logo

Home Tamil School Archives Search Feed Contributing Guide


இதழ்: இருபத்தி ஆறு , நவம்பர்

ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்

இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா

தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ


அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,

சென்ற வாரங்களில் முதல் பருவத் தேர்வுகளின் முடிவுகள், பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஒட்டுமொத்த மதிப்பீட்டிற்கு வருகை மற்றும் வீட்டு பாடத்தை உரிய நேரத்தில் சமர்ப்பித்தல் என்ற காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் தொடங்கி ஆயிற்று. இந்த விடுமுறைக் காலத்தில் சற்று சிரத்தை எடுத்து, விடுபட்ட வீட்டுப்பாட பயிற்சிகளை முடிக்குமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

நம் ஊரில் உள்ள உறவுகளோடு குழந்தைகளை உரையாட விடுவது, அவர்களுடைய விடுமுறை அனுபவங்களை நம் மொழியில் பேசவும், எழுதவும் பழக்குவது போன்ற செயல்கள் அவர்களின் மொழித் திறனை வளர்க்க உதவும்.

இன்றைய சூழலில் மாணவர்கள், வீட்டிலேயே மெய்நிகர் வகுப்புகளில் பங்குகொள்கின்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தால், குழுவாக விளையாடவும் இயலவில்லை. பெற்றோர்கள் இத்தருணத்தில் மன மற்றும் உடல் வலிமைக்கு உடற்பயிற்சி முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்துங்கள்.

பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.

ஆசிரியர் பயிற்சி தகவல்

logo
logo
logo
logo

செய்தி மடல் ஆசிரியர் பகுதி

வானூர்தி சிறுகதை நம்முடைய பால்யத்தை நினைவு படுத்துவதாக அமைந்தது. சிறுகதை, பேச்சு நடையிலும், ஓவியங்களோடும் இருந்தமையால், குழந்தைகள் உலகத்திற்கு எளிதில் விளங்கும்படியாக இருந்தது. முயற்சி திருவினையாக்கும் என்பதை குழந்தைகள் உணர்த்திருப்பர். தொடர்ந்து பங்களித்து வரும் முனைவர் பாரதி அவர்களுக்கு எங்கள் நன்றி.

கோயில் என்றசொல்கூட கோவாகிய அரசனின் இல்லத்தை - அரண்மனையைக் குறிக்கும் சொல்லாகவே அன்று பயன்பாட்டில் இருந்திருக்கின்றது என்றும், இறை என்ற பெயர் அற்றை நாளில் இறைவனுக்கு மட்டுமல்லாது அரசர்களுக்கும் பொதுவான பெயராக விளங்கிவந்தது என்றும், அரசனின் புனிதக் கரங்கள் தம் நோயுடலைத் தொட்டால் நோய்கள் அகன்றுவிடும் எனும் மக்களின் திடமான நம்பிக்கையையும் திருவுடை மன்னரும் தீராத நோய்களும்!” கட்டுரை மூலம் அறிந்தது நாங்கள் அறியாத செய்தி.

கேள்வி பதில் பகுதியில் இடம் பெற்றிருந்த தகவல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் Fashion Trend” இருந்தது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. பாண்டியநாட்டு முத்துக்கள் ரோம சாம்ராஜ்யத்தின் நாகரிகத்திலும், கலாச்சாரத்திலும், பொருளாதாரத்திலும், சிந்தனைகளிலும் ஊடுருவி இருந்தது என அறியும் முற்படும் போது, நம் நாட்டு மன்னர்கள் இத்துணை தூரம் வாணிபத்தில் சிறந்து விளங்கினர் என்பதை தெரிந்து கொண்டோம்.

கேள்வி பதில் பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .

இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.

தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!


செவி வழிக்கல்வி - திருக்குறள்
 — கவிதா ராஜசேகர்

Kavitha Rajasekar

இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்

திருக்குறள் அடக்கம் உடைமை விளக்கம்

திருக்குறள் பொறையுடைமை விளக்கம்


மாணவர் பகுதி

பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும்.

