logo

Home Tamil School Archives Search Feed Contributing Guide


இதழ்: இருபத்தி மூன்று , ஆகஸ்ட்

ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்

இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா

தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ


அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,

நம் பள்ளி, மெய்நிகர் வகுப்புகளாக நடத்தி வந்த மாணவர்களுக்கான கோடை கால பேச்சு பயிற்சி வகுப்புகள் இனிதே நிறைவடைந்தது. பயிற்சி பெற்ற மாணவர்கள் பேச்சு தமிழில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக பல பெற்றோர்கள் தெரிவித்தமை இம்முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம். விடுமுறையாயினும் பங்கு கொண்டு, கடந்த எட்டு வாரங்களாக ஆர்வத்துடன் செயல்பட்ட ஆசிரியர்கள் அனைவர்களுக்கும் தமிழ் பள்ளி தம் நன்றியை உரித்தாக்குகிறது.

மிக நீண்ட கோடை விடுமுறைக்கு பிறகு , பெற்றோர்களும் மாணவர்களும் அடுத்த கல்வியாண்டிற்கான தொடக்கத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளதைப் போல , தமிழ் பள்ளியும் மிக ஆவலாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆயத்த பணிகள் மிக மும்முரமாக நடை பெற்று வருகின்றது. விரைவில் உங்கள் மின்னஞ்சலிலும், புலனத்திலும் தகவல்கள் தெரிவிக்கப் படும்.

வலைத்தளத்தில் பதிவு செய்யாத மாணவர்களின் பெற்றோர்கள் விரைவில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.


செய்தி மடல் ஆசிரியர் பகுதி

குழந்தைகளின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த இதழில் புதியதாக சிறுகதை பகுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முனைவர் ச.பாரதி அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்

சென்ற மாத இதழில், மாணவர் பகுதியில், கொரோனவைப் பற்றிய விழிப்புணர்வு ஓவியம் , கொரோனாவினால் பெற்றதும் இழந்ததும் என்பதை குழந்தைகள் உலகில் இருந்து வெளிப்படுத்தியமை, இந்த தலைமுறையிலும் பண்டைய கால தலைவர்களின் உருவ படத்தை தீட்டியமை , இவற்றையெல்லாம் எண்ணி மிகவும் வியப்புற்றோம். குழந்தைகளுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் — எக்கார்ட் டாலே என்ற கட்டுரை, இன்றைய நவீன காலச் சூழ்நிலையை வெளிச்சம் போட்டு காட்டியும் அதை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுத் தந்தது.

அகஸ்தியர் யார் என்ற ஆராய்ச்சி குறிப்புகள் மூலம் , அகஸ்தியரைப் பற்றி மட்டுமல்லாது, அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.

கேள்வி பதில் பகுதிக்கு வாசகர்கள் தங்கள் கேள்விகளை என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கேள்விகள் ஆசிரியக்குழுவின் ஆய்வுக்கு பிறகு பிரதான எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும் .

இம்மடலில் உங்கள் எழுத்துக்களை (சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிஆராய்ச்சி) வெளியிட விருப்பம் உள்ளவர்கள் ஆசிரியர் குழுவை அணுகவும்.

தொடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!


செவி வழிக்கல்வி - திருக்குறள்
 — கவிதா ராஜசேகர்

Kavitha Rajasekar

இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்

திருக்குறள் அன்புடைமை விளக்கம்

திருக்குறள் செய்ந்நன்றியறிதல் விளக்கம்


மாணவர் பகுதி

மாணவர் பகுதிக்கு தொடர்ந்து வரும் ஆதரவைக் கண்டு பேருவகை கொண்டோம். பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் இப்பகுதியை அவசியம் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை ஆசிரியர் குழுவிற்கு மின்னஞ்சலிலோ புலனத்திலோ அனுப்புங்கள், வரும் பிரதிகளின் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்தி மடலின் இப்பகுதியில் வழங்கப்படும்.

