இதழ்: இருபது , மே 2020
ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா
தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
மாற்றம், முயற்சி, நம்பிக்கை, ஒற்றுமை, உழைப்பு …..தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகத்தின் மெய் நிகர் வகுப்புகள் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றி.
இக்கல்வியாண்டிற்கான இறுதி வாரத்தை நெருங்கி விட்டோம்; இப்பருவத்தின் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. வாய்மொழித் தேர்வுக்கு அதிக ஒதுக்கீடும் எழுத்துத் தேர்வுக்கு குறுகிய விழுக்காடும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஐயப்பாடுகள் இருக்குமாயின் , ஆசிரியக் குழுவிடமும், கிளை முதல்வரிடமும் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
இம்மாத (மே -2020 ) பள்ளி கால அட்டவணை
05/01/2020 — 05/03/2020 | உண்டு |
05/08/2020 — 05/10/2020 | உண்டு |
05/15/2020 — 05/17/2020 | மாதிரி தேர்வு |
05/22/2020 — 05/24/2020 | இறுதி தேர்வு |
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
சென்ற மாத இதழில், “கன்னியாகுமரிக்கு ஓர் பயணம்” என்ற தலைப்பில் , தன் அனுபவத்தை மாணவர் அமர் முகைதீன் நம்மிடம் பகிர்ந்து கொண்டது, தங்கள் பள்ளி இன்பச்சுற்றுலாவை நினைவு படுத்தியதாக பல வாசகர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
எவ்வளவோ காலம் ஆயிற்று ஓர் அறிவியல் கட்டுரையை தமிழில் படித்து, அதற்கு முதலில் நன்றி முனைவர். சேஷா சீனிவாசன் அவர்களுக்கு. நியுட்ரானின் தந்தையான “ஜேம்ஸ் சாட்விக்” அவர்களின் வரலாற்றை இயல்பான நடையில் நம் அனைவருக்கும் புரியக் கூடிய வகையில் அளித்தமைக்கு எங்கள் நன்றியும் பணிவான பாராட்டுகளும்.
எழுத்தாளர் மேகலா ராமமூர்த்தியின் கட்டுரை பசிப்பிணி மருத்துவம்! - உலகமெங்கும் இப்பொழுது உள்ள சூழலுக்கு ஏற்றார் போல அமைந்துள்ளதாக வாசகர்கள் கருதினர்.
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ‘லங்கா’ உண்மையில் எங்குள்ளது? இதற்கான பதிலாக முனைவர் பரிமளா நாதன் அவர்கள் தந்த சான்றுகள் சிந்திக்கும் வகையில் இருந்தாக வாசகர்கள் தெரிவித்தனர். முதல் முறையாக செய்தி மடலில் எழுத்தாளர் பகுதியில் இரண்டு பாகங்கள் வெளி வந்தமை, இச்ச்செய்தி மடலின் அடுத்த கட்ட வளர்ச்சியாக காண்கிறோம்.
எல்லாக் கால கட்டத்திலும், எவ்வளவு கடினமான சூழலிலும், எங்களுக்கு உறுதுணயாக இருந்து இம்மடலின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் பிரதான எழுத்தாளர்களான மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், பரிமளா நாதன் அவர்களுக்கும் , தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் மிகுந்த நன்றியை உரித்தாக்குகிறது.
“கேள்வி பதில்” பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை newsletter@tampabaytamilacademy.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
மாணவர் பகுதி
மாணவர் பகுதிக்கு கிடைத்த மிக பெரிய ஆதரவு எங்களுக்கு பெருமகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்தது. பல குழந்தைகள் தங்களின் படைப்புகளை எங்களுக்கு அனுப்பிய வண்ணம் உள்ளனர். இம்முயற்சியின் பெரும் பங்கு பெற்றோர்களையே சாரும், அவர்களுக்கு ஆசிரியக் குழுவின் நன்றி. பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும். |
ஒளி மயமான தமிழ் புத்தாண்டு
|
![]() |
வா வா கிருஷ்ணா!