கூட்டு வீட்டுப்பாட மதிப்பீட்டு நுட்பம்! — மாணவி தண்வி
Dhavi

சனிக்கிழமை வகுப்பு - நிலை 5B யில் பயின்று வரும் மாணவி தண்வி, முந்தைய வார வீட்டுப்பாட பயிற்சியை வினாடி வினா அடிப்படையில் கேள்விகளாக தொகுத்து அவற்றை வகுப்பில் வினாடி வினா விளையாட்டாக செயல்படுத்தினார். இம்முறையில் மாணவர்கள் எழுதிய பயிற்சி நூல் விடைகளில் ஏதேனும் பிழை இருக்குமாயின் அவர்களே சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. மேலும் பாட நூலை மேற்கோளிட்டு மாணவர்களுக்கு எளிதில் மனதில் நீங்கா வண்ணம் இலக்கணத்தை பயிற்றுவிக்க முடிந்தது. தொடர்ந்து சில வாரங்களில் இந்த அணுகுமுறையை மேற்கொண்ட போது, வீட்டு பாடத்தில் பிழைகள் குறைந்ததை கண்டோம். கூட்டு முயற்சி என்றுமே வெற்றி தானே! மாணவி தண்வி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும் நன்றியும்.


ஆசிரியர் அறிமுகம்

திருமதி பவானி கன்னியப்பன்

logo
சொந்த ஊர் :ராணிப்பேட்டை

தமிழ் மன்ற தேர்வுகளில் பங்கு பெற்று பல்வேறு வெற்றிகளை பெற்றிருப்பதாக கூறும் இவர் கல்லூரியில் சில காலங்கள் தமிழ் மொழியை துணைப் பாடப் பிரிவில் கற்றுள்ளார். மொழி ஆர்வம் ஏற்பட இவருடைய தாத்தா மற்றும் மாமாவின் தமிழ் பற்று தான் காரணம் என்றும், தமிழ்ப் புலவரான இவரது தாத்தாவின் தமிழ் ஆற்றலும், ஊக்கமும் தான் தனக்கு தமிழ் மொழி கற்றுக்கொள்ள உந்துதலாக இருந்தது என்றும் கருதுகிறார். சிறுவயதிலிருந்தே தமிழ் கதைகள் கேட்பதில் இவருக்கு விருப்பம் உண்டு. அப்பழக்கம் தொடர, இன்றும் பல்வேறு தமிழ் கதைகளை பதிவிறக்கம் செய்து கேட்பதோடு அதை தன் பிள்ளைகளுக்கும் எடுத்துரைப்பது சிறப்பு. பொன்னியின் செல்வன் மற்றும் தமிழ் நாவல்கள் பலவற்றையும் ஓய்வு நேரங்களில் படிப்பதாக கூறுகிறார். தனது வீட்டில் கட்டாயமாக தமிழில் மட்டுமே பேசும் பழக்கத்தை கடைபிடிப்பதோடு இயன்றவரையில் ஆங்கில வார்த்தை கலப்பை தவிர்ப்பதாகவும் கூறுகிறார். தன் பிள்ளைக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஆரம்பித்த காலத்தில் மேலும் வேறு சில பிள்ளைகளுக்கும் தமிழ் பாடம் கற்றுக் கொடுக்க தொடங்கியதன் மூலம் மொழி கற்பித்தலில் ஆர்வம் அதிகமானது என்கிறார்.இவ்வாறு தமிழ்மொழி மீதான நாட்டமும், ஆசிரியப்பணி மீதான விருப்பமும் ஒருங்கிணைய TBTA-வில் இணைந்து தன்னார்வ பணியாற்ற முன் வந்துள்ளார்.

திருமதி கீதா குமாரி ராமச்சந்திரன்

logo
சொந்த ஊர் :மதுரை

பள்ளியில் தமிழாசிரியரின் ஈர்ப்பினாலும் அவரது உந்துதலினாலும் பல்வேறு தமிழ்ப் பேச்சுப் போட்டிகளில் வென்றுள்ளார். பள்ளி, கல்லூரி காலங்களில், தமிழ் பாடத்தில் முதல் இடம், திருவள்ளுவர் மன்றம் சார்பாக பல சான்றிதழ்கள் பெற்றது என்று இவரது தமிழார்வத்திற்கு சான்றுகள் பல. வீட்டிற்கு மிக அருகாமையில் நூலகம் இருந்ததால் தமிழ் புத்தகங்கள் அதிகம் படிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. திரு.பாலகுமாரன் அவர்களின் உடையார்’(ஆறு பாகங்கள்) எனும் நூல், அர்த்தமுள்ள இந்து மதம், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு நூல்களை முழுமையாக படித்ததாக கூறுகிறார். தனது தாத்தா, பாட்டியின் தமிழார்வம் தனக்குள்ளும் மேலோங்கிய காரணத்தால் இன்றும் தமிழில் மிக சரளமாக தன்னால் பேசவும் எழுதவும் முடிகிறது என்று கருதுகிறார்.தன்னைப் போலவே தன் பிள்ளைகளும் தமிழ் மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்ப்பள்ளியில் இணைந்ததாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.தமிழ் மொழி ஓர் அழகிய பெருமை வாய்ந்த மொழி; இம்மொழியை தன் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற பிள்ளைகளுக்கும் கற்று தர வேண்டும் என்கிற எண்ணம் சிறப்பு. இவ்வாறு தமிழார்வமும் தன்னார்வமும் இணைய தமிழ் கற்றுக் கொடுக்க TBTA-வில் இணைந்து தமிழ் பணியாற்ற முன்வந்துள்ளார்.

