலாதி
ஆசிரியர் பெயர் - கணிமேதாவியார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களுள் ஒன்று ஏலாதி.
இந்நூல் சிறப்புப்பாயிரம்,தற்சிறப்புப்பாயிரம் உட்பட எண்பத்தியொரு வெண்பாக்களை கொண்டுள்ளது. ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் ‘ஏலாதி’ என மருத்துவ நூல்களில் கூறப்பெறும்.ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு,திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர்.ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமையால் இப் பெயரைப் பெற்றுள்ளது.
இனி ஏலாதியில் கூறப்பட்டுள்ள உன்னதமான அறநெறிகள் சிலவற்றை நாம் காணலாம்.
அன்பு
அன்புடையார் க்கு உரிய ஆறு குணங்களை இந்நூல் வகைப்படுத்திய அழகை பின்வரும் பாடலின் மூலம் அறியலாம்.
'சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,
நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,
மென்புடையார் வைத்தார், விரித்து'.
பொருள்:
சாவிற்சாதலும், பொருள் கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், புணர்ச்சி விரும்புதலும், நோவில் நோதலும், பிரிவின் கலங்குதலும் எனும் இவ்வாறு குணமும் நீங்காத வன்புடையார்க் குள்ளனவாக மெல்லிய திறப்பாட்டையுடையார் விரித்துரைத்து வைத்தார்.
கருத்து: சாவின் சாதல் முதலியன உள்ளன்புடையார் செயல்களாம்.
ஈகை
உற்ற நேரத்தில் பிறருக்கு உதவி புரிவோர் அவர்கள் வாழ்வில் எத்துணை இன்பம் பெறுவர் என்பதனை பின்வரும் பாடல் விளக்குகிறது.
'இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார்,
நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து,
பண்ணி ஊண் ஈய்ந்தவர் - பல் யானை மன்னராய்,
எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து'.
பொருள்: வீட்டை இழந்தவர்களுக்கும், கண்ணையிழந்தவர்களுக்கும், சேர்ந்திருந்த செல்வத்தை இழந்தவர்களுக்கும், விளைந்த நெல்லை யிழந்தவர்கட்கும்,பசுமந்தையை இழந்தவர்களுக்கும், இரவிலும் வருந்தி முயன்று பொருளையீட்டி உணவுகளைச் சமைத்துக் கொடுத்தவர்,பலவாகிய யானைப்படையுடைய அரசர்களாய் மதிக்கப்பட்டு, மனைவி மக்கள் முதலியவர்களுடன் கூடி நுகர்பொருளை நுகர்ந்திருப்பர்.
கருத்து: இருக்க இடம் இல்லாதார் முதலியவர்கட்கு உழன்று தேடியேனும் உணவு முதலியன உதவி செய்கின்றவர், இம்மையிற் செல்வராய் இன்ப நுகர்வார்.
அழகு
எது அழகு? ஒரு மனிதனின் வெளித் தோற்றத்தால் உருவாகும் அழகு உண்மையான அழகல்ல. ஒரு மனிதன் தான் கற்கும் கல்வியால் வரும் அழகே உண்மையான அழகு என்று கல்வி அழகின் மேம்பாட்டினை இப்பாடல் வலியுறுத்துகிறது.
'இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு'.
பொருள்: இடையினழகும், தோளினழகும், பெருமையினழகும், நடையினழகும், நாணுடைமையினான்வரு மழகும், புடையமைந்த கழுத்தினழகும் அழகல்ல. ஒருவர்க்கு எண்ணும் எழுத்தும் அறிதலாகிய அழகே அழகு.
கருத்து: மக்கட்குக் கல்வியழகே உண்மையழகாம்.
இங்கு எடுத்துக்காட்டப்பட்ட வனப்புக்கள் ஆண், பெண் இரு பாலார்க்கும் ஒத்திருத்தல் உணரற்பாலது.
