logo

Home Tamil School Archives Search Feed Contributing Guide


இதழ்: பதினாறு , சனவரி 2020

ஆசிரியர் : சிவசுப்பிரமணியன்

இணை ஆசிரியர் : கார்த்திகா.


அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,

புது ஆங்கில வருடத்தின் வருகையால் மகிழ்வோடு இருக்கும் அனைத்து TBTA குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும், TBTA தன் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

இன்னும் சில வாரங்களில் இரண்டாம் பருவத்தேர்வு நடைபெற இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் ஆசிரியர்கள் மிக முனைப்பாக பாட திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். உங்களுக்கான ஐயப்பாடுகளை எவ்வித தயக்கமும் இன்றி நிர்வாகக்குழு மற்றும் ஆசிரியர்களிடமும் கேட்டு தெளிவு பெற வேண்டிக்கொள்கிறோம்.

குழந்தைகள் வீட்டு பாடம் எழுதுவதற்கு முன், பள்ளி பாடத்தை ஒன்றிற்கு இரண்டு முறை அவர்கள் மூலமாக அறிந்து, பின்னர் அவர்களை வீட்டு பாடத்தை தொடங்க செய்வது மிகுந்த பயனளிப்பதாக சில பெற்றோர் நம்மிடம் தெரிவித்தனர். இதை நாம் அனைவரும் பின்பற்றலாமே!

பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.

இம்மாத (சனவரி -2020 ) பள்ளி கால அட்டவணை

01/03/2020 — 01/04/2020 இல்லை
01/10/2020 — 01/11/2020 உண்டு
01/17/2020 — 01/18/2020 இல்லை
01/24/2020 — 01/25/2020 உண்டு
01/31/2020 — 02/01/2020 உண்டு

செய்தி மடல் ஆசிரியர் பகுதி

சென்ற மாத இதழில், குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ள ஒரு எளிய முறை என்ற தலைப்பில் கட்டுரை நல்கிய
திரு ராஜசேகர் இளங்கோ அவர்களுக்கு ஆசிரியர் குழு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கேள்வி பதில் பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .

இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.

தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!

TBTA பள்ளி அங்கீகாரம், தற்போதைய நிலை:

டிசம்பர் 13 முதல் 15 தேதியில் நடைபெற்ற தணிக்கை குழுவின் ஆய்வு, குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர், TBTA வின் தாம்பா சமூக பங்களிப்பாளர்கள், நிர்வாகம் மற்றும் செயலாக்க குழுவின் ஒருமித்த முயற்சியாலும் உங்கள் அனைவரின் நல்லெண்ணத்தாலும் இனிதே முடிவடைந்தது. உங்களைப் போன்றே நாங்களும் அங்கீகாரத்திற்கான விடையை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்.


ஆசிரியர் அறிமுகம்

திருமதி தங்க ஈஸ்வரி ரவி ராஜ்

பள்ளிப்பருவத்தில் சில காலங்கள் தமிழ்வழிக்கல்வி பயின்ற இவர் தமிழார்வ மிகுதியால் கல்லூரியில் தமிழ்வழியிலும் சில பாடங்கள் பயின்றுள்ளார். தன் பிள்ளைகளுக்குத் தமிழ் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் தினமும் உறக்க நேர கதைகளாக தமிழ் புத்தகங்களை தேர்வு செய்து படிக்கச் செய்கிறார். கோடை விடுமுறையிலும் தன் நண்பர்களுடன் இணைந்து நடனம்,இசை,போன்ற வகுப்புகளை போலவே தமிழ் வகுப்பையும் கட்டாயமாக்கி பிள்ளைகளை தமிழ் மொழி கற்க வைத்து அவர்களின் தமிழ் ஆர்வத்தை மேம்படுத்தியதில் பெருமையடைவதாகக் கூறுகிறார்.அதே ஆர்வத்தோடு TBTA வில் இணைந்து குழந்தைகளின் தமிழறிவு மேம்பாட்டிற்குத் தன்னால் இயன்ற ஒரு சிறு முயற்சியாக தமிழ் மொழி கற்றுக்கொடுக்கத் தன்னார்வலராக முன் வந்துள்ளார். logo
சொந்த ஊர் :  உமரிக்காடு (தூத்துக்குடி மாவட்டம்), தமிழ்நாடு