இவர்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

பாடல் பகுதி - அற்புதம்மாள்!
 — செ.ஷேக் அப்துல் காதர்

Sheikh

Arputhammal


அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்

அப்பா, எனக்கு school-ல 9 days continuous holiday அப்பா எனக்கு பள்ளியில் ஒன்பது நாட்கள் தொடர்ந்து விடுமுறை
இந்த லீவுல jolly-யா விளையாடுவேன் இந்த விடுமுறையில் மகிழ்ச்சியாக விளையாடுவேன்
Last year நாங்க இதே time-ல travel பண்ணோம் கடந்த ஆண்டு நாங்கள் இதே நேரத்தில் பயணம் செய்தோம்
எனக்கு டிசம்பர் மாதத்தில் few days தான் school எனக்கு டிசம்பர் மாதத்தில் சில பள்ளி நாட்கள் மட்டுமே உள்ளன
இந்த ஒரு வாரத்தில் நான் எனது laptop use பண்ணல இந்த ஒரு வாரத்தில் நான் எனது மடிக்கணினியைப் பயன்படுத்தவில்லை

இலக்கிய பகுதி

பொருநராற்றுப்படை

ஆசிரியர் பெயர் - முடத்தாமக்கண்ணியார்

சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டு களில் இரண்டாவதான பொருநராற்றுப்படை சோழன் கரிகால் பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது.

இந்நூல் 248 அடிகளை உடையது. கரிகாலனிடம் பரிசில் பெற்ற பொருநன், எதிர்ப்பட்ட பொருநனை ஆற்றுப் படுத்துவதாக அமைந்தது. பொருநர் என்பதற்கு பிறனொருவன் போன்று வேடம் கொள்ளுதல் என்பது பொருள். பொருநர் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர் என பல வகைப்படுவர்.

இந்நூலில் போர்க்களம் பாடுவோர் ஆற்றுப் படுத்தப்படுகிறார்கள்.

தான் செய்த தவத்தின் பயனாக தன்னை வழியில் கண்ட ஒரு பொருநனிடம் பரிசில் பெற்று வரும் பொருநன் பரிசில் பெரும் முன்னர் தானிருந்த வரிய நிலையையும், கரிகாலனின் விருந்தோம்பல் சிறப்பையும், தான் பெற்ற பரிசில்களையும் விளக்கிக் கூறுகிறான்.

பரிசு பெற்றோன் பாடின முறை

"ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி ஏழின் கிழவ"

கோடியல் தலைவ! நீ நின் குறிக்கோளை அறிந்தவனாயினும் எங்கு யாரிடம் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்க்காமல் கால் போன வழியில் சென்று கொண்டிருப்பது நீ முன்பு நோற்ற நோன்பின் பயனாகும். என்றாலும் நான் சொல்வதைப் போற்றிக் கேட்பாயாக ! உன் சுற்றத்தார் அடித்துத் தின்னும் பசியால் வருந்துகின்றனர். அந்த நீண்ட நாள் பசியைப் போக்க விரும்பினால் காலம் தாழ்த்தாமல் நான் சொல்லும் இடத்திற்குச் செல்ல எழுக ! வாழ்க!

"பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின்
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கென் இடும்பை தீர
எய்த்த மெய்யே னெய்யே னாகிப்
பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி
இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்"

யானும் அன்று ஒருநாள் ( கரிகாற் பெருவளத்தான் ) அரண்மனை வாயிலுக்குள் நுழைந்து சென்று வெள்ளி முளைக்கும் விடியல் வேளையில் என் தடாரிப் பறையை முழக்கி ஒன்றே ஒன்று சொல்லத் தொடங்கிய போதே அவன் என்னைப் பேணத் தொடங்கி விட்டான். அன்று நான் பழுத்த மரத்தை நினைத்துக் கொண்டு பறந்து செல்லும் பறவை அவனது அரண்மனையில் இழும் என்னும் சும்மை. அதாவது அமைதி ஒலி…

அவனது அரண்மனையின் பெருவாயிலில் அவனை விரும்பிப் பார்க்கச் செல்வோரைத் தடுக்கும் வழக்கம் இல்லை. உள்ளே நுழையும் போது நான் எந்த இசையையும் எழுப்பவில்லை. என் உடம்பு இளைத்திருந்தது. உள்ளம் சோர்ந்து போயிருந்தது. எனினும் என் இடும்பை தீர வேண்டுமே! தடாரி என்னும் குடுகுடுப்பையை அடித்தேன். படமெடுத்தாடும் பாம்பைப் பிடித்திருப்பது போல் தடாரியைப் பிடித்துக் கொண்டு ஆட்டினேன். பாம்பு நாக்கைப்போல் அதில் இருந்த அரக்குமுடித் துத்தியானது தடாரியை அடிக்க அது ஒலித்தது. அதன் இருபுறக் கண்ணிலும் மோதி அது பாணி இசையைத் தந்தது.

அரசன் விருந்தோம்பலின் சிறப்பு

"கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்        
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த  
துன்னற் சிதாஅர் துவர நீக்கி"

அவன் எனக்கு உறவினன் அல்லன். என்றாலும் என்னை உறவு கொள்வதற்காக விரும்பி வந்தான்.கொடை நல்கி உதவி செய்வதற்கென்று அரண்மனையில் தனி இடம் இருக்கும். அதற்கு வேளாண் வாயில் என்று பெயர். அந்த வேளாண் வாயிலுக்கு வந்து எங்களை வரவேற்றுப் பலர் முன்னிலையில் பலரும் விரும்புமாறு எங்களைத் தன் நண்பர்கள் என்று கூறிக்கொண்டான். பலரும் காணுமாறு தான் விரும்பிய இடத்தில் எங்களை இருக்கச் செய்தான். சற்றும் குறையாத ஆசையோடு எங்களை விழுங்கிவிடுவது போல் பார்த்தான்.

எங்களது துணிமணிகளில் ஈரும் பேனும் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்தன. வியர்வையால் நனைந்ததைத் துவைத்து உடுத்தாமையால் விளைந்த பலன் இது. கிழிந்துபோயிருந்த அதனையும் வேறு நூல்கொண்டு தைத்து உடுத்தியிருந்தோம். புத்தாடை நல்கிப் பழைய ஆடைகளை முற்றிலுமாகக் களையச்செய்தான்.

அடுத்த இதழில் கரிகாலனின் இளமைப்பருவம், வெண்ணிப் போர் வெற்றி, கொடைச்சிறப்பு, நாட்டுவளம் ஆகியன பற்றி காண்போம்.


அறவாழ்வைப் போற்றிய அறிஞர் — மு. வரதராசனார்
 — மேகலா இராமமூர்த்தி

Megala Ramamoorthy

கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணியாற்றிச் சென்றிருப்போர் எத்தனையோ பேர். அவர்கள் அனைவரையும் அவர்களுடைய மாணவர்கள் நினைவில் வைத்துப் போற்றுகின்றார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களில் மிகச் சிலரையே மாணவருலகம் என்றும் நன்றியோடு போற்றுகின்றது; நினைந்து மகிழ்கின்றது. அத்தகையோருள் ஒருவர்தாம் மு.வ. என்றழைக்கப்படும் மு.வரதராசனார்.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25ஆம் நாள் வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் முனிசாமி, அம்மாக்கண்ணு இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் மு.வரதராசனார். திருவேங்கடம் என்று ஏழுமலையானின் பெயரும், வரதராசன் என்று அவருடைய பாட்டனாரின் பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டன. வீட்டிலே திருவேங்கடமாகவும் வெளியுலகுக்கு வரதராசனாகவும் திகழ்ந்தார் அவர்.

