logo

Home Tamil School Archives Search Feed Contributing Guide


இதழ்: பதினெட்டு , மார்ச் 2020

ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்

இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா

தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ


அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,

இக்கல்வியாண்டிற்கான இறுதி பருவத்தில் மாணவர்கள் உற்சாகமாக வகுப்பில் கற்பதை நம்மால் காண முடிகிறது. இன்னும் சில வாரங்களில் அனைத்து பாடங்களும் நிறைவடைந்து ஆசிரியர்கள் சீராய்வு பணியை மேற்கொள்வர்.

இரண்டாம் பருவத் தேர்விற்கு பின் நடந்த பெற்றோர்-ஆசிரியர் நிகழ்வில், பெற்றோர்கள் கூறிய கருத்துக்களை பள்ளி நிர்வாகம் குறிப்பு எடுத்துக் கொண்டது. அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும்

விடுமுறை நாட்களில் இதுவரை விடுபட்ட அனைத்து வீட்டுப் பாடங்களையும் குழந்தைகளை ஊக்கப்படுத்தி எழுத செய்யுங்கள் இத் தொடர் பயிற்சியினால் அவர்களுக்கு மொழியின் நெருக்கம் குறையாமல் இருக்கும்; மொழி அறிவு மேம்படும். மேலும் மீண்டும் அவர்கள் பள்ளிக்கு திரும்பும் பொழுது வகுப்புகளை மிகவும் எளிதாக எதிர்கொள்வர்.

பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.

இம்மாத (மார்ச் -2020 ) பள்ளி கால அட்டவணை

03/06/2020 — 03/07/2020 உண்டு
03/13/2020 — 03/14/2020 இல்லை
03/20/2020 — 03/21/2020 இல்லை
03/27/2020 — 03/28/2020 உண்டு

செய்தி மடல் ஆசிரியர் பகுதி

சென்ற மாத இதழில், சிசு தனக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் வீறிட்டு அழுததாக சத்தம் என்ற தலைப்பில் சிலிர்க்க வைக்கும் பாடலை நல்கிய திரு.ஷேக் அப்துல் காதர் அவர்களுக்கு ஆசிரியர் குழு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கேள்வி பதில் பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .

இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.

தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!

குறிப்பு: தமிழ் பள்ளியின் விளையாட்டு விழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

TBTA பள்ளி அங்கீகாரம், தற்போதைய நிலை:

இறுதிகட்ட பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கான முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும்


மாணவர் பகுதி

ஒரு புதிய முயற்சியாக நம் குழந்தைகளை ஊக்குவிக்கவும் , அவர்களின் எழுத்துத்திறனை வளர்க்கவும் இப்பகுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நெருக்கமான விஷயங்களை ஒரு சில வரிகளில் எழுத சொல்லி ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும்.
logo

ஆசிரியர் அறிமுகம்

திருமதி இந்துமதி தட்சணாமூர்த்தி

சிறுவயது முதலே தமிழ்மொழி மீது தீராத பற்றுடையவராகத் திகழும் இவர் அண்டைநாட்டில் மற்ற குழந்தைகளுக்குத் தமிழ் மொழி கற்றுக்கொடுக்கத் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை மிக்க மகிழ்ச்சியாகக் கருதுகிறார். ஓய்வு நேரங்களில் தமிழ்ப்புராணங்கள், திருப்புகழ் போன்ற தமிழ் சார்ந்த இலக்கியங்களைப் படிப்பதில் தனக்கு மிகுந்த ஆர்வம் என்கிறார். தனது இல்லத்தில் தமிழ்மொழியிலேயே பேசவேண்டும் என்கிற கொள்கையைத் தானும் கடைபிடித்து தனது பிள்ளைகளுக்கும் கட்டாயமாக்கியுள்ளார். தமிழ் இலக்கிய புத்தகங்களை தன் பிள்ளைகளுடன் படிப்பதில் மிகுந்த ஆர்வம் என்கிறார். தன் பிள்ளைகளைப் போலவே மற்ற குழந்தைகளும் நம் மொழியை கற்க வேண்டும் என்ற நோக்கத்தில், தன்னார்வ மிகுதியால் இவர் தமிழ் பள்ளியோடு இணைந்து செயல்பட்டு வருகிறார். logo
சொந்த ஊர் :  பாண்டிச்சேரி