|
![]() |
எழிலோவியத்தின் ஓவியம்…
|
![]() |
என்னை கவர்ந்த முண்டாசு கவிஞன்
|
![]() |
ஆசிரியர் அறிமுகம்
திருமதி ரேவதி சரவணன்
தனது பள்ளிப்பருவத்தில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தன்னார்வத்தோடு தமிழ்வழிக் கல்வியில் இணைந்து பயின்று இருப்பதன் மூலம் இவரது தமிழார்வம் புலப்படுகிறது.தமிழ் மொழியோடு கொண்டிருக்கும் இணைப்பு, தன்னோடு நின்றுவிடாமல் தனது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் நோக்கில் தனது பிள்ளையை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து தமிழ் மொழி கற்க வைப்பதாகக் கூறுகிறார். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், ஏன் சில நேரங்களில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டும் தமிழ் புத்தகங்களைப் படிப்பதாகக் கூறுகிறார். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய பல நீதிகளை கூறும் நீதி நூலான திருக்குறள் போன்றவை இவரது மனம் கவர்ந்த நூல்களாகும். தனது மிகுந்த தமிழ் ஆர்வத்தால் TBTA வில் இணைந்து செயல்பட்டு வருகிறார். |
![]() சொந்த ஊர் : தர்மபுரி , தமிழ்நாடு |
திருமதி செல்வகுமாரி செல்வராஜ் (புனை பெயர் - வசுமதி)
சிறுவயதிலிருந்தே தமிழ் புத்தகங்களை ஆர்வமுடன் படித்து வளர்ந்தார். இவரது தமிழ் ஆர்வத்திற்கு புத்தகங்களே தூண்டுகோலாக இருந்தது என்கிறார். பள்ளிப்பருவத்தில் தமிழ்ப் பாடத்தில் எப்போதும் முதல் மதிப்பெண் மட்டுமே வாங்கியதில் இருந்தே இவரது தமிழார்வம் புலப்படுகிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்ததும் தனது பிள்ளையின் தமிழறிவு குன்றி விடாமல் இருக்க தமிழ்ப் பள்ளியில் சேர்த்த நேரத்தில் தான் தனக்கும் தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆர்வம் மேலோங்கியது என்கிறார். மேலும் ஆசிரியர் பணியில் இவருக்கு மிகுந்த முன் அனுபவம் மற்றும் ஆசிரியர் பணியின் மீது இருந்த ஆர்வமிகுதியாலும் TBTA வில் இணைந்து குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறார். |
![]() சொந்த ஊர் : பாண்டிச்சேரி |
இவர்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!
பாடல் பகுதி - ஒரு கிராமத்து குழந்தையின் வேண்டுதல்
|
அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
எங்கள் பள்ளியில் அடுத்த வாரம் final exam | எங்கள் பள்ளியில் அடுத்த வாரம் இறுதி தேர்வு |
இந்த summer vacation-ல தமிழ் புத்தகங்கள் வாசிப்பேன் | இந்த கோடை விடுமுறையில் தமிழ் புத்தகங்கள் வாசிப்பேன் |
அம்மா, please கொஞ்சம் நேரமாவது விளையாட விடுங்கள் | அம்மா, தயவு செய்து கொஞ்சம் நேரமாவது விளையாட விடுங்கள் |
வீட்டிலே இருந்து வெளியே வந்து fresh air breath பண்ணலாமே | வீட்டிலே இருந்து வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசிக்கலாமே |
அப்பா, எனக்கு நீங்கள் இன்றைக்கு Bedtime stories சொல்ல வேண்டும் | அப்பா, எனக்கு நீங்கள் இன்றைக்கு படுக்கைநேர கதைகள் சொல்ல வேண்டும் |
இலக்கிய பகுதி
இன்னா நாற்பது
ஆசிரியர் பெயர் - கபிலர்
சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இன்னாநாற்பது ஒரு நீதி நூல். உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றி கூறி நீதி உரைப்பது இந்நூல். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது.
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. நூல்அமைப்பில் இனியவை நாற்பதினும் இது செவ்வியமுறையை மேற்கொண்டுள்ளது எனலாம். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளைக்கொண்டு நான்மணிக்கடிகையைப் போன்று இந் நூல் அமைந்த போதிலும்,ஒவ்வொன்றையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுதலின், இது ‘இன்னா நாற்பது’ என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. சிற்சில பொருள்களை இவ்வாசிரியர் மீண்டும் எடுத்துக் கூறுதல் அந்தஅறங்களை வற்புறுத்தி உணர்த்துதற் பொருட்டேயாதல் வேண்டும்.
இனி இந்நூலில் அடுக்கிக் கூறும் சில இன்னாதவைகளைக் காணலாம்.
