இதழ்: இருபத்தி ஒன்று, சூன்
ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா
தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
கடந்த கல்வியாண்டு இனிதே நிறைவடைய உதவிய அனைவருக்கும் தமிழ் பள்ளி மிகுந்த நன்றியை உரித்தாக்குகிறது
முதுகில் புத்தகச் சுமை இல்லை
பள்ளி பாடம் தேர்வு என
மனதிலே எந்த கவலையும் இல்லை
விளையாட்டே வாழ்க்கையாய்
சுதந்திரமாய் சுற்றித் திரியும்
மழலைகளின் கூட்டம் எங்கும்
கோடையின் அடையாளம்!!!
கோடை என்றாலே எல்லோருக்கும் லீவு.
ஊரு விட்டு ஊரு போலாம் எல்லோரும் டூரு.
ஆனா இப்போ கொரோனா வந்ததால
எல்லோருக்கும் ஒரே போரு.
ஆமாங்க ஆமாம் இப்போ,
தனித்திரு
விழித்திரு
வீட்டிலிரு
விலகியிரு.
இது தான் இன்றைய நிலை எல்லோருக்கும். எனவே அனைவரும் சமூக விலகலைக் கடைபிடித்து உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்வுடனும் இந்த கோடையை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
சென்ற மாத இதழில், மாணவர் பகுதிக்கு பங்களித்த குழந்தைகளின் படைப்பாற்றல் எங்களை வியக்க வைத்தது. பெரியவர்களாகிய எங்களுக்கு, பள்ளியில் பங்கெடுத்த ஓவிய வகுப்புகள் மனதில் நிழலோடியது. பங்களித்த மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்
ஓர் கிராமத்து குழந்தையின் பதிவாக நாட்டுப்புற நடையில் வைத்த வேண்டுகோள் , நம் நாட்டில் இன்றும் நடப்பதை எண்ணி வருத்தமும் கோபமும் ஒரு சேர வெளிப்பட்டதாக வாசகர்கள் கருதினர்.
பண்டைய தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்ததற்கு ஓர் சான்று அணிநடை அன்னம் கட்டுரை. இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று, என்ன கூறுகிறீர்கள், வாசகர்களே! உண்மை தானே….
“கேள்வி பதில்” பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை newsletter@tampabaytamilacademy.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
செவி வழிக்கல்வி - திருக்குறள்
|
![]() |
எந்நூலையும் பாடமாக படிக்காமல் , செவி வழிக்கல்வியாக கற்கும் போது அது பல தலைமுறைகளுக்கு சென்று சேரும் என்பது பலரும் அனுபவத்தால் கண்ட உண்மை. உதாரணத்திற்கு வீட்டு மருத்துவம் அல்லது பாட்டி மருத்துவம்….அவ்வழியில் திருக்குறளை எளிய முறையில் குழந்தைகளும் , பெரியவர்களும் விரும்பி கேட்கும் வகையில் தொகுத்து வழங்கியுள்ளார் நம் தமிழ் பள்ளி ஆசிரியர் கவிதா ராஜசேகர். இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள்
திருக்குறள் அறிமுகம் மற்றும் அதன் பயன்கள்
திருக்குறள் கடவுள் வாழ்த்து பத்து குறளின் விளக்கங்கள்
மாணவர் பகுதி
மாணவர் பகுதிக்கு தொடர்ந்து வரும் ஆதரவு, ஏன் இந்த முயற்சியை இவ்வளவு காலம் எடுக்கவில்லை என்ற கேள்வியை நாங்களே கேட்டு கொண்டோம். காலம் கடந்து வந்தாலும், ஒவ்வொரு மாணவரின் திறமையை காணும் போது , பேருவகை கொண்டோம்; அந்த வயதில் எங்கள் தலைமுறை இப்படி இருந்திருப்போமா என்ற சிந்தனையும் வந்தது. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு ….அனைவரும் தொடர்ந்து கற்போம் நம் இளைய தலைமுறையிடத்தினிருந்தும்… பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும். |
அமெரிக்காவில் பரதம்
|
![]() |
உயிர் காக்கும் கலை - நீச்சல்!
|
![]() |
டால்பின் கண்டேன்
|
![]() |
ஆசிரியர் அறிமுகம்
திருமதி சாந்தி ராஜு
தனது பள்ளிப் பருவம் முழுவதும் தமிழ் வழியில் கல்வி பயின்று இருப்பதன் மூலம் தாய்மொழிக்கு இவர் கொடுத்திருக்கும் மதிப்பு புலப்படுகிறது. இவருக்கு தாய்மொழியாம் தமிழ்மொழி தான் முதலும், முக்கிய நோக்கமும் என்கிறார்.வீட்டில் கட்டாயத்தமிழ் பேச்சு கடைபிடிக்கும் இவர் பிள்ளைகளின் தமிழ் அறிவு மேம்பட தமிழ் சார்ந்த குழந்தைபாடல்கள், படங்கள், கதைகள் போன்றவற்றையே அதிகம் விரும்பி காண வலியுறுத்துகிறார். மேலும் தனது பிள்ளைகளை உறவினர்களோடு தமிழில் உரையாட வைத்து தமிழ் அறிவை வளர்ப்பதாக பெருமிதம் கொள்கிறார். தமிழால் உயர்ந்த தமிழ் மொழி போற்றும் பல தலைவர்களை பற்றி பிள்ளைகளுக்கும் எடுத்துக்கூறி தமிழார்வத்தை மேம்படுத்துவதாக கூறுகிறார். இவ்வாறு தமிழ் மொழி மீது கொண்ட ஆர்வத்தால் TBTA வில் தன்னார்வலராக இணைந்து செயல்பட்டு வருகிறார். |
![]() சொந்த ஊர் : சேலம் , தமிழ்நாடு |
இவரின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!