திரு செ.ஷேக் அப்துல் காதர்

நடுநிலை பள்ளி காலத்தில் தான் இவருக்கு தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. மிக சிறு வயதிலிருந்தே தன் ஆசான் என்று இன்றும் இவரால் மதிக்கப்படும் இவரது அத்தையின் அன்பாலும், அரவணைப்பாலும், வழிநடத்துதலாலும் இவருக்கு ஆசிரிய பணி மீதான நாட்டமும் மொழி மீதான தீராக்காதலும் பன்மடங்கு வளர்ந்தது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி காலங்களில் பல கவிதைகள் புனைந்து, சில பரிசுகள் பெற்ற அனுபவமும் உண்டு. சில நாட்களுக்கு முன் தாம்பாவில் நடந்த கவியரங்க மேடையில் இவர் பெற்ற முதல் பரிசே கவி பாடுவதை இன்றும் இவர் தொடர்கிறார் என்பதற்கு ஒரு சான்று. தன் துறையில் பகுதி நேர ஆசிரிய பணியை ஏற்றிருந்தாலும், TBTA வில் எதிர்பாராமல் கிடைத்த தமிழ் ஆசிரிய பணியே தனக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்வையும் தருவதாக கருதுகிறார். தன் மொழியை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவதில் செவ்வனே செயல்பட உறுதி கொண்டுள்ளார். logo
சொந்த ஊர் :  விருதுநகர் , தமிழ்நாடு
இவர்கள் இருவரின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

தாம்பா திறமைகள்

logo
நம் TBTA மாணவி வர்ஷினி K-12 நிலை அமெரிக்க தேசிய சதுரங்க முதன்மை ஆட்டத்தில் (US National Chess Championship) முதல் பரிசு வென்றுள்ளார் (U600 வகை) என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். குழந்தைக்கும் பெற்றோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பாடல் பகுதி - முதல் ஆசிரியருக்கு ஓர் மாணவனின் பா….
 — செ.ஷேக் அப்துல் காதர்

My First Teacher


அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்

என்னம்மா, இந்த Sweet இவ்வளவு Sweeta இருக்குது, சாப்பிட முடியலை. என்னம்மா, இந்த பண்டம் திகட்டுதே
ஒரு டீ கிடைக்குமா? ஒரு தேநீர் கிடைக்குமா?
பாப்பா இங்க வா, Park போகலாம் பாப்பா இங்க வா, பூங்காவிற்கு போகலாம்
மாமாவிற்கு Thanks சொல்லு கண்ணா மாமாவிற்கு நன்றி சொல் கண்ணா
பொங்கலுக்கு புது Dress போடலாமே! பொங்கலுக்கு புத்தாடை உடுத்தலாமே!
இன்று எங்கள் வீட்டிற்கு Guest வந்தாங்க இன்று எங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தார்கள்
இன்னைக்கு Walking போனீங்களா? இன்று நடைப்பயிற்சி செய்தீர்களா?

இலக்கிய பகுதி

பழமொழி நானூறு

(எழுதியவர் : முன்றுறை அரையனார்)

பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

முன்றுறை அரையனார் என்ற புலவர் வாழ்க்கைக்கு நன்மை பயக்கின்ற பழமொழிகள் நானூறைத் தேர்ந்தெடுத்து ஒரு பழமொழியை வைத்து ஒரு வெண்பாவினை பாடியுள்ளார்.

நானூறு பழமொழிகளை அமைத்து ஆக்கப்பெற்றதனால் பழமொழி நானூறு என்று இந்த நூல் பெயர் பெற்றது.

