இதழ்: பத்தொன்பது , ஏப்ரல் 2020
ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா
தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! கடந்த சில வாரங்களாக நம் பள்ளியின் வகுப்புகள் அனைத்தும் மெய்நிகர் வகுப்புகளாக (Virtual Classroom) செயல்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில் , இம்முயற்சியை செயல்படுத்தியதில் தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் பெருமை கொள்கிறது.
கடந்த சில வாரங்களில் விடுபட்ட அனைத்து வீட்டுப் பாடங்களையும் குழந்தைகளை ஊக்கப்படுத்தி எழுதச் செய்து வலைத்தளத்தில் ( Microsoft Teams ) பதிவேற்றம் செய்யுங்கள். இது தொடர்பான ஐயப்பாடுகளை, தங்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இக்கல்வியாண்டிற்கான இறுதி பருவத்தில் உள்ளோம்; திட்டமிட்டபடி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அனைத்து பாடங்களும் முடிவடைந்து தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். மேலும் தகவல்கள் விரைவில்….
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
இம்மாத (ஏப்ரல் -2020 ) பள்ளி கால அட்டவணை
04/03/2020 — 04/05/2020 | உண்டு |
04/10/2020 — 04/12/2020 | இல்லை |
04/17/2020 — 04/19/2020 | உண்டு |
04/24/2020 — 04/26/2020 | உண்டு |
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
சென்ற மாத இதழில், “மாங்கனி திருவிழா”வை எங்களுக்கு அறிமுகப்படுத்திய குழந்தை நிவேதிதா இராமன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும், பணிக்கு செல்லும் பெற்றோர்களை பிரிந்திருப்பது குழந்தையின் தியாகமே என்று குழந்தையின் கோணத்தில் இருந்து ஆராய்ந்து, மிக அழகாக ஒரு சிறிய பாடலை நமக்கு நல்கிய திருமதி.சண்முகப்ரியா அவர்களுக்கு ஆசிரியர் குழு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
“கேள்வி பதில்” பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை newsletter@tampabaytamilacademy.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
TBTA பள்ளி அங்கீகாரம்
நமது பள்ளிக்கான அங்கீகாரச் சான்றிதழை (Accreditation Certificate) “Cognia” முறைப்படி வழங்கியுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இச்ச்சான்றிதழை பெற உதவிய அனைத்து பங்களிப்பாளர்களுக்கு, தமிழ் பள்ளி தம் நன்றியை உரித்தாக்குகின்றது. நம் அனைவரையும் ஒருங்கிணைத்து, தலைமை பொறுப்பை வகித்து, மிக சிறப்பாக வழிநடத்திய திரு.தனசேகர் சந்திரன் அவர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாணவர் பகுதி
ஒரு புதிய முயற்சியாக நம் குழந்தைகளை ஊக்குவிக்கவும் , அவர்களின் எழுத்துத்திறனை வளர்க்கவும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இப்பகுதி அறிமுகம் செய்யப்பட்டது. பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நெருக்கமான விஷயங்களை ஒரு சில வரிகளில் எழுத சொல்லி ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும். |
கன்னியாகுமரிக்கு ஓர் பயணம்
|
![]() |
ஆசிரியர் அறிமுகம்
திருமதி கவிதா ராஜ்குமார்
பள்ளிப் பருவத்தில் தமிழ்வழி பயின்ற இவர் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று உடையவராக திகழ்கிறார்.தமிழ் சரித்திர நாவல்கள் மற்றும் கதைகள் படிப்பது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று.தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களின் வரலாற்றைப் பற்றியும் அறிவதில் இவருக்கு ஆர்வம் மிகுதி. தனது இல்லத்தில் கட்டாய தமிழ் பேச்சை கடைப்பிடிக்கும் இவர் நம் தாய்மொழி வெறும் பேச்சு வழக்கிற்கு மட்டும் பயன்படுத்தாமல் எழுத்து வழக்கிற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நோக்கத்தில் தன் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து தமிழை கற்றுக் கொடுப்பதாக கூறுகிறார். தன் பிள்ளைகளுக்கு தமிழில் பேசவும் எழுதவும் கற்றுத் தருவது போல எல்லா பிள்ளைகளுக்கும் கற்றுத்தர வேண்டும் என்கிற நோக்கில் தன்னார்வத்தோடு TBTA வில் இணைந்ததாக பெருமையுடன் கூறுகிறார். |
![]() சொந்த ஊர் : நாமக்கல் , தமிழ்நாடு |
திருமதி கைலா அஜீத்
வேறு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருந்த போதிலும், தமிழ் வழிக்கல்வியில் கற்றதினாலேயே , நம் மொழி மீதான நாட்டம் இருந்தது. தன கணவரின் தமிழாற்றலால், நம் மொழி மீதான ஈடுபாடு மேலும் வளர்ந்தது. தமிழ் சமூகத்திற்கு தன்னார்வலர்கள் செய்யும் பணியால் உந்தப்பட்டு, தாமும் தன்னால் இயன்ற உதவியை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ் பள்ளியில் இணைத்துக் கொண்டார். குழந்தைகளோடு உரையாடுவதும் , ஆசிரிய பணியும் மிகுந்த உற்சாகத்தை தருவதாக கருதுகிறார். |
![]() சொந்த ஊர் : நாகர்கோவில், தமிழ்நாடு |
இவர்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!
நியுட்ரானின் தந்தை ஜேம்ஸ் சாட்விக்
|
![]() |
பல அறிவியல் வல்லுநர்கள் “அணு”வைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த சமயம், ஜேம்ஸ் சாட்விக்தான் 1932இல் நியுட்ரான்களாலான அணுக்களையும் அது தொடர்பான நியுக்ளியர் வெடிப்பான்களைய்ம் (Nuclear Bomb) முதன் முதலாக கண்டுபிடித்தார்.