விருந்தோம்பல்
வரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று இன்சொல் பேசி விருந்துபசரிக்கும் முக்கியத்துவத்தை இப்பாடலின் மூலம் அறியலாம்.
'இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்
வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல், -
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும்
விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து'.
பொருள்: அதாவது மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது அடியையொத்து விளங்கும் கூரிய பல்லையுமுடையாய்!தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன்சொற் கூறலும், கலந்துறவாடலும், இருக்கையுதவலும், அறுசுவை யுண்டியளித்தலும் செய்து, கடுஞ்சொலொழித்து மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பானாயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.
கருத்து: விருந்தினனுக்கு இன்சொல் முதலிய வழங்கு வானுக்கு மறுமையில் இன்பமுண்டாம்.
தீவினைஅகற்று
வாழ்வில் தீவினைகளை அகற்றி வாழ்வதன் சிறப்பினை இப்பாடல் அறிவுறுத்துகிறது.
'பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயன
செய்யான், சிறியார் இனம் சேரான், வையான், -
கயல் இயல் உண் கண்ணாய்! - கருதுங்கால், என்றும்
அயல, அயலவர் நூல்'.
பொருள்: பொய்யுரையாது புலாலையுங் கள்ளையுமுண்டல் களைந்து தீவினைகளைச் செய்யாது சிறியாரினத்தைச் சேராது பிறர்க்கின்னாதன ஒருவன் சொல்லானாயினென்று மாராயுங்கா லவற்குப் பிறராய்ந்த நூலினறிவால் பயனில்லை கயலுண் கண்ணாய்!
கருத்து: பொய்யாமை முதலிய இயல்புகளை யுடையவன் அறிவு நூல்கள் ஆராய்ந்தவனை ஒப்பான்.
நல்லொழுக்கம்
'இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால்
செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து'.
- எனும் பாடல் நல்லொழுக்கத்தின் மேன்மையை எடுத்துக் காட்டுகிறது.
அதாவது தானொழுகுநெறியைத் தப்பாது பிறர்க்கின்னாதனவற்றைச் செய்ய விரும்பாது, பிறன் மனை பிழையாது, பிறர் பொருள் வௌவாது தானொழுகுங்கா லொழுகி, குற்றமில்லாத வுணவினை யீவான், அரசாண்டு பகைவரை விரைந்து நீக்கி வெல்வான்.
கருத்து: ஒழுக்கம் வழுவாமை முதலியன உடையவன் உலகத்திற் பலரையும் வென்று அரசனாவான்.
இவ்வாறாக இந்நூல் பல்வேறு அறநெறிகளை உள்ளடக்கிய அறநூல் பெட்டகமாக திகழ்கிறது. கற்போரின் அறியாமை எனும் பிணியை அகற்றும் அருமருந்தாக ‘ஏலாதி’ கருதப்படுகிறது.
திருவுடை மன்னரும் தீராத நோய்களும்!
|
![]() |
உலகைப் படைத்துக் காப்பவன் இறைவன் என்றொரு நம்பிக்கை உலக மக்களில் பெரும்பான்மையோருக்கு உண்டு. விண்ணுலகவாசியாய்க் கருதப்படும் கடவுளைக் கண்ணால் கண்டவர் உண்டா என்பது இன்றுவரை விவாதத்துக்குரிய பொருளாகவே இருந்துவருகின்றது. ’கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்று இதற்கு விடைசொல்லிவிட்டனர் நம் முன்னோர்.
விண்ணுலகக் கடவுள் காட்சிக்கு எட்டாதவராய் ஆகிவிட்டமையால், மண்ணுலக மாந்தரின் காட்சிக்குத் தென்படுபவராகவும், அவர்தம் குறைகளைக் களைபவராகவும் விளங்கக்கூடிய கடவுள் ஒருவர் மக்களுக்குத் தேவைப்பட்டார். ஆகலின் திருவும் உருவும் வலிவும் பொலிவும் மிக்க ஆடவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அரியணையில் அரசனாய் அமர்த்தி அழகுபார்த்தனர் மக்கள். ’திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்று அவனைத் தெய்வத் திருமாலாகவே கண்டு பரவசமடைந்தனர்.