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு
அதாவது கொடுங்கோல் செலுத்தும் கொலைத் தொழிலை உடைய அரசரது ஆட்சியின்கீழ் வாழ்வது இன்னா. நெடு நீரை தெப்பம் இல்லாமல் கடந்து செல்ல எண்ணுவது துன்பம் தரும். வன்சொல் பேசுவோரின் நட்பு தவறானது. வறுமை முதலியவற்றால் மனத் தடுமாற்றம் அடைந்து வாழ்வது இன்னாதது.
மேலும் சில சான்றுகளாக,
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா
‘அரியவை செய்தும்!’ என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல்
அதாவது பெரியவருடன் கொண்ட நட்புறவை விடுவது துன்பமாம். செய்தற்கரிய காரியங்களை செய்து முடிப்போம் என்று சொல்லுதல் துன்பமாம். தம்மிடத்தில் அன்பு கொள்ளாதவர்க்கு தாம் அடைந்த துன்பங்களைக் கூறும் சொல் துன்பமாம். பெருமையுடையார்க்கு, தீயனவற்றைச் செய்தல் துன்பமாம்.
இவ்வாறு பல இன்னா செயல்களை வரிசைப்படுத்திக் கூறியுள்ளார் கபிலர். இந்நூலின் மிகச் சிறந்த கருத்துக்களை உள்ளடக்கிய பாடல் வரிகள் சிலவற்றையும் இனி காணலாம்.
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா
வலியில்லாதவன் கையிற்பிடித்த படைக்கலம் துன்பமாம்.
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா
நுகராது அதாவது உபயோகிக்காது வைக்கும் பெரிய பொருளின் வைப்பானது துன்பமாம்.
மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா
மழை வளம் பொய்க்குமாயின் உலகிற்கு துன்பமாம்.
கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா
கள்குடிப்பவன் சொல்லுகின்ற காரியத்தின் பயன் இன்னாதது.
கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா
கொடுத்தற்குரிய பொருளில்லாதவனுடைய ஈகைத் தன்மை துன்பமாம்
இவ்வாறு இவை இவை துன்பம் பயக்கும் என்று ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்கள் இடம் பெற நாற்பது பாடல்களால் இயற்றப்பட்டதால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.
அணிநடை அன்னம்!
|
![]() |
பண்டைத் தமிழர்கள் நிலத்தையும் பொழுதையும் வாழ்வின் முதற்பொருளாய்க் கருதியவர்கள். மாவொடும் புள்ளொடும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தவர்கள். பூக்களையும் அவற்றைச் சுற்றிவந்த பல வண்ண ஈக்களையும் இரசித்தவர்கள். இயற்கையோடு பிணக்கமில்லா இணக்க வாழ்வு அவர்களுடையது. அந்த இன்ப வாழ்வின் பிரதிபலிப்பை அற்றைத் தமிழ்ப் புலவோரின் தீந்தமிழ்ப் பாடல்கள் தெற்றெனப் புலப்படுத்துவதே இதற்குத் தக்க சான்றாகும்.
பறவைகள் குறித்த பழந்தமிழ்ப் பாடல்களை ஆராய்ந்தால், காக்கை, குருவி, குருகு, கூகை, மயில், குயில், அன்னம், அன்றில் எனத் தம் வண்ணத்தாலும் வனப்பாலும் எண்ணங் கவர்ந்த பல்வேறு பறவைகளைப் புலவர்கள் நுணுகி ஆராய்ந்து அவற்றின் இயல்புகளை மிகையின்றிப் பதிவு செய்திருக்கின்றார்கள். இப்பறவைகளில் அன்னம் குறித்து நம் புலவர்களின் எண்ணவோட்டம் என்ன என்று சிறிது ஆராய்வோம்.
நீர்நிலைகளில் வாழும் இயல்புடையது அன்னப்புள். வெள்ளை, கறுப்பு, சாம்பல், இவற்றின் கலவை ஆகிய நிறங்களில் அவை காட்சிதரும். வாத்தும் அன்னமும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த பறவைகளே. ஆம், அன்னம் என்பது பட்டைத்தலையுடைய பெரிய அளவிலான வாத்துதான் (Bar-headed goose). ஆனால் அன்னத்தின் நடையில் இருக்கும் நளினமும் கவர்ச்சியும் வாத்திடம் கிடையாது! இந்த ‘நடை’ வேறுபாட்டைக் கவனித்த புலவர்கள் அன்னத்தின் அழகிய நடையைப் பெண்டிரின் நளின நடைக்கு உவமைக்கியிருக்கிறார்கள். அழகை எங்குக் கண்டாலும் எவற்றினிடத்துக் கண்டாலும் அதனைப் பெண்ணொடு பொருத்திப் பார்ப்பது என்பது ஆண்களின் உளவியலாகவே அன்றுதொட்டு இன்றுவரை தொடர்கின்றது. அதற்குப் புலவர்கள் மட்டும் விலக்காவரோ?