வான்வெளியை அளந்த விஞ்ஞானி - ஜோஹனேஸ் கெப்ளர்
|
![]() |
தற்போதைய 21ஆம் நூற்றாண்டில் இயற்பியலையும் (Physics), மற்றும் விண்வெளி ஆராய்ச்சியையும் (Space Research) பிரிக்கமுடியாத ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக நாம் கருத்தில் கொள்கிறோம். இந்தப் பரந்த நோக்கு, 16ஆம் நூற்றாண்டில் நிலவியதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 16ஆம் நூற்றாண்டில், இயற்பியல் இயற்கைத்தத்துவ ஆராய்ச்சியாகவும் விண்வெளி ஆராய்ச்சி பெருவாரியாகக் கணிதம் சார்ந்ததாகவும் பின்பற்றப்பட்டு வந்தது என்பதை ஆராய்ச்சி நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த வேறுபட்ட சிந்தனைக்கூறுகளை மாற்றி இயற்பியலையும் வான்வெளி ஆராய்ச்சியையும் ஒன்றாக இணைத்த பெருமைக்குரியவர் அறிவியலாளர் திரு. ஜோஹனேஸ் கெப்ளர் (Johannes Kepler) ஆவார். அவரைக் குறித்து சற்று சிந்திப்போமா!
![]() |
திரு கெப்ளர், டிசம்பர் மாதம் 1571இல் ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட் எனும் மாகாணத்தில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே பெரியம்மை நோயினால் தாக்குற்றுத் தன் கைகள் மற்றும் கண்கள் பாதிப்பிற்குள்ளானாபோதிலும், கணிதத் திறமையில் இயற்கையிலேயே மிகவும் வல்லவராகத் திகழ்ந்தார். தனது ஆறாம் வயதிலிருந்தே வான்வெளி ஆராய்ச்சியின்பால் மிகுந்த காதல் கொண்டிருந்ததன் காரணமாக அவருடைய தாயார் அவரைத் தினமும் வெளியில் அழைத்துச் சென்று இரவு நேரத்தில் வானில் சுடர்விடும் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் விண்மீன்களை அவருக்குக் காண்பிக்கலானார். சில வருடங்களுக்குப்பின் முதன் முதலாய்க் கெப்ளர், சந்திர கிரகணத்தைக் கண்ணுற்றார்.
திரு கெப்ளர், டியுபிங்கன் (Tubingen University) பல்கலைக்கழகத்தில் தத்துவம் (Philosophy) மற்றும் தியாலஜி (Theology) பயின்று அதே பல்கலைக்கழகத்தில் வான்வெளி ஆராய்ச்சியாளராகவும், பிறகு கிரேஸ் பல்கலைக்கழகத்தில் (Graz) வான்வெளிக் கணித ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சூலை 19, 1595இல் ஜூபிடர் மற்றும் சனிக்கோள்களைப் பற்றியும் அவற்றின் பாதை ஒழுங்கமைப்பைப் பற்றியும் விரிவுரை நடத்திக் கொண்டிருந்த தருணத்தில், கெப்ளருக்கு ஓர் உள்நோக்குச் சிந்தனை தோன்றியது; அது யாதெனில், நம் அண்டம் (Universe) ஐந்து வடிவமைப்புக்களை உள்ளடக்கியது என்பதாகும். தனது கணிதப் புலமையின் வாயிலாக அவ்வைந்து திட (solid) வடிவமைப்புக்களையும் (Octahedron, icosahedron, dodecahedron, tetrahedron and cube) எனப் பட்டியலிட்டுள்ளார் அவர். அவ்வைந்து வடிவங்களும் நம் அண்டமாகிய கோளத்தில் பின்னிப் பிணைந்து ஆறு தளங்களாக (layer) தோன்றியமையைக் கெப்ளர் ஆறு கோள்களுக்கு (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், ஜுபிடர், சனி) ஒப்பாக உருவகம் செய்தார். இவற்றோடல்லாமல் அக்கோள்களின் அளவு, அவை சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் பாதையின் நேரம் போன்றவற்றைத் தன் கணிதச் சூத்திரத்தின் (Mathematical Formulae) வாயிலாக நமக்குத் தெளிவு படுத்தியுள்ளார்.
மேற்கூறிய இந்தச் செயல்முறை விளக்கங்களே கெப்ளரின் “Mysterium Cosmographicum” என்ற அறிவியல் ஆராய்ச்சி நூலுக்கு வித்தாக அமைந்தன என்றால் அது மிகையாகாது. மேலும், கோபர்நிகஸின் (Copernicus) கோள்களின் சுழற்சி பற்றிய அடிப்படைத் தத்துவத்தினை (Helio Centric System) பறைசாற்றுவதாகவும் அமைந்தன. Mysterium Cosmographicum treatise (MCT (அ) மசட) என்றால் என்ன என்பதைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.