ஜேம்ஸ் இங்கிலாந்திலுள்ள செஷைர் நகரத்தில் ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்தார். அவருடைய படிப்பிற்கான உதவித்தொகை கிடைக்கப்பெற்றதால் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்தில் நாண்கு மைல்கள் நடந்து சென்று படிக்க முடிந்தது. தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாவதாக தேறியதோடு மட்டுமல்லாமல் அவருடைய பேராசிரியர் ரூதர்ஃபோர்டுடன் (Ernest B. Rutherford) இணைந்து தன் முதல் ஆராய்ச்சிக் கட்டுரையைப் பதிப்பித்தார். தன் முதுகலைப் படிப்பை 1912இல் முடித்து உதவித் தொகை கிடைக்கப்பெற்றதன் மூலம் “பீட்டா கதிரியக்கம்” (Beta Radiation) என்ற தலைப்பில் பெர்லினில் இருந்த முனைவர் ஹன்ஸ் கைகருடன் (Hans Geiger) சேர்ந்து தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
முதல் உலகப்போர் தொடரப்பட்ட நேரத்தில் கைகர், சாட்விக்கை த்ன் நாட்டிற்கு (இங்கிலாந்திற்கு) திரும்பிப் போக கட்டளையிட்டார். தன் நாட்டிற்கு திரும்பிச் செல்ல எத்தணித்த தருணம் சாட்விக்கை கைது செய்து பத்து நாட்கள் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. பின்னர் அவர் பணியாற்றிய ஆராய்ச்சி நிலையத்தின் வேண்டுதலின் பேரில் சாட்விக்கை விடுதலை செய்தனர். அந்நிகழ்வு சாட்விக்கிற்கு மன வருத்தத்தை அளித்ததோடு அவருக்கு எதிராகவும் செயல்பட்டது.
உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த சமயம் அனைத்து பிரிட்டிஷ் குடிமக்களையும், சாட்விக்கையும் சேர்த்து ருஹல்பென்னில் (Ruhleben) உள்ள சிறையில் அடைத்தனர். அதாவது 6 கைதிகளை ஒவ்வொரு சிறை அறையிலும் அடைத்து வைத்திருந்தனர். அனைவரும் தரையிலேயே உறங்கினர். அவர்களுக்கு சாப்பாடுப் பற்றாக்குறையாகவே இருந்தது. சாட்விக் ஒரேயொரு துணியினால் தன்னை மூடிக்கொண்டு கடுமையான் ஜெர்மன் குளிரில் வதைப்பட்டார். அவரே கீழ்க்கண்ட வார்த்தைகளை ஒரு நேர்முகத்தில் குறிப்பிட்டிருந்தார். “என்னுடைய வலியின் நினைவு காலை 11 மணியளவில் என் காலில் படும் சூரிய வெப்பத்தின் மூலம் உணரமுடிந்தது”.
சிறையில் சாட்விக்கும் மற்ற அறிவியல் அற்ஞர்களும் சிறப்பு அனுமதியின் பேரில் ஓர் ஆராய்ச்சிக் கூடத்தை யாரும் பயன்படுத்தாத சிறையின் ஒரு பகுதியைப் பெற்றனர். தனக்குக் கிடைத்த பொருட்களை சோதனைக்கருவிகளைச் செய்தனர். சாட்விக் துத்தநாகத்தாலான (Copper) மின்காந்தத்தை கண்டுபிடித்தார். அது தவிற நாம் பல்துலக்கும் toothpastஇல் தோரியம் என்ற கதிர்வீச்சுப் பொருளையும், மற்றும் கார்பன் மோனாக்ஸைடுடன் (CO) குளோரின் வேதிவிணைப் புரிதலையும் கண்டுபிடித்தார்.
முதல் உலகப்போர் முடிந்தவுடன் சாட்விக் தன் பெற்றோர்கள் வசித்து வந்த மான்செஸ்டர் நகருக்குத் திரும்பினார். அவருடைய உடல்நிலை மிக மோசமாகியது. அவரால் கொழுப்புப் பொருட்களை செரிக்க இயலவில்லை. தன்னுடைய நிலையை நினைத்து மனதால் மிகுந்த வேதனைப்பட்டார்.
இந்தத் தருணத்தில் அவருடைய நிலைமையைப் பார்த்து ரூத்ர்ஃபோர்டு, சாட்விக்கிற்கு பகுதிநேர ஆசிரியர்ப் பணிக்கு உதவி செய்தார். கேம்பிரிட்ஜின் கேவண்டிஷ் (Canvendish Laboratory) ஆய்வுக் கூடத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த ஜே. ஜே. தாம்ப்ஸன் பணிமூப்பு அடைந்தமையால் ரூதர்ஃபோர்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் சாட்விக்கும் அவரைத் தொடர்ந்தார். சாட்விக் “செயற்கை நியுக்ளியர் பங்கீடல்” என்ற தலைப்பில் தன் முனைவர்ப் பட்டத்தை (PhD) 1921இல் பெற்றார்.
அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூதர்ஃபோர்டு ப்ரோட்டான் (Proton) என்கிற அணுக்கருவில் குடிகொண்டிருக்கும் நேர்மின் பொருளை (positive charge) கண்டுப்பிடித்தார். ஆனால் அவரின் அடுத்தடுத்த சோதனைகளில் அணு எண், அணு எடையை விடக் குறைவாகவே இருந்தது. அதற்குக் காரணம் எதிர்மிண் எலக்ட்ரான்களாக (negative charge electrons) இருக்க முடியாது என்றும் ஏதோ ஒரு எடையுள்ள ஆனால் மின்சக்தி இல்லாத (particle with mass and no charge) பொருள் அணுக்கருவில் இருக்கவேண்டும் என்றும் ரூத்ர்ஃபோர்டு தன்னுடைய ஆராய்ச்சித் தத்துவத்தை எடுத்துரைத்தார். அதே வேளையில் 1925இல் இயல்பியலாளர்களால் ”ஸீமன் நிகழ்வு” (Zeeman Effect”) என்ற நியுக்ளியஸின் சுழற்ச்சியை அதாவது காந்த சக்தியின் காரணமாக ஏற்படும் அணு அடுக்குகளின் திரிபு (Atomic level shift in magnetic field) கண்டுப்பிடித்தனர். ஆனால் இவ்வாராய்ச்சியும் மேற்கூரிய அந்தப் பொருளைப் பற்றி தெளிவாக வரையறைக்க முடியவில்லை. அணு என்பது ப்ரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் கூட்டமைப்பாகவே கருதப்பட்டது.
சாட்விக், தான் ஜெர்மனியில் செய்த ஒரு ஆராய்ச்சியை திரும்ப செய்யலானார். அவ்வாராய்ச்சி பொலொனியம் (Polonium) என்ற வேதிப்பொருள் பெரிலியம் (Berilium) தகட்டின் மேல் வேகமாக வந்து மோதும்போது ஒருவிதமான கதிர்வீச்சு (radiation) அத்தட்டிலிருந்து வெளிவருதலே ஒரு மின்சக்தியுள்ள பொருளுக்குச் (charge particle) சமமாகும். இதனால் உந்தப்பட்ட சாட்விக், தன்னுடைய உழைப்பு, சக்தி, அறிவு அனைத்தையும் ஒருமுகமாகத் திரட்டி பகலிரவு பாராமல் தன் புதிய ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
செயலைச் செய், பலன் தன்னால் அமையும் என்ற பொண் மொழிக்கிணங்க சாட்விக்கின் உழைப்பு ஒரு வாரத்திலேயே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது என்றால் அவரின் விடாமுயற்சியை என்னே சொல்வது!!
1932இல் சாட்விக் “இயற்கை” (Nature) என்ற உலக மகத்துவம் வாய்ந்த அறிவியல் ஆராய்ச்சிப் பத்திரிக்கைக்கு தன்னுடைய செயல்முறை ஆராய்ச்சியையும் அதனால் அணுக்கருவில் குடிக்கொண்டிருக்கும் மற்ற ஒரு பொருளான “நியுட்ரான்கள்” பற்றியும் பகிர்ந்துக் கொண்டார். அவரின் இரண்டாவது ஆராய்ச்சிப் பதிப்பாக அவ்வாண்டின் மே மாதத்தில் நியுட்ரானின் இயல்பையும் மற்றும் அரிய பல தகவல்களையும் அளித்தார்.
இந்த இரு பதிப்புக்களுமே அறிவியலாளர்களான நீல்ஸ் போர் (Niels Bohr) மற்றும் வெர்னர் ஹைன்ஸ்பர்கினால் (Werner Heinsburg) மிக்க வரவேற்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சாட்விக் மாரிஸ் கோல்ட்ஹேபர் (Maurice Goldhaber) என்ற விஞ்ஞானியுடன் சேர்ந்து நியுட்ரானின் எடையையும், அது அணுக்கருவில் இருக்கும் ஒரு தனிப் பொருளென்றும், ப்ரோட்டான் — எலக்ட்ரான் சகோதரத்துவமற்றது என்றும் நிருபித்தார்.
இங்கிலாந்தில் பொருளாதார பற்றாக்குறை இருந்த சமயம் ஆராய்ச்சிகள் அனைத்தும் பணப்புழக்கமில்லாமையால் முடக்கப்பட்டன. சாட்விக் செய்துவந்த கேவண்டிஷ் ஆராய்ச்சிக்கூடம் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
அவவமயம் சாட்விக் சைக்ளோட்ரான் (Cyclotron) எனும் கருவியை அமைக்கவும் அதனால் அமெரிக்க வல்லரசுக்கு இணையாக நாம் அறிவியலாராய்ச்சியில் முன்னனி வகிக்கலாம் எனவும் தனது பேராவலை ரூதர்ஃபோர்டிடம் எடுத்தியம்பினார். ரூதர்ஃபோர்டு பழைமையைப் போற்றுபவராகவும், மிகுந்த எடையுள்ள மற்றும் விலையுயர்ந்த கருவிகளின் உதவியால் அறிவியல் செய்யத் தேவையில்லையென்றும் சாட்விக்கின் ஆலோசனையை ஏற்காததோடு பண உதவி செய்யவும் முன்வரவில்லை. அதனால் வருத்தமடைந்த சாட்விக் 1932இல் மிகப்பிரபலமான கேவண்டிஷ் ஆராய்ச்சிக் கூடத்தை விடுத்து அதற்கு சிறிதளவும் சமமில்லாத (தரம் குறைந்த) லிவர்பூல்ப் பல்கலைக்கழகத்தில் (University of Liverpool) சிதைந்துபோன ஆராய்ச்சிக் கூடத்தை வழிநடத்தச் சென்றார். அதே ஆண்டில் அவர் நோபல் பரிசினை வென்றார் என்றால் நம்மால் நம்பமுடிகிறதா!! இதிலிருந்து இருக்கும் இடம் முக்கியமில்லை, உடலுழைப்பும், அறிவார்ந்த சிந்தனையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது புலனாகிறது. அதுமட்டுமல்லாமல் அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுத்தொகையிலிருந்து சமபாதியை தான் கணவு கண்டிருந்த சைக்ளோட்ரான் எனும் கருவியை வாங்கவும், மற்றவர்கள் கொடுத்த அன்பளிப்பைக் கொண்டு சைக்ளோட்ரானின் உப கருவிகள் (உதிரிப் பொருட்கள்) வாங்கவும் செலவழித்தார். அந்த சைக்ளோட்ரான் 1939இல் பயன்பாட்டிற்கு வந்தது.
