இதழ்: பதினேழு , பிப்ரவரி 2020
ஆசிரியர் : சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : கார்த்திகா.
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
வரும் வாரம் பிப்ரவரி 14 மற்றும் 15-ம் நாட்களில் இரண்டாம் பருவத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதற்கான இடம், கால மற்றும் நேர அட்டவணை அனைத்து பெற்றோர்களுக்கும் புலனத்தின் (whatsapp) மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேர்வுக்கான பாடங்களை மீண்டும் சுருங்க எடுத்துரைத்தும்,மாதிரி வினாத்தாள் கொண்டும் பயிற்சி அளித்துள்ளனர்.
உங்களுக்கான ஐயப்பாடுகளை எவ்வித தயக்கமும் இன்றி நிர்வாகக்குழு மற்றும் ஆசிரியர்களிடமும் கேட்டு தெளிவு பெற வேண்டிக்கொள்கிறோம்.
தேர்வு முடிந்த மறு வாரம் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வில், குழந்தைகளின் மொழி வளர்ச்சியை ஆசிரியர்களோடு கலந்துரையாடி தெரிந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதும் போது, இறுதி நேரத்தில் பணியாற்றாமல் , வாரத்தில் சில நாட்களில் சில மணித்துளிகள் செயல்பட பழக்கப்படுத்தினோமென்றால், அவர்களுக்கு மொழியின் திறன் வளர்வது மட்டுமன்றி , நம் மொழி மிகவும் பரிட்சியமாவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் இம்முறையை தொடர்ந்து பின்பற்றும் பொழுது குழந்தைகள் தேர்வை மிகவும் எளிமையாகவும் எவ்வித தயக்கமும் இன்றி எதிர் கொள்வர்.
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
இம்மாத (பிப்ரவரி -2020 ) பள்ளி கால அட்டவணை
02/07/2020 — 02/08/2020 | உண்டு |
02/14/2020 — 02/15/2020 | உண்டு |
02/21/2020 — 02/22/2020 | கட்டாய பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு |
02/28/2020 — 02/29/2020 | உண்டு |
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
சென்ற மாத இதழில், முதல் ஆசிரியருக்கான சமர்ப்பணமாக ஓர் பாவை நல்கிய திரு.ஷேக் அப்துல் காதர் அவர்களுக்கு ஆசிரியர் குழு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பாடலும் , செய்தி மடலின் பிரதான எழுத்தாளர்களின் பங்களிப்பில் வெளியான “தோழியின் நன்னர் நெஞ்சம்!” என்ற கட்டுரையும் , Stoicism பற்றிய தகவலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. எழுத்தாளர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும் பணிவான பாராட்டுகளும்.
“கேள்வி பதில்” பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை newsletter@tampabaytamilacademy.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
TBTA பள்ளி அங்கீகாரம், தற்போதைய நிலை:
டிசம்பர் மாதம் நம் பள்ளியை ஆய்வு செய்த குழு, தணிக்கை நிறுவன நிர்வாகத்திடம் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இறுதி கட்ட முடிவு சில மாதங்களில் நமக்கு தெரிவிக்கப்படும்.
தமிழ் பள்ளியின் நன்றி!