’இறை’ என்ற பெயர் அற்றை நாளில் இறைவனுக்கு மட்டுமல்லாது அரசர்களுக்கும் பொதுவான பெயராக விளங்கிவந்தது. அரசர்தம் மாட்சியை விளக்கவந்த வள்ளுவர், ’இறைமாட்சி’ என்றோர் அதிகாரம் படைத்திருப்பது இக்கருத்துக்கு அரண் சேர்க்கின்றது. தம் கருத்தை மேலும் தெளிவுபடுத்த விரும்பிய அவர்,
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் (குறள்: 388)
என்று விளம்பினார்.
கோயில் என்றசொல்கூட கோவாகிய அரசனின் இல்லத்தை - அரண்மனையைக் குறிக்கும் சொல்லாகவே அன்று பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.
”…வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி…” (சிலப்: வழக்குரை காதை)
என்ற சிலப்பதிகார வரிகள் இதனை உறுதிசெய்கின்றன.
பாடப்படும் ஆண்மகனின் கொடை, வீரம், வென்றிச் சிறப்பு முதலியவற்றைப் போற்றும் ’பாடாண்’ என்னும் தமிழிலக்கணப் புறத்திணையின் துறைகளில் ஒன்றாகக் கருதப்படுவது பூவைநிலை. ’பூவை’ என்பது காயா மரத்தினைக் குறிக்கும் சொல்லாகும். காயாம்பூ வண்ணனாகிய திருமாலை ஒப்புமைகாட்டி அப்பூவைப் புகழ்தல் பூவைநிலை ஆகும். இத்துறை, அரசனைத் திருமாலோடு ஒப்பிட்டுப் போற்றுகின்ற துறையாக மாற்றமும் வளர்ச்சியும் பெற்றதற்குச் சங்கப்பாடல்கள் பல சான்றாய் நிற்கின்றன.
கண்கண்ட தெய்வமாய்த் திகழும் அரசனைத் தரிசித்தால் தம் தீராத நோய்களெல்லாம் தீரும் என்றொரு நம்பிக்கையும் அன்றைய மக்களிடம் இருந்திருக்கின்றது. சங்கப் புதையலான புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடலொன்று இதற்கு ஆதாரமாய் விளங்குகின்றது. பொறையர் குடியில் பிறந்து கொங்குநாட்டுக் கருவூரில் முடிசூட்டிகொண்ட அரசன் ஒருவன் இருந்தான்; ஒளிமிகு வாளேந்தித் தன் வெந்திறலால் பகைவரின் செருக்கழிப்பதிலும், தண்ணளியால் குடிகளைக் காத்தோம்புவதிலும் வல்லவனான அவன், ’கரூவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை’ எனும் பெயரால் அழைக்கப்பட்டான்.
மெய்ப்பொலிவு மிக்கவனாக விளங்கினான் அவன். அவனுடைய எழில்வடிவைக் கண்டோர் தம் உடற்பிணிகள் நீங்கப்பெறுவர் என்ற எண்ணம் அவன் குடிகளிடம் இருந்தது. அதனைச் சான்றோர் வாயிலாய் அறிந்தார் நரிவெரூஉத்தலையார் எனும் நல்லிசைப் புலவர். யாது காரணத்தாலோ அவருடைய தலை, நரி அஞ்சுதற்குரிய தலையாக இருந்திருக்கின்றது. [அப்படியாயின் அவருடைய தலை நாயின் தலைபோல் இருந்திருக்கவேண்டும்; அஃது எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான விளக்கங்கள் ஏதும் சங்கப்பாடல்களில் கிட்டவில்லை.] ஏதேனும் நோய் காரணமாகத் தலையின் அமைப்பு மாறிப்போனதோ என்னவோ நாமறியோம்.