திருப்பத்தூர் நகராட்சிப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் முறையே தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் உரைநடையால் ஈர்க்கப்பட்ட மு.வ., அவருடைய நூல்களை இடையறாது கற்றார். அவருடைய சொற்பொழிவுகளிலும் உளம்தோய்ந்து, திரு.வி.க. எங்குப் பேசினாலும் அங்குச்சென்று அவர் பொழிவுகளைத் தவறாது கேட்டார். திரு.வி.க.வோடு நெருங்கிப் பழகும் நற்பேறும் மு.வ.வுக்கு வாய்த்தது. மு.வ.வுடனான தம் நட்பைப் பற்றித் திரு.வி.க.வும் மிகவும் உயர்வாகத் தம்முடைய வாழ்க்கைக் குறிப்புகளில் சுட்டியுள்ளார்.

1939இல் பி.ஓ.எல். தேர்வில் வெற்றிபெற்ற மு.வ., அதே ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை விரிவுரையாளராக (Tutor) பணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு அவருக்குக் கீழ்த்திசை மொழிகளின் விரிவுரையாளர் (Lecturer in Oriental Languages) எனும் பொறுப்பு அக்கல்லூரியில் வழங்கப்பட்டது.

பச்சையப்பன் கல்லூரியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பி.ஓ.எல். வகுப்பு மாணவர்களுக்கு மொழியியல் பாடமாக இருந்தது. ஆனால் அதனைக் கற்பிப்பதற்குரிய நூல்கள் தமிழில் இல்லை. எனவே மொழியியல் கற்பிக்க வேண்டியிருந்த மு.வ.வே மொழியியல் நூலை எழுதும் கடமையையும் மேற்கொண்டார். கற்பிக்கும் பாடத்தை நூலாக்குவதும், நூலாக்கும் பாடத்தைக் கற்பிப்பதும் இரட்டை நன்மைகள் ஆயின. அவ்வகையில் மு.வ.வுடைய மொழியியல் என்ற நூல் 1947லும், மொழியியற் கட்டுரைகள், மற்றும் மொழிவரலாறு எனும் இரு நூல்களும் 1954லும் வெளிவந்தன.

1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய மு.வ., 1971இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய்ப் பொறுப்பேற்று 1974 வரை அங்கே சிறப்புறப் பணியாற்றினார்.

மு.வ.வின் தமிழுள்ளத்திலிருந்து முதலில் வெளிப்பட்ட இலக்கிய ஆய்வுநூல், தமிழ்நெஞ்சம் என்பதாகும். பண்டைத் தமிழ்ப்புலவோரின் வாழ்வினை அவர்கள் பாடிய புறப்பாடல்களின் துணையோடு பல்வேறு கோணங்களில் ஆய்ந்திருக்கும் இந்நூல், சென்னைப் பல்கலைக்கழத்தில் இரண்டுமுறை பாடமாக வைக்கப்பட்டது. இரண்டாம்முறை பாடமாக வைத்தபோது கிட்டிய வருவாய் அனைத்தையும், ஷெனாய் நகரிலுள்ள திரு.வி.க. உயர்நிலைப்பள்ளிக்கு அள்ளிக் கொடுத்தது மு.வ.வின் தமிழ் நெஞ்சம்.

வரதராசனாரின் பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகள் பல்வேறு நூல்களாகத் தொடர்ந்து வெளிப்பட்டன. இவற்றுள் அளிநிலை பொறாஅது எனத் தொடங்கும் 28 அடி நீளமுள்ள அகநானூற்றுப் பாடலை விளக்க எழுந்ததே 179 பக்கங்கள் கொண்ட ஓவச் செய்தி என்ற அவருடைய நூல். கொங்குதேர் என்று தொடங்கும் குறுந்தொகை இரண்டாம் பாடலை விளக்க எழுந்ததே கொங்குதேர் வாழ்க்கை எனும் நூல். ஒரே ஒரு பாடலை விளக்க எழுந்த இவ்விரு நூல்களைப் போலவே, ஒரே துறையால் அமைந்தது புலவர் கண்ணீர் என்ற நூல்; ஒரே திணையை விளக்க வந்தது முல்லைத் திணை என்ற நூல். ஒரே பொருளால் அமைந்தது மணல் வீடு எனும் மற்றொரு நூல்.

இவையனைத்தையும் விஞ்சி இன்றும் மு.வரதராசனாருக்குத் தனித்ததோர் அடையாளமாய்த் திகழ்வது திருக்குறளுக்கு அவர் வரைந்த தெளிவுரையே ஆகும். விற்பனையில் பெரிய சாதனை படைத்த இந்நூல், பல போட்டிகளுக்கும் கையடக்கப் பரிசாக இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது.