![]() |
அங்கீகார குழு தலைவர் திரு தனசேகர் அவர்களின் முயற்சியும், செயல்பாடுகளும், நம் எல்லோரையும் ஒருங்கிணைத்த முறையும் அங்கீகார ஆய்வு சீரான முறையில் நடைபெற்றமைக்கு அளப்பரிய உதவியாக இருந்தது. நம் தமிழ் பள்ளி, அனைவரின் சார்பாக அவருக்கு மிக்க நன்றியை உரித்தாக்குகிறது. |
![]() |
ஜாக்சன்வில்லே தமிழ் பள்ளி தலைவர் திரு கதிரவன் பெரியசாமி அவர்கள் அங்கீகார ஆய்வுக்கு வழங்கிய ஆலோசனைகள் நம்மை தயார் செய்து கொள்ள பேருதவியாக இருந்தது. சமீபமாக ஜாக்சன்வில்லேயில் நடந்த பொங்கல் விழாவில், நம் மரியாதையையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக, தமிழ் பள்ளி சார்பாக திரு செய்யது முகைதீன் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். |
ஆசிரியர் அறிமுகம்
திருமதி ராஜ மீனாட்சி சுப்ரமணியன்
பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்ற போதிலும் தமிழ் மன்றத் தேர்வுகளில் கலந்து கொண்டு பல வெற்றிகள் பெற்றிருப்பதன் மூலம் இவரது மொழித்திறமை புலப்படுகிறது.இதற்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தது இவரது பாட்டி. சிறுவயது முதலே திருப்பாவை , திருவெம்பாவை போன்ற நூல்களை தனது பாட்டியின் உதவியோடு கற்றறிந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது தமிழார்வம் குன்றாமல் இருந்ததற்கு தன் கணவரது தமிழ் மொழி ஈடுபாடு தான் காரணம் என்கிறார். சான்றாக , தினசரி வாழ்க்கையில் தனது ஒவ்வொரு பேச்சிலும் விளக்கத்திலும் திருக்குறள் , ஆத்திச்சூடி , தமிழ்ப்பழமொழிகள் , போன்றவற்றை மேற்கோளிட்டு காட்டுவார் எனப் பெருமையுடன் கூறுகிறார். தன் மனதோடு ஒன்றிய சில நூல்களாக பொன்னியின் செல்வன் , என் கண்மணித் தாமரை , பாலகுமாரன் நாவல்கள் எனப் பட்டியல் நீள்கிறது.தன் குழந்தைக்குப் புகட்டிய தமிழுணர்வைப் பிற பிள்ளைகளுக்கும் புகட்டவே TBTAவில் இணைந்து பணிபுரிய வந்துள்ளதாகக் கூறுகிறார். |
![]() சொந்த ஊர் : மதுரை, தமிழ்நாடு |
திரு கார்த்திக் சுப்ரமணியம்
பள்ளியில் தமிழ் வழிக்கல்வி முறையில் கற்றார். இயல்பிலேயே நம் மொழி மீதிருந்த ஈர்ப்பினால், சிறு வயதில் எண்ணற்ற மொழி சார்ந்த பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் பங்கு பெற்றதை நினைவு கூர்கிறார். ஆரோக்கிய வாழ்வு முக நூல் குழுவில் பகிரப்படும் “உணவே மருந்து” தமிழ் மருத்துவக் குறிப்புகளை , நண்பர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தினருக்கு தொகுத்து கொடுப்பதில் முனைப்பாக செயல்படுகிறார். வா.மணிகண்டன் அவர்களின் “நிசப்தம்” வலைப்பதிவில் உலவுவதும் , அதில் இடம் பெரும் கருத்தாக்கத்தை தொடர்வதும் இவருக்கு பிடித்தமான ஒன்று.மொழி மீதான அன்பாலும் , ஆசிரிய பணி மீதான நாட்டத்தாலும் தமிழ் பள்ளியோடு இணைந்து குழந்தைகளுக்கு கற்று கொடுத்து வருகிறார். மேலும் இவ்வாய்ப்பின் மூலமாக, குழந்தைகளிடம் இருந்து அவர் நிறைய கற்று கொள்வதில் மிகுந்த மகிழ்வையும் பெருமையும் அடைகிறார். |
![]() சொந்த ஊர் : கோபி, தமிழ்நாடு |
இவரின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!
தமிழர் விளையாட்டு விழா அழைப்பிதழ்
தாம்பா மற்றும் சுற்று வட்டார தமிழ் மக்களே, நீங்கள் பால்யத்தில் ஆடிய விளையாட்டுகளை உங்கள் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்த, நாமும் குழந்தைகளோடு குழந்தைகளாக நம் நண்பர்களோடு இணைந்து பள்ளி பருவத்திற்கே சென்று புத்துணர்ச்சி பெற ஓர் அரிய வாய்ப்பு.விளையாட வாங்க! சந்தோசமா போங்க! |
கவிதை பகுதி - சத்தம்
|
![]() |
சத்தம் !