”மசட” என்ற கெப்ளரின் ஆராய்ச்சி நூலில் ஓர் அத்தியாயத்தில், அவர் கிறித்துவர்களின் பைபிளுக்கும் (Holy Bible) கோபர்நிகஸின் கோள் சுற்றுப்பாதை ஆராய்ச்சிக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துரைத்திருந்தார். ஆனால் அந்த அத்தியாயம் பின்னாளில் (1596) துரதிர்ஷ்டவசமாக நூல் பதிப்பிற்கு முன்னரே நீக்கப்பட்டது. அத்தகைய செயல் கெப்ளரின் புகழிற்குத் தடையாய் ஆனது. கெப்ளர் தன்னூலின் மேற்கூறிய அத்தியாயத்தைத் தனது நண்பர்கள் மற்றும் Danish வான்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற டைகோ ப்ராகி (Tycho Brahe) ஆகியோர்க்கு அனுப்பியிருந்தார். டைகோ ப்ராகி அதனைப் படித்துச் சற்று கடுமையான வார்த்தைகளால் கெப்ளரின் ஆராய்ச்சியை விமரிசித்துப் பல திருத்தங்கள் அதில் செய்யப்பட வேண்டும் என்ற தமது சிந்தனைகளையும் எழுதியிருந்தார்.
கெப்ளர் அவ்வறிவுரைகளைச் சிரமேற்கொண்டு ப்ராகியின் யோசனைப்படி பல மாற்றங்களைச் செய்தார். கெப்ளரிடம் போதிய ஆராய்ச்சிச் சாதனங்கள் இல்லாததாலும், மற்றும் ப்ராகியின் தனி வான்வெளி ஆராய்ச்சிக்கூட மையத்தின் (Astronomical laboratory) செவ்வாய் கோளின் புள்ளிவிவரத் தரவுகளைச் சோதனை செய்யும் நோக்கத்திற்காகவும், தனது “மசட” பற்றிய ஆராய்ச்சிக்காகவும் கெப்ளர் 1600இல் ப்ரேகில் (Prague) உள்ள ப்ராகியின் ஆராய்ச்சிக் கூடத்திற்குச் சென்றார். கத்தோலிக்கக் கிறித்துவராக மாறாததனால், அவர் வசித்துக் கொண்டிருந்த Graz (in Germany) நகரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, பின் தன் குடும்பத்துடன் ப்ராகியின் வான்வெளி மையத்திற்குக் குடி பெயர்ந்தார்.
டைகோ ப்ராகியின் மறைவிற்குப்பின் கெப்ளர் அரசாங்கக் கணித வல்லுநராக நியமிக்கப்பட்டார். Prague அரசு அவருடைய லூதரன் (Lutheran Faith) கொள்கையை மதித்தது. அரசின் ஜாதக ஆலோசகராகப் (Horoscopes — Astrologer) பணிபுரிந்துவந்த கெப்ளர் அப்பணியை மட்டுமே தொடர்வதை விரும்பவில்லை. அறிவியல் வாயிலாக உண்மை அறிதலையே ஜாதகங்களிற்கு மாற்றாக அவர் எண்ணினார். ப்ராகியின் வான்வெளி ஆராய்ச்சித் தரவுகள் (Data) கெப்ளரின் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததோடல்லாமல் அவருடைய ஆய்வுக்கூட விரிவாக்கத்திற்கும், ஒளி விதிகள் கண்டுபிடிப்பிற்கும் காரணமாக இருந்தன. 1604ஆம் ஆண்டில், வெளிவந்த கெப்ளரின் நூல் “Astronomiae Pars Optica” நவீன ஒளியியல் (Modern Optics) எனும் புதிய துறை உருவாகக் காரணமாக அமைந்தது எனில் அது மிகையில்லை.
மேற்கூறிய அத்தனை ஆராய்ச்சி வழிமுறைகளும், கெப்ளர் தன் புதிய கண்டுபிடிப்பான தொலைநோக்குக் கருவி (Telescope) உருவாக்கத்திற்கும், மற்றும் இரண்டு குழி லென்ஸ்கள் (ஆடிகள்) (convex lenses) கொண்ட கெப்ளேரியன் தத்துவத் தோற்றத்திற்கும் வித்தாக அமைந்தன. கலிலியோவின் ஒரு குழி மற்றும் ஒரு குவி ஆடிகள் கொண்ட தொலைநோக்குக் கருவியை விடவும் கெப்ளரின் மேலே சொல்லப்பட்ட இரு குழியாடிகள் கொண்ட கருவி 1604ஆம் ஆண்டில் supernova என்ற நட்சத்திரச் சிதையல் முறைகளைக் கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது என்பதை அவரின் ’De Stella Nova’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் வாயிலாக அறிய முடிகிறது.