என் வீட்டுத் தோட்டத்தில் நான் கண்ட கம்பளிப்பூச்சி
 — ஹர்த்திக் - முன் மழலை

logo

எனக்கு வேகமாக கார் ஓட்ட ஆசை!
 — செய்யது ஸமீர் - நிலை 2

logo

சிறுகதை பகுதி - பாம்பு வீடு
 — முனைவர் ச.பாரதி

logo
logo
logo
logo
logo
logo

அன்றாட பயன்பாடுகளை நம் மொழியில் பழகுவோம்

எனக்கு பள்ளி ஆரம்பமாக இருப்பதை நினைக்கும் போது ஒரே excitement தான் எனக்கு பள்ளி ஆரம்பமாக இருப்பதை நினைக்கும் போது ஒரே உற்சாகம் தான்
நான் எங்கள் வீட்டுக்கு அருகில் இல்ல ஒரு மரத்தில் Beehive பார்த்தேன் நான் எங்கள் வீட்டுக்கு அருகில் இல்ல ஒரு மரத்தில் தேன்கூட்டைப் பார்த்தேன்
அம்மா, நான் backside park-ல விளையாட போகிறேன் அம்மா, நான் பின்பக்க பூங்காவில் விளையாட போகிறேன்
எனக்கு drawing பண்ண பிடிக்கும் எனக்கு வரைதல் பிடிக்கும்
என் அப்பா எனக்கு clay dolls வாங்கி கொடுத்தாங்க என் அப்பா எனக்கு களிமண் பொம்மைகள் வாங்கி கொடுத்தாங்க

இலக்கிய பகுதி

சிறுபஞ்சமூலம்

ஆசிரியர் பெயர் - காரியாசான்

சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. மூலம் என்பது வேர். சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும்.

அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் ஆகிய ஐந்தின் வேர்களிலிருந்து செய்த மருந்து நோய் தீர்க்கும். அதுபோன்று உயிருக்கு நன்மை பயக்கும் ஐந்தும் உண்மைகளை ஒவ்வொரு வெண்பாவும் கூறுவதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப்பட்டது.

இது நூறு பாடல்களால் ஆனது. இயற்றியவர் காரியாசான். இந்த பாடல்களில் உள்ள கருத்துக்கள், மக்களின் அறியாமையை போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.கண்வனப்பு, கால் வனப்பு, எண் வனப்பு, பண்வனப்பு ,வேந்தனுக்கு வனப்பு இவையிவை என்று கூறும் சிறுபஞ்சமூலப்பாடல் இது.

கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை;
எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்; பண் வனப்புக்
கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான், நன்று என்றல் வனப்பு

கருத்துரை:

கண்ணுக்கு அழகு இரக்க குணம், காலுக்கு அழகு இரந்து செல்லாமை, ஆராய்ச்சிக்கு அழகு பொருளைத் துணிந்து சொல்லுதல்,இசைக்கு அழகு கேட்பவர் அவனைப் புகழ்தல், அரசனுக்கு அழகு குடிகள் அவனை நல்லவன் என்று கூறுதல்.

இதேபோன்று படை வனப்பு, இடை வனப்பு,நடைவனப்பு, மொழி வனப்பு இவையிவை என்று மேலும் சிலவற்றை வகைப்படுத்துகிறது இந்த சிறுபஞ்சமூலம் பாடல்.

படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின்
இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்
கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு

அதாவது சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், ஒழுக்கத்துக்கு அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும்

என்று கூறப்படுகிறது.

மேலும் கொடையின் சிறப்பை விளக்கும் மற்றொரு பாடல்,

வெந் தீக் காண் வெண்ணெய், மெழுகு, நீர் சேர் மண், உப்பு,
அம் தண் மகன் சார்ந்த தந்தை, என்று ஜந்தினுள்,
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின், சிறிது எனினும்,
குன்றுபோல் கூடும், பயன்.

அதாவது நெருப்பைக் கண்ட வெண்ணெய் முதலிய பொருள்களிலொன்றைப் போல மன முருகி, இரவலர்க்கு வேண்டும் பொருள் சிறிதாய் இயைந்தவளவிற் கொடுத்த வொருவனுக்கு

அச்சிறு கொடையாலுண்டாகும் பயன் மலைபோல மிகப் பெரியதாகும்.

தோலாலான கன்றினைக் காட்டி கரந்த பசுவின் பாலை நன்னெறியில் வாழ்வோர் பருக மாட்டார்கள் என்ற செய்தி இந்நூலில் இடம் பெறுவது வியப்பைத் தருகிறது.