என் மூளையின் ,
எங்கோ ஒரு மூலையில்,
சிறு முனகலாய் கேட்டது அந்த சத்தம் !
துளியளவு வெளிச்சமும் இல்லாத ,
இருட்டு அறையில், தனிமைச் சிறையில்
தவிக்கும் என் காதுகளைக் கிழித்துக் கொண்டு
ஈட்டியாய் பாய்கிறது அந்த சத்தம்!
முனகலாய் இருந்த சத்தம்,
வலுப்பெற்று..., வலுப்பெற்று...,
வலியின் வேதனையில்
அழுவதை போல் கேட்கிறது!
அழுவது யார்?
அழுவது ஏன்?
தட்டுத்தடுமாறி,
இருட்டு அறையின் ,
சுவற்றின் ஓரம்
காதை வைத்துக் கேட்டேன்!
அய்யோ....என்ன கொடுமை?
அது என் தாயின்
அழுகைச் சத்தம் அல்லவா?!!
ஓடி சென்று காப்பாற்றி,
கட்டியணைத்து, கண்ணீர் துடைத்திட,
இயலாத நிலையில் சிறை பட்டு கிடக்கின்றேனே ....
என் அம்மாவுக்கு என்னவாயிற்று?
யார் யாரோ ஏதேதோ பேசுகிறார்களே....
புரியாமல் தண்ணீருக்குள் தத்தளிக்கிறேனே....
அப்பா....
என் தாயின் அழுகையை ஆற்றாமல்...
என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள் அங்கே?
யாரோ என் தாய்க்கு ஆறுதல் சொல்லும்
சத்தமும் கேட்கிறதே... யார் அது?
ஓ ... என் அம்மாவின் அம்மா தான் அது!
பாட்டி....
நீங்கள் இருந்துமா, என் தாய் அழுகிறாள்?
அப்படி என்னவாகி விட்டது அவளுக்கு?
இறைவா...
எனக்கு கேட்கும் அந்த சத்தம் ,
உனக்கு கேட்கவில்லையா?
ஓடி வா... என் தாயை பார்!
இனியும் உங்களை நம்பி எந்த பலனும் இல்லை!
அழாதே தாயே .... நான் இருக்கிறேன்...
எத்தனை பெரிய இரும்பு கோட்டையாகினும்
தகர்த்தெறிந்து உன்னைக் காப்பாற்ற
நான் வருகிறேன் தாயே!
என் முழு பலத்தையும் இறக்கி,
இருட்டு அறையின், முரட்டு சுவற்றை
முட்டி மோதி, கதவை உடைத்து
வெளியே வந்தேன்!
எங்கே என் தாய்?
எங்கே என் தாய்?
நான் உள்ளே இருக்கும் போது
கேட்ட அந்த சத்தம் இப்போது கேட்கவில்லையே?
எங்கே என் தாய்?
எங்கே என் தாய்?
அதோ அங்கே கண்டுவிட்டேன் என் தாயை!
என்ன ஆச்சர்யம்?
என்னைப் பார்த்ததும்
விழியோரம் வழியும்
நீரைத் துடைத்து
ஆனந்த புன்முறுவலோடு, -என்னை
அள்ளி எடுத்து கொஞ்சினாள்!
ஆம்!
நான் பிறந்து விட்டேனாம்!
என் தாயின்
இத்தனை வலிக்கும்,
இத்தனை அழுகைக்கும்,
நான் தான் காரணமா?
குற்ற உணர்ச்சியில்,
பெரும் சத்தத்தோடு
பீறிட்டு அழுதேன்!