ஆராய்ச்சியாளர், சிந்தனையாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராகக் கெப்ளர் திகழ்ந்ததோடல்லாமல், மிகச்சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார் என்பதை 1611இல் வெளிவந்த அவருடைய “கனவு” (Sonium அதாவது “The Dream”) என்ற அறிவியல் புத்தகம் (Science Fiction) வாயிலாக உணரமுடிகிறது. 1611லேயே மற்ற கிரகங்களில் (கோள்களில்) வான்வெளி ஆராய்ச்சி எப்படி இருக்கும் என்பதையும், சந்திரனுக்குப் பயணம் செய்வதையும் விளக்கியுள்ளார் கெப்ளர் தன்னுடைய “கனவு” எனும் புத்தகத்தில். இது அப்போதிருந்த சூழ்நிலையில் மிகக் குறுகிய மனம் படைத்த அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன் விளைவு, கெப்ளரின் தாயாருக்கு 14 மாத சிறைத் தண்டனையைப் பெற்றுத்தந்தது என்று நினைக்கும்போது இன்றைய மனிதனின் சந்திரனில் பயணமும், செவ்வாயில் ஆராய்ச்சியும் எப்படி சாத்தியம் என்ற வினாவை எழுப்புகிறது.
இப்போது கெப்ளரின் புகழிற்குக் காரணமாக அமைந்த “கோள்கள் சூரியனைச் சுற்றும் விதிகளைப்” (Kepler’s Laws of Planetary Motion) பற்றிப் பார்ப்போம்.
முதலாவதாக, அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்டப் பாதையில் (Elliptical Orbit) சுற்றுகின்றன என்பது அவரின் “நீள்வட்ட விதி (Law of Ellipses)” ஆகும். இரண்டாவது விதியானது, நாம் சூரியனின் மையத்திற்கும் மற்றும் எடுத்துக்கொண்ட ஒரு கோளின் மையத்திற்கும் ஓர் கற்பனைக் கோடு (Imaginary Line) வரைந்தால், அக்கோடு சம நேரத்தில், சம அளவு கொண்டதாய், (“equal areas in equal amount of time”) தோற்றமளிக்கும் (the Law of Equal Areas) என்பதேயாம். மூன்றாவது விதி “the Law of Harmonies” என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், ஒரு கோளின் இரண்டு சுழலும் நேரத்தின் விகிதங்களின் இரண்டு மடங்காக எடுத்துக்கொண்டால், அவற்றின் சம தொலைவின் விகிதங்கள் சூரியனிலிருந்து மூன்று மடங்காக இருக்கும். இதைத்தான் ஆங்கிலத்தில் “The ratio of the squares of any two planetary periods is equal to ratio of the cubes their average distances from the sun என்கின்றனர். இம்மூன்று விதிகளுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், இவ்விதிகள் “Epitome Astronomiae Copernicanae” என்ற ஆராய்ச்சி நூலில் பதிவாகி உலகம் முழுவதும் மக்களால் படிக்கப்பட்டும், பின்பற்றப்பட்டும் வருகின்றன.
கெப்ளர், நவம்பர் 15, 1630இல் காலமானார். அவருடைய இறப்புச் செய்தியை (Epitaph) அவரே எழுதியதை, இன்றும் அவருடைய கல்லறையில் காணமுடிகிறது என்ற செய்தி நெஞ்சை நெகிழச் செய்கிறது. அவருடைய அந்த வாசகங்கள் அவருடைய தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன; பின்பு அவை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க: “Mensus eram coelos, nunc terra metior umbras; Mens coelestis erat, corporis umbra jacet”.
“I measured the skies, now the shadows I measure; Skybound was the mind, earthbound the body rests”
“நான் வான்வெளியை அளந்தேன், இப்பொழுது என் நிழலை அளக்கிறேன்; வான வரையறை என்பது மனதளவு; உலக வரையறை என்பது நம்முடைய உடல் அமைதியுறும் இடம்.”
இவ்வாறு பல்வேறு வான்வெளி ஆராய்ச்சிகளையும், கணிதம் மற்றும் இயற்பியல் விதிகளையும் நமக்களித்த கெப்ளரின் புகழ் அறிவியல் வானில் என்றும் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆதாரங்கள்:
- American Physical Society news, Vol. 23, No. 7, July 2014
- www.nasa.gov
- http://en.wikipedia.org/wiki/Platonic_solid
- அறிவியலாளர் கெப்ளர், vallamai.com, July 28, 2014
அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
Social Distancing என்பது ரொம்ப முக்கியம் | சமூக இடைவெளி என்பது மிக அவசியம் |
குழந்தைகள் வீட்டிலேயே இருப்பது ஒரே boring என்கிறார்கள் | குழந்தைகள் வீட்டிலேயே இருப்பது ஒரே சலிப்பு என்கிறார்கள் |
Summer vacation-ல i am conversing with தாத்தா பாட்டி daily | கோடை விடுமுறையில் நான் தினமும் தாத்தா பாட்டியோடு உரையாடுகிறேன் |
நான் house work-ல என்னோட அம்மா அப்பாவுக்கு help பண்றேன் | நான் வீட்டு வேலையில் என்னோட அம்மா அப்பாவுக்கு உதவி செய்கிறேன் |
எனக்கு கொஞ்சம் water கொடுங்க | எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்க |
இலக்கிய பகுதி
திரிகடுகம்
ஆசிரியர் பெயர் - நல்லாதனார்
திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூல்களும், பெயர் அமைந்துள்ள வகையிலும்,நீதிப் பொருள்களைப் பாடல்களில் வகுத்துள்ள முறையிலும், பெரிதும் ஒப்புமை உடையன.இம்மூன்றும் நோய் நீக்கி உடல் நலம் பேணும் மருந்துச்சரக்கின் பெயர்களாகும்.இந் நூல்கள் செய்யுள்தோறும் முறையே மூன்றும், ஐந்தும், ஆறும் ஆகிய பொருள்களை அமைத்துக்கொண்டுள்ளன.
திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளையும் குறிக்கும்.
திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி என்பது திவாகர நிகண்டு கூறும் விளக்கம். இதன் ஆசிரியர் நல்லாதனார். நூறு வெண்பாக்களால் ஆனது. நூலின் முதற்பாட்டில் ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்ற தொடர் இடம்பெறுகிறது.
மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதை ஒத்து,இந் நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப்பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம்.இந்த ஒப்புமைகருதியே இந் நூல் திரிகடுகம் என்னும் பெயர் பெற்றுள்ளது. இக்கருத்தை,
உலகில், கடுகம் உடலின் நோய்மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும்-நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.
என வரும் பாயிரச் செய்யுளும் உணர்த்துகின்றது. ஒவ்வொரு பாடலின் மூன்றாவது அடியிலும் ‘இம்மூன்றும்’ அல்லது ‘இம்மூவர்’ என்ற தொடர் இடம்பெறுகிறது.
உறவினராகக் கொள்ளவேண்டியவர்களின் நற்பண்புகள் பற்றி கூறும்போது,
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது
முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன் படாமல் வாழ்தலுடையவன்.உதவி யாளன் என்று சொல்லப்படுவோன் வந்த விருந்தினர் பசித்து இருக்கையில் தனித்து உண்ணாதவன்.பிறர் அறிந்த காரியங்களை மனத்திற் கொள்ளுதல் உடையவன் என்று சொல்லப்படுபவன் கேட்டவற்றை மறவாதவன். இம் மூவரும் தனக்கு நட்பினராயிருக்க வாழ்வது, ஒருவனுக்கு நன்மை தருவதாகும்.
ஒருவனுக்கு தீமை பயக்கும் செயல்களை பற்றி கூறும் போது,
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில
நெடுங்கணக்கு முதலியன கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரிலிருத்தலும், மாறுபட்ட பொருளை நீக்கும் (கல்விகேள்விகளில்) முதிர்ந்தவரை உடையதல்லாத சபையிலிருத்தலும், பகுத்து சாப்பிடும் குணம் இல்லாதவர் பக்கத்திலிருத்தலும் ஆகிய இந்த மூன்றும் (ஒருவனுக்கு) நன்மையை தருவன அல்ல. தீமை பயப்பனவாம்.
மேலும்,
வருவாயூட் கால் வழங்கி வாழ்தல்
கண்ணுக் கணிகலன் கண்ணோட்டம்
முதலாய பல நல்ல பொருள் பொதிந்த பல தொடர்கள் இந்நூலில் இடம்பெறுகின்றன. கொடுங்கோல் அரசன், பொய்யன், கூடஒழுக்கத்தினன் ஆகியோரால் மழைபெய்யாமல் போகுமென்ற அறக்கருத்தையும் இந்நூலில் காணலாம்.
இவ்வாறு இந் நூலில் ஒவ்வொரு பாடலிலும் மும் மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இணைத்துக்கூறும் முறை போற்றுதற்கு உரித்து. பொதுக் கருத்துகள் ஈற்றடியில் வற்புறுத்தப்படுகின்றன. மூன்றாம் அடியின்ஈற்றில், இம் மூன்றும், இவை மூன்றும் (66, 67, 80, 86, 93,95), இம் மூவர், இவர் மூவர் (51, 79, 96) என மூவர் (13) என்னும் எண்ணுத்தொகைச் சொற்களில் ஒன்றை அமைத்துள்ளார்.
இவற்றுள் இம் மூன்றும், இம் மூவர் என்பனவே மிகுதியாகப் பயின்றுள்ளன. பெரும்பான்மையான பாடல்களில் மூன்று பொருள்களும் எண்ணும்மைகளால் இணைக்கப்பெற்றுள்ளன; ஒரு சிலவற்றில் உம்மை இன்றிக் கோக்கப்பட்டுள்ளன; இன்னும் சிலவற்றில் தனித்தனி வாக்கியங்களாக உம்மை இன்றி அமைந்துள்ளன. எவ்வகையில் மூன்று பொருள்களைக்கோத்த போதிலும், இறுதியில் தொகைச் சொல்லுடனேயேபொதுக் கருத்து சுட்டப் பெறுகிறது. இங்ஙனமாக இந்நூலின் அமைப்பு ஒரு குறித்த வரையறையுடன் அமைந்துள்ளது ஒருதனிச் சிறப்பாகும். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை என்னும் நூல்களின் கருத்துகளை இந் நூல் பின்பற்றியுள்ளது. இந் நூற்கருத்துகளை இனியவை நாற்பது பெரிதும் தழுவியுள்ளது. இதனால், இந்த இரு நூல்களுக்கும் ஒப்புமை மிகுதியாகக் காணப்படுகிறது. நூல் வழக்கிலும் உலக வழக்கிலும் பயின்ற பழமொழிகள் சிலவற்றையும் இந் நூல் எடுத்தாண்டுள்ளது.’உமிக் குற்றுக் கைவருந்துவார்’ (28), ‘தம் நெய்யில்தாம் பொரியுமாறு’ (65), ‘துஞ்சு ஊமன் கண்ட கனா’ (7), ‘தூண்டிலினுள்பொதிந்த தேரை’ (24), ‘தூற்றின்கண் தூவிய வித்து’ (80)என வருவன பழமொழிகளாகும்.