சாட்விக்கின் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக் கூடத்தில் யுரேனியம் (Uranium) எனும் கனிமத்தின் எடையை விடவும் அதிக எடையுள்ள கனிமங்களை உருவாக்க காரணமாயிருந்தது என்றால் அது மிகையில்லை. அதாவது மெதுவாக நகரும் நியுட்ரான்கள் (slow neutrons) யுரேனியத்தில் மோதுவதனாலும், பீட்டா குறைதலாலும் (Beta Decay) மேற்கூரிய நிகழ்வு சாத்தியமாகிறது. இதுவே நியுக்ளியர் வெடிப்பான் (Nuclear Bomb) உருவாக மையமாக இருந்தது. மேலும் நியுட்ரான்கள் அணுக்கருவின் நியுக்ளியஸினை துளைக்கப் பயன்படுத்தப்பட்டன.
இரண்டாம் உலகப்போர் துவங்கிய நேரம் சாட்விக் தன் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தார். இங்கிலாந்திற்கு திரும்பியவுடன் அவருடைய அறிவியல் தத்துவத்தையும், அளப்பரியச் சிந்தனைகளையும் கொண்டு யுரேனியம்-235 (U-235) என்ற கனிமத்தின் குறுக்களவை (cross section) அளந்தார். உலகப்போர் முடிந்தவுடன் தன்னுடைய பழைய வாழ்க்கையை 1946இல் இங்கிலாந்தில் தொடர்ந்தார்.
1948 முதல் 1958 வரை சாட்விக் Gonville and Caius கல்லூரியில் தான் பணிமூப்படையும் வரை மாஸ்டராக பணிபுரிந்தார். சாட்விக் தன் நித்திரையிலேயே 1974இல் மேலோகப் பதவியை அடைந்தார். சாதாரண மனிதனின் பெருமதிப்பு வாய்ந்த வாழ்க்கையை என்றென்றும் நாம் நினைவுக் கொள்வோமாக!!
சிறியேனின் புதுக்கவிதை சாட்விக் ஏற்ற்க்கொள்வாராக!! ஆமென்!!
“சாடு நீ
நியுட்ரானின் காடு (God)
உன்னை வணங்குகிறோம்
அன்போடு”
ஆதாரங்கள்:
- American Physical Society News, Vol 23, No. 2, February 2014.
- Chadwick, J. (1932) “Possible Existence of Neutron”, Nature 129 (3252) 312.
- Chadwick, J. (1932) “The Existence of a Neutron” Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 136 (830) 692.
- AIP Oral History Transcript: http://www.aip.org/history/ohilist/3974-1.html.
அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
இக்கடினமான நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் support ஆக இருக்கணும் | இக்கடினமான தருணத்தில் நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் |
வீட்டிலேயே இருப்பது ஒரே boring | வீட்டிலேயே இருப்பது ஒரே சலிப்பு |
நான் என் வீட்டில் Kitchenல help பண்ணினேன் | நான் என் வீட்டு சமையலறையில் உதவி செய்தேன் |
குழந்தைகளோடு விளையாடியது Excitingah இருந்துச்சு | குழந்தைகளோடு விளையாடியது உற்சாகமாக இருந்தது |
எல்லா roomaயும் clean பண்ணினேன் | எல்லா அறைகளையும் சுத்தம் செய்தேன் |
இலக்கிய பகுதி
இனியவை நாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று இனியவை நாற்பது. இந்நூல் இனிது நாற்பது, இனியது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களையும் கொண்டது. இன்பம் பயப்பவை இவை என்று உடன்பாட்டால் கூறும் இந்நூலை இயற்றியவர் மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.
இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் இவர் தொகுத்து கூறியுள்ளதால் இவரது நூல் இனியவை நாற்பது என வழங்கப்பெற்றது. இனியவை நாற்பதில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கு தான் உள்ளன. மற்றவையெல்லாம் மூன்று இனிய பொருள்களையே சுட்டிக்காட்டுகின்றன.
இன்னா நாற்பதில் உள்ள கருத்துக்கள் பலவற்றை எதிர்மறை கூற்றிலிருந்து உடன்பாடான போக்கில் மாற்றியமைத்து இவை இனியவை என்று இந்நூல் உரைக்கின்றது.
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா என்ற இன்னாநாற்பது பாடலின் கருத்து. ஊன் உணவான இறைச்சியை உண்டு உடலை பெருக்காது இருப்பதே இனிது என்று கூறப்படுகிறது. இவ்வாறு பல இனிய கருத்துக்களை இனியவை நாற்பதில் காணமுடிகிறது.
அவற்றுள் சில,
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது
குழந்தை நோயின்றி வாழ்தல் இனிது. அவைக்கு அஞ்சாது பேசுபவனின் கல்வி இனிது. மயக்கமற்ற பெருமை மிக்கவரிடம் சேரும் செல்வம் அவரை விட்டு நீங்காது நிலைத்து இருப்பின் இனியது.