இதனை பின்வரும் பாடல் உணர்த்துகிறது.

தோற் கன்று காட்டிக் கறவார்; கறந்த பால்
பாற்பட்டார் உண்ணார்; பழி, பாவம், பாற்பட்டார்,
ஏற்று அயரா, இன்புற்று வாழ்வன, ஈடு அழியக்
கூற்று அயரச் செய்யார், கொணர்ந்து.

மேலும் சாகட்டும் என்று பிறர் பழிக்கும் படி வாழாமல் வாழ்க என போற்றும்படி வாழ்தலை இந்நூல் வலியுறுத்துகின்றது.

இவ்வாறு சிறுபஞ்சமூலம் உயிர்காக்கும் பல வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கிய சிறந்த நூலாக திகழ்கிறது.


கம்பர் காணவிழைந்த சமூகம்!
 — மேகலா இராமமூர்த்தி

Megala Ramamoorthy

தமிழில் இயற்றப்பட்ட ஒப்பற்ற பெருங்காப்பியமாகவும் பேரிலக்கியமாகவும் திகழ்வது கம்பராமாயணம்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை” 

என்று மகாகவி பாரதியால் போற்றிக் கொண்டாடப்பட்ட புலவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த கம்பரால் எழுதப்பட்ட காப்பியம் இது.

கம்பர், தமிழ்க்கடலின் ஆழத்தைக் கண்டுணர்ந்த அறிஞர்; முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வித்தகக் கவிஞர்; தமிழ் மரபுகளில் ஊறித் திளைத்த நற்றமிழர். தம் பேரிலக்கியத்தில் இராமனைக் குறிப்பதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும், தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் (கம்பராமாயணம்: நகர்நீங்கு படலம்-1741) என்ற சொற்கள் தென்மொழியாம் தமிழிலும் வடமொழியிலும் பெரும்புலமை பெற்றிருந்த கம்பருக்கும் பொருந்துவனவாகவே உள்ளன. மானுடம் வெல்லவேண்டுமாயின் அது புலனொழுக்கத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்று என்று விரும்பினார் கம்பநாடர். எனவே தம் காப்பியத்தின் தொடக்கமாக அமைந்த பால காண்டத்தின் முதற்படலமான ஆற்றுப் படலத்திலேயே கோசலநாட்டு மக்களின் ஒழுக்கத்தைப் பற்றித்தான் பேசுகின்றார்.

ஆசலம்புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் 
(கம்ப: ஆற்றுப்படலம் – 12)

பொதுவாக மனிதர்களைத் தம் ஒழுக்கத்திலிருந்து விலகச் செய்யும் ஐம்பொறிகள் எனும் அம்புகளும், பெண்களின் கண்களாகிய அம்புகளும் ஒழுக்கநெறியினின்று விலகிச் செல்லாத கோசல நாட்டை அணிசெய்கின்ற சரயு என்ற ஆற்றின் அழகினை நான் இப்போது கூறுகின்றேன் என்று ஆரம்பிக்கும் கம்பர், ஆற்று வருணனையைச் சாற்றுவதற்கு முன்பாகவே கோசல நாட்டு மக்களின் நல்லொழுக்கத்தைப் பேசுவதைக் காண்கையில் நிலவளத்தைவிடவும், நீர்வளத்தைவிடவும் மக்களின் குற்றமற்ற மனவளத்தையே பெரிதும் போற்றும் பெற்றியுடையவராய் அவர் திகழ்ந்தார் என்பது புலனாகின்றது.

இவ்விடத்தில் பாட்டரசி ஔவையின் சங்கப் பாடலொன்றை நாம் பொருத்திப் பார்க்கலாம்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 
(புறம்: 187– ஔவையார்)

நிலமே நீ ஓரிடத்தில் நாடாகவும், மற்றோர் இடத்தில் காடாகவும், வேறோர் இடத்தில் கடலாகவும், பிறிதோர் இடத்தில் மலையாகவும் தோற்றமளிக்கின்றாய். ஆனால் நிலஅமைப்பின் அடிப்படையிலா நீ பெருமை பெறுகின்றாய்? இல்லை! எந்நிலத்து ஆடவர் நல்லவரோ அவ்விடத்தில் நீயும் சிறப்படைந்துவிடுகின்றாய் என்கிறார்.