நாவல் நாடகம் சிறுகதை போன்ற துறைகளிலும் முத்திரை பதித்தவர் மு.வ. அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் 13. அவற்றில், காதலின் பல்வேறு கோணங்களைச் சித்திரித்தது செந்தாமரை; தாய்மையின் மகத்துவத்தைப் புலப்படுத்தியது பெற்ற மனம்; பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை வடித்துக்காட்டியது கள்ளோ காவியமோ; கலைமனத்தின் உணர்வுகளை உணர்த்தியது கரித்துண்டு; உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே கிடந்து அல்லலுறும் இளைஞர்களின் போக்கை வெளிச்சமிட்டது அகல்விளக்கு; அரசு அலுவலங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்டியது கயமை. மலர்விழி, அல்லி, நெஞ்சில் ஒருமுள் போன்றவை குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை விவரித்தன.

இவற்றில் அகல்விளக்கு நாவல் 1962இல் சாகித்ய அகாதமியின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினை வென்றது. இவையல்லாமல் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், விடுதலையா, மொழிநூல் ஆகிய மூன்று நூல்களும் தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் பரிசினைப் பெற்றன. பெற்ற மனம் என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும் 1960இல் வெளிவந்தது.

வரதராசனாரின் நாவல்கள், நாவலுக்கான இலக்கணங்களைக் கொண்டிருக்கவில்லை; அவை கருத்துரை நாவல்களாக உள்ளன என்ற விமர்சனமும் சிலரால் வைக்கப்படுவதுண்டு.

நாவலை நான் வெறும் பொழுபோக்குக்காகப் படைக்கவில்லை; இடையிடையே ஓரிரு நிகழ்வுகளை வாசகர்களைக் கவரும்நோக்கில் நாவலில் வைத்தாலும், வாழ்வியல் முன்னேற்றக் கருத்துக்களையும் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் எடுத்துச் சொல்வதாகவும், அதே சமயத்தில் வெறும் நீதிபோதனை நூலாக இல்லாத வகையிலும் நாவலை உருவாக்குவதே என்னுடைய நோக்கம் என்று மு.வ.வே ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பது மேற்கண்ட விமர்சனத்துக்கான விடையாகவும் அமையக்கூடியது.

படைப்பிலக்கியங்களைப் பொதுவாகக் கலைப் படைப்புகள் என்றும் ஆய்வுப் படைப்புகள் என்றும் இரண்டாகப் பிரிப்பர். கலைப் படைப்புகளில் உணர்ச்சிகள் முக்கியத்துவம் பெறும்; ஆய்வுப் படைப்புகளில் நுண்ணிய அறிவு இன்றியமையா இடம்பெறும். படைப்பாளர்கள் ஆய்வாளர்களாக வெற்றிபெறுவது கடினம்; ஆய்வாளர்கள் படைப்பாளர்களாவதும் அரிது. ஆனால் மு,வ., கலைப் படைப்பாளராகவும் ஆய்வுப் படைப்பாளராகவும் ஒருசேரத் திகழ்ந்த சாதனையாளர் ஆவார்.

logo

அக்டோபர் 10, 1974இல் இதயநோய் காரணமாக மு.வ.வின் நல்லுயிர் பிரிந்தது.

அகல்விளக்காகத் தம் எளிய வாழ்வைத் தொடங்கிய மு.வ., தம் சீரிய உழைப்பாலும், கூரிய அறிவாலும் கலங்கரை விளக்காய் ஒளிர்ந்து, தமிழறிஞர்கள் பலரையும் தமிழுலக்குக்கு உருவாக்கித் தந்த தகைமையாளர். அறவாழ்வையும் நற்பண்பையும் தம்மிரு கண்களாகக் கொண்டு, அளப்பரிய தமிழ்ப்பணிகளை ஆற்றிச்சென்றிருக்கும் அத் தமிழ்ச்சான்றோரைப் போற்றுவோம்! அவர் நூல்களைக் கற்றுப் பயன்கொள்வோம்!


இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.


Posted on November 16, 2020   #Kavitha Rajasekar     #Megala Ramamoorthy     #Sheikh Abdul Khadar  







← Next post    ·    Previous post →

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!