இதழ்: பதினைந்து, டிசம்பர் 2019
ஆசிரியர் : சிவசுப்பிரமணியன்
இணை ஆசிரியர் : கார்த்திகா.
அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,
இன்று தான் இக்கல்வியாண்டை தொடங்கியது போலிருந்தது, இதோ இரண்டாம் பருவத்தின் பாடங்கள் ஆரம்பித்தாகி விட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான புரிதலையும் மாணவர்கள் ஆர்வமாக வகுப்பில் பாடங்கள் கேட்பதையும் நன்றாகவே உணர முடிகிறது.
முதலாம் பருவத்திற்கான விடை தாள்களையும் குழந்தைகளின் முன்னேற்றத்தையும் பெற்றோர்களின் ஐயப்பாடுகளையும் வகுப்பு ஆசிரியர்களோடு கலந்துரையாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இனி வருவது விடுமுறைக் காலம். நிறைய பயணங்களும் கொண்டாட்டங்களும் அநேக குடும்பங்களில் இருக்கும். அந்நாட்களில் முடிந்தவரை குழந்தைகளோடு நம் மொழியிலேயே உரையாடுங்கள். நம் காலத்தில் பங்கேற்ற திருவிழாக்களையும் விளையாட்டுகளையும் ரசித்து மகிழ்ந்த உணவுகளையும் நம் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுங்கள் இவ்வாறு பகிர்வது குழந்தைகளுக்கு புது அனுபத்தையும் பெரியவர்களுக்கு மலரும் நினைவுகளையும் உற்சாகத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை.
பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.
இம்மாத (டிசம்பர் -2019 ) பள்ளி கால அட்டவணை
12/06/2019 — 12/07/2019 | உண்டு |
12/13/2019 — 12/14/2019 | உண்டு |
12/20/2019 — 12/21/2019 | உண்டு |
12/27/2019 — 12/28/2019 | இல்லை |
01/03/2020 — 01/04/2020 | இல்லை |
செய்தி மடல் ஆசிரியர் பகுதி
சென்ற மாத இதழில், அருகம்புல்லின் மருத்துவக் குறிப்புகளை தொகுத்தளித்த திருமதி கிருத்திகா முத்துசாமி அவர்களுக்கு ஆசிரியர் குழு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்ற மாத இதழில் வெளியான கட்டுரை “சேக்கிழார் காட்டும் தொண்டுநெறி”, “கேள்வி பதில்” பகுதி , மருத்துவக் குறிப்புகள் மற்றும் இலக்கிய பகுதி அனைத்தும் ஒரே சீராக அமைந்தது என்று சில வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் எங்களுக்கு உத்வேகத்தை அளித்தது.
இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.
தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!
TBTA பள்ளி அங்கீகாரம், தற்போதைய நிலை:
டிசம்பர் 13 முதல் 15 தேதியில் தணிக்கைக்குழு நம் பள்ளியை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இம்முக்கிய நிகழ்வுக்கு திட்டக் குழு, செயலாக்கக் குழு, நிர்வாகக் குழு, ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் ஒருங்கிணைந்து முழு வீச்சோடு தயாராகி வருகிறார்கள் என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்
ஆசிரியர் அறிமுகம்
திருமதி சங்கீதா ராணி பாலச்சந்திரன்

சொந்த ஊர் : மதுரை, தமிழ்நாடு.
பள்ளிப் பருவத்தில் தன் தமிழ் ஆசிரியையின் செயல்பாடு கண்டு மொழி மீது ஆர்வம் கொண்டார். அதன் காரணமாக பல தமிழ் மன்ற தேர்வுகளில் பங்கு கொண்டு தன் திறனை வளர்த்துக்கொண்டார். இசையும், பாரதியார் பாடல்களும் இவருக்கு நெருக்கமானவை. நம் மொழியின் அழகும், வீரியமும், தனக்கு தெரிந்த மொழியறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட வேண்டும் என்ற உயரிய நோக்கமும் இவர் TBTA-வில் ஆசிரியராக பொறுப்பேற்க தூண்டியது என கருதுகிறார்.