இந் நூலில் காணும் சொல்லாட்சிகளும் கருத்துக் கோவைகளும் நல்ல கட்டுக்கோப்புடையனவாய் உள்ளன.
சங்க இலக்கியங்களில் மகளிர்
|
![]() |
மாந்தர்கள் வேட்டைச் சமூகமாய் அலைந்து திரிந்த காலத்தில் சமூகத் தலைமை பெண்ணிடமே இருந்தது. அவளே வேட்டைத் தலைமையும் வீட்டுத் தலைமையும் கொண்டவளாய்த் திகழ்ந்தாள். சுருங்கச் சொல்வதாயின் அன்றைய சமூகம் தாய்வழிச் சமூகமாகவே (Matriarchal society) இருந்தது.
இந்திப் பயண இலக்கியத்தின் தந்தையும் (Father of Hindi Travelogue) , சிறந்த கல்வியாளரும், மார்க்சியச் சிந்தனையாளருமான இராகுல சாங்கிருத்தியாயனின் (Rahul Sankrityayan) ’வால்கா முதல் கங்கை வரை’ (A journey from the Volga to the Ganges) எனும் மாந்த வாழ்வியலை மையமாகக் கொண்ட வரலாற்றுப் புனைகதைகள் கி.மு.6000 தொடங்கி கி.பி.1942 வரையிலான காலக்கட்டங்களில் நிகழ்ந்த மானுடச் சமூக மாற்றங்களை மிக அழகாக விவரிக்கின்றன. அதில் தொல்குடிச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த பெண்டிர், காலப்போக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண்கள் தலைமையின்கீழ் ஆட்பட்ட வரலாறு மிக விரிவாகவும் நேர்த்தியாகவும் விவரிக்கப்பட்டிருக்கக் காணலாம். நம் சங்க இலக்கியங்களை ஆய்ந்தாலும் அதில் வேட்டைக்குடியினரின் தெய்வமாய் வணங்கப்படுபவள் கொற்றவையே ஆவாள். இவ்வழிபாடு தாய்வழிச் சமூகமரபின் எச்சமே எனலாம். சிலப்பதிகாரத்திலுள்ள வேட்டுவ வரிப் பாடல்கள் கொற்றவையின் பெற்றியை நற்றமிழில் நவிலும் அழகைக் காண்மின்!
….சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை…
(சிலம்பு: வேட்டுவ வரி: 63-71)
என்று தங்குல முதல்வியும் வெற்றிச்செல்வியுமாகிய கொற்றவையின் தோற்றத்தையும் திறலையும் பாடிப் பரவுகின்றனர் வேட்டுவக் குடியினர்.
அற்றைய கல்விநிலையைக் கண்ணுற்றாலும், ஆண்களுக்கு நிகராய்ப் பெண்களும் கல்வியிற் சிறந்திருந்தமைக்குப் பல சங்கப் பெண்பாற்புலவர்கள் சான்றாய்த் திகழ்கின்றனர். ஏறக்குறைய நாற்பது பெண்பாற் புலவர்களின் சங்கப் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவை நமக்குக் கிட்டியுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலான கணக்கே. இவையன்றிப் பனையோலைகளில் கறையானுக்கு இரையானவை, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் எறியப்பட்டவை, ஆகுதி வேள்வியில் போகுதி என்று விட்டவை இவையும் கிடைத்திருந்தால் நம் இலக்கிய வளம் இன்னும் செறிவாகவும் செம்மையாகவும் இருந்திருக்கும். இன்னும் பல பெண்புலவோரின் பாடல்களும் நமக்குக் கிடைத்திருக்கக் கூடும். நம் போகூழ் வலிதாயிருத்தலின் அவை நமக்குக் கிடைத்தில.
இந்நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசையில் விறலியான ஔவை, ஆடுகள மகளான ஆதிமந்தி, அரசமாதேவியான பெருங்கோப்பெண்டு, அரண்மனைக் காவற்பெண்டு என்று அனைவர்க்கும் இடமுண்டு. அம்மட்டோ? குறத்தியரும் (குறமகள் இளவெயினி / குறியெயினி) குயத்தியரும்கூட (வெண்ணிக் குயத்தியார்) அருமையாய்ப் பாப்புனைந்திருக்கக் காண்கின்றோம். இதன்வாயிலாய் நாமறிவது, அன்றைய கல்வியானது சாதி, இன, நில, திணை வேறுபாடின்றி அனைவர்க்கும் பரவலாய்க் கிடைத்திருக்கின்றது என்பதே!