திருமதி கிருத்திகா தினேஷ் பாபு

பள்ளிப்பருவத்தில் நம்மில் பலரை போன்றே இவருக்கு தமிழ் ஆசிரியரால், மொழி ஆர்வம் ஏற்பட்டது. அது மட்டுமன்று தம் தமிழ் ஆசானின் ஒவ்வோர் விளக்கமும், அவர்களது நடைமுறை வாழ்க்கை அனுபவங்களை அவர் வகுப்புகளில் பகிர்ந்து கொண்டதையும் இன்றும் இவர் நினைவு கூர்கிறார். சரித்திர நாவல்கள், வரலாற்று கூறுகள் மற்றும் சஞ்சிகைகள் வாசிப்பது இவருக்கு பிடித்தமான விஷயம்.அடுத்த தலைமுறையினருக்கு அதுவும் குறிப்பாக அயல்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு நம் மொழியின் அறிவு மிகவும் அவசியம் என்று கருதுகிறார். அந்த நோக்கத்தை செயலாக்கப்படுத்த தம்மால் இயன்ற உதவியாக தமிழ் பள்ளியோடு இணைந்து ஆசிரிய பணியாற்றி வருகிறார் logo
சொந்த ஊர் :  கரூர் , தமிழ்நாடு
இவரின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

கவிதை பகுதி - தியாகம்
 — சண்முகப்ரியா

தியாகம்!

செல்ல மகளெ, சின்ன குயிலே
ஆயிரம் கழுத்து மணிமாலை தராத​ ஆனந்தம்
அழகிய​ உன் இரு கைகளின் அணைப்பு தந்தது!

ஒவ்வொரு விடியலின் பொழுதும்
உனது கைகளை ஒப்புக்கான​ தலையணையில்
வைத்து எழுகையில் அம்மா என​ நீ அழைப்பாய்!

உழைப்பிற்கும் உரிமைக்கும் சம​ விழுக்காடு
பரிமாற​ தவிக்கும்
மதில் மேல் பூனையான​ என் மனது!

நான் உனைக் காணும் போது
எனை தேற்றி
நீ எனை தேடும் போது
உனை தேற்றி
மெழுகாய் உருகி நடனமும் ஆடி
உனை மகிழ்வித்து
எனை மறக்க வைக்கும் உன் அப்பா! 

ஜீவித்திற்க அன்பு சுவாசத்திற்கு
தேவையான​ காற்றல்லவோ!
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்!
ஆயிரம் உறவுகள் அலைபேசியிலும்
பழகிய​ உறவுகள் நேரிலுமாய்,
உனைக் கொஞ்சி மகிழ்விக்க
சிவா , பாஸ் , ஷோனி ,அமலா , ஹேமா என​ ஆரம்பமாகி
நீள்கிறது அன்பு அத்தை, மாமன்களின் எண்ணிக்கை!

மெதுவாய் யோசிக்க​ வைக்கும்
உனது ஏக்கம் அனைத்தும் . . . . . .
வாழ்வின் தேவையை நிறைவிக்க​
உழைக்க​ செல்வதால்
நான் அல்ல . . .

நீ செய்கிறாய் தியாகம்
என்னுடன் உனக்காய் கிடைக்க​ கூடிய​ மணித்துளிகளை!

அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்

நான் என்னுடைய Friendoda விளையாடினேன் நான் என்னுடைய நண்பனோடு விளையாடினேன்
பாப்பா, ரொம்ப நேரம் TV பார்க்காதே பாப்பா, நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்க்காதே
வா, store-க்கு செல்வோம் வா, அங்காடிக்கு/கடைக்கு செல்வோம்
Doora மெதுவா open பண்ணு மெதுவாக கதவை திற
நான் daily school-க்கு cycle-ல போவேன் நான் தினமும் பள்ளிக்கு மிதிவண்டியில் செல்வேன்

செய்யுள் பகுதி

கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. இந்நூல் பாலை- பெருங்கொடுங்கோன் , குறிஞ்சி- கபிலர் , மருதம்- மதுரை மருதனிளநாகனார் , முல்லை- சோழன் நல்லுருத்திரன் , நெய்தல்- நல்லந்துவனார்.

இதனை, பெருங் கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி; மருதன் இளநாகன் மருதம்; அருஞ்சோழன் நல்லுருத்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல் கல்வி வலார் கண்ட கலி. என்ற பாடலின் மூலம் அறியலாம். இந்நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. கலித்தொகையில் எண்ணற்ற பேச்சுவழக்குச் சொற்கள் வாய்மொழி இலக்கியச் சாயலில் அமைந்துள்ளன. ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருகின்ற தாழிசையமைப்பும் வாய்மொழிப் பாடல் வடிவைச் சார்ந்தவை. அதற்கு சில சான்றுகளாக,

1.“பலவறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே. -பாலைக்கலி-(9) மலையிலே பிறக்கின்ற சந்தனமானது தன்னை அணிபவர்களுக்குப் பயன் தருமே அல்லாது அம்மலைக்கு எந்த பயனையும் தராது. அதுபோலவே உன் மகளும் உமக்கு பயன்படவேண்டிய காலத்தில் பயன்படாள் என்று கூறப்பட்டுள்ளது.

2.“சீர்கெழு வெண் (2) முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே. -பாலைக்கலி-(9) தலைமை பொருந்திய வெள்ளிய முத்துக்கள் அணிபவர்களுக்கு பயன்படுமே அல்லாது கடலிடத்தே பிறந்தாலும் அம்முத்து கடலுக்கு என்ன பயன் தரும் . ஆராய்ந்து பார்த்தால் நும்முடைய மகளும் பயன்படும் பருவத்து நுமக்குப் பயன்படாள்;

3.“ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே. -பாலைக்கலி-(9) ஏழுநரம்பால் உருவான இனிய ஓசைகள் பாடுவார்க்குப் பயன்கொடுக்குமே அல்லாது யாழிடத்தே பிறிந்தனவாயினும் அவ்வோசை அந்தயாழுக்கு என்னபயனைக் கொடுக்கும்? ஆராயுங் காலத்து நும்முடைய மகளும் பயன்படும் பருவத்து நுமக்குப் பயன்படாள்.

இவ்வாறாக கலித்தொகைப் பாடலில் வாய்மொழி இலக்கியப் பண்பாகிய ஒரு செய்தியை பல முறைகளில் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருகின்ற அமைப்பைக் காணலாம்.


சிந்தாமணிக் கடலில் ஒரு சிறு பயணம்!
 — மேகலா இராமமூர்த்தி

Megala Ramamoorthy

ஐம்பெருங்காப்பியங்களில் கதை அடிப்படையில் காலத்தால் மூத்ததும் காப்பியத்திற்கான இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதுமான தலைசிறந்த நூல் சீவக சிந்தாமணி ஆகும். சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி இக்காப்பியத்தைச் சமண முனிவரான திருத்தக்க தேவர் தமிழில் இயற்றியுள்ளார். சிந்தாமணி என்பதற்கு நெஞ்சில் பொதிந்துவைத்துக் காக்கவேண்டிய தேவருலக மணி என்று பொருள் கூறுவர்; அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்றதொரு காப்பியம் என்னும் பொருளில் இந்நூலுக்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பிய ஆசிரியர் என்கின்றனர் தமிழ்ச் சான்றோர். இந்நூலின் சிறப்பை நோக்கும்போது இப்பெயர் இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமே என்பதில் சற்றும் ஐயமில்லை.