திருமதி சுஜாதா குமார்

சொந்த ஊர் : காரைக்குடி, தமிழ்நாடு
பள்ளிப்படிப்பு இவர் ஆங்கில வழிக்கல்வி முறையில் கற்றதாலேயே சிறு வயதிலேயே நம் மொழி மீதான வேட்கை இருந்தது. தமிழ் பட்டிமன்றங்கள் இவருக்கு பிடித்தமானவை. TBTA-வின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இவர் கலந்து கொண்ட போது, தன்னார்வ ஆசிரிய பெருமக்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு TBTA-வில் இணைந்துள்ளார். தன் பால்யத்தில் நம் மொழியை கற்று கொள்ள இயலாமல் போனது போன்று இங்குள்ள குழந்தைகளும் இருந்த விட கூடாது என்ற நற்சிந்தனையோடு TBTA-வில் ஆசிரிய பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!
குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ள ஒரு எளிய முறை
|
![]() |
நான் என் மகளுக்கு தமிழ் எழுத்துக்களை மாண்டிசோரி முறையில் கற்றுத்தந்த அனுபவத்தை இந்த பதிவில் பகிர விரும்புகிறேன். குழந்தைகள் எழுத்துக்களைத் தொட்டு விளையாடும்போது, அவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். அதனால்தான் ஆங்கில எழுத்துகள் அச்சிடப்பட்ட மர விளையாட்டு பொருட்களை (wooden alphabet blocks) குழந்தைகளுக்கு விளையாட தருகிறோம். மாண்டிசோரி பள்ளிகள் மரப் பொருட்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்கள். அதனால், அப்பள்ளிகளில் ஆங்கில எழுத்துக்களை எவ்வாறு சொல்லி தருகிறார்கள் என்று ஆராய்ந்த போது எனக்கு இந்த யோசனை வந்தது.
நான் மைக்கேல்ஸ் கடைக்கு சென்று அங்கு மூன்று வித வடிவமுள்ள மரக் துண்டுகள் மற்றும் மரத்தில் எழுதக்கூடிய மூன்று வண்ண பேனாவையும் வாங்கினேன். பிறகு உயிர்
எழுத்துக்களை செவ்வக வடிவான மரத்துண்டிலும், மெய்
எழுத்துக்களை வட்ட வடிவான மரத்துண்டிலும், உயிர்மெய்
எழுத்துக்களை (க…ன வரிசை மட்டும்) நீள் வட்ட வடிவான மரத்துண்டிலும் எழுதினேன். மேலும் துணை கால் எழுத்தையும் ஒரு மரத் துண்டில் எழுதினேன். இதை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களைத் விளையாட்டாக சொல்லி கொடுத்தேன். கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.
க…ன வரிசை எழுத்துக்களை சொல்லி தரும் பொது, அது உயிர் மற்றும் மெய் எழுத்தை இணைத்தால் உருவாகும் ( க் + அ = க )
என்று சொல்வது முக்கியம். மேலும், மெய் எழுத்துகளை நெடில் “ஆ”
உடன் இணைப்பதற்கு, துணை கால் சேர்த்தால் போதும் என்று சொல்லலாம். இதன் மூலம் உயிர்மெய் எழுத்து உருவாக்கத்தின் அடிப்படையை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். அதனால் மற்ற உயிர்மெய் எழுத்துக்களை கற்பது எளிதாக இருக்கும். மேலும் எழுத்துக்களை கற்றுக்கொள்ளும் பொழுது , அதன் வடிவத்தை ஆள் காட்டி விரலால் பின்தொடர்ந்து (trace) பழகினால், எழுத்துக்களை எழுத கற்றுக்கொள்வது எளிதாக இருக்கும்.