என்றும் அன்புடன்,
ஷேக் அப்துல் காதர்
அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்
பாப்பா, என்ன grade படிக்கிறாய்? | பாப்பா, என்ன வகுப்பு படிக்கிறாய்? |
தம்பி, இந்த வாரம் எந்த Lesson ஆசிரியர் கற்றுக்கொடுத்தார்? | தம்பி, இந்த வாரம் எந்த பாடம் ஆசிரியர் கற்றுக்கொடுத்தார்? |
இன்றைக்கு breakfast அனைவருக்கும் இட்லி. | இன்றைக்கு சிற்றுண்டி அனைவருக்கும் இட்லி. |
Daily Exercise செய்யலாமே | அன்றாடம் உடற்பயிற்சி செய்யலாமே |
Fan மிக வேகமாக சுத்துது | மின்விசிறி மிக வேகமாக இயங்குகிறது |
உங்கள் யோசனை மிகவும் useful, Thanks | உங்கள் யோசனை மிகவும் உபயோகப்பட்டது, நன்றி |
இலக்கிய பகுதி
பழமொழி நானூறு
(எழுதியவர் : முன்றுறை அரையனார்)
சென்ற மாத இதழில் பழமொழி நானூறு எனும் நூலின் சிறுபகுதியை விளக்கத்துடன் கண்டோம். இம்மாதம் அந்நூலில் இருந்து சில பழமொழிகளை அதன் பொருளோடு காணலாம்.
“அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு” - அதாவது கையில் பொருள் சிறிது இருந்தாலும் விடாமுயற்சியால் அதனைப் பெரிதாக்கி தன்னை இகழ்ந்த ஊர் மெச்சும் படி வாழ முயற்சிக்க வேண்டும்.
“அணியெல்லாம் ஆடையின் பின்”. -பொருள்- ஆடைக்குப் பின்னரே அணிகலன்கள் முக்கியத்துவம் பெரும். அதுபோல அறிவுடைமையின் மேல் பிற செல்வங்கள் சேர்ந்தால் பயன்தரும். இல்லையேல் அது பயனற்று போய்விடும். ஆடையே முதன்மையானது.
“அறம்செய்ய அல்லவை நீங்கிவிடும்”. அறம் செய்பவர்கள் தகுதி உடையவர்க்கு அறம் செய்வதால் மட்டுமே அறத்தின் பயனை முழுமையாக அடைவார்கள். அறம் செய்யப் பாவம் நீங்கும் என்பது கருத்து.
“அறிமடமும் சான்றோர்க்கு அணி”. -அதாவது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையும் மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனையும் புலவர்கள் போற்றுவர். அவை கொடுத்தாலும் பயன் அறியாதவை என அறிந்தும் அவர்கள் வாரி வழங்கியதால் புகழ்பெற்றனர். அறிந்தே செய்யும் மடமையும் சான்றோக்குச் சிறப்பே.
“ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்”. அதாவது ஆயிரம் காக்கையை ஓட்டுவதற்கு ஒரு சிறு கல் போதுமானது. அதுபோல ஆயிரம் பகைவரை துரத்தியடிக்க வீரம் பொருந்திய ஒரு அரசனே போதும் என்பது கருத்து.
பழமொழி நானூறில் உள்ள பழமொழிகள் அனைத்தும் அன்றும் இன்றும் என்றும் நம் வாழ்க்கைக்குப் பொருந்துகின்ற பல நல்ல உள்ளடக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.
சிறுவர்ப் பயந்த செம்மலோர்!
|
![]() |
மனித சமுதாயத்தினர் மேற்கொண்டொழுகும் இரு அறங்கள் இல்லறமும் துறவறமும் ஆகும். இவற்றில் மற்றவர்களையும் வாழ்வித்துத் தானும் வாழும் பெற்றி பற்றி இல்லறமே சிறந்தது எனலாம்.