இரும்பொறையைக் கண்டால் தம் விகார வடிவம் விடைபோற்றுப் போகும் என்றறிந்த அவர், அந்நன்னாளை ஆவலோடு எதிர்நோக்கியவராய்க் கருவூருக்கு விரைந்துவந்தார். பேரெழில் வாய்ந்த சேரனின் ஒளிமிகு திருமுக மண்டலத்தைக் கண்டதும், அவரின் கோரவடிவம் மாறி இயல்பான தோற்றத்தைப் பெற்றாராம்! அதனால் மட்டிலா மகிழ்ச்சியடைந்த புலவர் பெருந்தகை, அரசனை அன்போடும் நன்றிப்பெருக்கோடும் வணங்கினார்; கண்ணீர்மல்க வாழ்த்தினார்.
பின்னர், மன்னனுக்குத் தாம் கூறவிழைந்த நன்மொழிகளை ஓர் இன்கவியில் எடுத்தியம்பலானார்.
எருமை யன்ன கருங்கல் லிடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோர் ஆகலின் நின்னொன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரோடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே.
(புறம்: 5 – நரிவெரூஉத்தலையார்)
”பெரும! எருமைபோலும் வடிவை உடைய கரிய கற்பொருந்திய இடந்தோறும் இடந்தோறும் பசுக் கூட்டம்போலப் பரக்கும் யானைகளைக் கொண்ட, வலிமைமிகு காட்டிற்குள்ளே அமைந்த அரணுடைய நாட்டையுடையவனே! பகைவரால் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்செல்வத்தை உடையவன் நீ; ஆதலின் உனக்கொன்று சொல்லுவேன் கேட்பாயாக!
அருளையும் அன்பையும் நீக்கிப் பாவஞ்செய்து, நீங்காத நரகத்தைத் தமக்கு இடமாகக் கொள்பவரோடு பொருந்தாது, நின்னால் காக்கப்படும் தேயத்தைக் குழவியை (குழந்தை) வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக; ஏனெனில் அரசப் பதவியானது எளிதில் பெறத்தக்கதன்று!” என்று பொருள்செறி அறிவுரை பகர்ந்தார் புலவர்பெருமான்.
அரசனைத் தரிசித்தால் நோய்களும், சங்கடங்களும் தீரும் எனும் நம்பிக்கை நம்மவரிடம் இருந்ததுபோலவே மேனாட்டாரிடமும் இருந்திருக்கின்றது என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகின்றது.
காசநோய் காரணமாகக் கழுத்திலுள்ள நிணநீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம் (Tuberculous cervical lymphadenitis better known as scrofula or the King’s Evil), அரசர்களால் குணமடையும் எனும் நம்பிக்கை மேற்குலக நாடுகளான இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் அன்று இருந்திருக்கின்றது. 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆட்சிசெய்த ஆறாம் ஹென்றி (Henry VI - 1485–1509) ஒரு தங்க நாணயத்தை (touch piece), நோயாளியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வைத்துத் தடவுவது (Royal touch), அந்நாணயத்தை நோயாளியின் கழுத்தில்கட்டித் தொங்கவிடுவது முதலியவற்றைச் செய்து நோயாளிகளைக் குணப்படுத்தினாராம். இவரைப் போலவே இவருக்கு முன்னும் பின்னும் ஆட்சிசெய்த பல அரசர்கள் ஈதொத்த தொடுவழி சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஓராண்டுக்கு எத்தனை நோயாளிகளை இவ்வாறு தொடுவது, எந்தச் சமயங்களில் தொடுவது என்பன போன்ற வரையறைகளும் பின்பற்றப்பட்டிருக்கின்றன என்பது நமக்கு மேலும் வியப்பைக் கூட்டுகின்றது.