அனைத்து எழுத்துக்களையும் கற்றுக்கொண்ட பிறகு, சின்ன சின்ன சொற்கள் அமைக்க சொல்லித்தரலாம் . ஆங்கிலம் போல் இல்லாமல், தமிழ் எழுத்துக்களின் பெயரும், ஒலியும் (phonetic sound) ஒன்றாக இருப்பதால், எழுத்துக்களை தெரிந்து கொண்ட உடனே எளிமையாக வார்த்தை அமைக்க கற்றுக்கொள்ளலாம். வெறும் உயிர் , மெய் , க…ன, கா … னா வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் கொண்டு பல சொற்களை உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக அம்மா , அப்பா , அக்கா, மான் , பட்டம் , இன்பம் , வணக்கம் etc… நாம் சொல்லும் வார்த்தைகளை குழந்தைகளையே மர துண்டுகளை இணைத்து உருவாக்க சொல்லலாம், மற்றும் நாம் அமைத்த சொற்களை அவர்களை படிக்க சொல்லலாம்.
இது போன்று விளையாட்டுடன் தமிழை அறிமுக படுத்தினால், குழந்தைகள் ஆர்வமுடன் தமிழ் கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
நவீன பயன் பாடுகளின் தமிழாக்கம்
E-Cash | மின்பணம் |
IT | தகவல் தொழில்நுட்பம் |
Text | உரை |
Graphics | வரைகலை |
Sound | ஒலி |
Audio | கேட்பொலி |
Video | நிகழ்படம் |
Photo | நிழற்படம் / ஒளிப்படம் |
Microprocessor | நுண்செயலி |
ROM | அழியா நினைவகம் |
RAM | நிலையா நினைவகம் |
Mother Board | தாய்ப்பலகை |
Expansion Slot | விரிவாக்கச் செருகுவாய் |
Animation | நகர்படம் |
Motion capture | அசைவுப்பதிவு |
Wire frame | வலைப்புள்ளிச்சித்திரம் |
இலக்கிய பகுதி
சிலப்பதிகாரம்
(எழுதியவர் : இளங்கோவடிகள்)
இளங்கோவடிகள் மூன்று உண்மைகளை உலகத்தார்க்கு எடுத்து ஓதுவதற்காகவே சிலப்பதிகாரத்தை எழுதியதாகக் கூறுகின்றார். அந்த மூன்று உண்மைகளாவது,
அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதூம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்
என்று கூறி அவ்வாறே சிலப்பதிகாரம் என்னும் காவியத்தை இயற்றினார்.
இந்தக் காரியங்கள் நடைபெற்றதினால் தான் இளங்கோவடிகள் சிலப்பதிகார காவியத்தைச் செய்துகண்ணகி கற்பு,ஊழ்வினை,அரசதர்மம் மூன்றையும் கூறினார். கோவலன் கொலையுண்டதற்கு முந்தைய பிறப்பில் அவன் செய்த தீவினை காரணமாவது போல் பாண்டிய அரசன் செய்த தீவினை அவன் இறப்பதற்கு காரணம் என்கிறார் இளங்கோவடிகள்.
அரசன் அறநெறி பிறழ்ந்து நடந்ததனால் தானே கோவலன் கொல்லப்பட்டான்.அரசனும் மாண்டான். இதனை,
ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி நாளன்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண,
உரைசான் மதுரையோடு அரசுகேடு உறுமேனும்
உரையுமுண்டே
ஆடி மாதம் தேய்பிறையில் அட்டமியும் கார்த்திகையும் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில் அரசனும் அழிவான்,ஊரும் எரியும் என்று முன்னாலேயே சோதிடர்கள் கூறியுளர் என்று மதுரை தேவதை கண்ணகியிடம் கூறியது.
அதாவது கோவலன் மேற்கூறிய நாளில் கொலையுண்டால்,அதே நாளில் அரசனும் இறப்பான் என்பது அவனுடைய ஊழ்வினை. அதனாலேயே அவன் நீதி தவறிக் கோவலனை விசாரிக்காது கொல்லுமாறுஆணை தந்தான் என்று இளங்கோவடிகள் கூறுகின்றார். இவ்வாறாக சிலப்பதிகாரத்தில்ஊழ்வினையைப் பற்றி மிகச்சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் இளங்கோவடிகள்.