மேலும் சில சான்றுகளாக,
சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர் தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
அதாவது, வஞ்சகரைச் சேராமல் விலகி இருப்பது இனியது. அறிவுடையாரின் வாய்ச்சொற்களை பின்பற்றி ஒழுகுதல் இனியது. நிலையான உலகில் வாழும் உயிர்களெல்லாம் உரிமைப்பட வாழ்தல் இனியது என்றும் கூறப்படுகிறது.
இவைமட்டும் அல்லாது பல்வேறு அறச்சிந்தனையுள்ள கருத்துகளும் இனியவை நாற்பதில் இடம்பெற்றுள்ளன.
'பிறன்மனை பின்னோக்காப் பீடினிது'
'பிச்சைபுக்காயினும் கற்றல் மிக இனிதே'
'கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே'
'பிச்சைபுக்கு உண்பான் பிளிராமை முன் இனிதே'
'நட்டார் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே'
முதலான பல முக்கிய அறங்களை இந்நூலில் காணலாம். இவ்வாறு உலகின் பல நல்ல இனிமையானவைகளை எடுத்துக்கூறுவதன் மூலம் மனிதர்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.
பசிப்பிணி மருத்துவம்!
|
![]() |
பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
என்று பாட்டெழுதி வறுமையின் கொடுமையை உருக்கமாய் உலகுக்கு உணர்த்தினார் கவியரசு கண்ணதாசன். வறுமை இளமையில் மட்டுமா கொடுமை? இல்லை… முதுமையிலும் அது கொடுமைதான். ஏன் எந்தப் பருவத்தில் வறுமை வந்தாலும் அது கொடுமைதான்…அவ்வாழ்வே வெறுமைதான்!
பசிவரப் பத்தும் பறந்திடும் என்கிறாரே கவிஞர்! அந்தப் பத்து எவை?
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவமுயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம் (நல்வழி – 26)
மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, தானம், தவம், உயர்வு, தொழில்முயற்சி, தேன்மொழி பேசும் பெண்கள்மீது வரும் காதல் ஆகியவையே அப்பத்து. இவ்விவரத்தை நமக்குத் தருவது ஔவையின் ’நல்வழி.’ வறுமை வந்தால் இப்பத்துக்குமே வந்திடும் ஆபத்து!
காரிகையர் மீது வரும் காதலைக் கூடப் பொசுக்கிவிடக்கூடியது பற்றியெரியும் பசித்தீ என்பது பசியின் வீரியத்தைப் பாருக்கு உணர்த்துகின்றது.
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி எனும் பாவி
என்று பசியின் கொடுமையை உணர்த்தி, அதனைப் பாவி என்று ஏசுகின்றது மணிமேகலைக் காப்பியம்.
இல்லாமை எனும் பாவி ஒருவனைப் பற்றினால் அவனுக்கு மறுமையின்பமும் இல்லை; இம்மை இன்பமும் இல்லை என்று சாடுகின்றது வள்ளுவமும்!
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (நல்குரவு – 1042)
பசியென்னும் பிணி வந்துவிட்டால் அதற்கு மருத்துவம் தேவையல்லவா? பசிப்பிணிக்கு மருத்துவம் அப்பிணியால் பீடிக்கப்பட்டு வாடுவோர்க்கும் வருந்துவோர்க்கும் வயிறார உணவளிப்பதே ஆகும்.
மாதவியின் அருமை மகள் மணிமேகலை தன் கையிலிருந்த, வற்றாது உணவளிக்கும், அமுதசுரபி எனும் பாத்திரத்தைக் கொண்டு அம்மருத்துவத் தொண்டையே ஆற்றினாள்; புகார்நகரச் சிறைக்கோட்டத்தையே அறக்கோட்டமாய் மாற்றினாள் என்பதனை மணிமேகலைக் காப்பியத்தின் வாயிலாக அறிகின்றோம்.
வந்தோர்க்கெல்லாம் வரையாது உணவளித்த வள்ளல் ஒருவனைப் ’பசிப்பிணி மருத்துவன்’ என்று புகழ்கின்றார் புறநானூற்றுப் புலவரொருவர். அவர் சாமானியர் அல்லர்; சோழ நாட்டையே ஆண்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனும் அரசப்புலவர் அவர்!
யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானுங் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்
மற்றும் மற்றும் வினவுதுந் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே.
(புறம் – 173 – குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்)
தன்னையும் ஒரு பாணனாய் உருவகித்துக் கிள்ளிவளவன் பாடியுள்ள மேற்கண்ட பாடலின் பொருளிது!
”என் வாழ்நாளையும் பெற்று நீ வாழ்க” என்று சிறுகுடி கிழான் பண்ணனை வாழ்த்தியபடிச் செல்கின்ற பாணர்களே! இதோ என்னருகில் நிற்கும் இந்தப் பாணனுடைய சுற்றத்தினரின் வறுமையை நோக்குங்கள்! பழுமரத்தில் பறவைகள் ஆரவாரிப்பதுபோல் ஊணொலி அரவம் எங்கும் கேட்கின்றது. தப்பாது மழைபெய்யும் காலம்நோக்கித் தம் முட்டைகளைச் சுமந்தவாறு மேட்டுநிலத்தை நோக்கி நகரும் சிற்றெறும்புகளின் வரிசை ஒழுங்குபோலச் சோறுடைய கையராய்த் தம் சுற்றத்தோடும் சிறுபிள்ளைகளோடும் செல்வோரைக் காண்கின்றபோது எம் பசிவருத்தத்தால் மீண்டும் மீண்டும் உம்மைக் கேட்கிறோம்… “பசிப்பிணி மருத்துவனாகிய சிறுகுடி கிழான் பண்ணனுடைய இல்லம் பக்கமா? தூரமா? என்று சொல்லுங்கள் ஐயா!”