கிருமித்தொற்றால் ஏற்படும் நோய்கள் அரசன் ஒருவன் தொட்டால் குணமாகிவிடுமா? இதற்கெல்லாம் மருத்துவரை அல்லவா நாடவேண்டும்? என்று பகுத்தறிவின்பாற்பட்டுச் சிந்தித்து வினா எழுப்பினால் விடை பகர்வது கடினம். உளவியல் பார்வையில் இதனை அணுகுவோமேயானால்… நிறைந்த நம்பிக்கையோடும், நேரிய எண்ணத்தோடும் (Positive thought) நாம் செய்கின்ற பல செயல்கள் வாழ்வில் வெற்றியடைவது கண்கூடு. அந்த அடிப்படையில், அரசனைத் தரிசித்தால் - அவன் புனிதக் கரங்கள் நம் நோயுடலைத் தொட்டால் நோய்கள் அகன்றுவிடும் எனும் மக்களின் திடமான நம்பிக்கையையே இது காட்டுகின்றது; அவர்கள் நம்பிக்கை பலனளித்திருக்கவும் கூடும்!
எது எப்படியாயினும், அரசன் என்னும் மனிதனைப் புனிதனாக…ஏன்…வழிபடு தெய்வமாகவே அன்று வையத்து மாந்தர் மதித்தனர் - துதித்தனர் என்பதை இந்நிகழ்வுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.
கேள்வி பதில் பகுதி
|
![]() |
கேள்வி:
சங்க இலக்கியங்களில் போற்றிப் பாடப் பெற்ற பாண்டிய நாட்டு முத்துக்கள் எங்கு, எப்பொழுது, ‘Popular fashion trend’ ஆக மாறின?
பதில்:
இரண்டாயிரத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு Rome மாநகரத்தில் Jupiter Optimus என்ற ரோம தெய்வத்தின் கோவில் ஒன்று சிறப்புற்று விளங்கியது. அக்கால ரோம பேரரசனாக விளங்கிய Augustus Caesar (கி.மு 20) இக் கோயிலுக்கு ஒரு மாபெரும் நன்கொடை அளித்தான். அந்நன்கொடை 50 மில்லியன் sesterces (sesterces என்பது ரோம வெள்ளி நாணயம் ) மதிப்புள்ள முத்துக்களும், உயர்ந்த மணிகளும் ஆகும். இந்த முத்துக்களும் மணிகளும் அப்பேரரசனுக்கு எவ்வாறு கிடைத்தன? கி.மு 20 ஆம் ஆண்டில் தென்னகத்து பாண்டிய நாட்டிலிருந்து தூதுவர் குழு ஒன்று ரோம பேரரசனின் அரசவைக்கு அனுப்பப்பட்டது. பாண்டிய நாட்டின் செல்வத்தை அப்பேரரசனுக்கு குறிப்பாகவும் தெளிவாகவும் காட்டுவதற்காக இந்த 50 மில்லியன் sesterces மதிப்புள்ள உயர்ந்த முத்துக்களையும், மணிகளையும் ஒரு மிகப்பெரிய யானையையும் அன்பளிப்பாக அவர்கள் கொடுத்தார்கள். இந்த தூதுக்குழு “trade contacts”களை வலுப்படுத்துவதற்காக பாண்டிய நாட்டிலிருந்து சென்றது. அதாவது அவர்கள் trade emissaries. அதே காலத்தில் வாழ்ந்த Horace என்ற ரோம கவிஞர் Augustus இன் பெருமையை கவிதையாக வடிக்கும் பொழுது, Rome மாநகரின் நடுவில் ஒரு வியக்கத்தக்க வெள்ளை நிற யானை காட்சியளித்தது என்றும், ஒரு கவிஞனின் பாடலை கேட்க வந்த பொதுமக்கள் அதை செவிமடுக்காமல் இந்த யானையை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர் என்று கூறினார். பாண்டிய நாட்டு தூதுவர்கள் கொண்டு