தருமம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை,

அஞ்சும்பிணி,மூப்பு,அருங்கூற்று,உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு

என்ற பழமொழி வாயிலாக எடுத்துரைத்துள்ளார்.

அதாவது தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட்பிறப்பினை பெற்றுள்ளோம்.அதனால் முடிந்த வகைகளில் எல்லாம் தரும காரியங்களைச் செய்து வருக.கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாத வண்ணம் அஞ்சப்படும் நோய்,முதுமை,அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமம் செய்யலாமென்று ஒதுக்கிவைத்தால்,அந்த வேளையிலே,தருமம் செய்ய இயலாதபடி அறிவுமயக்கமும் வந்து சேர்ந்துவிடலாம்.

தோற்றம் அரிதாய மக்கட்பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க!--மாற்றின்றி
அஞ்சும் பிணிமூப்பு அருங்கூற்று டனியந்து
துஞ்ச வருமே துயக்கு.

என்று யாக்கையின் நிலையாமை கூறினார்.

தருமத்தை இளமையிலேயே செய்க;பின்னர் பார்த்துக்கொள்ளலாமென்று எண்ணினால் அது முடியாமலும் போகலாம்.

நானூறு பழமொழிகளில், எக்காலத்திற்கும், அனைவருக்கும் பொருந்தும் சில பழமொழிகளையும் அதன் பொருளையும் இனி வரும் இதழ்களில் காண்போம்


தோழியின் நன்னர் நெஞ்சம்!
 — மேகலா இராமமூர்த்தி

Megala Ramamoorthy

பெண்களின் உள்ளம் அன்பு வடிவானது; அருள் நிறைந்தது என்று கருதப்படுவது. எனினும், எல்லாத் தருணங்களிலும் எல்லாரிடத்திலும் அவர்களுக்கு அன்பு பிறந்துவிடும்; அருள் சுரந்துவிடும் என்று கூறுவதற்கில்லை. காதலுக்கும் இது பொருந்தும். அதனை விளக்கும் நிகழ்வொன்றைச் சங்க இலக்கியத்திலிருந்து காண்போம்.

குறிஞ்சிநிலத் தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியின்பால் காதல் கொண்டான். அவளுடைய காதலைப்பெற விரும்பியவனாய்த் தினந்தோறும் அவள் தன் தோழியுடன் இணைந்திருக்கும் இடங்களுக்கெல்லாம் அலுப்பின்றிச் சலிப்பின்றிச் சென்று அன்புமொழிகளைக் கூறி நின்றான் அவளிடம். அதன்பின்னரும் தலைவின் நெஞ்சம் அவன்பால் திரும்பவில்லை; அவனை விரும்பவில்லை.

இவ்வாறு நாள்தவறாது தலைவியைக்காண வந்துகொண்டிருந்த தலைவனைச் சின்னாட்களாகக் காணவில்லை. அதுகண்டு வருந்திய தோழி, தலைவியை நோக்கி,

பெண்ணே! ஒருநாளா? இருநாளா? உன்னைக்காண பன்னாள் (பல நாள்கள்) வந்து பணிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறி, உன் காதலையும், கனிவையும் எதிர்பார்த்து நின்றான் தலைவன். அவனுடைய இரங்கத்தக்க செய்கையைக் கண்டு, உனக்கு எப்போதும் நன்மையையே எண்ணுகின்ற, என் நன்னெஞ்சு நெகிழ்ந்தது. இப்போதோ மலைமீது தூங்கும் முற்றிய தேனிறால் கீழேவீழ்ந்து மறைவதைப்போல் அவன் காணாமற் போயினான். நமக்குப் பற்றுக்கோடாய்த் திகழ்ந்த, எந்தையான அவன் எங்குச் சென்றானோ யானறியேன். அதனால் வேற்றுப்புலத்திலுள்ள நல்ல நாட்டில் பெய்தமழை பாய்ந்துவருதலால், நம் புலத்துநீர் கலங்கிப்போதல்போல என்னுள்ளம் கலங்குகின்றது என்றாள் வேதனையோடு.