பாட்டரசி, ஆடவரின் ஒழுக்கத்தாலேயே நிலம் சிறக்கும் என்று செப்ப, கவிச்சக்கரவர்த்தியோ இன்னும் ஒருபடி மேலேபோய் எங்கே ஆடவர் பெண்டிர் இருதிறத்தாரும் புலனொழுக்கத்தில் சிறந்திருக்கின்றனரோ அந்நிலமே சிறக்கும் என்றுரைத்து நிலத்தைச் சிறப்படையச் செய்வதில் பெண்டிருக்கும் பங்குண்டு என்பதைத் தெளிவுபடுத்திவிடுகின்றார்.

அடுத்து, கோசலத்தை அணிசெய்யும் மாசற்ற சரயு எனும் ஆற்றின் தன்மை குறித்துப் பேசத் தொடங்குகின்றார்.

இரவிதன் குலத்து எண்ணில் பல் வேந்தர்தம்
பரவுநல் ஒழுக்கின் படிப் பூண்டது
சரயு என்பது தாய் முலை அன்னது இவ்
உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.  
(கம்ப: ஆற்றுப்படலம் – 23)

சூரிய குலத்தை ஆண்ட வேந்தர்கள் கணக்கற்றோர். அவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட பொதுப்பண்பு, உலகம் போற்றும் ஒழுக்கநலம் வாய்ந்தோராய் அவர்கள் அனைவருமே விளங்கியமையாகும். அவர்களைப் போன்றே போற்றத்தக்க நல்லொழுக்கினை மேற்கொண்ட சரயுவானது, கோசல நாட்டின் உயிரினங்கள் அனைத்திற்கும் பாலூட்டி வளர்க்கின்ற தாயின் முலைபோன்றதாகும். தாய்முலையானது பால்சுரந்து குழந்தைகளைப் பேணிவளர்ப்பது போன்றே சரயுவும் நீர்சுரந்து கோசல மக்களைப் புரக்கின்றது என்பது கம்பர் காட்டும் உவமை.

ஒழுக்கு என்ற சொல் இங்கே இருவேறு பொருளில் கையாளப்பட்டிருக்கின்றது. அரசர்களுக்கு அஃது இடையறாத ஒழுக்கப் பண்பையும், ஆற்றுக்கு இடையறவுபடா நீர் ஒழுக்கினையும் குறிப்பதாக அமைகின்றது.

கம்பரைப் பொறுத்தவரை அவர் தமிழகத்தைத் தாண்டி வேறெங்கும் சென்றதாகத் தகவல்கள் இல்லை. அவர் பார்த்ததெல்லாம் சோழநாட்டையும் அதனை வளப்படுத்தி, சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையவைத்த, காவிரியையும்தான்! எனவே சரயுவின் இயல்புகளாகக் கம்பராமாயணத்தில் அவர் குறிப்பிடுவதெல்லாம் வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி’யின் இயல்புகளாக அவர் கண்டவற்றைத்தாம்!

சரயுவை எப்படித் தாய்முலைக்குக் கம்பர் ஒப்பிடுகின்றாரோ அதுபோன்றே ஈன்றணிமை தீர்ந்த குழந்தையைத் தாய்முலைப்பால் காப்பதுபோல் தன்னுடைய நீர்வளத்தால் சோழநாட்டைக் காக்கின்றது காவிரி என்று காவிரியைத் தம் புறநானூற்றுப் பாடலில் போற்றுகின்றார் புலவர் கோவூர்கிழார்.

புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி…. (புறம் 68 - கோவூர்கிழார்)

எனவே கம்பரின் சரயு குறித்த கற்பனைக்குக் கோவூர் கிழாரின் இந்தப் பாடலடிகள் அடிப்படையாக இருந்திருக்கக்கூடும்.

நாட்டு வளத்தைப்பற்றிப் பேசுமிடத்து மீண்டும் கோசலநாட்டு மக்களின் பண்பு நலன்களைப் பரக்கப் பேசுகின்றார் கம்பர்.