சென்ற யானை ரோம் மாநகரை வியப்பில் ஆழ்த்தியது. Florus என்ற அக்கால வரலாற்று பதிவாளர், பாண்டி நாட்டிலிருந்து வந்த இத்தூதுவர்கள் கடல் வழியாக பயணிக்காமல் தரைவழியாக நான்கு ஆண்டுகள் பயணம் செய்து வந்தார்கள் என்று வியப்புடன் கூறுகிறார். இந்த தூதுவர்களின் கரிய நிறத்தை பார்த்து இவர்களை, “Indians who live immediately below the sun” என்று வர்ணிக்கிறார். இந்த பாண்டிய நாட்டு தூதுவர்களின் trade initiative மூலமாக ரோம கப்பல்கள் பாண்டிய நாட்டு துறைமுகத்திற்கு வரத்தொடங்கி, தென்னகத்து முத்துக்களை சுமந்துக் கொண்டு திரும்பிச் செல்லலாயின. இந்த வர்த்தகத்தால் பாண்டி நாட்டு முத்துக்களின் fashion trend ரோம சாம்ராஜ்யத்தில் தொடங்கலாயிற்று. கி.பி முதலாம் நூற்றாண்டில் Rome நகரில் நடுத்தர செல்வந்தர் குடும்பத்து பெண்களும் ஒன்று அல்லது இரண்டு முத்துக்களை மற்ற அணிகளுடன் அணிய முற்பட்டார்கள். அக்காலத்தில் Rome நகரில் வாழ்ந்த Pliny என்பவர் பெரும் எழுத்தாளர், தத்துவ பேரறிஞர், மற்றும் கப்பல் படைத் தளபதியாகவும் இருந்தவர். இவருடைய எழுத்துக்கள் வழியாக நாம் பல செய்திகளை அறிகிறோம். அவர் தம் நூலில் “ஏழை மக்களும் இந்த முத்துக்களை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார். Red seaஇல் ஆழ்ந்தெடுத்த முத்துக்களுக்கும் பாண்டி நாட்டு முத்துக்களுக்கும் வேறுபாடுகளைக் கண்டறிந்தார்கள் ரோமர்கள். Red sea முத்துக்களுக்கு பிரகாசம் இருந்தது என்றும் தமிழக முத்துக்கள் பெரியதாகவும், மின்னுவதாகவும் அவர்கள் கண்டறிந்தார்கள்.
ரோம் நாட்டில் செல்வ செழிப்புள்ள ஆடவன் தான் மணக்க விரும்பும் பெண்ணுக்கு பாண்டி நாட்டு முத்தை அன்பளிப்பாக தருவானாம். ஒரு கவிஞன் கூறுகின்றான், “அவளை என்னால் இந்திய முத்துக்களால் கூட அடைய முடியவில்லை ஆனால் என் கவிதையைக் கேட்டு அவள் என்னை விரும்பினாள்” என்று பாடுகிறான்.
சில பெண்கள் ஒரு சிறு பையில் இந்த முத்துக்களை வைத்து அந்த பையை பொன் சங்கிலியில் கோர்த்து தம் கழுத்தில் அணிய தொடங்கினார்கள். அதை தூங்கும் பொழுது கூட அணிந்து உறங்கினார்களாம். ஏனெனில் உறக்கத்தில் கூட இந்த பெருமைமிக்க முத்துக்களை தாம் சுமப்பது மனதில் ஒரு பெருமிதமாக இருந்தது. Gellia என்ற பெண்சூளுரைக்கும் பொழுது கடவுள் பெயர்களை வைத்து சூழுரைக்காமல் தன் முத்துக்களின் மேல் வைத்து சூளுரைப்பாளாம். அவற்றை தடவிக்கொடுத்து, முத்தமிட்டு அவற்றை தன் சகோதர சகோதரிகள் என்று கூறுவாளாம். தன் இரு குழந்தைகளை விட இம்முத்துக்களை நேசித்தாள் என்று Martial என்ற அக்கால எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.