வள்ளுவரும்,‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்றுகூறி இக்கருத்துக்கு அரண் சேர்க்கிறார். இல்வாழ்க்கையின் நன்கலமாகத் திகழ்வது அறிவிற்சிறந்த மக்கட்பேறு. அதனால்தான்,
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
என்று மக்கட்பேற்றின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகின்றார் பேராசான். இல்வாழ்க்கையில் எல்லா இணையருக்கும் மக்கட்பேறு விரைவில் வாய்த்துவிடுவதில்லை. சிலர் பலகாலம் தவமாய்த் தவமிருந்துதான் இப்பேற்றைப் பெறுகின்றனர். இதற்குத் தக்கதோர் சான்றாய்ச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுவது பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி. பொருட்செல்வம் மலையெனக் குவிந்துகிடந்தது அவனிடம். காலால் இட்டதைத் தலையால் செய்ய ஏவலர் பலர் இருந்தனர். ஆயினும் அவனுக்கு மனத்தில் நிறைவில்லை. காரணம்… மனத்தை மகிழ்விக்கும் மழலையொன்று அவன் மாளிகையில் அதுவரைத் தளர்நடை பயிலவில்லை. இதனை எண்ணி எண்ணித் துயில்தொலைத்தான் அவன்.
வறண்ட பாலையில் திடீரென்று பெய்த மழை, பாலையைப் பசுஞ்சோலையாய் ஆக்குவதுபோல், வறண்டிருந்த அவன் வாழ்க்கையை வளமாக்கும் குழந்தைச்செல்வம், வாராதுபோல் வந்த மாமணியாய், அவனுக்கு வாய்த்தது ஒருநாள்! அவனடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை!
அக்குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் ஆசையோடு கவனித்தான்.
தன் உள்ளத்து உணர்ச்சிகளை அழகியதோர் பாடலாய் வடித்தெடுத்தான் அவன்.
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.
(புறம் : 188 – பாண்டியன் அறிவுடைநம்பி)
பல்வேறு வகையான செல்வங்களைப் பெற்று, பலருக்கும் உணவு படைத்துத் தானும் உண்ணக்கூடிய வசதிபடைத்த செல்வரே ஆயினும், குறுகுறுவென நடந்து, சிறிய கைகளை நீட்டித் தனக்கெனப் பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் நெய்சோற்றைத் துழாவி, மெய்யெங்கும் பூசிக்கொண்டு காண்போர் மனம் மயக்கும் மக்கட்செல்வம் வீட்டில் இல்லையென்றால் அந்த இல்லறத்தின் பயன் குறைவுபட்டே போகும் என்று எழுதிநின்றது அவன் எழுதுகோல்.
இன்பத்தைக் குவியல் குவியலாய்ப் பெற்றோர்க்கு அள்ளித்தருவதால்தான் ‘bundle of joy’ என்று குழந்தையை ஆசையோடு அழைக்கிறார்களோ?
மழலையர் இல்லறவாழ்விற்கு அணிகலனாய்த் திகழ்வதோடு மட்டுமல்லாமல், இல்லறத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிணக்கையும் ஊடலையும் தீர்த்துவைக்கும் சமாதானத் தூதுவர்களாகவும் சிலநேரங்களில் செயலாற்றுகின்றனர். அதனை விளக்கும் அரிய பாடலொன்று அகநானூற்றில் இடம்பெற்றிருக்கின்றது.
இல்லறவாழ்வில் இணைந்தனர் ஒரு தலைவனும் தலைவியும். அவர்களுக்கு அழகான புதல்வன் பிறந்தான். மகிழ்ச்சிக்குக் குறைவின்றிச் சிலகாலம்வரை அவர்களின் இல்லறம் நல்லறமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை…அந்தத் தலைவனின் ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்பட்டது. தலைவியையும் குழந்தையையும் துறந்து பரத்தையரோடு தொடர்புகொண்டான் இதற்கிடையில் இன்னொரு பெண்ணை மணக்கவும் முடிவுசெய்தான் அந்த உத்தமத் தலைவன்(!).