கோசல நாட்டில் வறுமையில்லாததால் அங்கே வள்ளன்மைக்கு வேலையில்லை; அங்குள்ளவர்களிடையே பகைமை இல்லாத காரணத்தால் வலிமையானவர் யார் எனும் ஆராய்ச்சிக்கு வழியில்லை. கோசலத்தில் அனைவருமே உண்மைவிளம்பிகளாய் விளங்கியமையால் உண்மைக்கென்று தனித்த மதிப்பில்லை. அம்மட்டோ? அங்குள்ளோர் அனைவரும் கல்வி கேள்விகளில் மிக்கோராய்த் திகழ்ந்தமையால் அறியாமைக்கும் இடமில்லாமற் போய்விட்டது என்பது கம்பர் தீட்டும் கோசலத்தின் கவினார் சித்திரம்.

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.
(கம்ப: நாட்டுப்படலம் – 84)

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் எனும் சமதர்மச் சமுதாயத்தை தம் பாடலில் படைத்துக் காட்டியிருக்கின்றார் கம்பர்.

கிபி 15/16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த தத்துவவியல் அறிஞரும், மனிதநேயவாதியுமான தாமஸ் மூர் (Thomas More) தம்முடைய உட்டோப்பியா (Utopia) நூலில் கட்டமைத்த, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாட்டாளி மக்களின் பிதாமகரான கார்ல்மார்க்ஸ் கனவுகண்ட, ஏற்றத்தாழ்வற்ற ஓர் உயர்ந்த சமூகத்தை — உன்னத சமுதாயத்தை, 12ஆம் நூற்றாண்டிலேயே தம் காப்பியத்தில் காணச்செய்திருக்கும் கம்பநாடரைப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் முன்னோடி என்று நாம் பெருமையோடு கருதலாம்.


கேள்வி பதில் பகுதி
 — முனைவர் பரிமளா நாதன்

Parimala Nathan

கேள்வி: இந்திய நாகரிகத்திலும், குறிப்பாக தமிழக நாகரிகத்திலும் விருந்தோம்பல் தலையாய கடமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதேபோல் வேறு பழமையான உலக நாகரிகங்களில் விருந்தோம்பல் வாழ்க்கையின் ஒரு முக்கிய கடமையாகக் கூறப்பட்டுள்ளதா?

பதில்:

விருந்தோம்பல் என்ற சொல் hospitality’ என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. விருந்தோம்பலைக் குறித்து வள்ளுவர் பத்து குறட்பாக்களில் கூறியுள்ளது அனைவரும் அறிந்ததே. வடமொழி நூல்களான தர்ம சாஸ்திரங்களும்,ஸ்மிருத்திகளும், கிருஹ சூத்திரங்களும் (grihya sutras) இல்லற வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஐந்து தலையாய கடமைகளில் விருந்தோம்பல் ஒன்று என்று கூறுகின்றன. விருந்தோம்பல் என்பது நமக்கு தெரிந்தவர்கள், உற்றார் உறவினர், நண்பர்களுக்கு மட்டும் தரப்படும் உபசரணை அல்ல. முற்றிலும் அறியாதவர்களுக்கு தரப்படும் உபசரணை தான் விருந்தோம்பல். விருந்து என்றால் புதுமை; ஆகவே விருந்தினர் என்றால் புதியவர். நட்பும் சுற்றமும் அல்லாது புதிதாக நம் வீட்டுக்கு வருபவர். ஓம்பல் என்றால் அன்புடன் வரவேற்று உணவிடுதல்.

விருந்தோம்பல் என்ற இவ்வாழ்க்கை கடமை பழம்பெரும் நாகரிகமான கிரேக்க நாகரிகத்தில் மிக மிக முக்கியமான இடத்தை வகித்து வந்தது. இதை கிரேக்க மொழி XENIA என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