முத்து காதணிகள் விரைவில் fashion statement ஆக ரோம சாம்ராஜ்யம் முழுவதும் பரவின. திரிசூல வடிவத்தில் உள்ள காதணியில் தங்க கம்பிகளில் இம்முத்துக்களைக் கோர்த்து செல்வ குடும்பத்து பெண்கள் அணிந்தார்கள். மேலும் கழுத்தை இறுக்கமாக கவ்வும் chokers களிலிருந்து நீண்டு தொங்கிய ஆரங்களில் இந்த முத்துக்களை அணிந்தார்கள். அந்தக்கால fashion dictates படி , முத்துக்கள் மரகத கற்களுக்குப் (emeralds) பக்கத்தில் கோர்க்கப்பட்டன. ஏனெனில் அப்பொழுதுதான் அந்த முத்துக்களின் வெண்மை மரகத மணிகளின் நிறத்தை அழகு பட காட்டுமாம். முத்தும் மரகதமும் சேர்ந்து கோக்கப்பட்ட மாலைகளை சார சாரமாக அணிந்து ரோம செல்வக் குடும்பத்துப் பெண்கள் பவனி வந்தார்கள். இந்த fashion, Roman Empire முழுதும் பரவிற்று.
இந்த fashion trend தொடரத் தொடர ரோம பெண்கள் ஒரு புதிய jewelery style யை தொடங்கினார்கள். “Castanet Pendant” என்னும் இந்த style இல், பல முத்துக்களை gold fittingsஇல் தொங்கவிட்டார்கள். அவை ஒன்றுடன் ஒன்று மோதும் ஒலி இனிமையுற இருந்ததாம். அதனால் தான் “Castanet” என்ற பெயர் (Castanet - விரல்களால் பிடித்து ஒலிக்கப்படும் இசைக்கருவி). முத்துக்களின் இந்த ஒலி ஒரு பெண் வருகிறாள் அல்லது அருகில் உள்ளாள் என்று அறிவிக்குமாம், என்று Pliny கூறுகிறார். முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது, கீறல் ஏற்படவும் , முத்துக்களின் சில பகுதிகள் உடைந்து சிதறவும் செய்தன. ஆனால் அதுவே மேலும் செல்வத்தின் அறிகுறியாக இருந்தது. முத்துக்கள் உடைந்ததால், மீண்டும் விலை கொடுத்து புதியவற்றை வாங்கும் செல்வ செழிப்பு மிக்கவர்கள் இவர்கள் என்று மற்றவர்கள் எண்ணுவதற்கு இடம் தந்தது இது. அவர்களின் நோக்கமும் அதுவே.
கி.பி. 38 ஆம் ஆண்டில் Caligula ரோமப் பேரரசனாக இருந்தார். Lollia Paulina என்ற பெண் இவருடைய மனைவியாக சில ஆண்டுகள் (மட்டுமே) இருந்தாள். அவர் ஒருமுறை ஒரு திருமண நிச்சயம் செய்யும் விழாவிற்காக சென்றாளாம். அது ஒரு சாதாரண குடும்ப நிகழ்ச்சி. ஆனால் இதற்கே இந்தப் பெண் தன் தலை, தலைமுடி, காது, கழுத்து, விரல்கள், மற்றும் தன் உடல் முழுவதும் மறைத்து மூழ்கும்படி முத்துக்களை மரகத கற்களுடன் சேர்த்து அணிந்து இருந்தாள் என்று Pliny வருணிக்கிறார். இவற்றின் மதிப்பு 40 million sesterces.யாராவது கேட்டால் அவற்றை விலை கொடுத்து வாங்கிய receiptsகளை தயங்காமல் Lollia காட்டினாளாம்.
