logo

Home Tamil School Archives Search Feed Contributing Guide


இதழ்: முப்பத்தி மூன்று , செப்டம்பர்

ஆசிரியர் : திரு சிவசுப்பிரமணியன்

இணை ஆசிரியர் : திருமதி கார்த்திகா

தகவல் தொழில் நுட்ப இயக்குனர் : திரு ராஜசேகர் இளங்கோ


அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது வணக்கங்கள்,

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இம்மகிழ்ச்சியான தருணத்தில் மேலும் ஒரு இனிய செய்தி, ஹில்ஸ்பரோ கவுண்டியிலுள்ள பொதுப்பள்ளி, மாணவர்கள் தன்னார்வத் தொண்டு புரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக நம் தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதைப் பெருமகிழ்ச்சியோடும் பேருவகையோடும் தெரிவித்துக்கொள்கிறோம். (Tampa Bay Tamil Academy has been approved as one of the recognized volunteer service provider organizations for the students at Hillsborough County Public Schools)

இக்கல்வியாண்டின் முதல் பருவத்தேர்வு இனிதே முடிவடைந்து விடைத்தாள்கள் மெய்நிகர் வகுப்பறைகளில் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. சென்ற வார வகுப்பின் ஒரு பகுதியாக பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ந்தது. இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ள இயலாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை வகுப்பு ஆசிரியரை அணுகி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் கடந்த வாரம் நடைபெற்ற பள்ளி நிர்வாகக்குழு , ஆசிரியர்கள் , பள்ளி முதல்வர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்ற மெய்நிகர் சந்திப்பின் தொகுப்பை, ஆவணமாக ஒவ்வொரு வகுப்புக்கான புலனக்குழுவில் பள்ளி வழங்கியுள்ளது. பெற்றோர்கள் தங்குளுடைய கருத்துக்களை தெரிவிக்கவும், ஐயப்பாடுகளை தெளிவுபடுத்திக்கொள்ளவும் பள்ளி முதல்வர்களையும் நிர்வாகக்குழுவையும் அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம். வீட்டுப்பாட பயிற்சி மிகவும் முக்கியம் என்பதை பெற்றோர்கள் தொடர்ந்து பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

பெற்றோர்கள் தம் சிறுவயதில் கொண்டாடிய தீபாவளி திருநாளன்று குளித்த எண்ணெய் குளியல், உண்ட உணவுகள், சென்ற உறவினர் வீடுகள், வெடித்த பட்டாசுகள் , பார்த்த திரைப்படங்கள், கற்ற அறிவுரைகள் போன்ற எண்ணற்ற அனுபவத்தை குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தைகளுக்கு புதிய விசயங்கள் கூறியது போலும் ஆயிற்று, பெற்றோர்களுக்கு தம் குழந்தை பருவத்தை நினைவுகூர்ந்தமை போலவும் ஆயிற்று.

பெற்றோர்கள் , பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள், அவர்களுக்கு மொழி மீதான ஆர்வம் கண்டிப்பாக வளரும்.


மாணவர் பகுதி

மாணவி யாழினி அஜீத்
Student_Yazhini
மாணவி ஷிவானி இளமாறன்
Student_Shivani

வடஅமெரிக்க தமிழ் சங்க கூட்டமைப்பு (FETNA)நடத்திய தமிழ் தேனீ போட்டியில், நம் பள்ளி மாணவர்கள் யாழினி அஜீத் மற்றும் ஷிவானி இளமாறன் இறுதி போட்டி (நிலை 2) வரை முன்னேறி பங்கு பெற்றனர் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். இப்போட்டியில் ஏறத்தாழ எழுபது தமிழ் பள்ளிகள் பங்கு பெற்று, நம் பள்ளி இறுதி போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்க செய்தி. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.