ஒருநாள்  வாரலன்  இருநாள்  வாரலன்
பன்னாள் வந்து  பணிமொழி  பயிற்றியென்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த  பின்றை
வரைமுதிர்  தேனிற்  போகி  யோனே
ஆசா கெந்தை  யாண்டுளன்  கொல்லோ
வேறுபுல  னன்னாட்டுப்  பெய்த
ஏறுடை  மழையிற்   கலிழும்என் னெஞ்சே. 
(குறு: 176 - வருமுலையாரித்தியார்)

ஒருநாளா? இருநாளா? பலநாள் வந்தானே உன்னைத்தேடி; உன்அன்பை நாடி எனும் தோழியின் மொழிகளில், தலைவனின் விடாமுயற்சிக்காகவாவது நீ அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாகாதா?!” எனும் ஆற்றாமை தொனிக்கின்றது.

இப்பாடலில் கவனிக்கத்தக்க இன்னொரு சொல்லாட்சி ஆசாகு எந்தை என்பது. நமக்குப் பற்றுக்கோடாகிய எந்தை போன்றவன் என்று தலைவனைத் தோழி அழைக்கிறாளென்றால் அவன்பால் எத்துணைப் பரிவும் பாசமும் அவள் கொண்டிருக்கின்றாள் என்பதனை நாம் உய்த்துணரலாம். தலைவிக்கு எப்போதும் நன்மையையே எண்ணுகின்ற தன்னெஞ்சை நன்னர் நெஞ்சம் என்று தோழி பெருமிதத்தோடு கூறிக்கொள்வதும் இங்கே இரசிக்கத்தக்கது.

மலையில் தொங்கிக்கொண்டிருந்த சுவையான தேனடை யாருக்கும் பயனின்றி வீழ்ந்துபோதல்போல், தலைவனின் இனிய காதலும் தலைவியின் காதல் கிடைக்கப் பெறாமையால் பயனற்று அழிந்தது என்பதை இப்பாடலின் உள்ளுறையாகக் கொள்வர்.

சிறிய பாடலாயினும் ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்தபொருளை இப்பாடலின் ஆசிரியரும் பெண்பாற்புலவருமான வருமுலையாரித்தியார் பொதிந்துவைத்திருப்பது அவருடைய நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்றாகின்றது. இவர் பாடியதாய்ச் சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே கிடைத்திருப்பது நம் தவக்குறைவே!

இந்தத் தலைவனைப் போலவே தினமும் தலைவியைச் சந்திக்கவரும் மற்றொரு தலைவன், தன் வாயால் தன் காதலை வெளியிடத் தயங்கியவனாய் வறிதே திரும்பும் காட்சியைக் கலித்தொகை 37-ஆம் பாடலும் அழகாய்ப் பதிவு செய்திருக்கின்றது.

கயமல ருண்கண்ணாய் காணா யொருவன் 
வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
கண்ணியன் வில்லன் வருமென்னை  நோக்குபு
முன்னத்திற்  காட்டுல் அல்லது  தானுற்ற
நோய்உரைக் கல்லான் பெயரும்மன்  பன்னாளும்…  
(கலி: 37 - கபிலர்)

பாடுபொருள் மாறுபட்டிருப்பினும், ஒருமை, இருமை, பன்மை எனும் சொற்களின் எண்ணுமுறை அமைப்பில் பெரிதும் ஒத்திருக்கும்,

ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ… 
(புறம்: 101 - ஔவையார்) 

என்று ஔவை அதியனைப் போற்றிப் பாடிய புறநானூற்றுப் பாடலும் மேற்கண்ட குறுந்தொகைப் பாடலோடு ஒப்பிட்டு மகிழத்தக்கது.