கை கொடுக்கும் நம்பிக்கை!
|
![]() |
இயல்பிலே மனிதன் ஒரு சமூக விலங்கு (Man is by nature a social animal) என்பார் தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில். மனித வாழ்வு தனிமையில் இனிமை காண இயலாதது. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதிலும் சமுதாயத்தோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலும் முழுமை காண்பது. அவ்வாறு ஒருவர் மற்றொருவரைச் சார்ந்துவாழ்வதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கை எனும் நல்லுணர்வு. ஒரு குழந்தை தன் தாய் சுட்டிக்காட்டுகின்ற மனிதரைத் தந்தையென ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாய்த் திகழ்வதுகூட, தன் தாய்மீது அச்சேய் கொள்ளும், நம்பிக்கையே ஆகும்.
முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆடவனும், ஆரணங்கும் காதல்கொண்டு, செம்புலப் பெயல்நீர்போல் அன்புடைநெஞ்சு கலப்பதற்குக் களமமைப்பதும் அவர்கள் ஒருவர்மீது மற்றொருவர் கொள்ளுகின்ற அசைக்கவியலா நம்பிக்கையே!
தலைவன் ஒருவன்மீது மாறாக் காதல்கொண்ட தலைவியொருத்தி, அவனை ’நின்ற சொல்லர்’ (மக்கள் வழக்கில் சொல்வதென்றால் பேச்சு மாறாதவர்) என்று வாயாரப் புகழ்வதனை நற்றிணைப் பாடலில் கபிலர் காட்டுவார்.
நின்ற சொல்லர் நீடுதோன்றினியர்
என்றும் என்தோள் பிரிபறி யலரே… (நற்: 1)
இன்னொரு தலைவியோ தன் காதல்மீது இமய நம்பிக்கை கொண்டவளாய்த் தானும் தலைவனும் கொண்ட காதல், நிலத்தைவிடப் பெரிது, வானத்தைவிட உயர்ந்தது, நீரினும் ஆழமானது என்று அளந்துபார்த்தவள்போல் ஆணித்தரமாய்க் கூறுவது நமக்குப் பெருவியப்பை விளைவிக்கின்றது.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்: 3)
காதலுக்கு மட்டுந்தானா கை கொடுக்கும் நம்பிக்கை? இல்லை… நட்புக்கும் அதுவே வீற்றிருக்கை! நேரில் காணாதபோதினும் ஒத்தஉணர்ச்சி கொண்ட இரு உயர்ந்த உள்ளங்கள் உயிர்நட்பு கொண்டதனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கறியும். ஆம்! சோழ அரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும், பாண்டி நன்னாட்டுப் புலவர் ஆந்தையாருக்கும் இடையில் முகிழ்த்து மலர்ந்திருந்த நட்பெனும் நறுமலர் புறநானூற்றில் இன்றும் புதுமணம் பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றது!
தான்பெற்ற மக்களால் தாங்கொணாத் துயருக்கு ஆளான கோப்பெருஞ்சோழன் அதற்குமேலும் தன் இன்னுயிரைத் தரித்திருக்க விரும்பவில்லை. வடக்கிருந்து உயிர்துறப்பது எனும் முடிவுக்கு வந்தான் (இதைத்தான் சமணர்கள் சல்லேகனை என்பர்.) அரசவாழ்வைத் துறந்து, தருப்பைப் புல்லைப் பரப்பி வடக்கு நோக்கி அமர்ந்தான்; அவனைச் சுற்றிலும் அவன்மீது பெருமதிப்பும், பேரன்பும் கொண்டிருந்த அரசவையினரும் புலவர்பெருமக்களும் குழுமியிருந்தனர் வேதனையோடு. புலவர் பெருமக்களை நோக்கிப் பார்வையை வீசினான் காவலன். தன் குறிப்பறிந்து அருகில்வந்த புலவர்களை நோக்கி, ”அருமை நண்பர் ஆந்தையாருக்கென என்னருகே ஆசனம் ஒன்றை அமையுங்கள்!” என்று உத்தரவிட்டான்.