இதேசமயம் இந்த பகட்டான நாகரிக பழக்கங்களை Seneca என்ற philosopher மிகவும் கண்டித்தார். (Seneca, stoicism என்ற தத்துவத்தை பரப்பிய ஒரு சிந்தனையாளர், தத்துவவாதி). “இது என்ன முட்டாள்தனம், முத்துக்களின் மேல் முத்துக்களை படிப்படியாக கோர்த்து காதுகளில் அணியும் பழக்கம். பெண்களின் அறியாமையும், கேளிக்கையும் ஆண்களை முட்டாள்கள் ஆக்குகின்றன. பெருமதிப்பிற்குரிய சொத்துக்களை (fortunes) ஒவ்வொரு காதிலிருந்து தொங்க விடுவது Feminine folly” என்று கோபித்தார் Seneca. Ovid என்ற இன்னொரு கவிஞர்/சிந்தனையாளர் “முத்துக்களாலும் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்களின் உண்மையான பெண்மை குணம் இவற்றின் ஒரு சிறு பகுதியாக உள்ளது” என்று குறைப்பட்டார் . Seneca “Phaedra” என்ற ஒரு சோக நாடகத்தை எழுதினார். அதில் நாடக கதாநாயகி, கூறுவது போல் இந்த வரிகளை அமைத்தார். “என் கழுத்திலும், என் காதிலும் இந்திய நாட்டு தெற்குக் கடலில் இருந்து வந்த முத்துக்களின் பாரமில்லை; என் கூந்தலுக்கு Assyria நாட்டு தைலமும் இல்லை” என்று அக்கால அணிகலன் நாகரிகத்தை தூற்றுவது போல் கூறுகிறார் அந்த நாடக தலைவி.
இதில் கவனிக்கத்தக்கது தென்னிந்திய நாட்டு கடலிலிருந்து வந்த செல்வம் என்ற சொற்றொடரை.
ரோமர்கள் பாண்டியநாட்டு துறைமுகமான (inland city port) தொண்டியை Nelcynda என்றும் Tyndis என்றும் அழைத்தார்கள். முசிறி துறைமுகத்தை விட தொண்டி துறைமுகத்துக்கு சற்று நன்மைகள் (advantages) இருந்தன. இந்த தொண்டி துறைமுகத்தில் தான் உள்நாட்டில் இருந்து மிளகும், முத்துக்களும் வந்தன. அவை ரோம கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டன. பாண்டிநாட்டு முத்துக்கள் Gulf of Mannar இல் இருந்து எடுக்கப்பட்டன. பாண்டிய மன்னர்கள் குற்றவாளிகளைக் கொண்டு (convicts) இந்த முத்துக்குளியல் தொழிலை நடத்தினார்கள். ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான முத்துக்கள் கடலிலிருந்து எடுக்கப்பட்டன. இது foreign currency இல் பாண்டிய நாட்டிற்கு பெரும் செல்வத்தை தந்தது. தென்னகத்து மன்னர்கள் ரோம் அரசாங்கத்தின் தங்கம், வெள்ளி நாணயங்களை (bullion) தம் முத்துக்களுக்கும் மிளகுக்கும் பெற்றார்கள்; infact அதைத் தான் விரும்பினார்கள். இதனால் ரோம அரசாங்கத்திற்கு trade deficit ஏற்பட்டது என்று Pliny குறைபட்டுக் கொண்டார்.
பாண்டியநாட்டு முத்துக்கள் ரோம சாம்ராஜ்யத்தின் நாகரிகத்திலும், கலாச்சாரத்திலும், பொருளாதாரத்திலும், சிந்தனைகளிலும் எவ்வாறு ஊடுருவி இருந்தது என்பது சிறப்புக்குரிய செய்தி.
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on October 17, 2020 #Kavitha Rajasekar #Megala Ramamoorthy #Parimala Nathan #Bharathi