செவி வழிக்கல்வி - திருக்குறள்
 — கவிதா ராஜசேகர்

Kavitha Rajasekar

இதோ உங்களுக்காக, ஒலி வடிவத்தில் திருக்குறள், அடுத்த பகுதிகள்

திருக்குறள் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம் விளக்கம்

திருக்குறள் - ஒருமையுள் ஆமைபோல் விளக்கம்


நவீன சிந்தனை - ஒரு வீடு இரு வாசல்
 — செ.ஷேக் அப்துல் காதர்

Sheikh

OruVeeduIruVaasal


ஆசிரியர் அறிமுகம் - திருமதி மீனாட்சி

Teacher_Meenakshi

தனது பள்ளிப் பருவத்தில் ஆங்கில வழியில் பயின்றாலும் தமிழ் மீது தனக்குத் தனி ஆர்வம் உண்டு என்று கூறுவதிலிருந்தே இவரது மொழி மீதான நாட்டம் புரிகிறது. தன் சிறுவயதில் இருந்தே பல தமிழ் நாவல்களை பல நூலகங்களில் தேடிப் படித்ததாகக் கூறுகிறார். தற்பொழுது அமெரிக்காவில் அதை ஈடுசெய்ய தமிழ்பட்டிமன்றம் , கம்பர் கவியரங்கம் , நெல்லைக் கண்ணன் பேச்சு போன்ற தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதாகக் கூறுகிறார். தன்னார்வு சேவைகள் செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்ட இவர் தன்னார்வலர்களால் நடத்தப்படும் தமிழ் பள்ளியில் இணைந்து தன்னால் முடிந்த பங்களிப்பைத் தர வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு TBTA -வில் இணைந்ததாகக் கூறுகிறார்.

ஆசிரியர் அறிமுகம் - திருமதி கிருத்திகா தாஸ்பிரகாஷ்

Teacher_KiruthikaDasPrakash

தனது இளம்வயதில் தமிழில் பயிலவில்லை என்றாலும் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுண்டு என்கிறார். தான் பிறரோடு உரையாடும்போது தமிழில் பேசுவதற்கே முன்னுரிமை கொடுப்பேன் என்று கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது. தனக்கு மகாபாரதம் , இராமாயணம் போன்ற இதிகாச நூல்கள் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு என்கிறார். இதில் மகாபாரதமே தன்னுடைய விருப்பமான நூல் என்றும் அதன் தொடர்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும் என்றும் கூறுகிறார். தனது தோழியின் வழியாக TBTA — வைப் பற்றி அறிந்து கொண்ட இவர் ஆசிரியர் பணியின் மீது உள்ள ஆர்வத்தினாலும் , சின்னஞ்சிறு மழலைச் செல்வங்களோடு கலந்துரையாடுவதில் மிகுந்த விருப்பம் இருந்தமையாலும் நம் தமிழ்ப்பள்ளியில் தன்னார்வத்தோடு இணைந்து பணியாற்றுவதாகக் கூறுகிறார்.

இவர்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் வளர தமிழ் பள்ளி தம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

இலக்கிய பகுதி

நான்மணிக்கடிகை

ஆசிரியர் பெயர் - விளம்பி நாகனார்

கீழ்க்கணக்கு நூல்களுள் அடி அளவினால் நாலடியார் பெயர் பெற்றது போல, பாடல்களில் கூறப்பெறும் பொருள்களின் அளவால் நான்மணிக்கடிகை பெயர் பெற்றுள்ளது. கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக்கடிகை என்னும் தொடர் நான்கு இரத்தினத்துண்டங்கள் என்னும் பொருளைத் தருவதாகும். ஒவ்வொருபாடலிலும், ஒத்த நான்கு சிறந்த கருத்துகளைத் தேர்ந்தெடுத்துப்பிணைத்து, அழகிய சொற் கோவைகளில் ஆசிரியர் அமைத்துள்ளனர். அதனோடு சொல்லும் முறைமையிலும் ஓர் ஒருமைப்பாடு அமைந்திருத்தலை நூல் முழுவதும் காணலாம்.

'எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்
கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
கூறல்லவற்றை விரைந்து!'

எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.*

'கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று
உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம்
வெகுண்டார் முன் தோன்றா கெடும்'.

இழந்த பொருள்களுக்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை. சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடத்து அந்நிலை விரைவில் கிட்டவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை. அறத்தின் நல் இயல்பைத் தீயவர்கள் அறிய முடியாது. கோபம் கொள்பவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.*

'பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாக
முத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்
மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம்
தகுதி இறுவாய்த்து, உயிர்.'

நண்பர்கள் பொய் கூறும் இயல்பைப் பெறுவாராயின் அவர்களின் நட்புக் கெடும். மூப்பு தோன்றும் போது இளமை அழிந்துவிடும். மிகையான செயல்களைச் செய்யும் போது செல்வம் அழியும். வாழ்நாள் எல்லை கடந்ததும் உயிரும் அழியும்.*

'மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த
கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,
கூடார்கண் கூடிவிடின்.'

ஒற்றுமை இன்மை ஒருவனது வலிமையை ஒழிக்கும். பொய் பேசும் பண்பு உடம்பை அழிக்கும். பால் வைக்கப்பட்ட அசுத்தமான பாண்டம் பாலின் சுவையைக் கெடுத்துவிடும். அது போன்று தீய நட்பு தன் குலத்தையே அழித்து விடும்.*

'திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.'

செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை.*

'கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின்,
உயிர் இடையிட்ட விடுக்க! - எடுப்பின்,
கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின்,
வெகுளி கெடுத்துவிடல்.'