அரச கட்டளையாயிற்றே மறுக்க முடியுமா? அரசனுக்கருகே ஆசனம் அமைக்கப்பட்டது ஆந்தையாருக்கு! ஆயினும், அரசன் நீங்கலாக ஆங்கே குழுமியிருந்த ஏனையோருக்கு பாண்டி நாட்டிலுள்ள ’பிசிர்’ எனும் ஊரிலிருந்து, செய்தி கேள்விப்பட்டு, ஆந்தையார் இவ்வளவு தூரம் வருவார்; வந்து அரசனோடு உயிர்விடுவார் என்றெல்லாம் எள்ளளவும் நம்பிக்கையில்லை.
நாள்கள் நகர்ந்தன; ஆந்தையாரோ வரக்காணோம்! அரசனும் உயிர்துறந்துவிட்டான். சுற்றியிருந்தோர், இனியும் ஆந்தையார் வருவார் எனும் எண்ணத்தைக் கைவிட்டு அங்கிருந்து புறப்பட எத்தனித்த வேளையில், தொலைவில் ஒருமனிதர் அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி விரைந்து வந்துகொண்டிருப்பதைக் கண்டனர்; வியப்பொடு அத்திசை நோக்கினர். அருகே வந்த அம்மனிதர் அவர்களிடம் தம்மை ”ஆந்தையார்” என்று அறிமுகப்படுத்திக்கொள்ள, அனைவரும் அதிசயித்தனர்; அவரை ஆரத்தழுவி மகிழ்ந்தனர்.
ஆந்தையாரை வரவேற்ற சான்றோர்களில் ஒருவர் கோப்பெருஞ்சோழனின் அன்புக்குரிய அவைப்புலவரான பொத்தியார் என்பவர். ”அருமை நண்பர் ஆந்தையார் எனைக்காண அவசியம் வருவார்” என்ற மன்னனின் பெருமையையும், அது பழுதுறாவண்ணம் வந்த புலவரின் அறிவையும் எண்ணியெண்ணி வியப்பும் மருட்கையும் ஒருங்கே எய்திய பொத்தியார், தம் உள்ளத்து உணர்வுகளை அழகியதோர் பாட்டாய் வடித்தார்.
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே…
(புறம் – 217: பொத்தியார்)
பின்னர், ஆந்தையாரும் மன்னன் மடிந்த இடத்தருகிலேயே வடக்கிருந்து உயிர்துறந்தார் என்பது புறம் நமக்கு அறியத்தரும் செய்தியாகும்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
எனும் வள்ளுவத்துக்கு விளக்கமாய்த் திகழ்கின்றது இவ்வரிய நட்பு!
இவ்வாறு, ஒருவர் மற்றவர்மீது கொள்ளும் நம்பிக்கை, காதலுக்கும் நட்புக்கும் பாதையமைப்பதுபோல், தன்மீதே ஒருவன் கொள்ளும் நம்பிக்கை அவன் தனிவாழ்வின் வெற்றிக்கும், பெற்றிக்கும் வழிவகுக்கின்றது. ஏழைமையோடு தோழமைகொண்ட போதிலும், தளராத தன்னம்பிக்கையோடு வாழ்வில் சாதனைபடைத்த எத்தனையோ அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் வரலாறு நமக்கு இனங்காட்டுகின்றது.