கேள்வி பதில் பகுதி
 — முனைவர் பரிமளா நாதன்

Parimala Nathan

கேள்வி: இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் குறள் 629…

மேற்கண்ட திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய இலக்கியம் அல்லது இந்த தத்துவத்தை மையமாகக் கொண்ட வேறு ஏதாவது நாகரிகம் பற்றிய செய்தி உண்டா?

பதில்: இந்த குறளின் பொருளை சுருக்கமாகக் கூறுவதென்றால், இன்பம் உறுதல், துன்பம் உறுதல் இரண்டையும் ஒரே தன்மையாக மதிக்க வேண்டுமென்பதாகும். வள்ளுவர் இந்த குறளில் வாழ்க்கையை அணுகும் முறையை கூறுகிறார் — an approach to life. இந்தக் குறளைப் படித்தவுடன் பலருக்கு நினைவுக்கு வருவது , புறநானூற்று கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலில் வரும், வாழ்தல் இனிதென மகிழ்ந்தென்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே என்ற வரிகள். இரண்டையும் ஒரே தன்மையில் கண்டு, ஒன்றுக்கு மகிழ்ச்சி எய்துவதையும், மற்றொண்டிற்கு மன கலக்கமும் சோர்வும் அடைவதையும் தவிர்த்து , மன அமைதியுடன் இருப்பதை தான் வள்ளுவரும் பூங்குன்றனாரும் கூறுகின்றனர். இதைச் சுருங்கச்சொல்லும் ஆங்கிலச் சொல் Equanimity. வள்ளுவரும், பூங்குன்றனாரும் வலியுறுத்தும் இந்த Equanimity யால் வரும் மன நிலைகள் serenity, tranquility, detachment, imperturbability, self-possession, steadiness போன்றவையாகும். இவற்றை தமிழாக்கம் செய்தால் வரும் சொற்கள் சாந்தம், மன அமைதி, வேறுபாடின்மை , மனம் கலங்காமை, இடுக்கணழியாமை போன்றவையாகும்.

இந்த வாழ்க்கை அணுகுமுறையை அல்லது தத்துவத்தை வற்புறுத்திய வேறு தத்துவங்கள் வேறு நாடுகளில் உண்டா என்பது மேற்கண்ட கேள்வியின் பெரும் பகுதி. மேற்கத்திய தத்துவங்கள் அல்லது மெய்யறிவு முறைகளில் கிறிஸ்துவிற்கு முன் 400 ஆண்டுகளுக்கு முன் உண்டாகிய ஒரு மெய்யறிவு கோட்பாடு STOICISM என்பதாகும். இந்த தத்துவத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் ZENO என்னும் கிரேக்கர். கி.மு. 495 இல் பிறந்து கி.மு. 425 இல் இறந்தார். சாக்ரடீஸ்க்கும், வள்ளுவருக்கும், பூங்குன்றனாருக்கும் காலத்தால் மிகவும் முந்தியவர். Stoicism கூறவந்தது என்னவென்றால்: இயற்கையில் ஒரு நியதி உண்டு. (இங்கு இயற்கை என்றால் உலகம் அல்லது universe என்று பொருள் கொள்ள வேண்டும்). அந்த நியதியின் வழியில் மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். (The universe is governed by the law of reason and a life led according to the law of reason is virtuous). சான்றோர் எனப்படுவர் இந்த இயற்கை நியதியோடு தங்கள் வாழ்க்கையை இணைத்து வாழ்பவர்கள். மேலும் உலகம் என்பது ஒரே ஓர் ஊர். மனிதர்கள் எல்லோரும் அதன் குடிமக்கள். அதாவது Stoicism என்பதின் மையக் கோட்பாடு யாதும் ஊரே யாவரும் கேளிர். This idea is basic to the stoic moral theory. இயற்கை நியதியுடன் வாழ்வதற்கு அடிகோலும் மிக மிக முக்கியமான ஒழுக்கங்கள் நான்கு. 1. Wisdom (மெய்யுணர்தல்) 2. Justice (நடுவுநிலைமை) 3. Courage (அஞ்சாமை) 4. Self-control/fortitude (அடக்கமுடைமை/தவம்). இந்த நான்கும் Stoicism என்னும் தத்துவத்தின் cardinal virtues. இவற்றை அடைய உதவுவது Equanimity of mind, இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர காணும் மனப்போக்கு. இதுவே Stoicism என்பதின் மிக மிகச் சுருக்கமான விளக்கம்.