இக்காப்பியத்தின் தலைவனாகிய சீவகனுக்கு அவனுடைய தாயாகிய விசயை முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதே. சீவகன் என்னும் பெயர் பின்னர் வானொலியாகத் (அசரீரி) தோன்றிய சீவ என்னும் வாழ்த்துச்சொல் கேட்டு கந்துக்கடன் என்னும் வணிகன் (சீவகனின் வளர்ப்புத் தந்தை) இட்ட பெயரே என்பது இக்காப்பியம் கூறும் செய்தியாகும்.

மனித வாழ்வின் பண்பாகவும், பயனாகவும் கருதப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் இச்சிந்தாமணிக் காப்பியம் இனிதே எடுத்துரைப்பதனால் இதனை முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும் கூறுவர்.

சிந்தாமணியை விருத்தப்பா என்னும் யாப்புநடையில் திருத்தக்க தேவர் அழகுற அமைத்துள்ளார். இவ்விருத்தப்பா சிறந்த ஓசைநயமும், சொல்லழகும் உடையது. செய்யுள் இயற்றுவதிலே விருத்தம் என்னும் ஓர் புதிய பாதையை முதன்முதலில் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருத்தக்க தேவரையே சாரும். அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் தேவரின் பாணியையே (பெரும்பாலும்) பின்பற்றி அதில் வெற்றியும் கண்டன எனலாம்.

இவ்விருத்தப்பாவை தேவருக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர் கம்பரே ஆவார்; அவருடைய கம்பராமாயணம் முழுவதும் விருத்தப்பாவில் படைக்கப்பட்டுப் பெரும் புகழையும், வரவேற்பையும் இன்றளவும் தமிழ்கூறு நல்லுலகில் பெற்றிருக்கின்றது. கம்பருக்கு inspiration’ திருத்தக்க தேவரே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிந்தாமணிக் கடலில் சிறிது முகந்துகொண்டேன் என்று கம்பநாடனே கூறியுள்ளதாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு.

இனி, சீவக சிந்தாமணிக் காப்பியம் குறித்துச் சில செய்திகள்…

சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் தொடங்கி முத்தி இலம்பகம் ஈறாக மொத்தம் 13 இலம்பகங்கள் உள்ளன. இலம்பகம் என்பது அத்தியாயம் என்பதுபோல் காப்பியத்தின் உட்பிரிவைக் குறிப்பதாகும். இந்நூலில் மொத்தம் 3145 பாடல்கள் உள்ளன.

காப்பியத்தின் முதல் பகுதியாக வருவது நாமகள் இலம்பகம். இவ்விலம்பகத்தில் ஏமாங்கதம் என்றழைக்கப்படும் நாட்டின் இயற்கை வளமும், அந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் (சீவகனின் தந்தை), விசயை (சீவகனின் தாய்) ஆகியோரின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களும் அழகிய பாடல்கள் வடிவிலே விளக்கப்பட்டுள்ளன.

அரசனாகிய சச்சந்தன் அவனுடைய அமைச்சனான கெடுமதி படைத்த கட்டியங்காரனால் அநியாயமாகக் கொல்லப்பட்டது; கருவுற்றிருந்த அரசமாதேவி விசயை மயிற்பொறி எனும் வானவூர்தி ஒன்றில் பறந்துசென்று அரண்மனையில் பிறக்கவேண்டிய அரசிளங்குமரனான சீவகனைச் சுடுகாட்டில் ஈன்றது; பின்பு கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தை சீவகனைப் பத்திரமாக எடுத்துச்செல்வதைக் கண்டபின் அவள் துறவறம் பூண்டது எனப் பல துன்பியல் நிகழ்வுகளை வரிசையாகப் பட்டியலிட்டு அவலச்சுவையை நாம் முற்றாகச் சுவைக்குமாறு செய்துவிடுகின்றது நாமகள் இலம்பகம். எனினும் இதில் இடம்பெற்றுள்ள ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் கூறும் பாடல்கள் தேனில் தோய்த்தெடுத்த தீம்பலாச் சுளைகளாக இனிக்கவே செய்கின்றன; அவற்றிலிருந்து ஒன்று நாம் சுவைக்க…