மாந்தரிடம் காணக் கிடைக்கும் இந்நம்பிக்கை, தம்மைச் சார்ந்ததாகவும், சக மனிதர்களைச் சார்ந்ததாகவும் மட்டுமல்லாது, வானளவு விரிந்து, கண்ணால் காணவொண்ணாத கருத்துருவான கடவுள்வரை நிறைந்திருக்கக் காண்கின்றோம். தத்தம் சமயக் கோட்பாடுகளுக்கியைந்த வகையில் கடவுளின் உருவிலும், உடையிலும் மக்கள் மாறுபாடுகள் கொள்ளுகின்றனரே அன்றி, கடவுளே உலகையும், உயிர்களையும் படைத்தவர், அவரை நம்பினார்க் கெடுவதில்லை என்பன போன்ற பொதுநம்பிக்கைகளில் மாறுபாடு கொள்வதில்லை. சிலநேரங்களில் இந்த இறைபக்தி கரைபுரண்டோடி, தேவையற்ற மூடநம்பிக்கைகளில் மானுடரை மூழ்கடித்துவிடுகின்ற ஆபத்தான வேலையையும் செய்துவிடுகின்றது. அதுபோல் மனிதர்மீது மனிதர் கொள்ளும் நம்பிக்கையும் துரோகத்திலும், அவநம்பிக்கையிலும் முடிந்துபோவதை மறுப்பதற்கில்லை.
ஆயினும், ஒரோவழி (at times) நிகழும் இவைபோன்ற எதிர்மறை விளைவுகளை நீக்கிவிட்டு நோக்கினால், வாழ்வைச் செம்மையாய் நடாத்துதற்குத் தேவையான திறத்தையும், மனவுரத்தையும் மாந்தர்க்குத் தந்து இவ்வையத்தை வாழ்விப்பது நம்பிக்கையே என்பதில் ஐயமில்லை.
கேள்வி பதில் பகுதி
|
![]() |
கேள்வி:
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” மற்றும் “செவிச்செல்வம் செல்வத்துள் செல்வம்” இந்த இரண்டும் திருக்குறளில் உள்ள சொற்றொடர்கள் தான். அப்பொழுது எது தான் செல்வத்துள் செல்வம்?
பதில்:
அருட்ச்செல்வத்தை செல்வத்துள் செல்வம் என்று வள்ளுவர் கூறுவது அறத்துப்பாலில் துறவற இயலில். செவிச்செல்வத்தை செல்வத்துள் செல்வம் என்று அவர் கூறுவது பொருட்பாலில் அரசியலில் (Political Science).
துறவறம் அல்லது ‘தவம்’ என்னும் வாழ்க்கை நெறியை (Spiritual life style/commitment) கடைபிடிப்பவர்களுக்கு அருள் (compassion) என்பது மிக மிக அவசியம் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.பின்வரும் அதிகாரங்களான புலால் மறுத்தல் மற்றும் கொல்லாமை போன்றவற்றிர்க்கு அது இன்றியமையாத அஸ்திவாரமாக அமைகிறது. பிற உயிர்களிடம் அருள் உள்ளவன் தானே புலால் உண்ணாமை , இன்னா செய்யாமை , கொல்லாமை ஆகிய பண்புகளை கடைப்பிடிப்பான். It is the basic and fundamental requirement for the development of disciplines like non-violence, non-killing and non-meat eating. துறவற நெறியின் இலக்கானஆன்மிக சுதந்திரத்தையும் முழுமையையும் (Spiritual freedom and Perfection) பெற விரும்புவர்களுக்கு மேற்கூறிய கட்டுப்பாடுகள் வாழ்க்கை முறையாகவே அமைய வேண்டும். அவ்வாறு அமைய வேண்டும் என்றால் ‘அருள்’ என்னும் பண்பை போற்றி, வளர்த்து அதை தன்னுடைய தனித்தன்மையாக, தன் இயல்பாக, ஆளுமையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.எனவே தான் அதன் இன்றியமையாமையை வலியுறுத்த அருளை தவ நெறியில் நிற்பவர்களுக்கு ‘செல்வத்துள் செல்வம்’ என்றார்.