ஒருவன் கொடுப்பதானால் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஒன்றை விடுவதானால் பற்றை விட வேண்டும். ஒருவரைத் தாங்கி மேலுயர்த்துவதானால் சுற்றத்தாருள் ஏழையாக உள்ளவரை மேல் உயர்த்த வேண்டும். கெடுப்பதானால் கோபத்தைக் கெடுக்க வேண்டும்*

இவ்வாறு ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது.


சிறுகதைப் பகுதி

       பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர். ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்… என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,“இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு… என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறலாம்.


அறிவோம் தமிழை!
 — மேகலா இராமமூர்த்தி

Megala Ramamoorthy

தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி!

உலகின் மூத்தமொழிகளில் ஒன்றாக அறியப்படுவது நம் தமிழ்மொழி.

'தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு 
சூழ்கலை வாணர்களும் - இவள் 
என்று பிறந்தவள் என்றுண ராத 
இயல்பின ளாம் எங்கள் தாய்'

என்று அகவை அறியவொண்ணாத் தமிழ்த் தாயின் தொன்மையைப் போற்றுவார் மகாகவி பாரதி.

வெறும் தொன்மை மட்டுந்தானா நம் தமிழின் தன்மை? இல்லை!

இலக்கிய வளமும், இலக்கண நலமும், காலத்துக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் பேராற்றலும் செறிந்த ஓர் உயர்தனிச் செம்மொழி நம்மொழி!

தனித்தமிழ்பால் கொண்ட தணியாத அன்பால் சூரியநாராயண சாஸ்திரி என்ற தம் இயற்பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்ட அந் நற்றமிழறிஞர், தம்முடைய தமிழ்மொழியின் வரலாறு எனும் ஆராய்ச்சி நூலில் தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியாவது யாங்ஙனம்?” என்பதைச் சுவைபட விளக்கியுள்ளார். அவ்விளக்கத்தை நாமும் அறிந்துகொள்வோம்!

தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பலமொழிகளினும் தலைமையுடையதும் அவற்றினும் மிக்க தகவுடையதுமான ஓர் மொழியே உயர்மொழியாகும். இவ்விலக்கணங்கொண்டு ஆராயுமிடத்து, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கெல்லாம் தலைமையுடையதும் அவற்றினும் மேதகவுடையதுமாகிய நம்தமிழ் ஓர் உயர்மொழியாகும்!

தான் வழங்கும் நாட்டில் பயின்றுவரும் பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் தன்மையுடைய மொழியே தனிமொழி எனும் தகுதியுடையது. தான் பிறமொழிகளுக்குச் செய்யும் உதவி மிகுந்தும், தனக்குப் பிறமொழிகள் செய்யும் உதவி குறைந்துமிருத்தலே வழக்காறு. தமிழின் உதவியின்றித் தெலுங்கு முதலிய மொழிகளால் இயங்க இயலாது. ஆனால் அவற்றின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்கும் பெற்றியது. ஆதலின் தமிழ் ஓர் தனிமொழியே!

இனிச் செம்மொழியாவது யாது?

திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகழ் செம்மொழியாம் என்பது இலக்கணம். இம்மொழிநூல் இலக்கணத்திற்குச் சாலப் பொருத்தமுடையது தமிழ்மொழி. பிறமொழிச் சொற்களன்றித் தன்மொழிச் சொற்கள் மிகுந்திருத்தலே தூய்மொழி. அவ்வகையில் தமிழ் தூய்மொழியுமாகும். அவ்வாறே தமிழில் ஆளப்படும் சொற்கள் நம் மக்களின் பண்பாலும் நாகரிகத்தாலும் செழுமையுற்றவை. எனவே தமிழ்மொழி செம்மொழிஎன்பது திண்ணம். இதனாலன்றோ நந்தமிழ் செந்தமிழ் என்று நல்லிசைப் புலவரால் தொன்றுதொட்டு நவின்றோதப்படுகின்றது. ஆதலால் செந்தமிழ் நாட்டின்கண் சிறந்தொளிரும் அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராயினும் உயர்தனிச் செம்மொழியே ஆகும் என்று தெளிக! என்கிறார்.

நம்மொழியைச் செம்மொழி என்று முதன்முதலில் தமிழ்கூறு நல்லுலகுக்கு மெய்ப்பித்துக் காட்டிய பெருமை பரிதிமாற் கலைஞரையே சாரும். தமிழ் செம்மொழியாய்ப் போற்றப்படல் வேண்டும் எனும் அப்பெருமகனாரின் கனவு 2004 ஆண்டு நனவானது.


இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பகிருங்கள்.


Posted on October 26, 2021   #Kavitha Rajasekar     #Megala Ramamoorthy     #Sheikh Abdul Khadar  







Previous post →

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!