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென்று இசையால்திசை போயது உண்டே 
(நாமகள் இல: பாடல்: 31)

நன்றாகக் காய்த்த தென்னைநெற்றானது (தேங்காய்) தான் கீழே வீழும்போது கமுகின் உச்சியிலுள்ள தேன்போலும் இனிய நீரையுடைய குலையைக் கீறி, பலாப் பழங்களைப் பிளந்து பின்னர்த் தேமாங்கனிகளைச் சிதறச்செய்து, வாழைப் பழங்களையும் சிந்தச் செய்யும் வளம்பொருந்திய நாடு ஏமாங்கதம் என்று இந்நாட்டின் வளம் சுவைபடக் கூறப்பட்டுள்ளது எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

நாமகள் இலம்பகத்தை அடுத்து வரும் இலம்பகங்களில் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களைத் தன் பல்வேறு திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திக் காப்பிய நாயகன் சீவகன் மணம் செய்துகொள்வது விரிவாகப் பேசப்படுகின்றது. இத்தனைத் திருமணங்களை நாயகன் (அலுக்காமல்!) செய்துகொள்வதாலேயே இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. பின்னர்த் தன்னருமைத் தந்தையைக் கொன்று ஏமாங்கத நாட்டைக் கைப்பற்றிய கொடுங்கோலனான கட்டியங்காரனைத் தன் தாய்மாமன் கோவிந்தனின் துணையோடு போரில் வீழ்த்தித் தன் நாட்டை மீண்டும் கைப்பற்றுகின்றான் சீவகன். நாட்டின் மன்னனாகி நல்லாட்சி புரிகின்றான். நன்மக்கட்பேறு வாய்க்கப் பெறுகின்றான்.

இக்காப்பியத்தைப் படிப்போர்க்கு ஒரு சமணத் துறவி அறக்கருத்துக்களையும், துறவுநெறியையும் வலியுறுத்திக் காப்பியம் படைப்பதை விடுத்துக் காமச்சுவை மிகுந்த ஒரு காப்பியத்தை இயற்றுவானேன்?’ என்ற ஐயம் எழலாம். தேவர் இக்காப்பியத்தை இயற்றியதற்கான காரணமாகச் சொல்லப்படுவது….ஒரு சமயம் திருத்தக்க தேவரிடம் மற்ற புலவர்கள், துறவியான உம்மால் துறவறக் கருத்துக்களை மட்டுமே பாட இயலும்; அகப்பொருள்சார் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துகூற அதனைப் பொய்யாக்கவே அவர் அகப்பொருள் செய்திகள் செறிந்த இக்காப்பியத்தைப் படைத்தார் என்று கூறுகின்றனர் அறிஞர் பெருமக்கள். கவிஞர் என்றானபின் காதலைப் பாடவேண்டிய கட்டாயம் காவியுடை தரித்தவர்க்கும் வந்துவிடுகின்றது பாருங்கள்!

சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்து நோக்கும்போது அஃது திருமால் அவதாரக் கதைகளில் ஒன்றான கண்ணன் கதையைப் பெரிதும் ஒத்திருப்பதை நம்மால் உணரமுடிகின்றது. கண்ணன் ஆயர்பாடியில் கோபியர்களுடன் இராச லீலைகள் பல நிகழ்த்தினான்; போர் செய்தான்; அரசாட்சி செய்தான்; அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவினான்; மன்னுயிர் ஓம்பினான். இத்தனை தொழில்களும் செய்துகொண்டே அவன் உலகப் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்திக் காட்டினான் என்பர் அருளாளர்கள். அதுபோலவே சிந்தாமணிக் காப்பியத் தலைவன் சீவகனும் பல மகளிரை மணக்கின்றான்; போர் செய்கின்றான்; அரசாளுகின்றான்; மக்களைத் தீங்கின்றிக் காக்கின்றான். இத்துணைச் செயல்களுக்கு மத்தியிலும் அவன் வாழ்வின் நிலையாமையை நன்குணர்ந்தவனாய் படநாகம் எப்படித் தன் தோலை உரிக்குமோ அதுபோல் உலகப்பற்றை உரித்துவிட்டுத் தன் மனைவியர் எண்மருடனும் துறவு பூணுவதாகவும், தவமியற்றி வீடுபேற்றை அடைவதாகவும் காப்பியத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