Xenia என்பதின் பரந்த பொருள் (broad meaning), முன்பின் அறியாத வேற்று மக்களுக்கு அளிக்கப்படும் விருந்தோம்பலும் பெருந்தன்மையும். ஆம் — hospitality and generosity towards foreigners and strangers. இது ஒரு சமூக வழக்கமும், பழக்கமும் மட்டும் அல்லாமல், சமய சடங்காகவும் கருதப்பட்டது. இது அரசர்கள், செல்வந்தர்களுக்கு மட்டுமின்றி , சாமானிய மக்களுக்கும் பெரும் கடமையாக இருந்தது. விருந்தோம்பல் செய்யும் இல்லத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், விருந்தினராக வந்தவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருந்தன. கிரேக்கர்கள் விருந்தோம்பலுக்கென்றே ஒரு தெய்வத்தை நியமித்துக் கொண்டனர். Zeus Xenios என்ற இத்தெய்வம், zeus என்ற பெருங்கடவுளின் ஒரு கூறு. (Zeus என்ற கிரேக்க தெய்வம், Jupiter என்ற உரோம தெய்வம், Thor என்ற ஸ்வீடிஷ் தெய்வம் எல்லோரும் இந்திரனை போல் வஜ்ராயுதத்தை (thunder bolt) கையில் வைத்திருப்பார்கள்). இந்த தெய்வம் விருந்தோம்பல் கடமையை மனிதர்கள் முறையாக ஆற்றுகிறார்களா என்று மேற்பார்வை பார்க்கும் தெய்வம். அக்கடமையை முறையாக செய்யாதவர்களை தண்டிக்கும் தெய்வம் இந்த Zeus Xenios.

Xenia என்பது என்ன என்பதை முதலில் சுருக்கமாக பார்ப்போம். கிரேக்க வாழ்க்கையில் விருந்தோம்பல் பணியை மேற்கொள்பவர் செய்ய வேண்டியவை: விருந்தினர்களை உடனடியாக இல்லத்திற்குள் வரவேற்க வேண்டும்; அவர்களுக்கு உணவும், பருகும் நீரும் மற்ற பானங்களும் தரவேண்டும்; குளிப்பதற்கு வசதி செய்து தரவேண்டும்; அமர்வதற்கு சிறந்த ஆசனத்தை தரவேண்டும். அவர்கள் உண்டு இளைப்பாறும் வரை எந்த கேள்விகளையும் கேட்க கூடாது; அவர்கள் யார் என்றும் கேட்கக்கூடாது; அவர்கள் செல்லும் பொழுது ஏதாவது தகுந்த அன்பளிப்பை தந்து விடையளிக்க வேண்டும்.

மேற்கூறியவற்றை கேட்கும் பொழுது நம் மனதில் இவை அனைத்தும் நமக்கு நம் நாட்டில் கற்பித்த பண்புகளை போலவே உள்ளதே என்ற நினைவு தோன்றும். நம் நாட்டின் தர்ம, கிருஹ சாஸ்திரங்களும், திருக்குறளும் இவற்றை தானே குறிப்பிடுகின்றன.

கிரேக்க இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் எழுதப்பட்ட காவியம் (epic) ஹோமரால் (Homer) எழுதப்பட்ட ஈலியட் (Iliad). அதற்குப்பிறகு அவரால் எழுதப்பட்ட இரண்டாம் காவியம் ஆடிசி (Odyssey). Iliad 750 B.C இல் எழுதினார் ஹோமர் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். Iliadம் Odysseyயும் மேற்கத்திய நாகரிகத்திற்கு அடித்தளமாக இருந்த இரண்டு காப்பியங்கள் என்பது பரவலான கருத்து. இந்த இரண்டு காப்பியங்களுமே பல கருப்பொருட்களை (themes) கொண்டு இயற்றப்பட்டன. அதில் மிக முக்கியமான கருப்பொருள் Xenia. இவ்விரண்டு கதைகளின் முக்கியமான கட்டங்கள் Xeniaவை மையமாகக் கொண்டுள்ளன. அது மட்டுமன்றி அக்காவியங்களின் கதாபாத்திரங்களின் வீரமும், பண்பாடும் அவர்கள் Xeniaவின் கொள்கைகளை கடைப்பிடிப்பதிலும், கடைப்பிடிக்காமல் நழுவ விட்டதைப் பொருத்தும் தான் எடையிடப்பட்டு விமர்சிக்கப்பட்டன. The moral and heroic quality of most of the characters was determined by their practice of or rejection of the conventions of xenia. எனவே Xenia விற்கென்றே கிரேக்கர்கள் ஒரு கடவுளை நியமித்ததில் வியப்பொன்றுமில்லை.