பாட்டரசி ஔவை மட்டுமே அகமும் புறமுமாக ஐம்பத்தொன்பது பாடல்கள் பாடியிருக்கின்றார். நானிலத்தையும் தம் பாட்டில் வைத்துத் தக்கதோர் உலகியல் உண்மையை அப்புலவர் பெருந்தகை நமக்கு உணர்த்தியிருக்கின்றார். அப்பாடல்…
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே! (புறம் – 187)
”நிலமே! நீ ஓரிடத்தில் நாடாகவும் (மருதம்), வேறிடத்தில் காடாகவும் (முல்லை), மற்றோரிடத்தில் பள்ளமாகவும் (நெய்தல்), பிறிதோரிடத்தில் மலையாகவும் (குறிஞ்சி) திகழ்கின்றாய். ஆனால் நின் நலமும் சிறப்பும் நில அமைப்பினால் வருவதன்று! எந்நிலத்து ஆடவர் நல்லவரோ அந்நிலத்திலே நீ சிறக்கின்றாய் என்கிறார் அழுத்தமாய்!”
தஞ்சைக்கு அருகிலுள்ள வெண்ணி எனும் பகுதியைச் சார்ந்தவர் குயத்தியார் எனும் பெண்புலவர். அவரின் துணிச்சலுக்கும் அஞ்சாநெஞ்சுக்கும் சாட்சியாய் ஒருபாடல் புறநானூற்றிலே காட்சியளிக்கின்றது.
வெண்ணிக்குப் புறத்தேயிருந்த வெண்ணிப் பறந்தலையில் கரிகாலனுக்கும் அவனை எதிர்த்து ’மெகா கூட்டணி’ அமைத்திருந்த சேரமன்னன் பெருஞ்சேரலாதன், பாண்டியன், மற்றும் பதினொரு வேளிர்க்கும் இடையே பெரும்போர் நடந்தது. அப்போது கரிகாலனின் வேலானது சேரலாதனின் மார்பைத் துளைத்து முதுகுவழியே வெளியே வந்துவிட்டது. இதனால் முதுகிலும் புறப்புண்பட்டது போன்றொரு தோற்றத்தைச் சேரனுக்கு அஃது ஏற்படுத்திவிட, நாணமும் வேதனையும் கொண்டான் அவன். இனியும் உயிர்வாழ்தல் வீரனுக்கு அழகன்று என்றெண்ணி வடக்கிருந்து உயிர்துறந்தான். கரிகாலன் அப்போரில் பெருவெற்றி பெற்றான்.
இச்சம்பவங்களையெல்லாம் அப்பகுதிவாசியான குயத்தியார் நன்கு அறிந்திருந்தார். எனவே போருக்குப் பின் ஒருநாள் கரிகாலனைக் காணச்சென்றவர், தம் மன்னனின் வென்றியைப் போற்றினார்; அத்தோடு நின்றாரில்லை. அவனினும் நல்ல(வ)ன் தன் வீரர்களோடு வாள்வடக்கிருந்து உயிர்நீத்து மிகப்புகழ் உலகமெய்திய சேரலாதன் என்று துணிந்துரைத்தார் அப்பெருமாட்டி.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே (புறம் – 66)
அன்று பெண்டிர்க்கிருந்த பேச்சுரிமைக்கும் கருத்துச் சுதந்தரத்துக்கும் இப்பாடல் சிறந்த சான்றாகும். காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனும் புலவர் பெருமாட்டி, பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழ்ந்து பாடி, ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரங் காணமும் பரிசிலாய்ப் பெற்று அவன் பக்கத்தில் வீற்றிருக்கும் சிறப்பும் பெற்றார் என்றறிகின்றோம்.
இவையெல்லாம் அன்றைய பெண்டிரின் உயர்ந்த கல்விப் புலமையை, கவிபாடும் திறமையை, அரசனே ஆயினும் உண்மையை அவனிடம் துணிந்துரைக்கும் ஆற்றலை நமக்கு அறியத்தந்து பெருமிதம் கொள்ள வைக்கின்றன.
கேள்வி பதில் பகுதி
|
![]() |
கேள்வி:
அகஸ்த்தியர் யார்? வரலாற்று மனிதரா அல்லது ஒரு கருத்தாக்கமா? Historical Personage or a concept?