இக்காப்பியத்தின் இறுதிப் பகுதியாகிய முத்தி இலம்பகம் பல அரிய அறக்கருத்துக்களை, வாழ்வியல் உண்மைகளை எடுத்தியம்பி மனித மனத்தை பக்குவப்படுத்துகின்றது. ஒழுக்கம் என்பதற்கு விளக்கம் கூறும் இனிய பாடலிது!

உள்பொருள் இதுவென வுணர்தல் ஞானமாம்
தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
விள்ளற இருமையும் விளங்கத் தன்னுளே
ஒள்ளிதின் தரித்தலை யொழுக்கம் என்பவே. 
(முத்தி இல: பாடல்: 2845)

உண்மைப் பொருள் எதுவென உணர்தலே ஞானம் எனப்படும். அப்பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சியாகும்; அத்தகைய ஞானத்தையும், தெளிந்த காட்சியையும் ஒருவன் தன் மனத்திலே சிறப்புற நிலைபெறச் செய்வதே ஒழுக்கம் ஆகும் என்கிறார் திருத்தக்க தேவர். ஞானம், காட்சி, ஒழுக்கம் இம்மூன்றினையும் மும்மணிகள் (இரத்தினத்திரயம்) என்பர் சமணர்கள்.

இவ்வினிய தமிழ்க் காப்பியத்தைக் கற்று அதன் சுவையில் மனத்தைப் பறிகொடுத்த மேனாட்டுத் தமிழறிஞர் ஜி.யு. போப், கிரேக்க மொழியின் மாகாவியங்களான இலியட், ஒடிசி ஆகியவற்றிற்கு இணையானது இச்சிந்தாமணிக் காப்பியம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். தேம்பாவணி என்னும் தீந்தமிழ்க் காவியம் படைத்த வீரமாமுனிவர், இக்காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர் தமிழ்க் கவிஞருள் சிற்றரசர் என்று பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்கும், பத்துப்பாட்டிற்கும் அற்புதமான உரை வரைந்தவரும், தமிழ்ச் சான்றோரால் உச்சிமேல் வைத்துப் போற்றப்படுபவருமான பெரும்புலவர் நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதிச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு எண்ணரும் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டொளிரும் ஒப்பற்ற காப்பியமாம் சீவக சிந்தாமணியை நாமும் படித்தின்புறுவோம்!


கேள்வி பதில் பகுதி
 — முனைவர் பரிமளா நாதன்

Parimala Nathan

கேள்வி: வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள லங்கா உண்மையில், ஆராய்ச்சி பூர்வமாக எங்குள்ளது? தொல்லியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சி இதைக்குறித்து எந்த முடிவுக்கு வந்துள்ளது?

(இக்கேள்விக்கான பதில் இரண்டு பகுதிகளில் தரப்படும். முதல் பகுதி இந்த இதழிலும், இரண்டாம் பகுதி அடுத்த இதழிலும் தரப்படும்)