அரசனால் பசிப்பிணி மருத்துவனாய்ப் பாராட்டப்பெற்றுத் தனக்குரிய வாழ்நாளும் பெற்று வாழ்க என்று வாழ்த்தப்பெற்றிருக்கிறான் சிறுகுடி எனும் சோழநாட்டுச் சிற்றூரில் வசித்துவந்த பண்ணன். அரசனையே, அவனினும் எளிய, நிலக்கிழான் ஒருவனின் கொடைத்தன்மை பெரிதும் கவர்ந்து, அவன்பால் அன்புகொள்ள வைக்கின்றதென்றால் அவனுடைய வண்மை (வள்ளன்மை) உண்மையிலேயே போற்றத்தக்கதுதானே?
எக்காலத்திலும் வளமையுடையோர் இருப்பதுபோலவே வறுமையுடையோரும் இருக்கவே செய்கின்றனர். எல்லாரும் சமநிலை எய்தும் பொதுவுடைமை ஏட்டளவிலும் பாட்டளவிலுமே இன்றுவரை சாத்தியமாகியிருக்கின்றது; நாட்டளவில் இன்னும் சாத்தியமாகவில்லை.
எனவே, தம் செய்வினைப் பயனால் வளமையும் வசதியும் வாய்க்கப்பெற்றோர், வறுமையாளரின் இன்மையைப் போக்குதற்கும் அவர் வாழ்வின் புன்மையை நீக்குதற்கும் தம் செல்வத்தின் சிறுபகுதியையேனும் பயன்படுத்துதல் வேண்டும். ’செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது சான்றோர் நன்மொழியன்றோ!
கேள்வி பதில் பகுதி
|
![]() |
கேள்வி:
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ‘லங்கா’ உண்மையில் எங்குள்ளது?
(சென்ற மாத இதழின் தொடர்ச்சி)
பதில் (Part 2):
இராமன் என்னும் இளவரசனின் கதையை முதன் முதலில் உலகுக்கு அறிவித்தவர் யார்? நமக்கு தெரிந்தவரை அது வால்மீகி என்னும் கவிஞர். ஆனால் அதை ‘எழுத்தால்’ எழுதினாரா என்பது அடுத்த கேள்வி. அக்காலத்தில், சுமார் கிமு 500, ‘எழுத்து’ (script) இல்லை என்பதால் அது வாய்வழி கவிதையாக, காவியமாக, உருவெடுத்து வளர்ந்தது. அவ்வாறு oral transmission ஆக உருவெடுத்த ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஒரே வடிவில், ஒரே விதமான கதையாக எந்தவித மாறுதல்களும் இல்லாத தன்மையுடன் இருக்க இயலுமா? ‘இயலாது’ என்பது அறிஞர்கள் கூற்று. பல நூற்றாண்டுகளாக, பலர் வாயிலாக, 25000 ஸ்லோகங்களாக பெருக்கெடுத்து வளர்ந்ததால், அது பலரின் கற்பனைகள் (imaginations), இடைச்சொருகல்கள் (interpolations), நம்ப இயலாத செயல்கள் (incrediable acts), கூடுதல் வர்ணணைகள் (exaggerated descriptions) போன்ற பலவற்றுடன் , பல அடுக்குகள் ( layers upon layers of accretions) கொண்டு வளர்ந்துள்ளது. இவ்வாறு வளர்ந்த இந்த காவியம் இந்தியா முழுவதும் பல பிரதிகளில் (written manuscripts), பலவிடங்களில் கண்டெடுக்கப்பட்டது. 2000த்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் இருந்தன. 1951 லிருந்து 197 5 வரை THE ORIENTAL INSTITUE, BARODAவை சேர்ந்த தொகுப்பாளர் களும் அறிஞர்களும் 2000த்திற்கும் மேற்பட்ட இந்த manuscriptsகளை அலசி CRITICAL EDITION OF THE VALMIKI RAMAYANA என்பதை 6 தொகுதிகளில் (volumes) பதிப்பித்துள்ளார்கள்.
எல்லாப் பிரதிகளையும் வைத்து critical edition கொண்டு வந்தது ஏன்?
மூலக்கதை என்ன என்பதும், முக்கியமான பாத்திரங்கள் யார் என்பதும், இவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கு, எந்த இடத்தில் நடந்தனவென்றும் ஆராய critical edition தொகுக்கப்பட்டது. அவ்வாறு தொகுக்கும் பொழுது, அது காலப்போக்கில் பல அடுக்குகள் கொண்டதும், பல கால முரண்பாடுகள் (anachronisms) கொண்டதும், பலரால் எழுதி மூல காவியத்துடன் சேர்க்கப்பட்ட பகுதிகள் (interpolations) உள்ளடங்கியது என்பதும் பெறப்பட்டது. உதாரணமாக, பாலகாண்டமும், உத்திர காண்டமும் வால்மீகியால் இயற்றப்படவில்லை என்பதும் உறுதியாக்கப்பட்டது. மேலும் மூலக்கதையை இயற்றிய வால்மீகிக்கு இந்திய பூகோலத்தில் (Indian Geography) அவ்வளவு அறிமுகம் இல்லை என்றும் தெரிந்தது. வால்மீகிக்கு விந்திய மலைக்கு தெற்கே என்ன உள்ளது என்றும், தென்னிந்திய நாட்டுப் பகுதியைக் குறித்து எதுவும் தெரியவில்லை என்பதும் தெரிந்தது.
இராமாயண ‘லங்கா’ தற்போது தனி நாடாக விளங்கும் ‘ஸ்ரீலங்காவுடன்’ identify ஆனது எவ்வாறு?