(இக்கேள்விக்கான பதில் இரண்டு பகுதிகளில் தரப்படும். முதல் பகுதி இந்த இதழிலும், இரண்டாம் பகுதி அடுத்த இதழிலும் தரப்படும்)
பதில் (Part 1):
அகஸ்த்திய முனிவரைக் குறித்து தமிழகத்தில் உலவி வரும் கதைகள்:
1.அகஸ்த்தியர் என்ற வடநாட்டு முனிவர் தமிழகத்திற்கு வந்தார். |
2.வந்தவர் தமிழகத்தின் தென்கோடியில் மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் பொதிகையில் வந்து தங்கி வாழ்ந்தார். |
3.அங்கு வாழ்கையில் சிவனிடம் தமிழ்க்கற்று முதற் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். அங்கம் வகித்தார்; தமிழ் வளர்த்தார். |
4.தமிழ் மொழியில் “அகத்தியம்” என்ற முதல் இலக்கண நூலை இயற்றினார். |
5.இவருடைய மாணாக்கர்கள் 12 பேர் இருந்தனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள் தொல்காப்பியர், பனம்பாரனார், அதன்கோட்டாசன் போன்றோர் ஆவர். |
6.அகஸ்த்தியர் இன்றும் பொதிகை சாரலில் அருவமாக வாழ்ந்து வருகிறார். |
மேற்கூரிய இக்கதைகள் மட்டும் அல்லாமல் தமிழகத்திலிருந்து அவர் கடல் கடந்து (தற்போதைய) இந்தோனேசியா தீவுகளான பர்ஹின்ன தீபம்(Borneo), குஷ தீபம்,வராஹ தீபம் போன்ற தீவுகளுக்கு சென்று, பின் மலைய தீபத்தில் மலைய மலையில் தங்கியதாகவும் அடுத்த கட்டத்தில் அங்கிருந்து சையாம் (தற்போதைய தாய்லாந்து) மற்றும் கம்போடியா (காம்போஜம்) சென்றதாகவும் கதைகள் உள்ளன. இக்கதைகள் பலருக்கு தெரியாமலிருக்கலாம். ஆகவே அக்கதைகளை விட்டுவிட்டு, அவர் தமிழகத்தில் புரிந்த “சாதனைகளை” மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.
தமிழ் பயின்று, தமிழில் முதல் இலக்கண நூலை (அந்த நூல் எங்கே?) படைத்த இவரைக் குறித்து ஏன் சங்க இலக்கியங்கள் மௌனம் சாதிக்கின்றன? சங்கப்புலவர்கள் ஒருவரேனும் அவரைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? கி.பி. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஏன் அவர் பெயரை குறிப்பிடவில்லை? “பரிபாடல்” என்ற எட்டுத்தொகை நூல் குறிப்பிடுகிறதே என்று சிலர் கூறலாம். “பரிபாடல்” என்ற தொகுதியை சங்கப்பாடல்களுடன் சேர்த்ததே தவறு என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அது 7அல்லது 8 நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட நூல் என்பது அறிஞர்களின் கருத்து. மறைந்து போன “பரிபாடல்” என்ற செய்யுள் வகையை ஈடுகட்ட பிற்கால நூலான “பரிபாடல்” சங்க இலக்கிய நூல்களுள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் கருத்து. ஆகவே பழமையான சங்க நூல்கள் என்று கருதப்படுபவை எதையும் அகஸ்த்தியர் என்ற நபரை அல்லது பெயரை குறிப்பிடவில்லை ஏன்?அகஸ்த்தியரின் “கதை” அந்த காலக்கட்டத்தில் இன்னும் உருவாக்கப்படவில்லை. “பரிபாடல்” எழுதப்பட்ட 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு சற்றுமுன் அந்தக் கதை உருவாகியிருக்கலாம்.
தொல்காப்பியர் அகஸ்த்தியரின் மாணாக்கர் என்ற கதை வழங்குவது பலரும் அறிந்ததே. அகஸ்த்தியர் தொல்காப்பியரை சபித்ததாகவும் கதை உள்ளது.அகஸ்த்தியரிடம் தமிழும், தமிழிலக்கணமும் பயின்ற தொல்காப்பியர் ஏன் தம் பெரும் நூலில் தம் ஆசானைக்குறித்து ஒரு குறிப்பும் எழுதவில்லை. தன்னை சபித்த வராயினும் ஆசான் ஆயிற்றே. சரி, தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் எழுதிய தொல்காப்பியரின் சக மாணவரான பனம்பாரனாரும் ஏன் தம் ஆசிரியரைக்குறித்து பாயிரத்தில் ஒரு குறிப்பும் எழுத வில்லை; ஒரு வணக்கத்தையும் தெரிவிக்கவில்லை? தொல்காப்பிய நூலின் வெளியிட்டு விழாவில் இன்னொரு சக மாணவரான அதன்கோட்டாசனை தலைமை வகிக்க அழைத்தார்கள் தவிர அவர்கள் அனைவருக்கும் தமிழ்க்கற்றுத்தந்த அகஸ்த்தியரை அழைக்கவில்லை. ஏன்? அகஸ்த்தியர் என்ற ஒரு மனிதர் இருந்ததாகவே அவர்கள் அறியவில்லை போலும். They had absolutely no idea who Agasthiyar was or whether there was a person like him,just like the sangam poets were totally unaware of such a personage.இந்த உண்மைகள் எதை சுட்டிக்காட்டுகின்றன ?அகஸ்த்தியரைக் குறித்த கதைகள் அனைத்தும் பிற்காலத்தில் எழுந்த கட்டுக்கதைகள் என்பதை காட்டுகின்றன.அவ்வாறாக இருந்தால், இந்த கதைகள் ஏன், எப்படி உருவாகியிருக்கும்? அடுத்த இதழில் பார்ப்போம்.
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on June 7, 2020 #Kavitha Rajasekar #Sesha Srinivasan #Megala Ramamoorthy #Parimala Nathan