பதில்: வால்மீகி இராமாயணம் படித்தவர்களும், கம்ப இராமாயணம் படித்தவர்களும் இதுகாறும் நம்பி வந்தது, இராமாயணக் கதையில் வரும் இராவணனின் லங்கா தென்னிந்தியாவின் கோடியில், இந்தியக் கடலில் இப்பொழுது தனி நாடாக விளங்கும் ஸ்ரீஇலங்கா என்ற தீவு தான் என்று. இது உண்மையா? இல்லை என்கிறார் புகழ் பெற்ற தொல்லியல் ஆராய்ச்சியாளரான காலஞ்சென்ற Dr H.D Sankalia அவர்கள் (Pune University). அவரை தொடர்ந்து, University of Sambalpur (Orissa) Vice Chancellor Dr.Sahu, மற்றும் அதே பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துணைத் தலைவருமான Dr.Behura தொடர்ந்து செய்து வந்த ஆராய்ச்சிகள் ஊடே அதே முடிவுக்கு வந்தார்கள். மேலும் இராமாயண லங்கா எது என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். முதலில் Dr. Sankalia அவர்களின் கருத்துகளையும், தரும் ஆதாரங்களையும் சுருக்கமாக பார்ப்போம்.

1.இராவணன் சீதையை கவர்ந்து சென்ற இடம் கிழக்கு இந்தியாவிலுள்ள மிக அடர்த்தியான காடுகளிலிருந்து. தண்டகாரண்யம் எனப்படுவது மத்திய பிரதேசத்திலும், ஒடிசாவின் மேற்கு பகுதியிலும் பரவியிருந்த அடர்ந்த காடு. அங்குதான் சூர்பநகை இராமன் மேல் ஆசைகொண்டு இலக்குவனால் அவமானப்படுத்தப்பட்டாள். 2000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தீவான ஸ்ரீலங்காவிலிருந்து மத்திய இந்திய தண்டகாரண்யத்தில் அவள் சுற்றிக் கொண்டிருந்தது நம்ப கூடிய செயலாக, யதார்த்தமான செயலாக இருக்க இயலாது. ஆனால் அவள் வசிப்பிடம் தண்டகா காட்டின் அருகில் இருந்தால் இது நம்பக்கூடியதாக யதார்த்தமாக இருக்கும்.

2.இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் வானரப்படை சால் மரங்களை வேருடன் பெயர்த்து எதிரிகள் மேல் வீசியதாக கதையில் கூறப்பட்டுள்ளது. இந்த சால்(sal) மரங்கள் மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் அடர்ந்து வளர்கின்றன தவிர, ஸ்ரீலங்காவில் இம்மரங்களை காணவே முடியாது. போரில் பாலம் அமைத்ததும் இந்த மரங்களை வைத்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

3.பண்டைய வடமொழி நூல்கள் ஸ்ரீலங்காவை சிம்ஹலதீவிபா(Simhaladvipa) என்றும் தாம்ரபர்ணி(Tamraparni) என்றும் குறிப்பிடுகின்றன. லங்கா என்ற பெயரால் எங்கும் குறிப்பிடவில்லை. இராவணனின் லங்காவை ஸ்ரீ லங்காவுடன் அடையாளம் கொண்டு நம்பியது(identified with SriLanka) கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான், இராமாயணக்கதை நாட்டில் சற்று பரவிய பிறகு.