ஆனால் ஒரு தவசியிடம் இருக்க வேண்டிய ‘அருள்’ ஒரு அரசனிடமோ (அக்காலத்தில்) அல்லது நாட்டுத் தலைவினடமோ மிகையான குணமாக இருந்து விட்டால், நாடும், நீதி துறையும், சமூகமும் விளங்குமா? அருள் காட்ட வேண்டிய இடத்தில் தான் காட்ட வேண்டும். எல்லா சந்தர்ப்பங்களிலும், வழக்குகளிலும் (legal cases) , வெளியுறவு கொள்கைகளிலும் (foreign policy) , உள்நாட்டு கொள்கைகளிலும் (domestic policy) அருளையே நியமமாகவும் (standard) கொள்கையாகவும் கொண்டு ஆட்சி புரிந்தால் எஞ்சுவது அராஜகமே (anarchy). எனவே அந்த துறையில் உள்ளவர்களுக்கு வேண்டியது பொது அறிவு — general knowledge and practical wisdom, broad and in-depth.
இது கற்பதனால் மட்டும் வர இயலாது; காலமும் இடம் தராது. மற்ற துறைகளில் வல்லுனர்களாக இருப்பவர்களிடமிருந்து கேட்டு அறிந்து கொள்வது கேள்வி ஞானம் அல்லது செவிச்செல்வம், wisdom from listening and imbibing. (இக்காலத்தில் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு advisory & expert panels இருப்பது அதற்கு தானே). 40 ஆம் அதிகாரத்தில் கல்வியை ‘கேடு இல் விழுச்செல்வம்’ என்கிறார் - அழிவில்லாத செல்வம்/ indestructible wealth. 42 ஆம் அதிகாரத்தில் செவிச்செல்வத்தை செல்வத்துள் செல்வம் என்கிறார்; wealth of wealths or the best of wealths. இரண்டுமே செல்வம் தான். ஏன் இவற்றை செல்வம் என்கிறார்? செல்வம் or wealth is something that can be acquired or built up. So is education and practical wisdom. அதனால் பொருளைச்சார்ந்த செல்வத்திடமிருந்து கல்வியையும், செவிச்செல்வத்தையும் வேறுபடுத்திக்காட்டவே ஒன்றை ‘கேடு இல் விழுச்செல்வம்’ என்றும் மற்றதை ‘செல்வத்துள் செல்வம்’ என்றும் கூறுகிறார். மற்றவர்களாலும், பொருளாதார கால நிலைகளாலும் (economic condition) அதை அழிக்க இயலாது. இது நிற்க.
ஆகவே அறத்துப்பாலில் துறவற இயலில் அருளை ‘செல்வத்துள் செல்வம்’ என்று அவர் கூறுவது தவ நெறியை கடைப்பிடிப்பவர்களுக்கு. பொருட்பாலில் அரசு இயலில் (polity) கேள்வி ஞானத்தை/ செவிச்செல்வத்தை ‘செல்வத்துள் செல்வம்’ என்று வள்ளுவர் கூறுவது நிர்வாகத்துறையிலும் , பொருளாதாரத்துறையிலும், வருவாய்த்துறையிலும், அரசாங்கத்துறையிலும் இருக்கும் நிர்வாகிகளுக்கு.
குறிப்பு:
திருக்குறள் வாழ்க்கையின் மூன்று விழுமியங்களை கூற வந்த நூல்.
“The three earthly values of life”: அறம், பொருள், இன்பம். விழுமியம் என்பது வாழ்க்கையில் பெறக்கூடிய, பெறவேண்டிய ஒன்று அல்லவா? குறிப்பிட்ட விழுமியத்தை பெற , பல உப விழுமியங்கள் தேவை. ஆன்மிக முழுமை என்னும் விழுமியத்தைப் பெற அருள் என்னும் விழுமியம் தேவை. உயர்ந்த அரசு நிர்வாகம் என்னும் விழுமியத்தை அடைய கல்வி , செவிச்செல்வம் என்னும் உப விழுமியங்கள் தேவை. விழுமியம் என்பது செல்வத்தைப் போல பெறக்கூடிய , வளர்க்கக்கூடிய ஒன்று. ஆதலால் அதையும் ‘செல்வம்’ என்று கூறுவதில் முரண் ஏதும் காண்பதற்கில்லை.
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.
Posted on December 6, 2019 #Megala Ramamoorthy #Rajasekar Elango #Parimala Nathan