Zenoவின் மெய்யறிவு வழித்தோன்றல்கள் பல பேர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள் மூவர். Epictetus, Seneca மற்றும் Marcus Aurelius என்னும் உரோம மன்னர்.

Marcus Aurelius என்னும் இந்த மாபெரும் மன்னன் தினந்தோறும் இரவில் அன்றைய செயல்களையும், அவர் மனதில் அவற்றிற்கு எழுந்த எதிரொலிகளையும் (reactions), அன்றைய நினைவுகளையும் பதிவு செய்வார். அந்த பதிவுகள் எல்லாம் Meditations என்னும் பெரும் நூலாக உருவெடுத்தன. இந்த நூல் Stoic Philosophy யின் ஒரு பெரும் வெளிப்பாடு. Stoicism கற்பிப்பது மனிதனுக்கு வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அமைதியுடனும் பகுத்தறிவுடனும் (rational mind) அதை அணுக வேண்டும். அப்படி அணுகுவதால், மனிதனுக்கு ஒரு பெரும் உண்மை விளங்குகிறது. எது நம் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாததைக் குறித்து கவலைப்படாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது விளங்குகிறது.

இன்பத்தில் இன்பம் விரும்பாதவன், அல்லது இன்பத்தை கண்டும் அதன் கவர்ச்சியில் தன்னை மூழ்க விடாமல் கட்டுப்படுத்திக் கொள்பவன் துன்பம் வரும் பொழுதும் அதனால் துன்புற மாட்டான் என்று வள்ளுவர் மேற்சொன்ன குறளில் கூறுகிறார். சுருக்கமாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் Perception is the key” என்கிறார். நீ துன்ப நிகழ்வையோ இன்ப நிகழ்வையோ எப்படி காண்கிறாயோ, அதைப் பொருத்துத்தான் உன் இன்பம்/துன்பம் உன்னை ஆட்டுவிக்கும். உன் வாழ்க்கையில் நடக்கும் பலவற்றை உன்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவற்றை எப்படி காண்கிறாய் என்பது உன் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிறார்.

வள்ளுவர் கூறவந்த குறட்பாவை, உரை நடையில் சற்று விரிவாக ரோம மன்னர் Marcus Aurelius கூறுகிறார்; If you are pained by any external thing, it is not this thing that disturbs you, but your own judgment about it. And it is in your power to wipe out this judgment now” quote from book Meditations. இதை பின்பற்றினால் துன்பம் உறுதல் இலன்.

குறிப்பு: Stoicism என்பது மிகவும் உயர்ந்த ,உயர்வான, மெய்யறிவு வழிப்பாதை. அதைப்பற்றி இன்னும் சற்று விரிவாக கூறுவதற்கு இந்த கேள்வி பதில் பகுதி இடம் தராது. வேண்டுமெனில் அதனைக்குறித்து சில சிலப் பகுதிகளை பின் வரும் இதழ்களில் சிறிது சிறிதாக கூற முற்படுகிறேன்.குறட்பாக்கள் பலவுடன் Stoicism கருத்தால் நன்கு ஒருமைப்படும்.


இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.


Posted on January 8, 2020   #Sheikh Abdul Khadar     #Megala Ramamoorthy     #Parimala Nathan  







← Next post    ·    Previous post →

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!