சீதை இராவணனால் கவரப்பட்ட இடமான தண்டகாரண்யாவை முதன்முதலில் தவறாக identify செய்ததனால், படிப்படியாக ‘லங்காவை’ ஸ்ரீலங்காவுடன் identify செய்ய ஆரம்பித்தார்கள். The wrong identification of the location of Dandakaranya has led to a lot of wrong inferences such as the following. தற்போதைய Nasik என்னும் நகருக்கு அருகே பஞ்சவடியில் சீதை இராவணனால் கவரப்பட்டாள் என்றும், இராமனும் இலக்குவனனும் அவளைத் தேடி அலைந்தபோது வானரங்களைக் கண்டு, அவர்களுடன் சேர்ந்து,தென்னிந்தியாவை காலால் கடந்து, இராமேஸ்வரம் அருகில் இந்திய சமுத்திரத்தில் பாலம் அமைத்து, ஸ்ரீலங்காவை அடைந்து முற்றுகையிட்டு,இராவணனையும் அவன் குடும்பத்தாரையும், படைகளையும் கொன்று சீதையை மீட்டனர் என்பவை தான் அந்த அனுமானங்கள் (inferences).
ஆனால் இராமாயணத்தை அதன் மூல தொகுப்பில் நன்கு படித்து ஆராய்ந்தவர்கள் மேற்கூறிய அனுமானங்கள் தவறானவை என்று உறுதியிட்டு கூறுகிறார்கள். எதை வைத்து இந்த அனுமானங்கள் தவறு என்று கூறுகிறார்கள்?
இராமாயண மூலக்கதை ஒன்றை மிகத் தெளிவாக கூறுகிறது. அது என்னவென்றால், கோதாவரி என்ற ஆறும் (இது நாம் அறிந்த கோதாவரி அல்ல குப்த கோதாவரி என்ற இந்த இராமாயணக்காலத்து ஆறு மிகச்சிறிய ஆறு ; 11 மைல் நீட்டளவில் இருந்ததாக பூகோல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்) தண்டகாரண்யமும் சித்திரகூட மலையின் மிக அருகே இருந்ததாக கூறுகிறது. இராமன், இலக்குவன், சீதை ஆகியோர் அயோத்தியில் இருந்து புறப்பட்டு கங்கையை கடந்து, பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார்கள். அவருடைய ஆசிரமம் கங்கை-யமுனையின் சங்கமத்தில் இருந்தது. இது இப்பொழுது உள்ள பிரயாகம் அல்ல. அக்காலத்தில் இந்த சங்கமம் அயோத்தியை சூழ்ந்த அடர்ந்த காட்டில் இருந்தது. பரத்வாஜ முனிவர் அவர்களை சித்திரக்கூட மலையில் சென்று வாழுமாறு கூறுகிறார். அம்மலை அவருடைய ஆசிரமத்தில் இருந்து ஒன்றரை நாள் பயணத்தில் உள்ளது என்றும் கூறுகிறார். இதிலிருந்து சித்திரகூட மலையை எங்கிருந்தது என்று ஒருவாறு அறியக்கூடும். கட்டாயமாக மகாராஷ்டிரத்தில் அல்ல; மத்திய பிரதேசத்தில் உள்ளது. சித்திரகூட மலையின் அருகே உள்ள தண்டகாரண்யத்தில் தான் பஞ்சவடியும், ரிஷ்யமுக மலையும், பம்பை ஏரியும், கிஷ்கிந்தாவும், லங்காவும் இருந்தன என்று கூறுகிறது மூலக்கதை. இந்த இடங்கள் எல்லாம் விந்திய மலைத் தொடருக்கும், விந்திய மலையைச் சார்ந்த காடுகளுக்கும் வடக்கே இருந்ததாக பலமுறை குறிப்பிடுகிறது மூலக்கதை. ஒருமுறை கூட, விந்திய மலைக்கு தெற்கே ஓடும் நர்மதா நதியைக் குறித்து குறிப்பிடவில்லை. (தென்னிந்தியாவை நோக்கி செல்பவர்கள் நர்மதை நதியை கடக்காமல் செல்ல இயலாது). பல நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த இடைச்சொருகல்கள் தான் ஓரிரண்டு முறை இந்த நதியை குறிப்பிடுகின்றன. சீதையை தேடி நான்கு திசைகளுக்கும் செல்லவிருக்கும் படைகளை நோக்கி சுக்ரீவன் தரும் திசை குறிப்புகளையும் , பெயர்களையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்தனர் சில அறிஞர்களும் வல்லுனர்களும். இவர்கள் பரமசிவ ஐயர், ஹீராலால், Dr.ராமதாஸ், சர்தார் கைப் போன்றோர் ஆவர். ஆராய்ந்து அவர்கள் உறுதியுடன் கூறியது மேற்கூறிய இடங்கள் அனைத்தும், இராவணனின் லங்கா உள்பட சித்திரக்கூட மலைக்கு தெற்கேயும்,நர்மதா நதிக்கு வடக்கேயும் உள்ளன என்பதாம். இந்த பிரதேசம் இப்பொழுது Chota Nagpur Plateau என்று அழைக்கப்படுகிறது. இது ஜார்க்கண்ட மாநிலத்தையும், ஒடிசா, மேற்கு வங்காளம் சட்டீஸ்கர் மாநிலங்களின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது.