புகழேந்திப் புலவர் இயற்றிய புகலரு சிறப்புடைய நளவெண்பாவில் ஒரு நயமான காட்சி…
நிடத நாட்டரசனாகிய நளன் சோலையில் உலாவிக்கொண்டிருக்கின்றான். அப்போது வெண்ணிற அன்னம் ஒன்று செந்நிறப் பாதங்களோடு அங்கே தோன்றியது. அதன் தோற்றப் பொலிவில் சிந்தை பறிகொடுத்த நளன், அதனைப் பிடித்துவருமாறு தன் சேடிப் பெண்களை ஏவ, மயிலொத்த சேடியர் ஒயிலாக ஓடிச்சென்று அவ் அன்னத்தைப் பிடித்துவந்து அரசன்முன் பணிவாக வைத்தனர்.
பிடிபட்ட அன்னமோ அரசன் தன்னை என்ன செய்யப்போகிறானோ என்று அஞ்சி நடுங்கியது. நளன் அதனிடம், “அஞ்சாதே மட அன்னமே! உன்னுடைய அணி நடையையும் வஞ்சிக்கொடி அனைய மங்கையரின் மணி நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து இவற்றில் சிறந்த நடை எது என்று தெளியும் பொருட்டே உன்னைப் பிடித்துவரச் சொன்னேன்; வேறொன்றுமில்லை” என்று உண்மைசாற்றி அதனைத் தேற்றுகின்றான்.
அஞ்சல் மடஅனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன். (நளவெண்பா - 34)
ஈதொப்பவே அன்னத்தின் நடையைக் கண்ணகிநல்லாளின் கவின் நடைக்கு உவமை காட்டுகின்றார் சிலம்பின் ஆசிரியர் இளங்கோ. அக்காட்சியைக் காண்போம்!
புகாரிலிருந்து மதுரைக்குப் பொருள்தேடிப் புறப்பட்ட கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகள் எனும் சமணத்துறவியின் துணையோடு மதுரை மூதூரை அடைகின்றனர். அங்கே பூக்களையே ஆடையாய்ப் போர்த்துச் செல்லுகின்றாள் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி. அவ் அருங்காட்சியைக் கண்ட அன்னநடைப் பெண்ணாள் கண்ணகியும், ஐயனான கோவலனும், “இது புனல் ஆறன்று; பூம்புனல் ஆறு” என்று அதனைத் தொழுதனர் என்கிறார் அடிகள்.
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது…
(சிலப் – மதுரைக்காண்டம்: 174-175)
அழகிய அன்னப்புள்ளைத் தம் உள்ளத்தை உரைக்கும் காதல் தூதாக விடுத்த பாடல்கள் தமிழிலக்கியத்தில் பல உள. ’தூது’ என்பது ஒரு தனிச்சிற்றிலக்கிய வகையாக வளர்ச்சியடைந்தது பதினான்காம் நூற்றாண்டில்தான் எனினும், அதன் தொடக்கத்தைச் சங்க நூல்களிலேயே காணமுடிகின்றது.
அன்னச்சேவலைத் தம் ஆருயிர்த் தோழனான சோழ மன்னனிடம் தூது விடுக்கும் பிசிராந்தையாரின் புறப்பாட்டு இது!
அன்னச் சேவ லன்னச் சேவல்……..