மணநாளும் வந்தது. புதுமாப்பிள்ளைக் கோலம்பூண்டு, பூமாலைகள் அணிந்துகொண்டு தலைவி வசிக்கும் தெருவழியே வந்தான் தேரேறி. வீதியில் தேர்நுழைந்ததும் தேரின் மணிகள் காற்றில் ஒலித்தன. அந்தச் சத்தம் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்த தலைவனின் புதல்வன் காதில் விழுந்தது. அது என்ன சத்தம் என்று அறியவிரும்பிய பாலகன், வீட்டுவாயிலைக் கடந்து தெருவுக்கு ஓடிவந்தான். ஓடிவந்த குழந்தையைத் தலைவனும் கண்டான். உடனே தேரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கியவன், மலரன்ன கண்களும், பவளச் செவ்வாயும் கொண்ட தன் புதல்வனை வாரியணைத்துக்கொண்டான். பின்னர், ”பெரும! நீ உள்ளே செல்!” என்று கூறி மீண்டும் தேரில் ஏற முற்பட்டான். புதல்வனோ தந்தையைவிட்டுச் செல்லமறுத்து அழவே, அவனை விடுத்துச்செல்ல இயலாது தவித்தது தலைவனின் ’தந்தை’யுள்ளம்!
எனவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளிருந்த தலைவி, குழந்தையால்தான் தலைவனின் அவசரப் பயணம் தடைப்பட்டுவிட்டது போலும் என்றெண்ணிக் குழந்தையைச் சிறுகோலால் அடிக்க வந்தாள். அதனை அனுமதிக்கவில்லை தலைவன். அப்போது, ’வா வா’ என்று தலைவனை அழைப்பதுபோல் அவனுக்குப் புதுமணம் நிகழவிருந்த வீட்டிலிருந்து மணமுழவு (கல்யாண மேளம்) ஒலித்தது.
என்ன ஆச்சரியம்! தலைவன் இப்போது மணம் செய்துகொள்ளப் புறப்படவில்லை. தலைவியோடு தான் பழகிய அந்த இனிய நாட்களெல்லாம் அவன் நினைவில் நிழலாடின; ஆகவே மணம் தவிர்ந்தான்!
தலைவன் குறித்த மேற்கண்ட நிகழ்வுகளையெல்லாம் தன் தோழியிடம் விவரித்த தலைவி, மேலும் தொடர்ந்தாள்…
“பகைவரும் விரும்பக்கூடிய அழகும் அறிவும் வாய்ந்த புதல்வரைப் பெற்றோர், புவி வாழ்விலும் புகழோடு விளங்குவர்; மறுமை உலகையும் மறுவின்றி எய்துவர் என்று பெரியோர் உரைத்த பழமொழிகளெல்லாம் வெற்றுமொழிகளல்ல…அவை உண்மைமொழிகளே! என்பதை என் சொந்த வாழ்விலேயே கண்டுவிட்டேன். வாடியிருந்த என் வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தைக் கொணர்ந்தது என் புதல்வனே” என்று புளகாங்கிதத்தோடு புகன்றாள். தோழியும் அதனை ஆமோதித்தாள்!
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண்தொழில் மாமணி கறங்கக் கடை கழிந்து
காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவ என்று இழிந்தனன் தாங்காது
மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும செல்இனி அகத்து எனக்
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம் என மகனொடு
தானே புகுதந் தோனே யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவற்
கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று
அலைக்கும் கோலொடு குறுகத் தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போலவந்து இசைப்பவும் தவிரான்
கழங்குஆடு ஆயத்து அன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே!
(அகம்: 66 – செல்லூர் கோசிகன் கண்ணனார்)
இப்பாடலிலிருந்து அன்றைய சமூகம் குறித்த பலசெய்திகள் நமக்குத் தெரியவருகின்றன. ஆண்மக்கள் தம் மனம்விரும்பியபடி எத்தனை மணம் வேண்டுமானாலும் செய்துகொள்ள அன்றைய சமூகம் அவர்களை அனுமதித்திருக்கிறது. மாறாகப் பெண்களோ, கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் என்று அவன் அன்பையும் அருளையுமே எதிர்பார்த்து வாழ்ந்திருக்கின்றனர். பொருளாதாரச் சுதந்தரமோ, ஒழுக்கம் பிறழ்ந்த கணவனைப் பிரிந்துவாழும் சுதந்திரமோ அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. அதனால்தான் தலைவன் பரத்தையரைத் தேடிச்சென்று அவர்களோடு வாழ்ந்துவிட்டுத் திரும்பிவந்தாலும் அவனைச் சிறு ஊடலோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் அன்றைய தலைவியர். பெண்களை ஆடவரின் அடிமைகளாகவும், நுகர்பொருளாகவும், இரண்டாந்தரக் குடிமக்களாகவும் சமூகம் நடத்திவந்ததன் வெளிப்பாடே இவை எனில் மிகையில்லை.