Survey of India தயாரித்த Topographic mapsகளை பரிசோதித்து ஆராய்ந்த திரு பரமசிவ ஐயர் “லங்காவை” Jabalpurக்கு 15 அல்லது 16 கல் தொலைவுக்கு வடக்கே உள்ள திரிகூடமலை (Triput) மற்றும் சுவேலா (Suvela) மலைகளில் அமைந்த நகரமாக அடையாளம் காட்டுகிறார். இராமாயணக்கதையில் எதிரெதிரே இருந்த இம்மலைகளில் தான் இராமனும் ,வானரப் படைகளும் அணிவகுத்து இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது திரிகூட மலையின் பெயர் ‘இந்திரனா’. மேலும் திரு பரமசிவ ஐயர் குறிப்பிட்டது, இராமாயணத்தில் வரும் ‘சாகரா’ கடல் அல்ல அது ஒரு சிறிய ஏரி அல்லது ஒரு சிறு நதியாக இருந்திருக்கக்கூடும். சற்று முயற்சியோடு அது இராவணனாலும், அனுமனாலும் கடக்க முடிந்த ஏரி அல்லது நதியாக இருந்தது என்கிறார். “யோஜனா” (Yojana) என்ற அக்கால தொலைவு காட்டியின் கணக்கில் பார்த்தால் 11 ½ மைல் அகலமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு யோஜனா என்பது இராமாயண காலக் கணக்கில் 200 கஜமாக ஆக இருந்தது என்கிறார். அப்படியானால் அனுமன் மகேந்திர மலையின் உச்சியிலிருந்து 100 யோஜனங்கள் கடலைத் தாண்டி குதித்து லங்காவை அடைந்தான் என்று கூறுவது உண்மையா பொய்யா என்று கேள்வி எழுவது இயற்கை.
இதற்கு மட்டுமில்லாமல், கதையில் வரும் மற்ற நம்ப இயலாத செயல்களுக்கும் (உதாரணமாக அஸ்திரகங்கள்) வர்ணனைகளுக்கும் பதில் கூறும் வகையில் தொகுப்பாளர்களும், Dr.Sankaliaவும் கூறுவது, பல நூற்றாண்டுகளில் பலரால் மெருகேற்றப்பட்ட(embellishments) கதையாதலால், மிதமிஞ்சிய கற்பனைகளும், நம்பிக்கையை எட்டாத செயல்களும் இதில் இடம்பெற்றுள்ளன; அவற்றில் ஒன்றுதான் அனுமனின் இந்த செயல்; கற்பனைப் புனைவு என்று கூறுகிறார்கள். இது நிற்க.
இப்பொழுது இராவணன் யார் என்று அறிய வேண்டுமல்லவா
டாக்டர் ராமதாஸ் என்ற வல்லுநர் பல விவரங்களை ஆராய்ந்து சிலவற்றை கூறுகிறார். முதலில் அவர் கூறுவது,
- இராவணனுக்கு ஒரு தலையும், இரண்டு கைகளும், இரண்டு கால்களும் தான் இருந்தன. அவன் சுற்றத்தாரும் அவனை சார்ந்த மக்களும் சாதாரண மனிதர்கள்.
- மேலும், இராவணன் கோண்ட் குலகுழுவின் (GOND tribe) தலைவனாக திகழ்ந்திருக்கக் கூடும். இன்று கூட இந்த கோண்ட் மக்கள் இராவணனை வெகுவாக மதித்தும் அவன் மேல் அபிமானமும் வைத்துள்ளார்கள். இராவணனின் சந்ததிகள் தாம் என்று கூறிக் கொள்கிறார்கள்.
- ‘லங்கா’ என்ற சொல் கோண்ட் மொழியில் ‘உயர்வான இடம்’, ‘அரசனின் இருப்பிடம்’ என்று பொருள்படும்.
இந்த பிரதேசத்து காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன் Forest Ranger ஆக பணிபுரிந்த திரு பட்வர்தன் என்பவர் Dr.Sankaliaவிடம், “கோண்ட் மக்கள், மிக முக்கியமான, குறிப்பிடத்தக்க இடங்களை,”லக்கா” என்று அழைப்பார்கள்”, என்று கூறினார்.
எனவே இராவணனும், “ராட்சசர்கள்” என்று அழைக்கப்பட்ட அவனைச் சார்ந்த மக்களும் கோண்ட் குழுவை சேர்ந்தவர்கள் என்றும், அதுபோல் வானரங்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள், “Savaras” and “Korkus” போன்ற மற்ற குல குழுக்களை சார்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும் என்று Dr.Sahuவும் , Dr.Beheraவும் கூறுகிறார்கள். இந்த பிரதேசத்தில் வாழும் மற்றும் சில குழு மக்கள் (Tribals) தங்கள் தலைவனான இராவணனை அவமதித்த அனுமனின் உருவபொம்மையை பூச அமாவாசை அன்று எரிப்பார்களாம். அந்த நிகழ்ச்சியின் பெயர் “லங்கா பொடி”. எரித்து, உடைத்து, கசக்கி ஆற்றில் எரிவார்களாம். ORANG எனும் குல குழு பெண்கள் இராவணனைக் குறித்து பல பாடல்கள் பாடுவார்களாம். அதேபோல் BINJHAL என்னும் குல குழுவும் இராவணனை போற்றுவார்களாம். இவையெல்லாம் கிழக்கு மத்திய பிரதேசம், மேற்கு ஒரிசாவில் வாழும் குலக்குழுக்களுக்கிடையே உள்ள மரபுவழி கதைகளும், பழக்கங்களும் ஆகும். இது போன்ற மரபுவழி கதைகளும், செயல்களும் இன்றையதனி நாடான ஸ்ரீலங்காவில் சிறிதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on April 10, 2020 #Sesha Srinivasan #Megala Ramamoorthy #Parimala Nathan