Iliad என்ற காப்பியம் Iron Age இல் நடைபெற்ற ஒரு போரை குறித்த காப்பியம். Trojan War என்று அழைக்கப்படும் இப்போர் மூண்டதின் மூல காரணமே Xeniaவின் மரபுகளை மீறியதின் பலனாக. இப்போர் எதனால் மூண்டது என்று சுருக்கமாக பார்ப்போம். Troy நாட்டு இளவரசனான Paris, Sparta நாட்டிற்கு விருந்தினராக செல்கின்றான். Sparta அரசன் Menelaus இன் மனைவி Helen, மாபெரும் அழகி. Paris அவள் மீது வேட்கைக் கொண்டு அவளை கவர்ந்துக் கொண்டு தன் நாட்டிற்கு திரும்பினான். தன் மனைவியை மீட்க வேண்டி Menelaus தன் அண்ணனான Mycenae நாட்டு அரசன் Agamemnon இன் உதவியை நாடுகிறான். Agamemnon மற்ற கிரேக்க அரசர்களையெல்லாம் கூட்டு சேர்த்துக்கொண்டு பெரும் கடற்படையை திரட்டிக் கொண்டு Troy நகரை முற்றுகையிடுகிறான். பத்து ஆண்டுகள் போர் நடைபெற்று பல மாபெரும் வீரர்கள் இறந்த பிறகு கிரேக்கர்கள் வெற்றி பெறுகிறார்கள். Helen யை மீட்டுக் கொண்டு Menelaus தன் நாடு திரும்புகிறான். 10 ஆண்டு நடைபெற்ற போரின் இறுதி 52 நாட்களைத்தான் Iliad காப்பியம் பாடுகின்றது. இப்போர் மூண்டதின் காரணமே விருந்தினராக வந்த ஒருவன் விருந்தோம்பலின் பண்புகளை மீறிய மாபெரும் தவறு. உபசரணை செய்பவனுக்கு மட்டுமன்றி அந்த உபசரணையை பெறுபவனுக்கும் சில கட்டுப்பாடுகளும் நடைமுறை பண்புகளும் இருந்தாக வேண்டும் என்பது Xeniaவின் கொள்கை.

Odyssey என்ற Homer இன் இரண்டாவது காவியம் ஒவ்வொரு திருப்பத்திலும் Xenia வைத்தான் மையமாக கொண்டுள்ளது. Odysseus, Ithaca நாட்டு அரசன். அவன் மனைவி உயர்ந்த பண்புகள் நிறைந்த கற்புடைய பெண் Penelope. இவர்கள் மகன் Telemachus. Troy நகரை கூட்டாக முற்றுகையிட்ட கிரேக்க அரசர்களுள் Odysseusம் ஒருவன். 10 ஆண்டுகளுக்கு பின் போர் முடிந்து வெற்றி பெற்ற பின், Odysseus கப்பலில் தன் நாடான Ithaca வையும் மனைவி, மகனையும் சென்றடைய பயணத்தைத் தொடங்கினான். இரண்டு வாரங்களுக்குள் முடிய வேண்டிய பயணம் 10 ஆண்டுகள் ஆயிற்று முடிவடைய. ஏனெனில், வரும் வழியில் பல கற்பனைக்கெட்டாத சாகசங்களில் (adventures) சிக்கி, 12 கப்பல்களில் அனைத்தும் அழிய 600 வீரர்களில் தன் ஒருவனைத் தவிர எல்லோரும் இறக்க, கடைசியில் ஒருவாறு மொத்தம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தன் நாடு அடைந்தான் . (10 ஆண்டுகள் போர் + 10 ஆண்டுகள் கடல் பயணம்) அதனால் தான் Odyssey’ என்ற பெயர் நீண்ட, பல இன்னல்கள் நிறைந்த வாழ்க்கை பயணத்தை சுட்டிக்காட்டும் சொல்லாக மாறிற்று.