இத்துணை அவலங்களுக்கு இடையிலும், தலைவன் ஒருவனின் தவறான நடத்தையை அவனுடைய சின்னஞ்சிறு மழலை திருத்திவிட்டதை இப்பாடல்வழி அறியும்போது நம் மனம் மகிழவே செய்கிறது. சிற்றுளி ஒன்று பெரிய மலையையே பிளந்துவிடுவதுபோல், குடும்பப் பாசமற்று மலைபோல் இறுகியிருந்த தலைவனின் உள்ளத்தைத் தன் அன்பெனும் சிற்றுளியால் பிளந்து அதில் அருளைச் சுரக்கச்செய்துவிட்டானே இந்தப் ‘பொடியன்’’ என்று நம் உள்ளம் இக்குழந்தையைக் கொண்டாடவே செய்கிறது.
கேள்வி பதில் பகுதி
|
![]() |
கேள்வி:
“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கூற்று முதலில் எங்கு சொல்லப்பட்டது ?
பதில்:
மிக பழமையான சமண மதத்தில் கூறப்பட்டுள்ளது. ஊழ்வினையைக் குறித்து மிக ஆழமாய் ஆராய்ந்தவர் சமணர்கள். சமண மதம் இந்திய உபகண்டத்தில் பிறந்த மிகவும் பழமையான ஆன்மீக நெறி. பௌத்த மதத்திற்கு முன் தோன்றிய மதம். கடவுள் சார்பற்ற மதம். அதன் மூலக்கோட்பாடு: மனிதனின் வாழ்வை எந்த கடவுளோ தேவனோ நிர்ணயிப்பதில்லை.மனிதனின் வாழ்க்கையை அவனே தான் தன் செயல்களால் நிர்ணயித்துக் கொள்கிறான். He is the architect of his own life. அந்த செயல்களுக்கு விளைவுகள் உண்டு. அந்த விளைவுகளை அவனே தான் அனுபவித்து ஆக வேண்டும். அந்த விளைவுகள் அவனைத் தொடர்ந்து வரும். அவற்றை ஒரே ஒரு பிறப்பில் அனுபவிக்க இயலாததால் அவனை பல பிறப்புகளில் பின் தொடரும். இந்த கர்ம வினைப்பயன் என்னும் நியதி உலகில் ஒரு இயற்கை நியதியாக விளங்குகிறது. It is a universal moral law of cause and effect. அதை எந்த கடவுளும் செயல் படுத்துவதில்லை. அது தானாக செயல்படும் ஒரு இயற்கை நியதி. It is an independent moral law with no executive power above it. It is its own executor. சமண மதத்திற்கும் வைதீக (இந்து) மதத்திற்கும் உள்ள வேறுபாடு இது. வைதீக மதத்தில் இறைவன் கர்மவினைப்பயன் நியதியை ஆட்சி செய்கிறான். சமண மதத்தில் அந்த நியதி சுயமாக அதுவாக ஆட்சி செய்கிறது. சமண மதம் இந்த நியதியை ஆராய்ந்த அளவு மற்ற இந்திய மதங்கள் ஆராயவில்லை என்று கூறினால் பொருந்தும். கர்மம் அல்லது ‘வினை’ என்னும் கருத்தாக்கத்தின் விதை, வைதீக மதத்தை பொறுத்த வரை முதன் முதலில் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. ஆனால் அந்த நூலில் அது மேற்கொண்டு உருவாகவில்லை (was not developed) காலத்தால் சற்று பின்பு வந்த உபநிடதங்கள் ஒரு அளவுக்கு அந்த கருத்தாக்கத்திற்கு உருவு கொடுத்தன.மேலும் பின்பு வந்த காரிகைகள் (commentaries) அந்த கருத்தை விரிவாக உருவாக்கின. ஆனால் முதலில் இருந்தே அந்த கருத்தாக்கத்தை ஆழமாக விரிந்துரைத்தவர்கள் சமணர்கள். (சமணர்கள், பௌத்தர்கள் வேதங்களை ஏற்க மறுத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே)
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய் நாடிக் கோடலை - தொல்லை