…….குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயின் இடையது
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலன் நல்குவன் நினக்கே. (புறம் - 67)
“அன்னத்தின் சேவலே! (ஆண் அன்னமே) நீ குமரித்துறையிலே அயிரை மீனை வயிறார உண்டுவிட்டு இமயத்தை நோக்கிப் பறக்கின்றனையா? அப்படியாயின், இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலுள்ள சோழ நன்னாட்டுக்குச் செல்வாயானால், ஆங்கே உறையூர் எனும் ஊர் உளது. நீ அங்குச் சென்றால் அங்குள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; ஆனால் அங்கு வாயிற் காவலர்கள் இருப்பர். எனவே அவர்களுக்கு உன் வரவை உணர்த்தாது நேரே அரண்மனைக்குள் செல்! அங்கே எம் மன்னனாகிய பெருங்கோக் கிள்ளி இருப்பான். அவன் காதில் விழுமாறு நான் பிசிராந்தையாரின் அடிக்கீழ் வாழ்பவன் என்று சொல்! அப்புறம் பார்! உன் மதிப்பு மிக்க பேடை பூணுதற்கு நல்ல அணிகலன்களையெல்லாம் அள்ளித் தருவான் அவன்!” என்று கோப்பெருஞ்சோழனுக்கும் தனக்கும் இருந்த நட்பின் பெட்பினை அன்னச்சேவலிடம் அன்பொடு கூறி அதனை அவன்பால் தூதுவிடுக்கிறார் ஆந்தையார்.
அன்னப்பறவைகள் வானில் விரைந்து பறக்கும் தன்மையன. அதனால் வினைமுடித்துத் திரும்பும் தலைமகன் ஒருவன் தன் தேர்ப்பாகனிடம், “பாக! வானில் பறந்துசெல்லும் அன்னப்பறவைகள்போல் குதிரைகளை விரைந்து செலுத்து! அழகிய மையுண்ட கண்களையும், செழித்த கூந்தலையும், சிறு நுதலையும் உடைய என் தலைவியை நான் இப்பொழுதே காணவேண்டும்!” என்று துரிதப்படுத்தும் அழகிய பாடல் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
…வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப
நால்குடன் பூண்ட கானவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது
இனமயில் அகவுங் கார்கொள் வியன்புனத்து
நோன்சூட் டாழி ஈர்நிலம் துமிப்ப
ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்
பொலிவன அமர்த்த உண்கண்
ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே.
(அகம் – 334 – மதுரைக் கூத்தனார் –
பிற பாட பேதங்கள்: மதுரைக் கடாரத்தனார்;
மதுரைக் கந்தரத்தனார்; மதுரைக் கோடரத்தனார்.)
நடையழகிற்கும், விரைந்து பறக்கும் திறனுக்கும் மட்டுமன்றி மென் தூவிகளாலும் (இறகுகள்) சிறப்புடையன அன்னங்கள். அம்மென் தூவிகளை அன்றைய தமிழர் தம் பஞ்சணைகட்குப் பயன்படுத்தியமையைச் சங்க நூல்கள்வழி அறிகின்றோம்.
நெடுநல்வாடையில் போர்மேற்சென்ற அரசனைப் பிரிந்து தனித்திருக்கும் கோப்பெருந்தேவியின் பாண்டில் எனும் வட்டக் கட்டிலின் அமைப்பையும் அழகையும் விவரிக்கவரும் நல்லிசைப் புலவர் நக்கீரனார்,
“துணையைப் புணர்ந்தபோது உதிர்ந்த அன்னங்களின் தூவியை இணைத்து உருவாக்கப்பட்ட பஞ்சணையை மேன்மையுண்டாக விரித்து, அதன்மேல் தலையணை, சாயணை முதலிய அணைகளை இட்டுவைத்து, நன்கு கஞ்சியிட்டுக் கழுவப்பட்டு, மலரிதழ்களை அகத்தே வைத்து மணமேற்றப்பட்ட தூய மடி விரிக்கப்பட்ட படுக்கையைத் தாங்கிய கட்டில் இது” என்று அதன் சிறப்பை நம்கண்முன் நிறுத்துகின்ற காட்சி படித்தின்புறத்தக்கது.
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை (நெடுநல்வாடை : 131-135)
அன்னத்தூவியால் அமைந்த அணையை ஆசிரியர் இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் காட்டுகின்றார்.
துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
இணையணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது
(அந்திமாலைச் சிறப்புசெய் காதை: 66-67)
எத்துணை இரசனையோடு உலகியல் இன்பங்களைத் துய்த்திருக்கின்றார்கள் அன்றைய தமிழர்கள் என்பதற்குச் சான்றுகள் இவை! அந்நாளைய மக்களைப்போல் நாமும் வாழ்வின் சுவையறிந்து அதனை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கணினியோடு கழிக்கும் நேரத்தைச் சிறிது குறைத்துக்கொண்டு கானுயிர்களோடு களிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். இயற்கையோடு கை கோப்போம்! இன்பத்தை வாழ்வில் சேர்ப்போம்!
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on May 14, 2020 #Sheikh Abdul Khadar #Megala Ramamoorthy