4.வால்மீகி இராமாயணத்தை ஆராய்ச்சி கண்ணோட்டத்திலும், விமர்சன (Critical reading) அணுகுமுறையில் படித்தால் ஒரு உண்மை நன்றாக விளங்குகிறது. இராமனின் வனவாசத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் கிழக்கு இந்தியாவின் காட்டுப்பகுதியில் நடந்தனவே தான் என்று தெளிவாக தெரிகிறது. இராமாயணம் முழுவதிலும் நர்மதா நதி எங்கும் குறிப்பிடபடவில்லை. இராமன் தெற்கே தென்னிந்தியாவை நோக்கி சென்றிருந்தால் நர்மதா நதியை கடக்காமல் சென்றிருக்க முடியாது. மேலும், சுக்ரீவன் சீதையைத் தேடும் பொருட்டு வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு ஆகிய திசைகளுக்கு தன் படைகளை அனுப்புகிறான்.அப்பொழுது அவர்களுக்கு மிக தெளிவான கூர்ந்த குறிப்புகளை தருகிறான். அதாவது, directions and boundaries of areas to be searched. இந்த குறிப்புகளையெல்லாம் கவனமாக படித்தால் யாவும் விந்திய மலை ஓரமாக உள்ள காடுகளும், மலைப் பகுதிகளும் தான் என்று தெள்ளத் தெளிய விளங்குகிறது. சம்பட்டி என்னும் கழுகு அரசனின்(ஜடாயுவின் சகோதரன்) மகன் சுபர்ஸ்வா (Suparsva) அனுமனுக்கு ஒரு முக்கிய செய்தி கூறுகிறான். அது என்னவென்றால், தான் விந்திய மலை அருகே மகேந்திர துவரா என்ற இடத்தில் அமர்ந்திருந்த பொழுது ஒரு கரிய நிறத்தவன் ஒரு சிவந்த மேனி பெண்ணை தன் கைகளால் தூக்கிக் கொண்டு சுபர்சாவின் அருகே வந்து, வழி விடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், தானும் வழி விட்டதாகவும் கூறிற்று. கதையில் வரும் இந்த செய்தி ஒரு முக்கிய ஆதாரம். இராவணன் அந்த பெண்ணை தன் கைகளில் ஏந்தி சென்றதனால்(புஷ்பக விமானத்தில் அல்ல) அவனுடைய வசிப்பிடம் மிக அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என்பதாகும்.

5.இராமனுக்கு ஆதரவாக இருந்தவர்களை வானரங்கள் என்றும் கரடிகள் என்றும் குறிப்பிடுகிறது இராமாயணம். ஆனில் மனிதர்கள் போலவே பேசவும் யோசிக்கவும் செயலில் ஈடுபடுகின்றன எனவும் கூறுகிறது. எனவே, இவர்கள் தண்டகாரண்யம், மற்றும் கிஷ்கிந்தையை சேர்ந்த காட்டில் வாழ்ந்த குலகுழுக்கள்(tribes & aboriginals) ஆக இருந்திருக்க வேண்டும். அவர்களின் குலகுழு அடையாளமாக(tribal totem) வானரம், மற்றும் கரடியும் இருந்திருக்க வேண்டும். அல்லது, அவர்களுடைய தோற்றம் சற்று அவ்விலங்குகளை நினைவுறுத்தும் படியாக இருந்திருக்கலாம்.

6.ஒடிஷாவின் மேற்கு பகுதிகளிலும், மற்றும் சில பகுதிகளிலும் லங்கா என்ற பெயருடனும் அந்த பெயரை விகுதியாக கொண்டும் பல சிற்றூர்களும் , சிறு நகரங்களும் உள்ளன.

  1. சீதையை இராவணன் கவர்ந்து சென்ற இடமும், இராவணனுடைய லங்கா’வும் கிழக்கு இந்தியாவில் இருந்தன என்பதற்கு முக்கிய ஆதாரம் தேடும் பொழுது அந்த பிரதேசத்தில் வாழும் மக்களிடையே மரபுவழிக் கதைகள்(folklore) உண்டா என்று காண வேண்டும். Dr.Sankalia வின் காலத்திற்கு பிறகு, இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Dr.Sahu வும், Dr.Behera வும் அவ்விடத்து பழங்குடி மக்கள் மற்றும் குலக்குழு மக்களின் மரபு கதைகளை கண்டறிந்தார்கள். அவை என்ன என்றும் , எதை கூறுகின்றன என்றும் அடுத்த இதழில் பார்ப்போம். இது போன்ற இராமன்-சீதை-இராவணன் மரபுக்கதைகள் ஸ்ரீலங்காவில் இல்லை என்றும் அறிய வேண்டும். இராவணனின் லங்கா எங்கு identify’ செய்யப்பட்டது என்பதையும் அடுத்த இதழில் காண்போம்.

இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.


Posted on March 10, 2020   #Shanmuga Priya     #Megala Ramamoorthy     #Parimala Nathan  







← Next post    ·    Previous post →

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!