இந்த நீண்ட இடைவெளியினால் தன் மனைவி Penelopeயை அடைய விரும்பி 108 சிற்றரசர்களும், தலைவர்களும் அவன் அரண்மனைக்கு செல்கிறார்கள். கணவனுக்காக காத்திருந்த Penelope வீடு தேடி வந்த இந்த (வேண்டா) விருந்தினர்களை தனக்கு விருப்பமில்லை என்றாலும் Xeniaவின் பண்புப்படி தன மனைக்குள் நுழைய விட்டாள். தானும் தன் மகன் Telemachusஉம் அவர்களை பேணி விருந்தோம்பினார்கள். அவர்களும் நீண்ட காலம் தங்கி அவள் மனம் மாறும் என்று காத்திருந்தார்கள். அவர்களின் விருந்தோம்பலிலே மெல்ல செல்வம் கரையத் தொடங்கியது. தனக்கு சேர வேண்டிய செல்வம் கரைகிறதே என்று Telemachus மனதில் எண்ணினாலும் அதை வெளிக்காட்டாமல் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டுடனே பலகாலம் அமர்ந்துவிட்ட இந்த 108 விருந்தினர்களை முகம் சுருங்காமல் ஓம்பி வந்தான். செல்வம் குறைந்த நிலையிலும், மனம் வருந்திய நிலையிலும் தாயும் மகனும் Xeniaவை நழுவவிடாமல், அப்பண்பை போற்றி நிலை நாட்டினார்கள். தன்னுடைய கற்பிற்கு ஆபத்து வந்திருப்பினும், தன் மகனின் உயிருக்கு ஆபத்தும், செல்வ இழப்பும் நேரும் தருணத்திலும் Xeniaவை (விருந்தோம்பலை) காப்பாற்றி, Zeus Xenios என்ற தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகாமல் அச்சமூக/சமய பண்பை காத்தாள் Penelope. இதனால் Xeniaவின் முக்கியத்துவம் அக்கால கிரேக்க சமுதாயத்தில் எத்தனை ஆழமாக வேரூன்றி இருந்தது என்று பெறப்படும்.

இந்த இன்னலில், மனக்கவலையில் சோர்வுற்று ஒருநாள் அமர்ந்திருந்த Telemachus தன் அரண்மனை வாயிலில் ஒரு களைப்புற்ற விருந்தாளி வந்து நிற்பதைப் பார்த்து மனம் பதை பதைத்தான். அந்த பதை பதைப்புக்கு காரணம் தன் இல்ல வாசலில் ஒரு விருந்தாளி ஒரு கணத்துக்கு மேல் உள்ளே அழைக்கப்படாமல் வந்து நிற்கின்றானே என்பது தான். வந்து நின்ற களைப்புற்ற வீரன் மாறு வேடத்தில் வந்த Athena என்ற தெய்வம். வந்த புதிய மனிதனைப் பார்த்த Telemachus ஓடிச் சென்று அந்த விருந்தினரின் வலது கையை அன்புடன் பிடித்து, இடது கையில் பிடித்திருந்த வேலை தான் வாங்கிக் கொண்டு மிகுந்த பரிவுடன், வழிப்போக்கரே வருக. எங்கள் இல்லத்தில் நீங்கள் விருந்தினராக போற்றப்படுவீர்.உணவு அருந்திய பிறகு உங்கள் தேவை என்ன என்று கூறுவீர், என்று கூறி அன்புடனும், மிகுந்த மரியாதையுடனும் வரவேற்றான், அது யாரென்று அறியாமலே. Telemachus இன் இந்த ஒரு சில சொற்களிலே கிரேக்க நாகரிகம் விருந்தோம்பலுக்கு தகுந்த வானளாவிய மதிப்பும் புனிதமும் தெளிவாகிறது. Welcome stranger. You shall be entertained as a guest amongst us. Afterward, when you have tasted dinner, you shall tell us what your need is.”

ஆகவே,

"இருந்தோம்பி இல் வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
 வேளாண்மை செய்தற் பொருட்டு"

என்பது மற்றும் சில பழமையான நாகரிகங்களிலும் போற்றப்பட்ட உயர் பண்பாகும் என்பதை நாம் அறிகிறோம்.

இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.


Posted on August 9, 2020   #Kavitha Rajasekar     #Megala Ramamoorthy     #Parimala Nathan     #Bharathi  







← Next post    ·    Previous post →

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!