பழவினையும் அன்ன தகைத்தே தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு
என்று சமண நூலாகிய நாலடியார் கூறுவதைப் போல முன்பு செய்த வினைகளின் விளைவுகள் தொடர்ந்து வந்து வினைகளை செய்த நபரின் வாழ்க்கையைத் தொட்டுதாக்கும் என்பது அவர்களின் தீர்மானமான நம்பிக்கை. அவர்களுடைய மத நூல்கள் பலவும் வினைப்பயனின் வலிமையை சித்தரிக்கும் வண்ணம் பல கதைகளைக் கூறி விரிவு படுத்தி, வலுவாக கூறிச்செல்கின்றன.Karmic Consequences are unerring and in escapable.எந்த “தெய்வீக” அருளாலும் காப்பாற்ற இயலாத வலிமையுடையது.வினையை செய்த மனிதன் அந்த வினைப்பயனுக்கு அடிமையாகிறான்.
ஒரு யானை தாமரை மலர்களின் கூட்டத்தை எப்படி தான் காலால் நசுக்கி அழிக்கிறதோ அவ்வாறே வினைப்பயன் என்பது எல்லா சக்திகளையும், வல்லமைகளையும் நொடித்து பொடியாக்க வல்லது என்று இரண்டாம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பழமையான சமண நூல் கூறுகிறது. Karma is an inexhorable law, subordinate to no power.
சிலப்பதிகார ஆசிரியர் இலஙகோவடிகளைக் குறித்து ஆராய்ச்சி பூர்வமாகவோ, வரலாற்று பூர்வமாகவோ நமக்கு ஒன்றும் தெரியாது. அவர் சேர அரச குலத்தில் பிறந்தவர் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. சமண அடிகள் என்பதற்கும் வரலாற்று பூர்வமாக ஆதாரம் இல்லை. ஆனால், கதையின் பதிகத்தில் ( எழுதியர் யாரோ, எப்பொழுது எழுதினாரோ ) ” ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்ற வரியினைக் கொண்டு இவர் சமணராக இருந்திருக்கலாம் என்ற கருத்து உருவாகி இருக்கலாம். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கருத்து அக்காலத்தில் மிக பரவலாக இருந்திருக்க வேண்டும். புத்த மதமும் சமண மதமும் ஊன்றியிருந்த காலத்தில் இந்தக் கருத்தை கற்றோர் கல்லாதவர் யாவரும் நம்பியிருந்திருக்கலாம். இக்காலத்தில் “memes” என்கிறோமே, அதுபோல் இக்கருத்து அக்காலக்கட்டத்தில் ஓர் வலிமை வாய்ந்த “meme” ஆக இருந்திருக்கலாம். வினைப்பயன் என்ற கருத்தாக்கம், மக்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களுக்கு ஒரு ஆறுதல் தரும் நினைவாக இருந்திருக்கும் - a mental crutch or solace
பின்குறிப்பு:
வினைப்பயனிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலாது என்று கூறிய சமணர்கள் அதை ரத்து (cancel out) செய்வதற்கு வழிமுறைகளைக் கோடிட்டு காட்டுகிறார்கள். வாழ்க்கையில் உண்மை, கொல்லாமை, தவம் (austerity), தியாகம், ஒழுக்கம் போன்ற விரதங்களை (ethical and moral disciplines) கடைப்பிடித்தால் “மேனியில் படர்ந்த அழுக்கு உதிர்வது போல்” கர்ம வினைப் பயன்கள் உதிர்ந்து விடும். ஆன்மா உண்மை விளக்கத்தை (enlightment) அடையும் என்று கூறுகிறார்கள் .
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on February 7, 2020 #Sheikh Abdul Khadar #Megala Ramamoorthy #Parimala Nathan